Saturday, January 29, 2011

ரயில் பயணங்களில்


போனவாரம் officalல அரக்கோணம்வரை போகவேண்டியிருந்தது(கல்யாண போட்டோ வீடியோ எடுக்கத்தான்). Bike லயே போய்டலான்னுதான் நினைச்சேன் ஆனா லக்கேஜ்யெல்லாம் எடுத்துக்கிட்டு போகனும்னா train தான் கரெக்ட்ன்னு தோனிச்சு, Bikeகை ஸ்டேஷனுக்கு திருப்பினேன். மத்தியான நேரம் ஸ்டேஷன் அரைதூக்கத்தில் இருந்தது. காத்துகிட்டிருந்த 10 நிமிஷத்துல மூளை வளர்ச்சி குறைந்தவங்க 2 பேரை பார்க்கமுடிந்தது, ஒருவர் தண்டவாளத்தை கடக்க கட்டியிருக்கும் Bridge படிகளை தன் கையிலிருந்த துணியால் சுத்தம் செய்துகொண்டிருந்தார். தூசி ஆள் உயரத்திற்கு பரந்தது பயணிகள் மூக்கை பொத்தியபடி அவரைக்கடந்தனர், சிலர் சில்லரையும் தந்துசென்றனர். நான் பார்க்கும்போது பத்து படிகள் சுத்தமாய் இருந்தது. இன்னொருவர் இறும்பு பென்ச்சில் சம்மணமிட்டு அமர்ந்தபடி தனக்குத்தானே பேசியபடியும், தாடியை சொரிந்தபடியே சிரித்துக்கொண்டுமிருந்தார். நான் அவர் அருகில் உட்கார்ந்ததும் என்னைப்பார்த்தும் புன்னகைத்தார். பதில் புன்னகைக்க "நான் டில்லி போகனும்" என்றார், சரி என்றேன்.

மத்தியான நேரம் என்பதால் தாராளமாக இல்லையென்றாலும் கொஞ்சம் அடக்கமாய் உட்காருவதற்கு இடம் கிடைத்தது. என் எதிரே அமர்ந்திருந்த பெரியவர் pendrive,USB port, speaker, battary என பலவற்றை இணைத்து "ஆடலுடன் பாடலை கேட்டு" பாடலை கண்மூடி ரசித்துக்கொண்டிருந்தார்.குனிந்த தலை நிமிராமல் தன் Laptop ல் எதையோ தடவிக்கொண்டிருந்த‌ என் பக்கத்து சீட் இளைஞனுக்கும் சேர்த்தேதான் பாடிக்கொண்டிருந்தார் MGR. என‌க்கு வ‌ல‌து ப‌க்கம் சனனல்கிட்ட ஒரு மத்திம வயதுக்காரர் தன் headphoneனில் பாட்டுகேட்டுக்கொண்டிருந்தார் அது "ஆடிய ஆட்டமென்ன" சிவாஜி பாட்டாகவும் இருக்கலாம். முன்னெல்லாம் கொஞ்சம் சத்தமா பாட்டு கேட்டா என்ன டீ கடைமாதிரின்னு கேப்பாங்க அதுல ஒரு ஏளனம் தெரியும். FM radio வந்தபிறகு ஒவ்வொருத்தரும் ஒரு டீக்கடையாவே மாரிட்டாங்க.  அவருக்குப் பக்கத்தில் ஒரு த‌ம்ப‌தி அவ‌ருக்கு 49வ‌யசும் அவ‌ங்க‌ளுக்கு 45வ‌யசும் இருக்கும். பொண்ணூ க‌ல்யாண‌த்திற்கு ப‌த்திரிக்கை வைக்க‌ போய்கிட்டிருக்காங்க‌போல‌ த‌ன் வீட்டுக்கார‌ரோட‌ உற‌வுக‌ளைப்பத்தி ரோம்ப‌ காட்டமாவே பேசிகிட்டுவ‌ந்தவ‌ங்க‌, பிளாஸ்டிக் பைக‌ளில் 5 ரூபாக்கு விற்றுக்கொண்டுவ‌ந்த சாம‌ந்தியையும், க‌ன‌காம்ப‌ரத்தையும் வாங்குவதில் குழம்பிப்போய் கடைசியாய் கணவர் சொன்ன கனகாம்பரத்தையே வாங்கிக்கிட்டாங்க.

ஒவ்வொரு நிறுத்தத்திலும் வண்டி 3 நிஷத்துக்கும் குறைவாய்தான் நிற்கிறது அந்த குறைந்த வினாடிகளுக்குள்ள சூடான சமோசாவும், நெய் பிஸ்கட்டும், அதிரசமும் என ஒவ்வொரு நிறுத்தத்திற்கும் ஒவ்வொரு ஐட்டம் வந்துகிட்டேயிருந்தது சுவாரசியமாய் இருந்தது. பக்கத்தில் இருப்பவர்கள் எதையாவது வாங்கிக்கொண்டே இருக்க எதையாவது வாங்கும்படி நாமும் மனதளவில் உந்தப்படுகிறோம். நெய் பிஸ்கட்டின் மணம் அது சூடாகத்தான் இருக்கும் என நம்பவைக்கிறது(நான் ஏமாந்துட்டேன்). அவர்களின் வியாபார யுக்தியே அதுதானோ என்னவோ? சென்னை மார்கெட்டில் அதிகம் பார்க்கமுடியாத வெந்தியக்கீரை 3 ரூபாய்க்கு கிடைப்பது ஆச்சரியம்(திரும்பிப் போகும்போது வாங்கிட்டு போகனும் கொஞ்சம் ஞாபகப்படுத்துங்க பிளீஸ்).

