Wednesday, August 28, 2013

வாழ்க்கைத்தரம் - ரங்கநாதன் தெருவில் கிடைக்குமா?


ரங்கநாதன் தெரு - தி நகர்
                                    எல்லார் கை (பை) யிலும் வாழ்க்கைத்தரம்!
காட்சி ஊடகம் ஒன்றின் விவாத நிகழ்ச்சியில் கலந்துகொள்ள இந்திய விண்வெளிக்கழகத்தின்  பிரதிநிதியாய் வந்திருந்த ஒரு சிறப்பு விருந்தினரிடம் 

நிகழ்ச்சி தொகுப்பாளர் : உலகிலேயே முதன் முதலாய் நிலவில் கால்வைத்ததாய் அல்டாப்புகாட்டும் ஆனானப்பட்ட அப்பாடக்கர் அமெரிக்காவே அதுக்கு பிறகு இதுவரை நிலாவுக்கு ஆள் அனுப்பக்கானும், அப்படி இருக்க எந்த அடிப்படையில் நீங்கள் இன்னும் மூன்று மாதசத்துல நிலாவுல மக்களை குடியேற்றப்போகிறோம்ன்னு சொல்றீங்க? 

விருந்தினர் : இதபாருங்க சொல்றவங்க ஆயிரம் சொல்வாங்க அதை எல்லாம் கேட்டுகிட்டிருந்தா நாம் எதையுமே செய்யமுடியாது. சுதந்திர இந்திய வரலாற்றில் நாங்கள் மட்டும்தான் இத்தனை ஆண்டுகளாக விண்வெளி ஆராய்சியை செய்துகிட்டுவருகிறோம். அதால நீங்க நம்பித்தான் ஆகனும். எப்படி ஆள் அனுப்புவாங்க அதுக்கு என்ன அடிப்படைன்னு எல்லாம் கேக்றாங்களே அவங்கள வந்து ஆராய்ச்சி பண்ண சொல்லுங்களேன் பாக்கலாம். விண்வெளி ஆராய்ச்சின்னு ஒன்னு இருக்குன்னே தெரியாத நாடுகள்கூட நாங்களும் நிலவுல இடம் வாங்கிட்டோம்னு பீத்திக்கும்போது நாம ஏன கூடாது?

நிகழ்ச்சி தொகுப்பாளர் : நிலவில் காற்று நீர் என மனிதன் வாழ்வதற்கான எத்தகைய இயற்கை ஆதாரமும், சூழ்நிலையும் இல்லை என்று கூறுகிறார்களே அபடியான நிலையில் எப்படி மனிதன் அங்கு வாழமுடியும்
என்று நினைக்கிறீர்கள்?

விருந்தினர் : நிலவுல காத்து இல்லை தண்ணி இல்லை என சொல்றதெல்லாம் சும்மா. நம் முன்னோர்கள் வான சாஸ்த்திரத்தில் உலக நாடுகளை விட மிக மிக முன்னோடிகள் அதனால்தான் அதோபாரு நிலால ஆயா வடைசுடுதுன்னு தன் குழந்தைகளுக்கு சோறு ஊட்டும்போது சொல்லிகொடுத்திருக்காங்க. காத்து இல்லாமல் ஆயா அங்க இருந்திருக்க  முடியுமா? இல்ல தண்ணி இல்லாமதான் மாவரைச்சு வடை சுட முடியுமா? 

ஒரு விண்வெளி ஆராய்ச்சியாளர் இப்படி பேசினால் எவ்வளவு அபத்தமாக இருக்குமோ  இன்றைய புதியதலைமுறை புதுப்புது அர்த்தங்கள் நிகழ்ச்சியில் அரசியல்வாதி திரு கோபண்ணா பேசியது அதைவிட அபத்தமாக இருந்தது. 

மன்மோகன் சிங்கும், பா. சிதம்பரமும் பொருளாதாரபுலிகள் என்பதாலேயே அவர்களை நம்பித்தான் ஆகவேண்டும் என்பதுபோல் பேசுகிறார். ஒன்பது ஆண்டுகளில் 8. சில்லரை சதவிகித வளர்ச்சி இதுவரை இந்தியா காணாதது  என  சொல்லிச் சொல்லி புளங்காகிதம் அடைகிறார். 

எல்லாமே புள்ளி விவரங்களாக காகிதத்தில்தானே உள்ளது மக்களின் வாழ்க்கைத்தரம் உயரவில்லையே எனக்கேட்டால் மக்களின் வாழ்க்கை தரத்தை தி.நகர் ரங்கநாதன் தெருவில் போய் பாருங்கள் என்கிறார். 

ரங்கநாதன் தெருவில் அலையும் கூட்டம் பணம் கொழுத்துபோய் ஷாப்பிங் என்ற பெயரில் தினம் தினம் எதையாவது வாங்கிக்கொண்டிருக்கும் கூட்டமல்ல மற்ற இடங்களைவிட 50 ரூபாயோ 100 ரூபாயோ விலை குறைவாக கிடைக்கக்கூடிய காரணத்தால் தேவையான பொருட்களை நினைவு வரும்போதெல்லாம் எழுதி வைத்துக்கொண்டு மாதம் ஒருமுறை மொத்தமாய் வாங்கிப்போக குவியும் கூட்டம். 

இதை வாழ்க்கை தரத்தின் குறியீடாக கருதுகிறார் என்றால், அரசு மருத்துவமனைகளில் குவியும் கூட்டத்தையும் அங்கே நிலவும் சுகாதாரமற்ற சூழலும் நாட்டில் நிலவும் சுற்றுச்சூழல் மற்றும் சுகாதார சீர்கேட்டின் குறியீடுதானே? இதை ஏற்றுக்கொள்வாரா?

ரங்கநாதன் தெரு போன்ற ஒரு சில வியாபாரத்தளங்களின் அடிப்படையில் நாட்டின் ஒட்டுமொத்த மக்களின் வாழ்க்கை தரத்தையும் கணக்குபோட்டுக்க சொல்லும் இந்த மேதமை கோபண்ணா போன்ற காங்ரஸ் காரர்களைத்தவிர வேறு யாருக்கும் கைகூடாது. 

Monday, August 26, 2013

என்ன செய்திருக்கிறோம் இதுவரை.

யாருடையதோ ஒரு கோபம்
யாரையோ காயப்படுத்தும்போது

வலியவனின் கோபத்திற்கு
நியாயம் கற்பித்திருக்கிறோம்
எளியவனின் காயத்திற்கு
விதியை நொந்திருக்கிறோம்.

