என்ன செய்திருக்கிறோம் இதுவரை.

யாருடையதோ ஒரு கோபம்
யாரையோ காயப்படுத்தும்போது

வலியவனின் கோபத்திற்கு
நியாயம் கற்பித்திருக்கிறோம்
எளியவனின் காயத்திற்கு
விதியை நொந்திருக்கிறோம்.

யாருடையதோ ஒரு தாபம்
யாரையோ இன்புறுத்தும்போது

ஆணின் இச்சையை
இயல்பு என்றிருக்கிறோம்
பெண்ணின் தாபத்தை
இழிவுபடுத்தியிருக்கிறோம்.

யாருடையதோ ஒரு புன்னகை
யாரையோ மகிழ்விக்கும்போது

புன்னகைத்தவனை
பொய்யன் என்றிருக்கிறோம்
மகிழ்ந்தவனை
அசடன் என்றிருக்கிறோம்

யாருடையதோ ஒரு வேகம்
யாரையோ இழுத்துச்செல்லும்போது

இழுத்தவனிடம்
வேகம் விவேகமல்ல என்று
அறிவுருத்தியிருக்கிறோம்
இழுபட்டவனிடம் உன்
ரத்தத்தில் வேகமில்லை என
வெறியேற்றியிருக்கிறோம்.

யாருடையதோ ஒரு கை
யாரையோ மேலெழுப்பும்போது

கை கொடுத்தவனிடம்
உனக்கேன் இந்த வேலை
என்று திசைதிருப்பி இருக்கிறோம்
மேலெழுபவனின்
கால்பிடித்து இழுத்திருக்கிறோம்

யாருடையதோ ஒரு துன்பம்
யாரையோ அழவைக்கும்போது

அழுதவனை பேடி
என்று நகைத்திருக்கிறோம்
 துன்புற்றவனை அழுதவனுக்கு
எதிராய் தூண்டிவிட்டிருக்கிறோம்

ஆனால்

யாருடையதோ
ஒரு வலி யாருக்கோ மகிழ்வை
அளித்துக்கொண்டிருந்தபோது

யாருடையதோ
ஒரு இயலாமையை யாரோ
பெரும் லாபமாய் மாற்றிக்கொண்டிருந்தபோது

யாருடையதோ
கடும் உழைப்பை யாரோ
சுரண்டிக்கொண்டிருந்தபோது

யாருடையதோ
பெரும் நம்பிக்கையை யாரோ
தகர்த்துக்கொண்டிருந்தபோது

யாருடையதோ ஒரு இனத்தை
யாரோ அழித்துக்கொண்டிருந்தபோது

வெறுமையாய்
பார்த்துக்கொண்டிருந்ததைதவிர
வேறென்ன செய்திருக்கிறோம்
இதுவரை.




Comments

  1. இதற்குத்தான் ஆசைப்பட்டேன் பாலகுமாரா?

    அழகான சமூக சாடல் கவிதை.

    ReplyDelete
  2. "கிறோம்"
    என்று ஒவ்வொரு பத்தி முடியும் போதும் நாம் மகிழ்கிறோம்

    ReplyDelete
    Replies
    1. "ருக்கிறீர்கள்" என்று எதிராளியை காட்டாமல் "கிறோம்" என்னையும் செர்த்துக்கொண்டதற்காவவா?
      நன்றி.

      Delete
  3. வேறென்ன செய்திருக்கிறோம்.....வலுவான அடிதான்..அடி வலித்தாலும் ஏனோ உணர்ச்சியேயில்லை....

    ReplyDelete
    Replies
    1. வேறென்ன செய்திருக்கிறோம்.....வலுவான அடிதான்..அடி வலித்தாலும் ஏனோ உணர்ச்சியேயில்லை....
      கவிதையிலா? நம் மனங்களிலா?
      கவிதையில் என்றால் கூட்டவோ குறைக்கவோ முடியக்கூடியதுதான்
      மனங்களில் என்றால் பெரும்முயற்சி தேவைப்படும்.

      Delete
  4. ஆழமான சிந்தனையில் விளைந்த
    அற்புதக் கவிதை
    பகிர்வுக்கும் தொடரவும் வாழ்த்துக்கள்

    ReplyDelete
  5. அன்பின் அகலிகன் - நற்சிந்தனையில் விளைந்த நல்லதொரு அருமையான கவிதை -

    //வெறுமையாய்
    பார்த்துக்கொண்டிருந்ததைதவிர
    வேறென்ன செய்திருக்கிறோம்
    இதுவரை. //

    உண்மை உண்மை - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

    ReplyDelete
  6. நல்லதொரு சமூக சாடல். அருமையான கவிதை.
    நன்றி தொடர வாழ்த்துக்கள்....!

    ReplyDelete

Post a Comment