Sunday, October 9, 2011

நீயும் நானும்


பல வருடங்களுக்கு முன்பே
உன்னை அறிந்திருந்தேன்,
பக்கத்தில் எங்கோதான் உன் வீடும்...

நட்பு பாராட்ட நினைத்ததுண்டு
உன்னோடு 
நேரம் இடம் கொடுக்காததால்
புன்னகை மட்டுமே
பரிமாறிச்செல்வேன் - பதிலுக்கு நீயும். 

ஞாயிறு மதியங்களில் என்
சன்னலுக்குப்பின் 
விரிந்துகிடக்கும் மைதானத்தில் 
கால்பந்து ஆடிக்கொண்டிருப்பாய்,
வேர்த்த‌ முகத்தோடு 
தண்ணீரும் கேட்டதுண்டு
சமயங்களில்.

கால்ச‌ட்டை க‌ழிந்து
லுங்கிக்கு மாறிய‌தும் 
காணாம‌ல் போனாய் ப‌டிப்ப‌டியாய்.

பின் எப்போதுமே
பொது கிண‌ற்றின் ம‌ர‌நிழ‌லிலோ,
க‌ட்ட‌ண‌கழிவ‌றையின்
காம்பெள‌ண்டு ஓரமோ,
பால்வாடி பள்ளியின் ப‌டிக‌ட்டுக்களிலோதான்
பார்க்க‌நேர்ந்தது உன்னை 
புகைசூழ‌ந்த‌ இருளில்
அப்போதும் புன்னகைப்பாய் - பதிலுக்கு நானும்.

காலதாமதமான இரவு நேரங்களில்
வெறிகொண்ட மிருகமாய்
வான் நோக்கி
திட்டிக்கொண்டிருப்பாய்
யாரையோ! 
பார்க்காத‌வ‌ன்போல் கடந்துவிடுவேன்
வேக‌மாய்.

நீ
எல்லோரிடமும் சொல்லிக்கொள்வாய்
நான் உன் நண்பன் என்று

நான் 
எவரிடமும் சொன்னதில்லை.


வன்முறை


அம்பெய்தி ஆளைச்சாய்ப்பதில்
உன் திறமை அபாரம்தான்
நீ போர்க்கோலம் பூண்டதாலேயே
பூக்களுமா கவசமிட்டுக்கொள்ளவேண்டும்?

நிமிர்ந்த‌ ந‌டையும்
நேர்கொண்ட‌ பார்வையும்
வீர‌னுக்கு அழ‌குதான்
விருந்தாளியிட‌முமா?

வாள்வீச ‌தெரிந்த‌வ‌னெல்லாம்
வன்முறையை வ‌ழிமொழிந்தால் -
எஞ்ச‌ப்போவ‌து நீயுமில்லை, நானுமில்லை

எனில் பிற‌ற்க்கெதிராய் வில்வளைப்பதில்
ஏன் இத்தனை வேகம்?

Thursday, August 11, 2011

என்ன கொடுமை சரவணனா?


வளைபந்து இந்திய அணி கேப்டன் கூலி வேலை பார்க்கும் அவலம்!


கடந்த 05-08-11 அன்று தினமலர் பத்திரிகையில் 3றாவது பக்கம் கவனிக்கப்படக்கூடிய‌ அள‌வில்(size) செய்திவெளியிட்டிருந்தனர்.திரு நாராயண சூரியா எனும் வீரர் 2006 ஆம் ஆண்டு இந்தியாவில் நடந்த வளைப்பந்து உலகக்கோப்பையில் விளையாடி இந்தியாவிற்கு வெண்கலப்பதக்கம் பெற்றுத்தந்தார். 2010 ஆம் ஆண்டு ஜெர்மனியில் நடந்த வளைப்பந்து உலகக்கோப்பையில் கேப்டனாக விளையாடி வெண்கலப்பதக்கம் பெற்றுத்தந்தார். அதற்கெல்லாம் போதிய அங்கிகாரம் கிடைக்காமல் தற்போது 140 ரூ தினகூலிக்கு வேலைப்பார்கிறார். இது குறித்து அரசு தக்கநடவடிக்கை எடுக்கவேண்டும்.

இதெல்லாம் தினமலரில் வெளியான செய்தி இதில் உண்மையான அவலம் என்னவென்றால் வளைப்பந்து என்றால் என்னவென்று தமிழகத்தின் இன்றைய தலைமுறைக்கு தெரியுமாவென்று தெரியவில்லை. உண்மையில் எனக்கும்கூட தெரியாதபடியால்(எனக்குத்தெரிந்த என் நண்பர்களுக்கும் தெரியவில்லை ) google லில் தேடிப்பார்த்தேன் அதிலும் என்னால் வளைப்பந்து என்றால் என்னவென்று கண்டுபிடிக்கமுடியவிலை. உண்மையில் வளைப்பந்து என்பது வாலிபால் ஆ, பேஸ்கட்பால் ஆ, ஸ்னூக்கரா, நெட்பால் ஆ,  அல்லது பெண்கள்விளையாடும் ரிங் எனப்படும் விளையாட்டா? என்ன கொடுமை ஆர்.சீனிவாசன் ( தினமலரில் இதை எழுதியவர் ) நீங்களாவது பிராக்கெட்டில் ஆங்கிலத்தில் எழுதிதொலைத்திருக்கக்கூடாதா? வளைபந்து இந்திய அணி கேப்டனுக்கு நேர்ந்த அவலத்தைவிட இது தமிழுக்கும் தமிழனாகிய எனக்கும்( தமிழனாகிய நமுக்கும்னு போட்டா உண்மையிலேயே அவங்களுக்கு தெரியாட்டியும் எல்லாம் தெரிஞ்சாமாதிரி வீம்புக்காச்சும் சண்டைக்கு வந்துடுவாங்க ) நேர்ந்த மிகப்பெரிய அவலமல்லவா? 

                                                                                  நாராயண சூரியா
உண்மையிலேயே யாருக்காவது வளைப்பந்து விளையாட்டைப்பத்தி தெரிந்திருதால் எனக்கும் விளக்கவும். link இருந்தா அனுப்பலாம்.

Tuesday, August 9, 2011

நாம்


வாழ்க்கையை வளர்த்துகொண்டிருக்கிறோம்
சுவர்களுக்கு மத்தியில்,
ஒவ்வொரு நாளும் வீணாகிக்கொண்டிருக்கிறது
இறக்கப்போகும் வில‌ங்கை வளர்க்கவேண்டி,
தவறான வழிநடத்தல்களால்
தொலைத்து நிற்கிறோம் பால்யத்தை,
குழப்பத்தின் எல்லையில் அமர்ந்தபடி
பிரஸ்தாபித்துக்கொண்டிருக்கிறோம்
தெளிவின் அருமைகளை.

Tuesday, June 7, 2011

நண்பா


எப்படியோ நிகழ்ந்துவிடுகிறது
நம் சந்திப்புகள்!
இருவருக்கும் விருப்பமில்லாமலேயே.
உரக்கபேசவும், உயர்த்திப்பிடிக்கவும்
உனக்கொரு கொடியும்,
எனக்கொரு கொள்கையுமாய்
முரண்பட்டு நின்றாலும்
முட்டிக்கொள்ளாமல் இருப்பது
நாகரீகம் கருதிமட்டுமே அல்ல‌
நட்பு கருதியும்தான்.

Thursday, June 2, 2011

"யோகா குரு ராம்தேவ்" ஊழலுக்கு எதிரான அடுத்த உருப்படி ரெடி!


சந்தனக்கடத்தல் வீரப்பன் செயல்பாடுகளில் உச்சத்தில் இருந்தபோதும்,அவன் உயிரோடு இருந்தவரையிலும் பத்திரிகைகளும், படங்களும் தொடர்ந்து அவன் தொடர்பான செய்திகளையும் சம்பவங்களையும் வெளியிட்டுக்கொண்டே இருந்தன. அவனுக்கொரு முடிவுகட்டியதும் அவனைப்பற்றிய செய்திகள் காணாமல் போய்விட்டன. ஆனால் அவன் செய்துகொண்டிருந்த கடத்தல் அல்லது கடத்தலில் பெரும் லாபம் பார்த்துக்கொண்டிருந்தவர்களுக்கு செய்துகொண்டிருந்த உதவி இவை எதுவும் நின்றுபோயிருக்காது என்பது நாடறிந்தது.அது யார்மூலமாகவோ சுமூகமாய் நடந்துகொண்டுதான் இருக்கும். அதேபோல் ஊழலுக்கு எதிரான அன்னா அசாரேவின் கூக்குரலுக்குப்பின் ஆளாளுக்கு குரலெழுப்பி அதை கூச்சலாக்கிவிட்டார்கள்.இப்போது ஊழலுக்கெதிராய் உண்ணாவிரதமிருப்பதாய் மாரடித்துக்கொள்பவர் மன்னிக்கவும் மார்தட்டிக்கொள்பவர் "யோகா குரு ராம்தேவ்". இதையும் பெரும் போராட்டமாகவும் எழுச்சியாகவும் போற்றுகின்றன ஊடகங்கள். பலரும் நினைத்ததைப்போல், சொல்வதைப்போல் 20 x 20 உலகக்கோப்பைக்குப்பின் ஊடகங்களில் ஏற்பட்ட இடைவெளி போதைக்கு "யோகா குரு ராம்தேவ்" ஊறுகாய்யாகிறார் அவ்வளவுதான். மற்றபடி ஊழலோ அதில்சம்பந்தப்பட்டவரோ தங்கள் காரியங்களை சிறப்பாகவே நடத்திக்கொண்டிருப்பார்கள் என்பது உறுதி.