யாருடையதோ ஒரு தாபம்
யாரையோ இன்புறுத்தும்போது

ஆணின் இச்சையை
இயல்பு என்றிருக்கிறோம்
பெண்ணின் தாபத்தை
இழிவுபடுத்தியிருக்கிறோம்.

யாருடையதோ ஒரு புன்னகை
யாரையோ மகிழ்விக்கும்போது

புன்னகைத்தவனை
பொய்யன் என்றிருக்கிறோம்
மகிழ்ந்தவனை
அசடன் என்றிருக்கிறோம்

யாருடையதோ ஒரு வேகம்
யாரையோ இழுத்துச்செல்லும்போது

இழுத்தவனிடம்
வேகம் விவேகமல்ல என்று
அறிவுருத்தியிருக்கிறோம்
இழுபட்டவனிடம் உன்
ரத்தத்தில் வேகமில்லை என
வெறியேற்றியிருக்கிறோம்.

யாருடையதோ ஒரு கை
யாரையோ மேலெழுப்பும்போது

கை கொடுத்தவனிடம்
உனக்கேன் இந்த வேலை
என்று திசைதிருப்பி இருக்கிறோம்
மேலெழுபவனின்
கால்பிடித்து இழுத்திருக்கிறோம்

யாருடையதோ ஒரு துன்பம்
யாரையோ அழவைக்கும்போது

அழுதவனை பேடி
என்று நகைத்திருக்கிறோம்
 துன்புற்றவனை அழுதவனுக்கு
எதிராய் தூண்டிவிட்டிருக்கிறோம்

ஆனால்

யாருடையதோ
ஒரு வலி யாருக்கோ மகிழ்வை
அளித்துக்கொண்டிருந்தபோது

யாருடையதோ
ஒரு இயலாமையை யாரோ
பெரும் லாபமாய் மாற்றிக்கொண்டிருந்தபோது

யாருடையதோ
கடும் உழைப்பை யாரோ
சுரண்டிக்கொண்டிருந்தபோது

யாருடையதோ
பெரும் நம்பிக்கையை யாரோ
தகர்த்துக்கொண்டிருந்தபோது

யாருடையதோ ஒரு இனத்தை
யாரோ அழித்துக்கொண்டிருந்தபோது

வெறுமையாய்
பார்த்துக்கொண்டிருந்ததைதவிர
வேறென்ன செய்திருக்கிறோம்
இதுவரை.
வன்முறைக்கு அப்பால்

ஆறு வயசு குழந்தை தன் தந்தை கையால் நறுக்கு நறுக்குன்னு தலையில குட்டு வாங்குவதை பார்க்க்கும்போது மனசு பதறுது. ஒரு சின்ன குழந்தைமேல ஏன் இவ்வளவு கோபம். காரணாம் ஒரு பென்சிலை தொலைத்ததாகவோ, கூப்பிட்ட குரலுக்கு வரவில்லை எனபதாகவோதான் இருக்கமுடியும். அதற்கு இத்தனை வன்மம் சரிதானா?  அப்படி பார்த்தால் போபர்ஸ் ஊழல் வழக்கு சம்பந்தமான ஆதார கோப்புக்களை விமான நிலையத்தில் பரிகொடுத்தற்காகவோ, நிலக்கரி ஊழல் வழக்கில் பிரதமருக்கும் தொடர்பு இருப்பதாக நிறுபிக்கும் ஆவணங்களை மறைந்துவிட்டதற்காகவோ சம்பந்தப்பட்டவர்களை எத்தனை முறை குட்டவேண்டும்?

பொதுவாகவே கோபம், வெறுப்பு, வன்முறை என்றாலே அது ஆண்கள்தான் என்றும் பெண்கள் சாந்த சொரூபிகள் என்றும் நினைத்துக்கொண்டிருக்கிறோம் அல்லது நிறுவப்பட்டிருக்கிறோம். ஆனால் உண்மையில் ஆறு வயது குழந்தை தலையில் குட்டு வாங்குவதை எந்தவித உணர்வையும் வெளிக்காட்டாமல் பார்த்துக்கொண்டிருக்கும் அம்மாக்கள்தான் ஆண்களைகாட்டிலும் ஆபத்தானவர்கள்.

பெரும்பாலான சமயங்களில் குழந்தைகளின் கல்வி மற்றும் எதிர்காலம் கருதிதான் குழந்தைகள்மீதான வன்முறைகள் நிகழ்கிறன. கல்வி மற்றும் எதிர்காலம் குறித்து கவலைபடும் நாம் எதன் அடிப்படையில் அவற்றை முடிவுசெய்கிறோம்? நாம் படித்த காலமும் கல்வியும் இன்றைய காலத்துடன் ஒப்பிடக்கூடியதா? ஒப்பிடக்கூடியதுதான் என்று நினைத்தாலும் அல்லது அதைக்காட்டிலும் உயர்வானதாய் நினைத்தாலும்  ஒவ்வொரு தேர்வு முடிவுகளுக்கு பின்னாலும் பள்ளிகள் மீது விதிமீறல் புகார்களும் ,மாணவர்களின் தற்கொலைகளும்  ஏன் நிகழ்கின்றன?

''Mass production takes no note of the real requirement of the consumer"  இயந்திரங்கள் மூலம் மேற்கொள்ளப்படும் மொத்தமொத்தமான உற்பத்தி பற்றிய மகாத்மாவின் கருத்து இது. அவை தேவைகருதி மேற்கொள்ளப்படாமல் லாபம் கருதி  செயலபடுவதால் அதை  எப்படியெல்லாம் நம்மேல் திணிக்கின்றன என்பது அறிந்ததே.  

இன்றைய கல்விநிறுவனங்களூம் தனி மனிதனுக்கு எத்தகைய கல்வி வேண்டும், சமுதாயத்திற்கு அது எவ்வகையில் உதவும் என்பது பற்றிய அக்கரையில்லாமல் எல்லோரையும் மருத்துவர்களாகவும், பொறியாளாராகவும் தயாராகக்கூடிய பண்டங்களாய் உருவாக்கும்  ஒருவகை Maas Production  வேலையைத்தான் செய்துகொண்டிருக்கிறது.

