இரண்டு தற்கொலை (அ) ஒரு மரணம்



சந்தேகத்தின் அடிப்படையில் கைது
தீர்ப்புக்கு காத்துக்கொண்டிருக்கிறது
சிறையில் அடைக்கப்பட்டவரின்
குடும்பம்,
குற்றத்தை நிரூபிக்க சாட்சிகளை
தயாரித்துக்கொண்டிருக்கிறது
காவல்துறை,
சிறையில் அடைக்கப்பட்டவர்
அழுதுகொண்டிருக்கிறார்
இயலாமையில்,
சிறையில் அடைக்கப்பட்டவரின்
மனைவி சிரிக்கமுடிந்ததோ
கனவில்மட்டும்,
சிறையில் அடைக்கப்பட்டவரின்
மகன் நடந்துகொள்ளவேண்டியிருந்தது
இயல்பைவிட பணிவாய்,
என்றாலும்
சாட்சிகள்சில கட்சிமாறின‌
பலனாய் சில நோட்டுக்கள்
இடம் மாறின
குற்றம் நிரூபிக்கப்பட்டால்
இரண்டு தற்கொலை
வெளியே,
குற்றம் நிரூபிக்கப்படாவிட்டால்
ஒரு மர்மமான மரணம்
உள்ளே.

Comments