திரைப்படங்களில் இடையிடையே ஏற்படும் தோய்வை சரிசெய்ய ஐட்டம் டேன்ஸ் தேவைப்படுவதுபோல் 20 x 20 க்குப்பின் ஊடகங்களுக்கு தேவைப்படும் அடுத்த உருப்படி ரெடி. குரு ராம்தேவ் சாகும் வரை உண்ணாவிரதம் என அறிவித்ததும் பதறியடித்துக்கொண்டு அவர் காலில் விழாத குறையாக உண்ணாவிரதத்தை கைவிடுமாறு கேட்டுக்கொண்டனர் பல அமைச்சர்கள். எந்த ஒரு மக்கள் பிரச்சனைக்காகவும் இத்தனை அமைச்சர்கள் ஒனறாய் கூடிவிடமாட்டார்கள் என்பது நிச்சயம். இந்த விஷயத்தில் அமைச்சர்கள் விமானநிலையத்திற்கே சென்று உண்ணாவிரதத்தை கைவிடுமாறு கேட்டுக்கொண்டது ஊழலை ஒழிப்பதில் அவர்களுக்குள்ள சங்கடத்தை வெளிச்சமிட்டுக்காட்டுகிறது.


Tuesday, May 31, 2011

உன்னோடு


பேருந்து சன்னல்களிலும்,
பெரிய வீடுகளின் திண்ணைகளிலும்,
மாடிப்படி வளைவுகளிலும்,
மஞ்சள் வண்ண சேலைகளிலும்
தேடிக்கொண்டிருக்கிறேன்
உன்னை,
நம் பிரிவுக்குப்பின்னும்.

கருமேகம் கவிழ்ந்த
காலை வேளைபோல்
அமானுஷ்யம் சூழ்ந்த அந்த நாளில்
தொடங்கிய நம் இடைவெளியை
இட்டு நிரப்பும் முயற்சியாய்

காற்று அழைத்துச்சென்ற
திசைகளிலெல்லாம்
கண்களை அலையவிட்டபடி
மிதக்கிறேன்,
இதுதான் என இலக்கில்லாமல்
எதிர்படும் எதனிடத்திலும்,
எவரிடத்திலும்
வர்ணிக்கத்தொடங்குகிறேன்
தொலைத்துவிட்ட‌
உன்னுடனான காலங்களை
கவிதையாய்!Wednesday, May 18, 2011

ஆயுத‌ம் செய்வோம் !

 வளர்ந்த நாடுகளாக, வல்லரசாக அறியப்பட்டவைகளும், அறிவித்துக்கொண்டவைகளும் உண்மையில் எவ்வாறு வல்லரசாயின அல்லது அவ்வாறு அறியப்படுகின்றன. பொதுவாக வீட்டோ அதிகாரம் பெற்ற நாடுகளே ( அமெரிக்கா, ரஷ்யா, சீனா, இங்கிலாந்து, பிரான்ஸ் ) ( இப்போது பொதுவாய் அமெரிக்க மட்டுமே வல்லரசு என பொதுபுத்தி வந்துவிட்டது )வல்லரசுகள் என அறியப்படுகின்றன. இரண்டாம் உலகப்போருக்குப்பின் வெற்றிபெற்ற நாடுகளான இவற்றிற்கு வீட்டோ அதிகாராம் வழங்கப்பட்டது. இந்த அதிகாரத்தை அவர்களே தங்களுக்கு வழங்கிக்கொண்டனர் என்பதுதான் நிஜம். வீட்டோ அதிகாரம் என்பது தடுத்து நிறுத்தும் அதிகாரம் எனப்பொருள்படுகிறது (எதை என்பது அந்தந்த தேசத்தின் சொந்த விறுப்பு வெறுப்புக்கு உட்பட்டது).  இரண்டாம் உலகப்போரில் மேற்கூரிய நாடுக‌ளின் பங்களிப்பு அவற்றின்மேல் ஒரு நம்பகத்தன்மையையும் கூடவே பயத்தையும் ஏற்படித்தியிருந்ததுவே (இது என் எண்ணம்)இதற்கு முக்கியகாரணம் எனக்கொள்ளலாம். மேலும் இன்றைய வல்லரசு என்பதற்கு அந்த நாட்டின் ஆயுதபலத்தையும் ராணுவத்திற்கு செய்யும் செலவுகளுமே கணக்கிலெடுத்துக்கொள்ளப்படுகிறது. அந்த வகையில் பார்த்தால் உலகின் பெரும்பகுதி கடல் வெளியிலும் அமெரிக்காவின் தளவாடங்கள் நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. அதுதவிர கூட்டு ராணுவ பயிற்சி என்ற பெயரில் இந்நாடுகள் தங்கள் ராணுவத்தை பல தேசங்களில் நிறுத்தியுள்ளது. குறிப்பாக அரபு தேசங்களில்.

இந்நிலையில் இந்தியா வல்லரசாவது எவ்வாறு சாத்தியம். ந‌ல்ல‌வ‌னாக‌ அறிய‌ப்ப‌ட‌வேண்டுமானால் ந‌ல்ல‌வைக‌ள் செய்திருக்க‌வாண்டும், தாதாவாக‌ அறிய‌ப்ப‌ட‌வேண்டுமானால் ஆள்ப‌லம், ஆயுத‌ப‌ல‌ம் நிறைந்திருக்க‌வேண்டும். இல்லையெனில் வ‌டிவேலு ஒருப‌ட‌த்தில் செய்வ‌துபோல் நான்ர‌வுடி, நான்ர‌வுடி என்று த‌க்குத்தானே சொல்லிக்கொண்டு போலீஸ் ஜீப்பில் ஏறிஉட்காறுவ‌தைப்போல் இதோ வ‌ல்ல‌ர‌சாயிடுவோம் அதோ வ‌ல்ல‌ர‌சாயிடுவோம் என‌ சொல்லிக்கொண்டு திரிய‌வேண்டிய‌துதான்.  


Tuesday, May 17, 2011

பந்தயம்


நாம் பார்த்த குதிரையும் நமக்கு பிடித்த குதிரையும் மட்டுமே பந்தயமல்ல, நாம் பார்க்காத பள்ளம் மேடுகளும்,குதிரைக்குக்கொடுக்கப்பட்ட கொள்ளும், ரம்மும்கூட பந்தயத்தின் அங்கம்தான். நாம் கலந்துகொள்வதாலும் கைத்தட்டி உற்சாகப்படுத்துவதாலும் மட்டுமே பந்தயம் நடப்பதில்லை அதில் ஒன்று ஜெயிப்பதுமில்லை. தனக்கு தேவையான குதிரையை தேர்ந்தெடுப்பதற்கும், தேர்ந்ததை தனக்கு தேவையானபடி ஓட்டிப்பார்க்க விரும்புவர்களாலேயுமே பந்தயம் நடத்தப்படுகிறது.

ஜெயித்த குதிரையின் ஆட்டம்
ரசிக்கக்கூடியதுதான் - அரங்கில்
கூட்டம் நிறைந்தவரை.
தோற்ற குதிரையின் க‌ண்ணீர்
ச‌கிக்க‌க்கூடிய‌துதான் - காரணம் 
அறியப்படாதவரையில்.
ஜெயித்த "ஜே" வோ!
தோற்ற "க" வோ!
அடுத்த‌ ஓட்ட‌த்திற்குகான‌
ஒத்திகையில் முனைப்பாய்த்தான்.
க‌ண்டுக‌ளித்த‌வ‌ர் கைக‌ள் ம‌ட்டும்
க‌ரைப‌டிந்து!

Sunday, May 15, 2011

வருத்தத்திற்கு வருந்துகிறோம்


பெட்ரோல் 5 ரூபாய் விலையேற்றம் நேற்று நள்ளிரவிலிருந்து அமலுக்கு வந்தது நேற்றுமாலைமுதலே பங்க்குகளில் நல்ல கூட்டம். நான் பார்த்தவரை 90% பங்குகளில் இரண்டுசக்கர வாகணங்களே நிரம்பிவழிந்தன. ஒவ்வொரு 2 வீலரும் 5 லிட்டர்  பெட்ரோல் போட்டிருந்தாலும் ஒரு நபருக்கு 25 ரூபாய் சேமிப்பாக இருந்திருக்கும் ஆனால் பெரும்பாலான பங்குகளில் ஒரு வண்டிக்கு 1 லிட்டர்தான் என்றும் அல்லது 100 ரூபாய்க்குத்தான் என்றும்தான் பெட்ரோல் போடப்பட்டது.இதனால் மக்கள் பெரிதும் எரிச்சலுக்கு ஆளாயினர். விலையேற்ற்த்தை கருத்தில் கொண்டு மேற்கொள்ளப்பட்ட இந்த நடவடிக்கையால் தனிநபரின் சேமிக்கமுடியாமை சொற்பமாய் இருந்தாலும் பங்க் அதிபர்களுக்கு பழையவிலைக்கு கூடுதலாய் 5 ரூபாய் என்பது பெறும் லாபம்தானே? இதையாரிடம் சொல்லி வருந்துவது.

Saturday, May 14, 2011

மாப்பு! வெச்சிட்டாங்களா ஆப்பு!

நடிகர் வடிவேலு வீட்டிற்கும், அலுவலகத்திற்கும் போலீஸ் பாதுகாப்பு.
                                                                                                                         - தினத்தந்தி-

வரிப்பணம் - புண்படும் மக்கள் மனம்.