இத்தகைய தயாரிப்புகளே பெற்றோரின் விருப்பமாகவும் வெறியாகவும் , கனவாகவும் இருப்பதால் குழந்தைகள் மந்தையிலிருந்து விலகிவிடாமல் கவனித்துக்கொள்ளவேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார்கள். விலகிவிடுவார்களோ என்ற பயத்தின் வெளிப்பாடுதான் இந்த வன்முறை.
Thursday, August 22, 2013

ஒரு வேண்டுகோள்.

66 ஆண்டுகால சுதந்திர இந்திய வரலாற்றில் ஏழ்மை  காணாமல் போய்கொண்டிருக்கிறது. 100 ஆண்டுகளுக்குள் அது முற்றாக இல்லாமல் செய்துவிடவேண்டும் என்ற முனைப்பில்( இன்னும் 34 ஆண்டுகள்தான் பாக்கி ) 100நாள் வேலைத்திட்டம், உணவு பாதுகாப்பு திட்டம் போன்ற அரசின் பல நல்ல திட்டங்களால் வறுமைக்கோடு எச்சில் தொட்டு அழிக்கப்பட்டு வருகிறது.( மொத்தமாய் அழிக்க எச்சில் பத்தவில்லையாம் மனமிருப்பவர்கள் உதவலாம்)

இந்திய அரசு இதுவரை (விலை)கூட்டிய எதையும் குறைத்ததே இல்லை என வருத்தப்படுபவர்களுக்காகத்தான் சராசரி மனிதனுக்கு  2400 கலோரி  உணவு தேவை என WHO னால் அறிவுருத்தப்பட்டிருந்த அளவை  1400 கலோரியாக குறைத்துகாட்டி மக்கள் மனதில் பால் வார்த்திருக்கிறது. ஒரு மனிதனுக்கு 1400 கலோரி உணவு என்பது கட்டிலில் படுத்திருப்பதற்கு மட்டுமே போதுமானது என்பதும் WHO குறிப்பிட்டிருக்கிறது கவனிக்கப்படவேண்டியது. ஆக மக்களை உழைக்கக்கூட கட்டாயப்படுத்தாத அரசை ஏன்தான் ஏசுகிறார்களோ தெரியவில்லை.

கணவன் மனைவி இரு குழந்தைகள் உள்ள குடும்பத்திற்கு 2000 ரூபாய்குள் (Rs 32 X 2 நபர் = Rs 64X 30 நாட்கள் = Rs 1920 ) அத்தனை அத்தியாவசிய தேவைகளும் தீர்ந்துவிடும் அளவிற்கு பொருளாதாரத்தையும், விலைவாசியையும் கட்டுக்குள் வைத்திருக்கிறதென்றால் அது சாதாரணவிஷயமில்லை என்பது ஏன் இந்த சமூக ஆர்வளார்களுக்கும், அரசியல் விமர்சகர்களுக்கும் விளங்க மறுக்கிறது.

சமூக ஏற்ற தாழ்வு என்பது அந்தந்த மாநில அரசுகளின் கைகளில்தான் உள்ளது என அறிந்துதான் அதை போக்கும் நடவடிக்கையாய் மதுக்கடைகளைகூட மாநிலஅரசே ஏற்று நடத்த அனுமதித்திருக்கிறது.. எந்த அரசு மதுக்கடைகளிளாவது இரட்டை குவளை முறை உள்ளதா? எந்த அரசு பேருந்துகளிளாவது இரட்டை இருக்கைமுறை உண்டா? இதையே ஏன் மற்ற மாநிலங்களில் அமல்படுத்தகோரி சமூக ஆர்வலர்கள் வலியுருத்தக்கூடாது. ஏதோ சில கிராமங்களில் லேசாய் சில கைகலப்பு ஏற்பட்டிருக்கிறது அவ்வளாவே? ஊரின் குறுக்கே சுவர் எழுப்பியதுகூட கொசுக்கள் வராமல் இருக்கத்தான். அந்த சுவர் இருந்தவரை தொல்லை இல்லாமல் இருந்தது இப்ப பாருங்க எவ்வளவு பிரச்சனை. அதைபோய் ஏதோ தாழ்த்தப்பட்டவர், உயர்குடி பிரச்சனை என்று வதந்தி பரப்புகின்றனர் அவற்றை நாம் புறங்கையால் புறக்கணிக்க வேண்டும் என மிக கண்டிப்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

 வல்லரசாக வேண்டுமென்ற கனவு ஒவ்வொரு இந்தியனுக்கும் இருக்க வேண்டும். அந்த கனவை நிறைவேற்றும் தகுதி அரசியல்வாதிகளுக்குதான் உள்ளதே தவிர விமர்சகர்களுக்கும் சமூக ஆர்வலர்களுக்கும் இல்லை. எனவே நாம் நம் அரசியல்வாதிகளின் ஆட்டத்திற்கெல்லாம் தலை ஆட்டினால் இந்தியா 2050 ஆம் ஆண்டு வல்லரசு ஆகிவிடும் என்பதில் எனக்கு நம்பிக்கை உள்ளது.

மந்திரி:  மன்னா நாட்டில் பஞ்சம் தலைவிரித்தாடுகிறது,

மன்னர்: அப்படியா?

மந்திரி:   ஆம் மன்னா மழை பொய்த்தது ,ஆறுகளில் தன்ணீர் இல்லை விவசாயம் பாதிக்கப்பட்டது, விலைவாசி கட்டுப்பாட்டில் இல்லை மக்கள் ஒருவேளை சோறுகூட  கிடைக்காமல் அவதிப்படுகிறார்கள்.

மன்னர்:  மக்கள் ஏன் இவ்வளவு பிடிவாதக்காரர்களாக இருக்கிறார்கள்? சொறு கிடைக்காவிட்டால் என்ன பஞ்சம் தீரும்வரை இட்லியோ, தோசையோ சாப்பிட்டு பழகிக்கொள்ளளாமே?  

இந்த கதைக்கும் என் கட்(காட்டுத்தனமான)டுரைக்கும் சம்பந்தமிருந்தால் நான் பொருப்பல்ல. 

Tuesday, August 20, 2013

யாரும் குடிபுகாத வீடு.


யாரும் குடிபுகாத வீட்டின் அறைகள்
காத்துக்கொண்டிருக்கிறன
குடியேறப்போகும்
குடும்பத்திற்க்காகவோ
பிரம்மச்சாரிக்காகவோ.

