அதன் பெயர் ஆறாம் அறிவு, என் அறைக்கு அடிக்கடி வந்துபோகும். ஆறாம் அறிவுடன் என் அறிமுகம் 3 வருடத்திற்கு முன் நிகழ்ந்தது. மழைபேய்து ஓய்ந்த ஒரு மதியவேளை அறைவாசலில் நிழலாடியது, எட்டிப்பார்க்க அடர்கறுப்பு நிறத்தில் அது நின்று கொண்டிருந்தது. அது தன் வீடாய் பாவித்துக்கொண்டிருக்கும் அந்த வீட்டுக்காரர் குடும்பத்தோடு ஊருக்குப் போயிருந்ததால் அதன் பார்வையில் பசியும்,உடலில் சோர்வும் உணரமுடிந்தது. முந்தையநாள் சோற்றை நீர் வடித்து பாத்திரத்தோடு எடுத்துவைக்க ஒரேமூச்சில் தின்றுமுடித்து வாலாட்டிச் சென்றது. அது எங்கள் ஏரியாதான் தாமதமாக வரநேரும் இரவுகளில் மற்றவைகள் குரைத்தபடி துரத்திவந்தாலும் இதுமட்டும் இருந்த இடம்விட்டு நகராது குரைக்கவும்செய்யாது.அதற்கு தெரிந்திருந்ததுபோலும் நானும் இந்த ஏரியாதான் என்று.
பின் ஒரு சமயம் அது குட்டிபோட்டிருந்தது, அப்போதெல்லாம் அந்தவழியாய் வருவோர் போவோர் எவரேனும் குட்டிகள் இருக்கும் திசையைத் திரும்பிபார்த்தால்கூட கத்தி கூச்சல்போட்டு துரத்திவிட்டுக்கொண்டிருந்தது. ஆரம்பத்தில் நானும் பயத்தில் அந்தப்பக்கம் திரும்பாமல்தான் போய்வந்துகொண்டிருந்தேன் ஆனாலும் குட்டிகளை பார்க்கதுடிக்கும் ஆர்வத்தில் அது இல்லாத நேரத்தில் குட்டிகளிலேயே அழகாய் ப்ரெளன் நிறத்தில் இருந்த ஒன்றை கையில் எடுத்து கொஞ்சிக் கொண்டேயிருக்கையில் எங்கிருந்து வந்ததோதெரியவில்லை என்னை உரசியபடி நின்றுகொண்டிருந்தது, பயத்தில் ஒருகணம் உடல் அதிர்ந்து அடங்கியது.ஆனால் அது மிக சாந்தமாய் வாலாட்டியபடியே என்னையும் குட்டிகளையும் சுற்றி சுற்றிவந்தது.நான் பயத்திலும் இயல்பாய் இருப்பதாய் காண்பித்துக்கொண்டு குட்டியை இறக்கிவிட்டு வந்தேன்.
பின் சிறிது நாட்களில் அது நடக்கப்பழகிய தன் குட்டிகளோடு ஏரியாவை வலம் வரத்தொடங்கியது. அப்போதெல்லாம் அதன் நடையில் ஒருவித பெருமிதத்தையும் கர்வத்தையும் உணரமுடிந்தது.சில சமயம் குட்டிகளை விட்டு தொலைவாய் சென்று அவற்றின் நடவடிக்கைகளை கவனித்துக்கொண்டிருக்கும்.
குட்டிகள் வளரத்தொடங்கியவுடன் அவைகளுடன் ஒவ்வொரு வீடாய் சென்றுவரத்தொடங்கி பின் ஒவ்வொரு குட்டிக்கும் ஒவ்வொரு வீட்டில் பரிச்சயத்தை ஏற்படுத்த, அந்தகுட்டியை ஒருவீட்டின் வாசலில் விட்டுவிட்டு எங்காவது மறைந்திருந்து கவனித்துக்கொண்டிருக்கும் குட்டியின் குரல் கேட்டு வீட்டிற்குள்ளிருந்து யாராவது வந்து குட்டியை அரவணைத்துக்கொண்டபின்தான் அந்த இடம்விட்டு அகலும். இப்படியாய் என்முறைக்கு வரும்போது அது அழைத்துவந்தகுட்டி நான் முதன் முதலில் பயந்தபடியே கொஞ்சிக்கொண்டிருந்த ப்ரெளன் நிறக்குட்டி.
கொஞ்ச நாட்களில் ஆறாம்அறிவை அந்த ஏரியாவிலேயே பார்க்க முடியவில்லை. பார்கமுடிந்ததெல்லாம் அதன் குட்டிகளைத்தான். அவையும் வளரத்தொடங்கிவிட்டன.
நீண்ட இடைவெளிக்குப்பின் மழைபேய்து ஓய்ந்த ஒரு மதியவேளை நண்பனின் விலாசம் தேடிக்கொண்டிருந்த தெருவிலிருந்து என்னை போய்விடச் சொல்லி எச்சரிக்கும் விதமாய் உருமியபடி இரண்டு ஜீவன்கள் பின்தொடர பயத்தில் நானும் பின்வாங்க எதிபாரதவிதமாய் எங்கிருந்தோ குரைத்தபடியே பாய்ந்துவந்து அந்த இரண்டையும் துரத்திச்சென்றது அடர்கறுப்பு நிறத்தில் இருந்த அது.
Comments
Post a Comment