பல கோடி ரூபாய் செலவில் செட்போடப்பட்ட மன்னிக்கவும் கட்டப்பட்ட புதிய தலமை செயலகம் மீண்டும் செயின் ஜார்ஜ் கோட்டையை நோக்கி நடைபோடப்போகிறது.
இடப்பற்றாக்குறை, கட்டிடப்பழுது என பலகாரணங்கள் காட்டி செயின் ஜார்ஜ் கோட்டையிலிருந்து புதிய கட்டிடத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டது தலைமைச் செயலகம். தற்போது admk ஆட்சியமைக்கும் சூழ்நிலையில் இது மீண்டும் பழைய இடத்திற்கே மாற்றப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. மக்களின் வரிப்பணத்தில் மேற்கொள்ளப்படும் இத்தகய செலவினங்கள் தனிமனித காழ்ப்புக்களினால்
விரயமாக்குவது ஆட்சியாளர்கள் மேல் மக்களுக்கு பெரும் அதிருப்தியை ஏற்படுத்தும்.
புதிய தலைமைச்செயலகத்தின் ஒவ்வொரு செங்கலிலும் சாமானியனின் உழைப்பில் செலுத்திய வரியும் உள்ளது. உண்மையிலேயே தலைமைச்செயலகம் இஅடம் மாறுமேயானால். புதிய கட்டிடத்தை பெரிய நிருவனங்களுக்கு வாடகைக்கு கொடுத்து அந்த வருமானத்தை குடியின் போதையில் சிக்கித் தவிக்கும் மக்களுக்கு அதிலிருந்து மீண்டுவருவதற்கான மறுவாழ்வுமையங்கள் அமைப்பதற்கு செலவிடட்டும். அப்போதுதான் மக்கள் மனம் மகிழும்.    

Friday, April 15, 2011

67% ஆதிக்கம்

காதுகள் கிடைப்பதில்லை
கருத்துக்களுக்கு,
வேண்டியதெல்லாம்
அச்சம்,மடம்,நாணம் மட்டுமே,
நிமிர்ந்த நடையும்,
நேர்கொண்ட பார்வையும்
சாய்துவிடுகின்றன
பின்னாலிருந்து.
மேலழகிற்கும்
தோலழகிற்கும்
திற‌க்கின்ற வாசல்களில்
இரைந்து கிடக்கின்றன‌
குதற‌க்காத்திருக்கும்
ஆ(ண்)திக்க வா(நா)ய்கள்.

Thursday, April 7, 2011

வெற்றி


ஒளியச் சாத்தியமான‌
எல்லா இடங்களும்
அறியப்பட்டப்பின்
சுவாராஸ்யமிழக்கும்
கண்ணாம்பூச்சிபோல்
உன்னை அடையக்கிடைத்த‌
வழிகளையெல்லாம்
தவறவிட்டபின்
தொட‌ர‌ப்பிடிக்க‌வில்லை
இன்னொரு முய‌ற்சியை.

Tuesday, April 5, 2011

ஜனநாயகம்


எவர்சொன்ன பொய்களையோ
சுமந்தபடி
அலைந்துகொண்டிருக்கிறேன்
பாலைவனங்களில்
பாற்கடல் தேடி.
தாகம்
சுவைத்துக்கொண்டிருக்கிறது
நாவை.
கண்முன் விரிந்துகிடக்கிறது
கானல் - கடல் நீராய்.
ப‌னிக்குட‌த்துப் பெருவெளியில்
புதைந்துபோகும் வ‌ர‌ம்வேண்டி
தொழுதுகொண்டிருக்கிறேன்
விடிய‌லின் திசைநோக்கி.
ப‌ல‌ர் சொன்ன
பொய்க‌ளில் ஒன்றாய்
வீழ்ந்துகொண்டிருக்கிற‌து
சூரிய‌ன் - கிழ‌க்கில்.

Saturday, April 2, 2011

தனிமை
வழக்கமாய் போகும்
பாதைதான்
இலக்கற்று நடக்கையில்
இதமாய் இருக்கிறது.
துணை வந்துகொண்டிருக்கும்
தனிமையின் தவத்தை
கலைத்துக்கொண்டிருக்கிறது
நிழலின் விசுவாசம்.


Monday, March 21, 2011

லிபியா மீது அமெரிக்கா உள்ளிட்ட‌ ஐந்து நாடுகள் குண்டு மழை


தயாரிக்கப்பட்ட சிலுவைகளிலும்
தயாராகிக்கொண்டிருக்கும்
ஆணிகளிலும் - அறையப்படுவதற்காய்
ஆள் தேடிக்கொண்டிருக்கின்றனர்
ஆதாமின் பிள்ளைகள்.
பொய்க்காரணம் பொருந்துமாயின்
இரண்டு சிலுவை
ஆறு ஆணிகள்,
பொருந்தாவிடினும்
சிலுவை நிச்ச‌ய‌ம்.

Wednesday, March 16, 2011

சிக்கல்


நம்மிடையேயான தொடர்பு சங்கிலியில்
அங்கங்கே சில முடிச்சுக்கள்,
அவிழ்க்க எத்தனிக்கையில்
ஏற்ப்பட்டுவிடுகின்றன மேலும் சில.
சேர்ந்துபோன சிக்கல்களால்
இறுகிக்கிடக்கிறது சங்கிலி - நம்
இருவரையும் சுமந்தபடி.
தெரித்துச்சிதறும் தருணம்
தெரியாதென்பதால்
தள்ளிவைக்கப்பட்டிருக்கிறது
முடிச்சவிழ்க்கும் முயற்சி.

Wednesday, March 9, 2011

பரிகாரி


பட்டியலிட்டுக் கொடுத்திருக்கிறான்
என் பாவங்கள் 
மன்னிக்கப்படுவதற்கான‌
பரிகாரங்களை,
ம‌ன்னிப்பு உறுதியெனில்
ப‌ட்டிய‌லை நிறைவேற்ற‌
ப‌டையொன்றை நிய‌மித்து
பாவ‌ங்க‌ளை தொட‌ர‌லாமா? என்றேன்
ப‌ல்லிளித்தான்.

Thursday, March 3, 2011

இரண்டு தற்கொலை (அ) ஒரு மரணம்சந்தேகத்தின் அடிப்படையில் கைது
தீர்ப்புக்கு காத்துக்கொண்டிருக்கிறது
சிறையில் அடைக்கப்பட்டவரின்
குடும்பம்,
குற்றத்தை நிரூபிக்க சாட்சிகளை
தயாரித்துக்கொண்டிருக்கிறது
காவல்துறை,
சிறையில் அடைக்கப்பட்டவர்
அழுதுகொண்டிருக்கிறார்
இயலாமையில்,
சிறையில் அடைக்கப்பட்டவரின்
மனைவி சிரிக்கமுடிந்ததோ
கனவில்மட்டும்,
சிறையில் அடைக்கப்பட்டவரின்
மகன் நடந்துகொள்ளவேண்டியிருந்தது
இயல்பைவிட பணிவாய்,
என்றாலும்
சாட்சிகள்சில கட்சிமாறின‌
பலனாய் சில நோட்டுக்கள்
இடம் மாறின
குற்றம் நிரூபிக்கப்பட்டால்
இரண்டு தற்கொலை
வெளியே,
குற்றம் நிரூபிக்கப்படாவிட்டால்
ஒரு மர்மமான மரணம்
உள்ளே.

Tuesday, March 1, 2011


பாதங்கள்
பாதை மாறிவிட்டன‌
போகட்டும்
சுவடுகளையாவது
தந்துவிட்டு போ!

Sunday, February 27, 2011

ஒ(இ)ருவிபத்து

அது குறுக்கே பாய்ந்தகணம்
வசமிழந்தது என் வாகனம்,

மோதிய மறுகணம்
வெவ்வேறு கோணங்களில்
சிதறிய செல்போனும்,
சில்லரையும்
தரை தொட்டது
ஒரே கணம்.

தோளுக்குள் கை நுழைத்து
தூக்கியவர்மேல்
டாஸ்மார்க் வாசம்,

"பாத்துவரக்கூடாது?"
வண்டிதூக்க வந்தவர்.

"இவரு கரிட்டாத்தான் வந்தாப்பல‌
மாடுதான் குறுக்க பூந்திச்சி"
எதிர் குரல்.

"இதுங்க ரோதனை தாங்கலை"
தூரத்தில் யாரோ.

நாலு தையல்,
இரண்டு ஊசி,
காலில் கட்டு,
கையில் பிரிஸ்கிரிப்ஷன்
எல்லாம் முடிந்து
வெளியேவந்தால்...

காலுக்குள் வால் நுழைத்து
தாங்கித் தாங்கி கடந்தது
நாய் ஒன்று எனைப்போலவே.

"ஏத்திட்டு போய்கினே இருக்கானுங்க
பாவிங்க‌"
அனுதாபப்பட்டாள் கிழவி.

நான் மோதிய மாடு என்னவானதோ.

Friday, February 25, 2011

நாங்கள்


நீள அகலங்களால் நிர்ணயிக்கப்பட்ட
கண்ணாடி கடலுக்குள்
நீந்த அனுமத்திருக்கிறோம்
மீன்களை,

சன்னல் வழி நுழைந்து
கதவுவழி வெளியேறும்
சிட்டுக்குருவிக்கு
நெல்லும் தண்ணீரும்
வைத்திருக்கிறோம்,

மீன்குழம்பு உண்கையில்
முள்ளோடு கொஞ்சம்
சோறும்தந்துதிருக்கிறோம்
பூனைக்கு,

தெருவில் அலைந்துகொண்டிருந்த
நாய் குட்டிகளில் அழகாய் இருந்த
ஆண்குட்டியை வளர்த்திருக்கிறோம்
மரத்தடியில் கோணிபோட்டு,

பிர்ட்ஜிற்குள் தேங்கிக்கிடக்கும்
பழையதில் பழை..யதை
கழுநீரோடு கலந்து
கொடுத்திருக்கிறோம்
வாசலில் வந்துநிற்கும்
பசுவிற்கு,

அம்மாவாசை தவறாமல்
அன்னம் வைத்திருக்கிறோம்
காக்கைக்கு,

இப்படியும்,
இன்னும் சிலவாயும்
எங்கள் ஜீவகாருண்யம்.