யாரும் குடிபுகாத வீட்டின் அலமாரிகள்
காத்துக்கொண்டிருக்கின்றன
யாரும் புரட்டி பார்க்காத புத்தகங்கள்
நிறைக்கப்படவோ
பழம்பெருமைபேசும்
கோப்பைகள் அடுக்கப்படவோ,

யாரும் குடிபுகாத வீட்டின் சுவர்கள்
காத்துக்கொண்டிருக்கின்றன
அவற்றை அலங்கறிக்கப்போகும்
நினைவுகளின் நீட்சிகளுக்கான
ஆணிகள் அறையப்படுவதர்காய்,

யாரும் குடிபுகாத வீட்டின்
சன்னல் கம்பிகள்
சுத்தப்படுத்தப்பட்டுகிடக்கிறது
இளைப்பாறிச்செல்லும் பறவைகளின்
எச்சங்களால்.

யாரும் குடிபுகாத வீட்டின்
தோட்டத்தில்
யாரும் பறித்துவிடக்கூடிய
சாத்தியமில்லா மகிழ்வில்
பூத்து நிற்கின்றன மலர்கள்
இயல்பைவிட மணமாய்..

யாரும் குடிபுகாத வீட்டில்
எதுவுமே களவுபோகும்
சாத்தியமில்லை - என்றாலும்
கதவுகள்மட்டும் பூட்டியேகிடக்கின்றன
எப்போதும்,

யாரும் குடிபுகாத வீடு
காத்துக்கொண்டிருக்கிறது
பல கனவுகளை உருவாக்கவும்
சிலவற்றை அழிக்கவும்.
Monday, August 19, 2013

குற்றங்களை கூட்டும் தண்டணைகள்!

 "உங்கள் மதங்களும், சட்டங்களும் உங்களை அடிமைகளாக வைத்திருக்கவே விரும்புகின்றன"  - ஓஷோ 

"உலகம் முழுவது ஜனநாயகத்தை குத்தகைக்கு எடுத்து விநியோகிக்கும் உரிமம் பெற்ற அமெரிக்காவின் நெருங்கிய பங்காளி சவுதி அரேபியாவின் பத்திரிக்கையாளர் RaifBadawi க்கு 600 சவுக்கடிகள் தண்டனை. அவர் ஒரு சுவற்றில் முகம் புதைத்து நிற்க வேண்டுமாம், தலை முதல் கால் வரை 150 சவுக்கடிகள் குடுப்பார்களாம், அதன் பின் அவரை மருத்துவமணையில் அனுமதிப்பார்களாம், இப்படியாக 600 இது தவிற இரண்டு ஆண்டுகள் சிறை வேறு."

மேற்கண்ட தகவலை எழுத்தாளர்ஆய்வாளர்,களபணியாளர் .முத்து கிருஷ்ணன் நேற்று தனது முகநூலில் பகிர்ந்திருந்தார்

மனித உரிமை மீரல்களுக்கு எதிரானவர்களாய் தங்களை பிரகடணப்படுத்திக்கொள்ளும் அமெரிக்கா தன் அறிவிக்கப்படாத பங்காளியானன சவுதி அரேபியா (இஸ்ரேலையும் சேர்த்துக்கொள்ளளாம்) எந்த அளவிற்கு மனித உரிமைகளை மீறுகின்றன என சுட்டிக்காட்டவே அவர் இதை பகிர்ந்திருப்பார் என்பது புரிந்துகொள்ள முடிகிறது. 

அரபு நாடுகளில் குற்றம் குறைவுதான் என்பது ஏற்றுக்கொள்ளக்கூடியதுதான்காரணம் கடுமையான தண்டனைகள்நடு ரோட்டில் கட்டிவைத்து தலையை சீவுவதுகல்லால் அடித்து கொல்வது என பல நம்பமுடியாத தண்டனைகள் பற்றி கேள்விபட்டிருப்போம்அத்தகைய தண்டனைகள் சரியாதேவையாஎன்பதுபற்றி பல விவாதங்கள் இருக்கத்தான் செய்கிறது. மேலும் அரபு நாடுகளில் மண்ணின் மைந்தர்களின் சதவிகிதம் மிகவும் குறைவு. வெளி நாடுகளிலிருந்து வியாபரத்திற்காய் வேலைக்காய் அங்கே சென்றிருப்பவர்கள்தான் அதிகம். அத்தகைய ஒரு சூழலில் இத்தகைய தண்டணைகள் பெருப்பாலும் வெளி ஆட்களையே அதிகம் பாதிக்கிறது. சமீபத்திலும் ஒரு இலங்கை தமிழ் பெண் பாதிக்கப்பட்டது நினைவிருக்கலாம்.

தண்டணை என்பது செய்த குற்றத்திற்காக கொடுக்கப்படுவதுமட்டுமல்ல இனியாரும் அத்தகைய குற்றத்தை செய்யக்கூடாது என்பதற்காகவும்தான்அதேசமயம் தவறு செய்தவன் திருந்துவதற்கான ஒரு வாய்பாகதான் தண்டணை இருக்க வேண்டும் என்பதுதான் இந்திய மனப்பான்மை. ஆனால் தண்டணை திருந்துவதற்கான வாய்ப்பாய் இருப்பது புதிய தவறுகளை தைரியமாய் செய்யவைக்கிறது என்பதை மறந்துவிடக்கூடாது.

கை புண்ணுக்கு கண்ணாடி எதுக்குன்னு கேப்பாங்க. இங்கே சட்டங்கள் தன் கை புண்ணுக்கு மட்டுமில்லை எதிராளியின் கை புண்ணுக்கும் சாட்சியாய் கண்ணாடி கேட்கிறது. கண்ணாடி சரியில்லை என்று சொல்லி உள்ளங்கை புண்ணையும் புண்ணே அல்ல அது வேறும் புடைப்புத்தான் என்று தீர்ப்பளிக்கிறது. கோடிகளில் ஊழல், சின்ன பெண்ணை கற்பழித்தது, மலைவாழ் பெண்களை பலாத்தாரம் செய்தது என சமூகத்தில் பலத்த தாக்கத்தை ஏற்படுத்திய இதுவரையிலான  எந்த வழக்கிலாவது நியாயமான தீர்ப்பு கிடைத்திருக்கிறதா? குற்றம் சுமத்தப்பட்டவர்கள் தண்டிக்கப்பட்டிருக்கிறார்களா? இத்தகைய மோசமான அனுபவங்களையும், முன்னுதாரணங்க்களையும் வைத்துக்கொண்டு ஒரு சாதாரண இந்தியன் எதனடிப்படையில் தண்டணைகள் குற்றவாளிகள் திருந்துவதற்கான வாய்ப்பாய் இருக்கவேண்டும் என வழிமொழிய முடியும்? 110 கோடி மக்களும் ஆளுக்கு ஒருமுறை ஒரு தவறை செய்துவிட்டு திருந்துவதற்கான வாய்ப்பளிக்கும் தண்டணையை பெற்றுக்கொள்ள துணிந்தால் என்னவாகும்.