Thursday, February 24, 2011

ஒரு கவிதையை...


அழைப்புமணியை அழுத்திய விதமும்
அவிழ்த்தெறிந்த காலணிகள்
வீழ்ந்துகிடக்கும் கோலமும்
அறிவித்துவிட்டன
உன் கோபத்தை.

வீசியெறிந்த கைப்பைவழியே
சிதறிக்கிடக்கும் சில்லரையோடு
கிழிந்துகிடக்கும் மாத்திரை பட்டையும்
தெரிவித்துவிட்டன
உன் சோர்வை.

தவிற்கமுடியாத
சில நாட்கள் இப்படியும்
எஞ்சியதில் பாதியை
எரிச்சலோடும் கழித்ததுபோக‌

ஓய்வாய்,அமைதியாய்
இருக்க இயலும்
என்றாவது ஒருநாள்
முயற்சித்துப்பாரேன்
ஒரு கவிதையை
எழுதவோ, வாசிக்கவோ.

Thursday, February 17, 2011

இருளின் நீட்சி


நேற்று...

எரியும் மெழுகின்
அலையும் ஒளியில்
ஆடிய நிழல்கள்
பேசிக்கொண்டன‌
ஒளியின் புகழை.

சுடரின் அடியில்
நிலவும் நிழலில்
விட்டில்க‌ளின் பிணங்கள்,

தூண்டியதற்கு தண்டணையாய்
தன்னையே கரைத்துக்கொண்டது
மெழுகு.

இன்று...

கரைந்த மெழுகின்
கண்ணீர்த்துளிகள்
உறைந்துகிடக்கிறது
தரையெங்கும்,

அணைந்த மெழுகின்
கரிந்த திரியில்
படிந்துகிடக்கிறது
நேற்றின் இருள்.

ஏற்றியதற்கு
தண்டணையாய்
தலைகுனிந்துகிடக்கிறது
தீக்குச்சி.

Monday, February 14, 2011

இறகு


எங்கோ பறந்து
எப்போதோ உதிர்ந்த
பறவையின் இறகொன்றை
கொண்டுசேர்த்தது காற்று
என் கையில்,

பறவையின் அழகிற்கு
பட்டயம் கூறியது
இறகின் வண்ணம்,

எறிந்துவிட மனமின்றி
எடுத்துவந்தேன் வீடுவரை.

"அப்பா.. அப்பா..
நம்மவீட்டு புறா
காணாம போச்சுபா"
கால்களை கட்டிக்கொண்டு
அழுதாள் 6 வயது மகள்,

தொலைந்துபோன
பறவையின் மிச்சமாய்
எடுத்துநீட்டினேன்
இறகை.

Sunday, February 13, 2011

எதுவுமாகவும்அதற்குள் எதையாவது வைக்கலாம்,
அதை எதிலாவ‌து வைக்கலாம்,
சோப்பு போட்டு குளிப்பாட்டலாம்,
நூல்கட்டி தொங்க‌விடலாம்,
க‌ல‌ர் அடிக்க‌லாம்,
car ஓட்டலாம்,
தரையில் நிற்கவைத்து TV பார்க்க‌லாம்,
த‌ண்ணீர் வாளிக்குள்
க‌ப்ப‌ல் விடலாம்,
யாராவது கேட்டால்
த‌ர‌ ம‌றுக்க‌லாம்,
த‌ங்கைக்கு மட்டும் கொடுக்க‌லாம்,
எங்காவ‌து தொலைத்துவிட்டு அழ‌லாம்,
இன்னும் என்ன‌வெல்லாமோ செய்ய‌லாம்
நாம் வேண்டாமென வீசியெறிந்த எதையும்
குழந்தைகள்.

Saturday, February 12, 2011

போதி


அது அறிந்திருக்கவில்லை
தான்தான் அது என்று,
நாங்களும் அறிந்திருக்கவில்லை
அதுதான் அது என்று,
அவனும் அறிந்திருக்கமாட்டான்
தான்தான் அவன் ஆவோமென்று
மன்னனாய் அமர்ந்தவன்
மகானாய் எழுந்த நாள்வரை
ஈரத்துணிகளை உலர்த்தவும்,
காய்ந்த சுள்ளிகளை
அள்ளிச்செல்லவும் மட்டுமே
வந்துபோன சிலரைத்தவிர‌
தனிமையில்தான்
அலைந்துகொண்டிருந்தது
அதன் நிழல்.

Thursday, February 10, 2011

ஒரு காட்சி கதை சொல்கிறது


500 எபிசோடுகள் இழுக்கக் கூடிய சீரியலின் கதையை 1 காட்சியில் சொல்ல முயற்சித்திருக்கிறேன்.


அருண் நீ பண்றது தப்புன்னோ ரைட்டுன்னோ நான் சொல்லமாட்டேன். ஏற்கனவே ஒருத்தனை காதலிச்சு அவன் மூலமா கர்பமான என்னை நீ லவ் பண்றேன்னு சொல்றது சரியா தப்பா எனக்குத் தெரியலை. ஆனா நடைமுறைக்கு ஒத்துவருமாங்கற‌துதான் முக்கியம். நீ பலமுறை சொல்லியிருக்க "எங்கவீட்டப் பொருத்தவரை  மனுஷங்களோட மனசுதான் முக்கியம் அவங்க வரலாறு கிடையாது"ன்னு, ஆனா வரலாறு தன் குடும்பத்தையோ, குடும்பத்தோட IMAGEஐ யோ பாதிக்கும்போதுதான் மனசுக்கு எந்த அளவுக்கு முக்கியத்துவம் கொடுப்பாங்க‌ன்றது தெரியும். நீ என்னை லவ் பண்றது உங்க வீட்டுல தெரிஞ்சா உங்க அக்கா பசங்க‌ வேணும்னா "ஆண்டி ஆண்டி"ன்னு பழையபடியே அன்பா இருக்கலாம் ஆனா "அம்மா.. பிரியா"ன்னு அன்பா கூப்பிடற உங்க அம்மா "ஏண்டி புள்ளத்தாச்சியா இருக்கியே பாவம்னு வீட்டுல பாதுகாப்பு கொடுத்தா ஏம்புள்ளயவே வளைச்சுப்போடப்பாக்க‌றயா? இந்த சாமர்த்தியத்தை உன்னை கலைச்சுட்டு போனானே அவன்கிட்ட காட்டவேண்டியதுதானெ?"னு வாய்க்குவந்தபடி திட்டத்தொடங்கிடுவாங்க.

OK எங்கம்மா அப்படிப்பட்டவங்க இல்லைன்னு நீ சொல்லலாம் அது உண்மையாவும் இருக்கலாம் but அவங்க உள்மனசுல நம்ம புள்ள வாழ்க்கை இப்படி ஆய்டிச்சேங்கற வேதனை கண்டிப்பா இருக்கும். உங்க மாமா பொண்னு மேலோட்டமா உன்னை திட்டிகிட்டும், கிண்டல் பண்ணிகிட்டும் இருந்தாலும் அவ உள்மனசுல உன்னை நினைச்சு உருகிட்டு இருக்கலாமில்லையா? சீ..சீ அவ சின்னபொண்னுன்னு நீ சொல்லலாம், ஆனா அவ சின்ன பொண்ணில்லை அருண் உங்க family ஆல்பத்தை பாக்கும்போதெல்லாம் அவ உன் போட்டோவைத்தான் உத்து உத்து பாக்கறா. அது உனக்கு எப்படி வேணும்னாலும் இருக்கலாம் ஆனா என்னைப்பொருத்தவரைக்கும் அவ உன்னை love பண்றான்னுதான் தோணுது. இது அதீத கற்பனையாக்கூட இருக்கலாம் but அது நிஜ‌மா இருந்தால் இதுவரை அன்பா "பிரியாக்கா.. பிரியாக்கா"ன்னு கூப்பிட்டவ அடியே ப்ரியா எனக்கே வேட்டுவெச்சிட்டியான்னு என் முடியைபுடிச்சு உலுக்கலாம். எல்லாத்துக்கும்மேல‌ உங்க அப்பா, "உன்னை எம் பொண்ணுமாதிரி நினைச்சேனே நீயே இப்படிப் பண்ணிட்டியே"னு கேக்கமாட்டார் அதைவிட sharp ஆ ஒரு பார்வை பார்ப்பாரே அந்த பார்வையிலேயே ஆயிரம் கேள்வி இருக்கும் அதுக்கு நான் என்ன பதில் சொல்வேன் சொல்லு அருண். 

அப்போ உனக்கு என்மேல கொஞ்சமும் இஷ்டமில்லையா?ன்னு நீ கேக்கநினைப்பது புரியுது. இஷ்டபடுவதற்கும், இஷ்டபடாததற்கும் வேண்டிய தகுதி என்கிட்ட இல்லை அருண். eligibility பத்தி பேச இது என்ன vacancy யா? வாழ்க்கை அதானே சொல்லப்போற வேண்டாம் விட்டுடு. நீ என்னை காதலிப்பதாலோ, கல்யாணம் பண்ணிக்கற்தாலையோ எனக்கு ஒரு புருஷன்  கிடக்கலாம், என் குழந்தைக்கு ஒரு அப்பாக்கூட கிடைகலாம் but அப்படி ஏதாவது நடந்துட்டா என்மேல பாசமா இருக்கும் இந்த குழந்தைகள், என்னை அக்கரையா கவனிச்சுக்கற உங்க அம்மா, அப்பா, தன் பொண்ணுமாதிரியே என்னையும் பாத்துக்கற உங்க மாமா மாமி இவங்க அத்தனை பேரோட அன்பையும், ஆதரவையும் இழக்கவேண்டியிருக்கும் அருண் . 

உன்னோட வாழும் சந்தோசமான வாழ்க்கையைவிட இந்த குடும்பத்தோட அன்பும், அரவணைப்பும் எனக்கு போதும் என்னை மன்னிச்சிடு அருண் பிளீஸ்.

உங்கள் கருத்துக்களை பகிரவும்.

   

Wednesday, February 9, 2011

சன்னலுக்கு வெளியேவெயில் தாழ்ந்த கிணற்றடியில்
சிதறிக்கிடக்கும் பறுக்கைகளை
கொரித்துப்போகும் அனில்கள்.

குழந்தையின் விருப்பத்திற்காய்
வாங்கிய தொட்டிக்குள்
விருப்பமேயில்லாமல்
அலைந்துகொண்டிருக்கும்
மீன்கள்.

மறைக்கமறந்த எதையும்
திருடக்காத்திருக்கும்
பூனைகள்.

வாசல்தாண்டி
வந்ததே இல்லாத‌
விசுவாசம்மிக்க நாய்கள்.


முருங்கைப் பட்டையில்
அடை அடையாய்
முட்டையிட்டு குஞ்சுபொறிக்கும்
கம்பளிப் பூச்சிகள்.

எல்லாம் விற்று வெளியேறி
இரண்டாம் தளத்தில் குடியேறி
ஓய்ந்த ஓர் பொழுதில்
சன்னல் வழி பார்க்கையில் 
இல்லை அவை.

Sunday, February 6, 2011

போய்வா


பொருள் தேடும் நெடும்பாதையில்
உடன் பயணிக்கும் நீ
மயிரிழை முன்செல்வதாலேயே
என்னை முந்திவிட்டதாய்
மார்தட்டிக்கொள்கிறாய்.

இடைவெளியின் அள‌வு
இர‌ண்ட‌ங்குல‌ம் பெருகிய‌தும்
உன்னை பின்தொட‌ர்வ‌தாய்
புகார் செய்கிறாய்.

வெற்றிக்க‌னி ஒன்றை
எட்டிப்பறித்த‌தும்
முன்னேறிவிட்ட‌தாய்
முக‌ம் பூரிக்கிறாய்.

வேக‌வேக‌மாய் வேட்டையாடி
வீழ்ந்த‌வைகளை
சுமந்துசெல்கையில் ‍‍‍- வெறுமைக‌ளால்
நிரைந்துகிட‌க்க‌ப்போகிற‌து உன்பாதை.

க‌ட்டிச்சென்றவைகளை
க‌டைவிரித்துக்காட்ட‌வும்,
காதுகொடுத்து கேட்க‌வும்
நாதியிலா ஓர் பொழுதை வேண்டித்தான்
உன் இப்போதைய‌ புகாரும்,பூரிப்புமெனில்
ஆட்சேப‌னை ஏதுமில்லை
போய்வா.

Thursday, February 3, 2011

கிழ‌க்கை நோக்கி


நீயும் மறந்துவிட்டாய்
நானும் மறந்துவிட்டேன்
உன் அண்ணனோ என் தம்பியோ
16 மைல் தொலைவில்
செத்துக்கொண்டிருப்பதை.

உன் போக்கையும் என் போக்கையும்
எவனோ செலுத்திக்கொண்டிருக்க‌
நம் சொந்தம் அங்கே 
வெந்துகொண்டிருந்திருக்கிறது.

செர்லாக் மாவும்,
ஜெம்ஸ் மிட்டாயும்
நம் குழந்தைகளின் 
அழுகையை நிறுத்திக்கொண்டிருக்க,
ஜெலட்டிண் குச்சியும்
கிர்னெட் குண்டும்
அங்கே நம் கூட்டத்தை 
மாய்த்துக்கொண்டிருந்திருக்கிறது.

இவை எதையும் அறியவில்லை
நண்பனே நாம்!
அறியக்கூடிய அத்தனை
வழிகளையும் அடைத்துவிட்டு
உள்ளாடை விளம்பரத்தையும்
உட‌லுற‌வு சாத‌ன‌த்தையும்
காட்டிக்காட்டியே
உன்னையும் என்னையும் 
செவ்வ‌க‌ சிலிக்கானுக்குள்
சிறைவைத்துவிட்ட‌ன‌ர்.

ஆளுய‌ர‌ போட்டோக்க‌ளும்
அத‌ற்கேற்ற‌ புக‌ழுரைக‌ளுமாய்
நிறைந்திருந்த‌து ப‌த்திரிக்கைக‌ள்.
விழித்தெழுந்த‌ ஒருசில‌ ப‌த்திரிக்கைக‌ளும்
பெருமளவு விற்காத‌ கார‌ண‌த்தால்
உற‌ங்கியே கிட‌ந்தோம் ந‌ண்ப‌னே!

NDTV யும், TIMES NOW வும்
ஐஸ்வ‌ரியா, அபிஷேக் ஊடலையும்
அமித்தாப்பின் க‌ட‌னையும் காட்டி
ந‌ம் க‌ண்க‌ளை க‌ட்டிவிட்ட‌ன‌ நண்ப‌னே!

வீருகொண்டு விழித்தெழுந்த‌ வேளையில்
அஸ்த‌ம‌ன‌மாகியிருந்த‌து கிழ‌க்கில் சூரிய‌ன்.

மீண்டெழும் அந்நாளைநோக்கி
செலுத்த‌த்தொட‌ங்குவோம் ந‌ம் ச‌ந்த‌தியின‌ரை.

http://ta.indli.com/agaliganSaturday, January 29, 2011

ரயில் பயணங்களில்


போனவாரம் officalல அரக்கோணம்வரை போகவேண்டியிருந்தது(கல்யாண போட்டோ வீடியோ எடுக்கத்தான்). Bike லயே போய்டலான்னுதான் நினைச்சேன் ஆனா லக்கேஜ்யெல்லாம் எடுத்துக்கிட்டு போகனும்னா train தான் கரெக்ட்ன்னு தோனிச்சு, Bikeகை ஸ்டேஷனுக்கு திருப்பினேன். மத்தியான நேரம் ஸ்டேஷன் அரைதூக்கத்தில் இருந்தது. காத்துகிட்டிருந்த 10 நிமிஷத்துல மூளை வளர்ச்சி குறைந்தவங்க 2 பேரை பார்க்கமுடிந்தது, ஒருவர் தண்டவாளத்தை கடக்க கட்டியிருக்கும் Bridge படிகளை தன் கையிலிருந்த துணியால் சுத்தம் செய்துகொண்டிருந்தார். தூசி ஆள் உயரத்திற்கு பரந்தது பயணிகள் மூக்கை பொத்தியபடி அவரைக்கடந்தனர், சிலர் சில்லரையும் தந்துசென்றனர். நான் பார்க்கும்போது பத்து படிகள் சுத்தமாய் இருந்தது. இன்னொருவர் இறும்பு பென்ச்சில் சம்மணமிட்டு அமர்ந்தபடி தனக்குத்தானே பேசியபடியும், தாடியை சொரிந்தபடியே சிரித்துக்கொண்டுமிருந்தார். நான் அவர் அருகில் உட்கார்ந்ததும் என்னைப்பார்த்தும் புன்னகைத்தார். பதில் புன்னகைக்க "நான் டில்லி போகனும்" என்றார், சரி என்றேன்.

மத்தியான நேரம் என்பதால் தாராளமாக இல்லையென்றாலும் கொஞ்சம் அடக்கமாய் உட்காருவதற்கு இடம் கிடைத்தது. என் எதிரே அமர்ந்திருந்த பெரியவர் pendrive,USB port, speaker, battary என பலவற்றை இணைத்து "ஆடலுடன் பாடலை கேட்டு" பாடலை கண்மூடி ரசித்துக்கொண்டிருந்தார்.குனிந்த தலை நிமிராமல் தன் Laptop ல் எதையோ தடவிக்கொண்டிருந்த‌ என் பக்கத்து சீட் இளைஞனுக்கும் சேர்த்தேதான் பாடிக்கொண்டிருந்தார் MGR. என‌க்கு வ‌ல‌து ப‌க்கம் சனனல்கிட்ட ஒரு மத்திம வயதுக்காரர் தன் headphoneனில் பாட்டுகேட்டுக்கொண்டிருந்தார் அது "ஆடிய ஆட்டமென்ன" சிவாஜி பாட்டாகவும் இருக்கலாம். முன்னெல்லாம் கொஞ்சம் சத்தமா பாட்டு கேட்டா என்ன டீ கடைமாதிரின்னு கேப்பாங்க அதுல ஒரு ஏளனம் தெரியும். FM radio வந்தபிறகு ஒவ்வொருத்தரும் ஒரு டீக்கடையாவே மாரிட்டாங்க.  அவருக்குப் பக்கத்தில் ஒரு த‌ம்ப‌தி அவ‌ருக்கு 49வ‌யசும் அவ‌ங்க‌ளுக்கு 45வ‌யசும் இருக்கும். பொண்ணூ க‌ல்யாண‌த்திற்கு ப‌த்திரிக்கை வைக்க‌ போய்கிட்டிருக்காங்க‌போல‌ த‌ன் வீட்டுக்கார‌ரோட‌ உற‌வுக‌ளைப்பத்தி ரோம்ப‌ காட்டமாவே பேசிகிட்டுவ‌ந்தவ‌ங்க‌, பிளாஸ்டிக் பைக‌ளில் 5 ரூபாக்கு விற்றுக்கொண்டுவ‌ந்த சாம‌ந்தியையும், க‌ன‌காம்ப‌ரத்தையும் வாங்குவதில் குழம்பிப்போய் கடைசியாய் கணவர் சொன்ன கனகாம்பரத்தையே வாங்கிக்கிட்டாங்க.