ஆயிரம் குற்றவாளிகள் தப்பிக்கலாம் ஒரு நிரபராதியும் தண்டிக்கப்படக்கூடாது என்று சட்டம் சொல்கிறது. இது எந்தவகை சட்டம் என்று தெரியவில்லை. குற்றவாளிகள் ஏன் தப்பிக்க வேண்டும்? குற்றவாளிகள் எப்படிதப்பிக்கலாம்? அப்படி தப்பிக்கலாம் என்றால் அதற்கு வாய்ப்பளிக்கும் சட்டங்கள் எதற்கு?  சட்டமும், தண்டணையும் தப்பிக்க தெரியாத சாமானியனுக்குத்தானா? 

Sunday, August 18, 2013

தகரக்கூடுமோ தார்மீகம்?

இப்பவெல்லாம் ஒரு பூ விக்கறவரு என்னை உதாசீனப்படுத்தினாலும் ஏனோ தெரியல பன்னாட்டு நிறுவனங்களின் நியாபகம் வந்து கூடவே பயமும் பத்திக்குது. அரண்டவனுக்கு இருண்டதெல்லாம் பேயின்னு சொல்வாங்க அதுமாதிரியாகூட இருக்கலாம். 

போன வியாழக்கிழமை சாயங்காலம் ஆடி வெள்ளிக்கிழமைக்காக சாமிக்கு பூ வாங்க போன இடத்துலதான் இந்த பயம் தொடங்கிச்சி. ஒருமுழம் 30 ரூ அதுக்கு கொறச்சி எந்த பூவுமே இல்லை. நாலுபேர்கிட்ட 25 ரூக்கு கேட்டுபாத்ததேன் யாரும் தராப்போல தெரியல, சரி நமக்கு தெரிந்தவர் மார்கெட்ல பூ விக்கறார் அவர்கிட்ட போனேன். நான் போன நேரம் அவர் கிட்டதட்ட வியாபாரத்தை முடிச்சிட்டார் போல ஒரு முழமோ ஒன்றை முழமோதான் தட்டுல இருந்தது. ஆனாபாருங்க அவரும் அதே 30 ரூபாதான் சொன்னார். அவர்கிட்டயும் 25ரூவாக்கி கேட்டுபாத்தேன் முடியவே முடியாதுன்னு சொல்லிட்டார். கடைசி அஸ்திரமா "என்னப்பா தெரிஞ்சவர்ன்னுதானே அவ்வளவு தூரத்திலிருந்து வரேன்  அதுவுமில்லாம உங்கிட்ட கடைசியா இவ்வளவுதானே இருக்கு கொடுத்துட்டு போயேன் என்றேன்" "சர்தான் போசார் இங்க தெரிஞ்சவன் தெரியாதவன் எதும் கிடையாது, நீ வாங்காட்டி இன்னொருத்தன் வாங்கிட்டுபோகப்போறான்  இன்னிக்கி டிமாண்டு அப்படி தெர்தா" ன்னு சொல்லிட்டு அவன்பாட்டுக்கு பணத்தை எண்ணஆரம்பிச்சுட்டான். 

ஒரு பொருளுக்கு சந்தையில் தேவை அதிகமா இருக்கும்போது எந்த வியாபாரியுமே அதை தவறவிட விரும்பமாட்டான். பூவின் டிமாண்ட் என்பது ஒவ்வொரு விசேஷ தினத்திலும் தானாய் ஏற்படுவது. இந்த டிமாண்டை எந்த ஒரு தனி பூ வியாபாரியும் செயற்கையாய் ஏற்படுத்திவிடமுடியாது. அதற்கு மிகப்பெரும் முதலீடு தேவைப்படும்.சில்லரை வர்த்தகத்தில் முதலீடு செய்யவரும் பெரும் பன்னாட்டு நிறுவனங்கள் தங்கள் பண பலத்தாலும் அதிகாரத்திலிருக்கும் அவர்களின் அடிவருடிகளாலும் இத்தகைய டிமாண்டை மிகச்சுலபமாய் ஏற்படுத்திவிட வாய்ப்பு இருக்கிறது. ஒரு முழம் பூ இல்லை என்றால் எந்த அம்மனோ, ஆண்டாளோ அழப்போவதில்லை. ஆனால் இதே டிமாண்டை அத்தியாவசியத்தேவையான அரிசி, பருப்பில் கையாண்டால் பசியில் பிள்ளைகள் அழும். வசதியுள்ளவன் வாங்குவான், வாங்கமுடியாதவன் வன்முறையில் இறங்குவான். சட்டம் ஒழுங்கு பாதிக்கப்படும். ஏற்கனவே தமிழகத்தில் மது ஆறாய் ஓடிக்கொண்டிருக்கிறது.  இனி ரத்த ஆறும் ஓடக்கூடும். (எனக்கேகூட ஒரு கட்டத்தில் ஒருமுழம் பூ 30ரூபாவா மவனே என்னங்கடா அநியாயமா இருக்குன்னு ஒரு கோபம் வரத்தான் செய்தது). இது கொஞ்சம் அதிகப்படியான கற்பனையாக தெரியலாம் என்னமோ எனக்கு இப்படியெல்லாமும் நடக்க வாய்ப்பிருப்பதாய் பயம் தோன்றுகிறது. 

அதான் சில்லரைவர்த்தகத்தில் அன்னிய முதலீட்டை விருப்பப்படாத மாநிலங்கள் அனுமதிக்க தேவையில்லை என்று சொல்லிட்டாங்களே அம்மாவுந்தான் அதை அனுமதிக்கலையே அபுறமென்னன்னு நீங்க கேட்பது புரியுது சில்லரை வர்த்கம்ன்னு சொன்னது ஒரு புரிதலுக்காக, மற்றபடி அன்னிய பன்னாட்டு நிறுவனங்களின் முதலீடுகள் எங்கெல்லாம் பரவுகிறதோ அங்கெல்லாம் லாபத்திற்கான  முறைகள் மட்டுமே கடைபிடிக்கப்படுமே தவிர,  தார்மீகங்கள்  த க ர் க் க ப் ப டு ம் என்பதில் சந்தகம் இல்லை.