ஒவ்வொரு நிறுத்தத்திலும் வண்டி 3 நிஷத்துக்கும் குறைவாய்தான் நிற்கிறது அந்த குறைந்த வினாடிகளுக்குள்ள சூடான சமோசாவும், நெய் பிஸ்கட்டும், அதிரசமும் என ஒவ்வொரு நிறுத்தத்திற்கும் ஒவ்வொரு ஐட்டம் வந்துகிட்டேயிருந்தது சுவாரசியமாய் இருந்தது. பக்கத்தில் இருப்பவர்கள் எதையாவது வாங்கிக்கொண்டே இருக்க எதையாவது வாங்கும்படி நாமும் மனதளவில் உந்தப்படுகிறோம். நெய் பிஸ்கட்டின் மணம் அது சூடாகத்தான் இருக்கும் என நம்பவைக்கிறது(நான் ஏமாந்துட்டேன்). அவர்களின் வியாபார யுக்தியே அதுதானோ என்னவோ? சென்னை மார்கெட்டில் அதிகம் பார்க்கமுடியாத வெந்தியக்கீரை 3 ரூபாய்க்கு கிடைப்பது ஆச்சரியம்(திரும்பிப் போகும்போது வாங்கிட்டு போகனும் கொஞ்சம் ஞாபகப்படுத்துங்க பிளீஸ்).

ஒரு ந‌ரிக்குற‌வ‌ சிறுமி 2 அடிக்கு 3 அடி அளவில், ப‌ல‌வித‌ பொருட்கள் தொங்க‌விடப்பட்ட‌ இரும்பு ச‌ட்ட‌த்தின் ந‌டுவில் முனை ச‌ற்று வ‌ளைந்திருந்த க‌ம்பியை ப‌ய‌ணிக‌ள் கைப்பிடியில் மாட்டிவிட்டு "பெரிய‌ பின் மூனு 5 ரூபா" என‌ கூவத்தொடங்கினாள். ச‌ட்ட‌த்தில் தொங்க‌விட‌ப்ப‌ட்ட‌ பொருட்க‌ள் மிக‌நேர்த்தியாய், இரண்டு பக்கத்தில் உள்ளவர்களுக்கும் எல்லாப்பொருள்களும் தெரியும்படி அடுக்கப்பட்டிருந்தது அதனால் அவள் மற்ற எந்தபொருளின் பெயரையும் கூறி வாங்குப‌வ‌ரை குழ‌ப்ப‌வில்லை, தன்னையும் அலட்டிக்கொள்லவில்லை. வேண்டிய‌வ‌ர்க‌ள் அவ‌ர்க‌ளாக‌வே த‌ங்க‌ள் பொருட்க‌ளை கேட்டு வாங்கிக்கொண்ட‌ன‌ர். ஒரு super marke டின் marketing முறையை, display method ஐ அந்த‌ சிறுமி மிக இய‌ல்பாய் செய்துகொண்டிருந்தாள்.

ஒரு முக்கியமான விஷயம் என்னன்னா பெரும்பாலானவர்கள் cell phoneல் எதையோ தேடிக்கொண்டே இருந்தனர். அந்த கையடக்க பெட்டியை ஆள்வதில் உள்ள ஆர்வத்தில் ஏதோ உளவியல் காரணம் இருக்கும் எனத்தோன்றுகிறது

இரண்டு மணிநேர பயணம் அலுப்பில்லாமல் முடிந்தது. நான் செல்லவேண்டிய ஊர் ஸ்டேஷனிலிருந்து 3kms இருந்ததால் ஆட்டோ தேடினேன், உள்ளூர் ஆட்டோகாரர்களுக்கும், ஷேர் ஆட்டோகரர்களுக்கும் ஏற்பட்ட தகராறு காரணமாய் ஒரு ஆட்டோவும் ஓடவில்லை. "ஒழுங்கா bike லயே வந்திருக்கலாம்" என நொந்தபடியே லக்கேஜ்களை சுமந்தபடி நடக்கத்தொடங்கினேன்.


கனியிருப்ப காய்...

மன்மதன் அம்பு கமலின் கவிதை சர்ச்சைக்குள்ளாகி படத்திலிருந்தே நீக்கப்பட்டுவிட்டநிலையில் அது நீக்கப்படவேண்டி எழுந்த கோரிக்கையின் பின்னனி முழுமையாக யாருக்கும் விளக்கப்படவில்லை அல்லது
வெகுஜனமக்களுக்கு கமல் எனன எழுதினார்? ஏன் எழுதினார்? எதற்கு எதிர்ப்பு தெரிவித்தார்கள்? என்பது புரியவில்லை.அதைபுரிந்துகொள்ள முயற்சிப்போம்.

அடிப்படையில் இது சினிமாவுக்காக எழுதப்பட்ட கவிதை அந்த கவிதையை படத்தோடு பார்க்கையில்தான் கவிதைக்கான காரணம் விளங்கும்.நம் விருப்பத்தை தெரிந்துகொள்ளாமலேயே! அந்த வாய்ப்பு நமக்கு மறுக்கப்பட்டுவிட்டது என்பது வேறுவிஷயம்.  எதிர்ப்புக்குகாரணம் பெண்களை இழிவுபடுத்தினார் என்பதா? கடவுளை வம்புக்கிழுத்தார் என்பதா? தெரியவில்லை,எனவே இரண்டையும் பார்ப்போம்.

இயல்பாகவே இக்கவிதை பெண்களை இழிவுபடுத்துவதாய் கருதப்படுவதற்கு அதில் உள்ள ஆடைகளைகயில், காமம், குறியென்றான பின், முன்னும் பின்னும் ஆட்டும் சகடை, ஆணுறை
எனற இரட்டை அர்த்த வார்த்தைகள் ஒரு பெண் வாயிலிருந்து வருகின்ற காரணத்தால் அது கொச்சையான வார்த்தைகளகவே தோன்றக்கூடிய வாய்ப்புள்ளது. அதனாலேயே அதிலுள்ள முதல் அர்த்தத்தையும் ஆதங்கத்தையும் யாரும் புரிந்துகொள்ள முயற்ச்சிக்கவில்லை. கனியிருப்ப காய் கவந்தற்று வேறென்னசொல்ல!
பெண்களை இழிவுபடுத்துவதாகயிருந்தால் கவிதையின் முதற்பாதியை ஒரு பெண் வாசிப்பதாயும் மறுபாதியை ஆண் வாசிப்பதாயும் அமைத்திருக்கவேண்டியதில்லை என்பது என் கருத்து.

பெண்வாசிப்பதாய் அமைந்த வரிகளில் பெண்கள் பற்றி ஆண்களின் கணிப்புக்களும், கவனிப்புக்களும் இப்படியானவையாகத்தான் இருக்கிறது என்ற ஒரு பெண்ணின் ஆதங்கம்தான் மெல்லிய கேலியாய் அமைந்துள்ளது. பெண்களை அவ்வாறான கண்ணோட்டத்தில் பார்க்கும் ஆண்களுக்கும்,அவ்வாறான கண்ணோட்டத்தால் பாதிக்கப்ப்ட்ட பெண்களுக்கும் அந்த கேலியும்,வலியும் நிச்சயம் புரியும். அந்த கெலியையும் ஆதங்கத்தையும் தன் voice modulation மூலம் மிக அழகாய் நேர்த்தியாய் வெளிப்படுத்தியிருக்கிறார் திரிஷா. அதை உணர்ந்துகொண்டவர்கள் சமூகத்தில் ஆண்களால் பெண்களுக்கு ஏற்படும் அவலம் கருதி வெட்கப்படுவர். இப்படி வெட்கப்பட்டு தலைகுனிவதை தவிற்க்கத்தானோ என்னவோ கவிதையையே தடைசெய்துவிட்டனர். ஆண்களுக்கு ஒரு அவமானமென்றால் தாங்குமா தமிழ்னெஞ்சம்.

கடவுளை வம்பிற்க்கிழுக்கிறார், ஏன் கிருஸ்த்துவக் கடவுளையோ, இஸ்லாமியக் கடவுளையோ தன் கவிதையில் கொண்டுவரக்கூடாது என்று கேட்டால்
அடிப்படையில் கிருஸ்த்துவத்திலோ, இஸ்லாத்திலோ கடவுள்களுக்கு குடும்பமோ, அதுபோன்ற ஒரு பிணைப்போ இருப்பதாய் எங்குமே சொல்லப்படவில்லை. நம் கடவுள்களில்தான் கணவன்,மனைவி, அண்ணன் தம்பி,அண்ணன் மகன்கள், தம்பி மகன்கள்,இருதாரம் அவர்களுக்குள் EGO என ஒரு தமிழ் படத்திற்கு தேவையான அத்தனை அம்சங்களும் நிரைந்திருக்கிறது. கிருஸ்த்துவத்திலும், இஸ்லாத்திலும்கூட சில் குரல்கள் அவர்களுக்குள்ளிருந்தே அவ்வப்போது எழத்தான் செய்கிறது. தலையில் முடியில்லாத அண்ணனையும், தொப்பைபெருத்த அப்பாவையும்தான் யேய்.. சொட்ட உனக்கெதுக்கு சீப்பு என்றோ,யப்பா இந்த போனை கொஞ்சம் ஸ்டெண்டுல வெச்சுக்கவா என்று அவர் தொப்பையை தடவியபடியோ இயல்பாய் இதமாய் வம்பிற்கு இழுக்கமுடியும். இதை வம்பு என்றுகூட சொல்லமுடியாது ஆழ்ந்த அன்யோன்யம் என்றுதான் கொள்ளவேண்டும்.  இப்படியான அன்யோன்யம் தமிழ் கவிதைக்கொன்றும் புதிதல்ல.ஆண்டாள் பாசுரத்திலிருந்து அபிராமிஅந்தாதிவரை பார்கமுடியும்.இந்த அன்யோன்யத்தை பககத்துவீட்டுக்காரரிடம் காட்டிப்பாறேன் என்பது வீண் வாதம்.

இக்க‌விதையில் ப‌குத்தறிவிற்குப்புர‌ம்பான‌ வார்த்தைக‌ளோ, க‌ருத்தோ ஏதுமில்லை என்வே இக்க‌விதையை நீக்க‌முடியாது என நாத்திக‌வாத‌த்திற்கும்,ப‌குத்த‌றிவுவ‌த‌த்திற்கும் புகழ்பெற்ற நம் திராவிட பாரம்பரியமும்,அப்பின்னனியுள்ள குடுபத்த‌யாரிப்பில் வெளிவ‌ந்திருக்கும்பட்ச்ச‌த்தில் அக்குடுபத்திலிருந்தோகூட எவருமே குர‌ல் கொடுக்காத‌து சற்று உருத்த‌லாய்த்தான் உள்ள‌து. இதற்குப்பின்னாலும் அரசியலா?

Tuesday, January 25, 2011

ஒட்டுகேட்ட உறையாடல்


காலை 9.45 ம‌ணி

ஹலோ என்னப்பா பன்றே

இப்பதாம்பா உம்பொண்ண(school)bus ஏத்திவிட்டுவறேன், குளிக்கமாட்டேன்னு ஒரே அடம்

ஒருநாள் குளிக்காட்டி என்ன ஆயிடப்போது மூஞ்சி கழுவி அனுப்பவேண்டியதானே?

ராத்திரி படுக்கையிலயே மூச்சா போய்டரா அப்படியேவா அனுப்பமுடியும்.

அதுவும் சரிதான், நீ டிபன் சாப்டியா?

ஆங்.. நீ கரெக்ட் டயமுக்கு ஆபீஸ் போய்சேந்தியா?

10 நிமிஷம் லேட், நல்லவேளை மேனேஜர் வரலெ.

நாளைலேந்து என‌க்கு எதுவும் help பன்ன‌வேண்டாம் நீ உன் வேலையை மட்டும் பாத்துகிட்டு கிளம்பிடு சரியா?

நீ ம‌ட்டும் எப்பிடி எல்லா வேலையையும் பாத்துப்பே உன‌க்கு குழ‌ந்தையை க‌வ‌னிச்சு அனுப்ப‌ர‌தே பெரிய‌வேலையா இருக்கும். சரி பாப்போம்.வெச்சிடவா?

ம்..

மதியம் 2.00 மணி

ஹலோ ம்.. சொல்லுப்பா 

சாப்டாச்சா?

ம்..நீ சாப்ட்டியா?

சாப்பிட்டுத்தான் போன் பன்றேன். சரி கேஸ் வந்திச்சா?

வந்தாச்சு 

காசு?

அதான் ஷெல்புல இருந்ததே

அத கொடுத்துட்டியா? அது குழந்தையோட (school)bus க்கு வெச்சிருந்தேன் சரிவிடு பாத்துக்கலாம்.குழந்தை school லேந்து வந்ததும் home work முடிக்கச்சொல்லிடு. அவ வரவரைக்கும் புக்கு படிக்கிறேன், TV பாக்கறேன் உக்காந்துடாதே கொஞ்சம் ரெஸ்ட் எடுத்துக்கோ. சரியா?

சரி

வெச்சிடவா?

ம்..

மாலை 4.15 மணி

ஹலோ..

குழந்தை வந்துட்டாளா?

ம்... பின்னாடி வீட்டுக்கு போயிருக்கா.

மத்யானம் fullலா சாப்டாளா

கொஞ்சம் பாக்கிவெச்சுட்டா பரவால்ல, இப்ப வந்ததும் Boost கலந்து கொடுத்தேன்
குடிச்சுட்டு விளையாட போயிருக்கா. நீ என்ன பண்ணிகிட்டிருக்கே

இதோ கிளம்பிட்டேன்.

என்ன‌ இவ்வளவு சீக்கிரம்

ஆமா மூனுநாளா குழந்தை நான் வரத்துக்குள்ள தூங்கிடுது. காலைல அவசர அவசரமா
கிளம்பரப்போ அவள கொஞ்சக்கூட முடியல அதான் 1 மணி நேரம் பர்மிஷன் போட்டு கிளம்பிட்டேன். ராத்திரிக்கு நீ எதுவும் செய்யவேண்டாம் நான் வந்துபாத்துகிறேன்.
வெச்சிடவா.

இரு இரு குழந்தை வந்துட்டா அவகூட பேசு. 

ஹலோ ஜனனி என்னமா பண்றே

ஹலோ அம்மா நீ எங்க இருக்க‌

அம்மா ஆபீஸ்ல இருக்கேண்டி செல்லம், இன்னிக்கு அம்மா சீக்கிரமா வந்துடுவேணாம்,
வந்து உனக்கு ரொம்பபிடிச்ச பூரியும் கேசரியும் செஞ்சுத் தருவேணாம் சரியா?
அதுவரைக்கும் அப்பாவை தொந்தரவு பண்ணாம சமத்தா இருக்கனும் சரியா? சரி சொல்லு

ச‌ரி ம்மா.. 

பாய்..

பாய்..

Friday, January 21, 2011

ஆறாம்அறிவு


அதன் பெயர் ஆறாம் அறிவு, என் அறைக்கு அடிக்கடி வந்துபோகும். ஆறாம் அறிவுடன் என் அறிமுகம் 3 வருடத்திற்கு முன் நிகழ்ந்தது. மழைபேய்து ஓய்ந்த ஒரு மதியவேளை அறைவாசலில் நிழலாடியது, எட்டிப்பார்க்க அடர்கறுப்பு நிறத்தில் அது நின்று கொண்டிருந்தது. அது தன் வீடாய் பாவித்துக்கொண்டிருக்கும் அந்த வீட்டுக்காரர் குடும்பத்தோடு ஊருக்குப் போயிருந்ததால் அதன் பார்வையில் பசியும்,உடலில் சோர்வும் உணரமுடிந்தது. முந்தையநாள் சோற்றை நீர் வடித்து பாத்திரத்தோடு எடுத்துவைக்க ஒரேமூச்சில் தின்றுமுடித்து வாலாட்டிச் சென்றது. அது எங்கள் ஏரியாதான் தாமதமாக வரநேரும் இரவுகளில் மற்றவைகள் குரைத்தபடி துரத்திவந்தாலும் இதுமட்டும் இருந்த இடம்விட்டு நகராது குரைக்கவும்செய்யாது.அதற்கு தெரிந்திருந்ததுபோலும் நானும் இந்த ஏரியாதான் என்று.

பின் ஒரு சமயம் அது குட்டிபோட்டிருந்தது, அப்போதெல்லாம் அந்தவழியாய் வருவோர் போவோர் எவரேனும் குட்டிகள் இருக்கும் திசையைத் திரும்பிபார்த்தால்கூட கத்தி கூச்சல்போட்டு துரத்திவிட்டுக்கொண்டிருந்தது. ஆரம்பத்தில் நானும் பயத்தில் அந்தப்பக்கம் திரும்பாமல்தான் போய்வந்துகொண்டிருந்தேன் ஆனாலும் குட்டிகளை பார்க்கதுடிக்கும் ஆர்வத்தில் அது இல்லாத நேரத்தில் குட்டிகளிலேயே அழகாய் ப்ரெளன் நிறத்தில் இருந்த‌ ஒன்றை கையில் எடுத்து கொஞ்சிக் கொண்டேயிருக்கையில் எங்கிருந்து வந்ததோதெரியவில்லை என்னை உரசியபடி நின்றுகொண்டிருந்தது, பயத்தில் ஒருகணம் உடல் அதிர்ந்து அடங்கியது.ஆனால் அது மிக சாந்தமாய் வாலாட்டியபடியே என்னையும் குட்டிகளையும் சுற்றி சுற்றிவந்தது.நான் பயத்திலும் இயல்பாய் இருப்பதாய் காண்பித்துக்கொண்டு குட்டியை இறக்கிவிட்டு வந்தேன்.

பின் சிறிது நாட்க‌ளில் அது ந‌ட‌க்க‌ப்ப‌ழ‌கிய த‌ன் குட்டிகளோடு ஏரியாவை வ‌லம் வ‌ர‌த்தொட‌ங்கிய‌து. அப்போதெல்லாம் அத‌ன் நடையில் ஒருவித பெருமிதத்தையும் கர்வத்தையும் உண‌ர‌முடிந்த‌து.சில‌ ச‌ம‌ய‌ம் குட்டிக‌ளை விட்டு தொலைவாய் சென்று அவ‌ற்றின் ந‌ட‌வ‌டிக்கைக‌ளை க‌வ‌னித்துக்கொண்டிருக்கும்.

குட்டிக‌ள் வ‌ள‌ர‌த்தொட‌ங்கிய‌வுட‌ன் அவைகளுடன் ஒவ்வொரு வீடாய் சென்றுவரத்தொடங்கி பின் ஒவ்வொரு குட்டிக்கும் ஒவ்வொரு வீட்டில் பரிச்சயத்தை ஏற்படுத்த, அந்தகுட்டியை ஒருவீட்டின் வாசலில் விட்டுவிட்டு எங்காவது மறைந்திருந்து கவனித்துக்கொண்டிருக்கும் குட்டியின் குரல் கேட்டு வீட்டிற்குள்ளிருந்து யாராவது வந்து குட்டியை அரவணைத்துக்கொண்டபின்தான் அந்த இடம்விட்டு அகலும். இப்படியாய் என்முறைக்கு வரும்போது அது அழைத்துவந்தகுட்டி நான் முதன் முதலில் பயந்தபடியே கொஞ்சிக்கொண்டிருந்த ப்ரெளன் நிறக்குட்டி.