100 வது டெலிவரி.

பிளாக் எழுத தொடங்கி கிட்டத்தட்ட 3 வருஷம் ஆகிறது. இதுவரை 99 பதிவுகள் எழுதியாச்சு இது 100வது.

என் முதல் பதிவை  சாயம் போன கறுப்புச்சட்டை இதுவரை 9 பேர் வாசித்திருக்கிறார்கள் இதிலிருந்தே தேரியும் என் பிளாக் எழுதும் லட்சணம். 

மட்டைன்னு ஒன்னை கையில் எடுத்து ஆட ஆரம்பிச்சபிறகு சதம் அடிப்பது ஒரு மகிழ்ச்சிதானே.( அது எந்த கிரவுண்டா இருந்தாயென்ன, எந்த பிளேயர்ஸ்கூட இருந்தாத்தான் என்ன) 

இங்கே எழுத ஆரம்பித்ததில் மிகப்பெரிய மகிழ்ச்சியான விஷயம் திருப்பூர் ஜோதிஜியின் நட்பும் அன்பும். என் எழுத்துக்கள் மேல்  அவருக்கு பெரிய ஈர்ப்பு இல்லை என்றாலும் (அவரை ஈர்ப்பதுமாதிரியாய் எழுதமுடியாது) தனிப்பட்ட முறையில் என் நலம்விரும்பி என்பதில் ஐயமில்லை. 

என்னையும் ஒரு 24 பேர் பின்தொடர்கிறார்கள் அந்த நல்ல உள்ளங்களுக்கு நன்றி. ( இன்னுமா என்னை நம்புறீங்க?)

மற்றபடி இநத 99 பதிவுகளுக்கும் காரணம் நண்பன் சுரேஷ் துரைராஜன்  இவன்தான் உனக்கு தோன்றுவதையெல்லாம் எழுது நாளாக நாளாக எழுத்து கைகூடும் அப்படி கைகூடாவிட்டாலும் பரவாயில்லை என்று என்னை உந்திக்கொண்டிருப்பவன். 

மற்றபடி இனியாவது படிக்கிறாமாதிரி எழுத கற்றுக்கொள்ளவேண்டுமென்று பிரார்த்தனை செய்துகொள்ளுங்கள். 

நன்றி.


Friday, August 16, 2013

ஆடி தள்ளுபடி - ஆள் தேடி கொள்ளையடி.

ஆடி கொள்ளையர்களிடம் அகப்பட்ட அடிமைகள்.

ஆடி தள்ளுபடி என்பது கடந்த 10-12 ஆண்டுகளாகத்தான் அதகளப்படுகிறது. குறிப்பாக உலகமயமாக்கப்பட்ட, தாராளமயமாக்கப்பட்ட பொருளாதார கொள்கைக்குப்பின்தான் என்றால் சரியாக இருக்கும். ( ஆமா எல்லாத்துக்கும் தாராளமயமாக்கலை கை காமிச்சிட்டா பெரிய அறிவாளின்னு நினைப்பா?). ஆடித்தள்ளுபடியில் 50% 60% 70% என தள்ளி தள்ளி 0% வட்டி என்பதுபோல் 100% தள்ளுபடியும் வரப்போகும் காலம் தொலைவில் இல்லை என்றே தோன்றுகிறது. என்ன பேக்கிங் சார்ஜ், சர்வீஸ் சார்ஜ் என தலைக்கு 1000 ரூ தனியாக வசூலிக்கக்கூடும். இப்பவே ரிலையன்ஸ் போன்ற தனிப்பெரும் கடைகளில் பிளாஸ்டிக் பைக்கு தனியாக பணம் கேட்கின்றனர். 

மற்ற எல்லா துறைகளைவிட ஜவுளித்துறைதான் ஆடித்தள்ளுபடியில் நடுத்தரவர்க்க குடும்பங்களை ஆட்டிப்படைக்கிறது அல்லது ஆதிக்கம் செலுலுத்துகிறது  என தோன்றுகிறது. பொதுவாய் அடித்தட்டு மக்களை இந்த ஆடி அண்டுவதில்லை. காரணம் அவர்கள் எதையும், தன் அத்தியாவசிய தெவைக்களுக்குக்கூட யோசித்தே செலவு செய்கிறார்கள். அவர்களின் வருமானம் அதைத்தான் அனுமதிக்கிறது. அவர்கள் ஆண்டுக்கு ஒருமுறைதான் துணி எடுக்கிறார்கள் அது தீபாவளி அல்லது பொங்கல். நடுவுல எடுக்கிறாங்கன்ன அவங்க உடுத்தியிருக்கும் துணி இனி உடுத்தவே முடியாதுங்கற சூழ்நிலையாத்தான் இருக்கும். அப்பவும் அன்னிக்கு அவன் கையில் உள்ள தொகையில் வாங்கக்கூடியதை மட்டுமே அவன் தேர்ந்தெடுக்கிறான். அவனுக்கு louis philippe, wrangler, Lee இது எதுவும் தெரியாது தேவையுமில்லை. அவனின் தேவைஎதுவோ அதன் சந்தை அவன் அறிவான். அவன் வாழும் வாழ்க்கை சூழலும் பணிச்சூழலும் அவனிடம் அதைத்தான் எதிர்பார்க்கிறது. இது ஜாதிசார்ந்த ஒரு சமூக கட்டமைப்பினால் உருவாகி இருந்தாலும், பொருளாதாரமும் ஒரு காரணமே.