கொஞ்ச நாட்களில் ஆறாம்அறிவை அந்த ஏரியாவிலேயே பார்க்க முடியவில்லை. பார்கமுடிந்ததெல்லாம் அதன் குட்டிகளைத்தான். அவையும் வளரத்தொடங்கிவிட்டன.

நீண்ட இடைவெளிக்குப்பின் மழைபேய்து ஓய்ந்த ஒரு மதியவேளை நண்பனின் விலாசம் தேடிக்கொண்டிருந்த தெருவிலிருந்து என்னை போய்விடச் சொல்லி எச்சரிக்கும் விதமாய் உருமியபடி இரண்டு ஜீவன்கள் பின்தொடர பயத்தில் நானும் பின்வாங்க‌ எதிபாரதவிதமாய் எங்கிருந்தோ குரைத்தபடியே பாய்ந்துவந்து அந்த இரண்டையும் துரத்திச்சென்றது அடர்கறுப்பு நிறத்தில் இருந்த அது.

Wednesday, January 19, 2011

நக(ரும்)ரின் அடையாளம்


பட்டாம் பூச்சிகள் காணவிலை,
பச்சைக்கிளிகள்(ஜோசிய)கூட்டிற்குள் பாதியும்
குறவர்களின் வயிற்றுப்பாட்டிற்கு மீதியுமாய்
மிச்சமேதுமில்லை இங்கே,
பூம்பூம் மாட்டை எவருக்கும் நினைவில்லை,
பாம்பாட்டியும் முறித்துக்கோண்டான்
பாம்புடனான உறவை,
குடுகுடுப்பைக்காரனுக்கு நல்லகாலம் பிறப்பது
ஊருக்கு வெளியே,
சிட்டுக்குருவிக‌ள்
கொஞ்சிய‌ இட‌ங்க‌ளை
சிற்ற‌லைவ‌ரிசையும்,ப‌ண்ப‌லைவரிசையும்
அடைத்துக்கொண்ட‌ன‌,
க‌ட்டெறும்புக‌ளையும்,
க‌ர‌ப்பான் பூச்சிக‌ளையும்
HIT அடித்து விர‌ட்டிவிட்டோம்,
ச‌ர்க‌ரை மிட்டாயும், ச‌ர்கர ராட்டின‌மும்
இட‌ம் பெய‌ர்ந்துவிட்ட‌ன‌ பொருட்காட்சிக்கு,
ஒவ்வொரு அடையாள‌த்தையும்
அழுத்த‌மாய் துடைத்தெரிந்துவிட்டு
அவ‌ச‌ர‌மாய் நிர‌ப்பிக்கொண்டிருக்கிறோம்
ந‌க‌ரை
பாலிதின் குப்பைக‌ளாலும்,
பாலைவ‌ன‌ புன்ன‌கையாலும்.
பிர‌ஷ‌ர் குர‌க்கும் மாத்திரையும்,
ப‌ண‌ம் சேர்க்கும் யாத்திரையும்,
கைய‌ட‌க்க‌ க‌ம்பியூட்ட‌ரும்,
க‌ட‌ன் அட்டை க‌னவு என‌
அர‌ங்கேறிக் கொண்டிருக்கிற‌து
புதிய‌ அடையாள‌ங்க‌ள்.

சாயம் போன கறுப்புச்சட்டை

தமிழகத்தை பொறுத்தவரை கறுப்புச்சட்டை கலாச்சாரம் இரண்டு வகையாயும் இரண்டுமே இரண்டு துருவங்களாயும் செயல்பட்டுக்கொண்டிருக்கிறது.

பெரியார் கறுப்புச்சட்டை அணிந்து கடவுள் இல்லை, கடவுள்பக்தி என்ற பெயரில் நடைபெற்றுக்கொண்டிருப்பதெல்லாம் மூடநம்பிக்கைகளும், காட்டுமிராண்டித்தனமும்தான் என்று ஊர் ஊராய் சென்று பிரச்சாரம் செய்துகொண்டிருந்த அதே காலகட்டத்தில்தான் கேரளத்து மலை ஒன்றில் ஐயப்பன் என்றொரு கடவுள் இருக்கிறார் என்றும் அதே கறுப்புச்சட்டை அணிந்து நோம்பு என்றபெயரில் 48 நாட்கள் தன் உடலை வருத்திக்கொண்டு காடு, மலை, மேடுகளை நடந்தே சென்று அவரைக்கண்டுவரும் முறையும் தமிழகத்தில் பரவலாகிக்கொண்டிருந்தது.

கறுப்புச்சட்டை நாத்திகவாதிகள் கடவுளை பழிப்பது, கோயிலை இடிப்பது என ஒரு அதீதமென்றால்(extreme), கறுப்புச்சட்டை ஆத்திகவாதிகள் ஒருவேளை உணவு, மார்கழிமாத்தில் இருவேளைக் குளியல், தரையில் வெறும் துண்டைவிரித்து உறங்குவது என இன்னொரு அதீதம்.

பெரியாருக்குப்பின் நாத்திகவாதம் நீர்த்துப்போனது என்றுதான் கொள்ளவேண்டும் (அதன் பின்னனியில் சமூக அரசியல்,வோட்டு அரசியல்,சுயநல அரசியல் என் பல உண்டு) பெரியார் பாசறையிலிருந்து வந்த ஒருவர் "ஒன்றே குலம் ஒருவனெ தேவன்" என்ற வாதத்தின்வழியாய் ஆத்திகத்தின் பாதையில் கால்பதித்தார். எஞ்சியிருந்தவர்களில் சிலர் விழுந்தாலும் மண் ஒட்டவில்லை என்பதுபோல் திராவிடம் / பகுத்தறிவு என்னும் இரு விளம்பரப்பலகைகளை கழுத்தில் சுமந்து அலையத்தொடங்கினர்.தமிழக வரலாற்றில் திராவிடமும் பொய்த்து, பகுத்தறிவும் பல்லிளித்த தருணங்கள் பல.

ஆனால் கறுப்புச்சட்டை ஆத்திகம் வெறும் கறுப்புச்சட்டை, கழுத்தில் மாலை என்பதோடு நிறுத்திவிடாமல் ஒவ்வொரு ஆண்டும் புதிய பக்தர்களை அதிகரித்துக்கொண்டு தன் வேர்களின் ஆழத்தை அதிகப்படுத்திக்கொள்வதோடு மட்டுமல்லாமல் தனக்கு சாதக‌மான பக்கங்களிலெல்லாம் கிளைபரப்பி தன் இருப்பை விரிவுபடுத்திக்கொள்கிறது. உதாரணமாக இதுவரயிலான ஐயப்பன் பாடல்கள் மென்மையாயும், இனிமையாயும், கேட்கும் மனங்களுக்கு இதமாயும் இருக்கும்.ஆனால் இந்த ஆண்டு கேட்கநேர்ந்த பாடல்களில் இன்றைய இளைய சமூகத்தின் மனவோட்டத்திற்கு இசைவாய் (அ) பிரதிபலிப்பாய் ஐய்யப்பன் ஒரு ஆக்ரோஷக்கடவுள் எனவும், பாவம்செய்வோரை அழித்தொழிக்கவே அவதரித்தவராயும், வண்புலி ஏறிவந்து வண்மையாய் தண்டிப்பார் என்பது போன்றும் (கிட்டத்தட்ட சுரா விஜய் ரேஞ்சுக்கு) பாட்டு எழுதி கூடவே ஐய்யனாரையும் இணைத்து இடையில் நரிக்குற‌வர்கள் தாங்களும் ஐய்யப்பனை காணவிரும்புவதாய்  தெரிவிக்கவைத்து அந்த வார்த்தைகளுக்கு வெறியேற்றுவதுபோல் வேகமான இசை அமைத்து மொத்தத்தில் சபரிமலைக்கு அதிக பக்தர்களை வரவழைக்க முயற்சிக்கும் கேரளத்து வியாபாரிகளோடு உள்ளூர் வியாபாரிகளும் சேர்ந்து  எத்தரப்பு மக்களையும் இழக்க விரும்பாததை இப்பாடல்கள் எடுத்துக்காட்டின. இவ்வகையான ஹைப்புக்களால் உந்தப்பட்டு மாலை அணிந்துகொள்ளும் இளைஞர்கள் இயல்பாகவே சற்று முரட்டுத்தனமாய்தான் இருக்கிறார்கள். 2002 அலலது 2003ல் நடந்த மிகக்கோரமான விபத்தில் தன் நிதானத்தாலும், சமயோஜிதத்தாலும் தன்னுடன் வந்த 2 பக்தர்களை பாதுகாப்பாய் கொண்டுசேர்த்த என் நண்பர் பக்தர்களின் பதட்டமும், பொறுமையிமையும்தான் அன்றைய விபத்தில் சேதம் அதிகரிக்கக்காரணம் என்று தெரிவித்தார். இந்த வருடம் 102 பேரை பலிவாங்கிய விபத்தில்கூட பக்தர்களுக்கிடையே நடந்த தள்ளுமுள்ளினால்தான் உயிர்ச்சேதம் அதிகரித்திருக்கிறது.

பகுத்தறிவை தன் வசதிக்கேற்பவும் வாதத்திற்காகவும் வளைக்க நினைக்கையில் அது நீர்த்துப்போகிறது. பக்தியை தான் செய்த தவறுகளுக்கான பரிகாரங்களாகவோ, குற்றவுணர்விலிருந்து விடுபடும் வழியாகவோ நினைத்து மேற்கொள்ளப்படும்போது அது அமைதியையோ,மனநிறைவையோ, பக்குவத்தையோ என்றுமே தந்துவிடாது.

நீங்கள் இதையும் விரும்பக்கூடும்