அடுத்து உயர்தட்டு மக்கள். அவர்களுக்கு ஆடிபற்றியோ அமாவாசைபற்றியோ எந்த கவலையும் இல்லை, அக்கறையும் இல்லை. நினைத்த நேரத்தில் நினைத்த பொருளை வாங்கக்கூடிய ( அது 6000 மோ 60,000 மோ ) பொருளாதாரத்திலும், மனநிலையிலும் வாழக்கூடியவர்கள். KFC யும், Pizza Cornar ம் அவன் டீ சாப்பிடும் இடங்கள். அங்கே அவன் தள்ளுபடிகளை எதிர்பார்த்து போவதில்லை. ( 75ரூ பிரண்ஸ் பேக் என்றும், வெறும் 44 ரூ மட்டுமே என்றும் விளம்பரத்தை பார்த்தபின்தான் அவற்றில் நடுத்தரமக்கள் நடமாட்டம் அதிகரித்திருக்கிறது )

நடுத்தரவர்க்கம் அல்லது ரெண்டுங்கெட்டான். இவன் வாழும் முறையிலும் மனோபாவத்திலும் ஒரு ரெண்டுங்கெட்டானாகவே இருக்கிறான். இருப்பது போதும் என்று இருந்துவிடுவதும் இல்லை, பறக்கத்தான்செய்வேன் என உறுதிகொள்வதும் இல்லை. கையேந்திபவனுக்கும் சரவணபவனுக்கும் இடைபட்ட டீ கடையில் உக்கார்துகொண்டு le meridien  ஐயும் park sheraton னையும் தின்றுகொண்டிருப்பவன். தான் உயர்தட்டு மக்களுக்கு எந்தவிதத்திலும் சளைத்தவனல்ல என நிருபிக்க நடை உடை பாவனைகளில் அவனைப்போலவே நடந்துகொள்பவன். அதற்காக தன்னால் இயன்றதையும் இயலாததையும் செய்யத்துணிபவன். மேல்தட்டு மகக்களைபோல் இருக்கவேண்டும் என்பதற்காய் அவர்களைப்போலவே சிறந்த பிராண்டட் சர்ட்டுக்களையும், பேண்ட்டுக்களையும் வாங்குவார்கள், பிசாவையும் பர்கரையும் தொண்டை அடைக்க அடைக்க தின்று தொலைப்பார்கள். பக்கத்து நாடார் கடைகளில் வாங்கிக்கொண்டிருந்த மளீகை பொருட்களை சூப்பர்மார்கெட்டுகளில் வாங்குவார்கள். வங்கிகணக்கை ICICI, HDFC என பன்னாட்டு வங்கிகளில்தான் தொடங்குவார்கள். இவை எல்லாம் அவர்களுக்கு தங்களின் கவுரவத்தோடு தோடர்புடையதானவைகளாக உள்ளன. இவர்களின் வரட்டுத்தனத்தை பயன்படுத்தி மேல்தட்டு மக்களால் நிராகரிக்கப்பட்ட அல்லது அவர்கள் ரசனையிலிருந்து விலகிவிட்ட வடிவமைப்புக்களை ஆடியில் தள்ளுபடி விலையில் இவர்கள் தலையில் கட்டுகிறார்கள்.

இப்படியாக ஆடிக்களிக்கும் ஆடி நேற்றோடு ஓய்ந்தது.
Thursday, August 15, 2013

CELL லுமிடம் எல்லாம் நீ!

இப்போதெல்லாம் இதயத்தின் வெகு அருகே
இப்போதும் நீ.

செல்லமாய் சினுங்குவாய்,
மெல்லமாய் அதிர்வாய்,

அள்ளி எடுத்து கொஞ்சும்வரை
நிறுத்துவதில்லை - உன் கூப்பாட்டை
எடுத்தபின்
சொல்லிக் கொள்ளும் நேரத்தில்
நிறுத்தமுடிவதில்லை - எம் வாய்பாட்டை.

வேளைதவறிய அகாலங்களில்
அழைப்பாய் அபத்தமாய்.
ஏகாந்தம் கொள்ளும் இரவுகளில்
 பல் இளிப்பாய் இங்கீதமில்லாமல்

கோவில் பிரகாரங்களிலும்,
குழந்தைகளோடு ஆடும்
பொழுதுகளிலும் - தாங்கமுடிவதில்லை
உன் தொல்லை.
எரிச்சல்வரும் அப்போதெல்லாம்
என்னசெய்ய எடுத்து எரிந்துவிடவும்
முடிவதில்லை உன்னை.

நாளொரு வசதியும்,
வகைக்கொரு சலுகையுமாய்
வலம்வந்துகொண்டிருக்கும் நீ
வாங்க வழியில்லாதவரையும்
வளைத்துக்கொண்டிருக்கிறாய்
உன் வனப்பைக்காட்டி.

வருமானம் வழிமொழியாவிடினும்
சில வசதிகளுக்காகவேனும்
வேண்டியிருக்கிறது உன் இருப்பு.

விரட்டியடிக்க முடியாத
விருந்தாளியைப்போல்
விரும்பியோ விரும்பாமலோ
நான் Cellலுமிடமெல்லாம்
(9382716633)- நீ!

Monday, August 12, 2013

அடுத்த நிதியமைச்சர் யார்?


டலர் மதிப்பு நாளுக்கு நாள் உயர்ந்துகொண்டே செல்கிறது, இதற்கு காரணங்களாய் அமெரிக்க பொருளாதாரம் உயருகிறது, அல்லது அமெரிக்காவின் பொருளாதாரத்தை உயர்த்த அவர்கள் இந்தியாவில் செய்துள்ள முதலீடுகளை திரும்பபெறுகிறார்கள், நம் நாட்ட்டின் இறக்குமதி அதிகரிப்பு, அதை குறைக்க உற்பத்தியை பெறுக்கவேண்டும் என ஆயிரம் விஷயங்கள் சொல்லி விளக்கினாலும், விவாதித்தாலும் காமன்மேனுக்கு அவையெல்லாம் புரிந்துக்கொள்ளக்கூடியாதாய் இல்லை. அவனின் எதார்த்தமான கேள்வி,

அமெரிக்க பொருளாதாரத்திற்கும் நமக்கும் என்ன சம்பந்தம்? 

நாம் இருப்பது இந்தியாதானே? 

அவன் ஏன் இங்க முதலீடு செய்யனும்? 

அதை ஏன் திரும்ப எடுத்துட்டு போகனும்? 

இவன் இஷ்டபட்டா முதலீடு போடுவானாம் திடீர்னு அவனுக்கு தேவைபட்டா எடுத்துட்டு போயிடுவானாம் என்னய்யா அநியாயமா இருக்கு? 

இவன் என்ன வியாபாரம் பண்றானா சூது ஆடுறானா? 

மூனு சீட்டு ஆட்டத்துலகூட சம்பாதிச்சவன் பாதி ஆட்டத்துல எழுந்து போயிட முடியாது தெரியுமில்ல?  

இது அதவிட கொடுமையாயில்ல இருக்கு?

இந்த கேள்விகளுக்கு  என்ன பதில் சொல்வது என திணரவேண்டியிருக்கிறது. இந்த கேள்வியிலிருந்து எப்படி எஸ்கேப் ஆவது என யோசிச்சி “ சரிப்பா டாலர் மதிப்பு கூடுனா உனக்கென்ன குறஞ்சா உனக்கென்ன நீபாட்டு உன் வேலையை பாக்கவேண்டியதுதானே?” ன்னு அவனை ஒரு எதிர் கேள்வி கேட்டது தப்பா போச்சு.

பெட்ரோல் விலை கூடிடும், 
பஸ்கட்டணம் உயரும், 
காய்கறிகள் வாங்கமுடியாத விலையாயிடும், 
பால் விலையேரும், 
டீ விலையேரும்னு ஒரு பெரிய லிஸ்டே படிக்கறாங்க.

இதுக்கு என்னதான் வழின்னு நிதியமைச்சரை கேட்டா உற்பத்தியை பெருக்கனுங்கறாரு. 

இதையும் ஒரு காமன்மேன்கிட்ட சொல்லிபாத்தேன் 

“ உற்பத்தியை அதிகப்படுத்துவதுன்னா என்ன  நான் ஒரு நாளைக்கு 300 இட்லி சுட்டு விக்கிறேன் நாளையிலிருந்து 350 இட்லி சுடனுமான்னு" கேககறாரு ஒரு இட்லி கடைக்காரர்.

"பாசனத்துக்கு தண்ணியில்லாம தவிச்சப்ப காவிரில தண்ணி தரமாட்டேண்ண்னு தகராறு பண்ணினான் கர்னாடகாகாரன் அவங்கிட்டபோய் உற்பத்தியை பெருக்கனும் ஒழுங்கா தண்ணிவுடுடாண்ணு சொல்ல வேண்டியதுதானே இந்த நிதியமைச்சர்ன்னு" கேட்கிறார் ஒரு விவசாயி. 

உண்மையில் உற்பத்தியை அதிகரிப்பதுன்னா என்னான்னு நிதியமைச்சரையே கேட்டாக்கூட என்ன சொல்லிடபோறாரு அன்னிய முதலீடு உள்ள வரனும் அதைத்தவிர வேறவழியில்லைனபோறாரு. மறுபடியும் அவன் முலீடுபண்ணுவான் திரும்பப்பெருவான் நாம தலையில துண்டபோட்டுக்கனும் இதசொல்லத்தான் நிதியமைச்சர்ன்னா யார்வேண்ணா நிதியமைச்சரா இருக்கலாம் போல.

சரிப்பா நீதான் ஏதாச்சும் சொல்லேன்றிங்களா? 

தோற்றுப்போய் பல்லிலித்துக்கொண்டிருக்கும் தாரளமயமாக்கலையும், உலமயமாக்கலையும் இன்னும் தலையில் வைத்துகொண்டாடிக்கொண்டிருக்கும் தலைசிறந்த பொருளாதார புலிகள் மன்மோகன்சிங்கையும், சிதம்பரத்தையும்விடவா நான் ஏதும் சொல்லிடமுடியும்.


உங்களுக்கு ஏதாவது தெரிஞ்சா பின்னூட்டத்தில் தெரியபடுத்துங்க தெரிஞ்சுகறேன்.

Saturday, August 10, 2013

' தென்றல் ' சுடும்

எல்லா பெண்களைப்போலவே என் பொண்டாட்டியும் புருஷன் சொன்னாமட்டும் கேட்டுக்கவே மாட்டா? அதான் இன்னிக்கு சரியான படம் கத்துகொடுக்கனும்னு முடிவுபண்ணிட்டேன். எனக்கு வந்த ஆத்திரத்திற்கு TV யை தூக்கிபோட்டு உடைக்கலாம்போல இருந்தது. ஆனா நஷ்டம் எனக்குத்தானேன்னு ஒரு நிமிஷம் யோசிச்சேன் TV யை OFF பண்ணிட்டு அதே கோவத்தோட  பொண்டாட்டியபார்த்து “நான் ஏற்கனவே சொன்னேல்ல அவனை நம்பாதேன்னு, நீதான் இல்ல அவன் நல்லவன் இவ்வளவு பணம் காசு இருந்தும் என்வளவு சிப்பிளா இருக்கான்பாருங்க, அவன் பேச்சும் நடவடிக்கையும் எவ்வளவு பண்பா இருக்கு பாருங்கன்னு என்னை கன்வின்ஸ் பண்ணின, அவங்கிட்ட பணம் இருக்குன்னுதானே அந்தபொண்ண ஒருவார்த்தைகூட கேக்காம அவனுக்கு கட்டிவெக்கறாங்கன்னு நான் கேட்டப்ப செச்..சே அதெல்லாம் இல்லைங்க அவன் ரொம்ப நல்லவன்னு சொன்ன, இப்ப எங்கிட்டவந்து அவன் எப்படி பேசறான் பாருங்கன்னா, நான் என்ன செய்யமுடியும்? நான் எடுத்துச்சொல்லும்போதெல்லாம் ஏதாவது சொல்லி என்னை சமாளிச்சுட்டு இப்ப குத்துதே கொடையுதேன்ன ? நல்லா கேட்டுக்க இதுதான் கடைசி இனிமே இதெல்லாம் ஒரு விஷயமா எங்கிட்ட சொல்லிகிட்டு வரக்கூடாது என்ன புரியுதா" என கத்திவிட்டு முகம் கழுவ சென்றுவிட்டேன். என் கோபத்தின் நியாயம் புரிந்ததினால் குற்றவுணர்வில் தலை குனிந்து நின்றிருந்தாள். அவள் கண்கள் லேசாய் கலங்கி இருந்தது. அவள் எப்பவுமே இப்படித்தான் யாரையும் எதையும் வெகு சுலபத்தில் நம்பிவிடக்கூடியவள் பின் அது அப்படியாயிடிச்சு, அவன் இப்படி பண்ணிட்டான்ன்னு ஒரே புலம்பல். அதான் TVயில் ஓடிகிட்டிருந்த தென்றல் சீரியலை OFF பண்ணீட்டேன் இனி எதபாத்து பொலம்பறான்னு பாப்போம்.

நீங்கள் இதையும் விரும்பக்கூடும்