ஒரு ந‌ரிக்குற‌வ‌ சிறுமி 2 அடிக்கு 3 அடி அளவில், ப‌ல‌வித‌ பொருட்கள் தொங்க‌விடப்பட்ட‌ இரும்பு ச‌ட்ட‌த்தின் ந‌டுவில் முனை ச‌ற்று வ‌ளைந்திருந்த க‌ம்பியை ப‌ய‌ணிக‌ள் கைப்பிடியில் மாட்டிவிட்டு "பெரிய‌ பின் மூனு 5 ரூபா" என‌ கூவத்தொடங்கினாள். ச‌ட்ட‌த்தில் தொங்க‌விட‌ப்ப‌ட்ட‌ பொருட்க‌ள் மிக‌நேர்த்தியாய், இரண்டு பக்கத்தில் உள்ளவர்களுக்கும் எல்லாப்பொருள்களும் தெரியும்படி அடுக்கப்பட்டிருந்தது அதனால் அவள் மற்ற எந்தபொருளின் பெயரையும் கூறி வாங்குப‌வ‌ரை குழ‌ப்ப‌வில்லை, தன்னையும் அலட்டிக்கொள்லவில்லை. வேண்டிய‌வ‌ர்க‌ள் அவ‌ர்க‌ளாக‌வே த‌ங்க‌ள் பொருட்க‌ளை கேட்டு வாங்கிக்கொண்ட‌ன‌ர். ஒரு super marke டின் marketing முறையை, display method ஐ அந்த‌ சிறுமி மிக இய‌ல்பாய் செய்துகொண்டிருந்தாள்.

ஒரு முக்கியமான விஷயம் என்னன்னா பெரும்பாலானவர்கள் cell phoneல் எதையோ தேடிக்கொண்டே இருந்தனர். அந்த கையடக்க பெட்டியை ஆள்வதில் உள்ள ஆர்வத்தில் ஏதோ உளவியல் காரணம் இருக்கும் எனத்தோன்றுகிறது

இரண்டு மணிநேர பயணம் அலுப்பில்லாமல் முடிந்தது. நான் செல்லவேண்டிய ஊர் ஸ்டேஷனிலிருந்து 3kms இருந்ததால் ஆட்டோ தேடினேன், உள்ளூர் ஆட்டோகாரர்களுக்கும், ஷேர் ஆட்டோகரர்களுக்கும் ஏற்பட்ட தகராறு காரணமாய் ஒரு ஆட்டோவும் ஓடவில்லை. "ஒழுங்கா bike லயே வந்திருக்கலாம்" என நொந்தபடியே லக்கேஜ்களை சுமந்தபடி நடக்கத்தொடங்கினேன்.


கனியிருப்ப காய்...

மன்மதன் அம்பு கமலின் கவிதை சர்ச்சைக்குள்ளாகி படத்திலிருந்தே நீக்கப்பட்டுவிட்டநிலையில் அது நீக்கப்படவேண்டி எழுந்த கோரிக்கையின் பின்னனி முழுமையாக யாருக்கும் விளக்கப்படவில்லை அல்லது
வெகுஜனமக்களுக்கு கமல் எனன எழுதினார்? ஏன் எழுதினார்? எதற்கு எதிர்ப்பு தெரிவித்தார்கள்? என்பது புரியவில்லை.அதைபுரிந்துகொள்ள முயற்சிப்போம்.

அடிப்படையில் இது சினிமாவுக்காக எழுதப்பட்ட கவிதை அந்த கவிதையை படத்தோடு பார்க்கையில்தான் கவிதைக்கான காரணம் விளங்கும்.நம் விருப்பத்தை தெரிந்துகொள்ளாமலேயே! அந்த வாய்ப்பு நமக்கு மறுக்கப்பட்டுவிட்டது என்பது வேறுவிஷயம்.  எதிர்ப்புக்குகாரணம் பெண்களை இழிவுபடுத்தினார் என்பதா? கடவுளை வம்புக்கிழுத்தார் என்பதா? தெரியவில்லை,எனவே இரண்டையும் பார்ப்போம்.

இயல்பாகவே இக்கவிதை பெண்களை இழிவுபடுத்துவதாய் கருதப்படுவதற்கு அதில் உள்ள ஆடைகளைகயில், காமம், குறியென்றான பின், முன்னும் பின்னும் ஆட்டும் சகடை, ஆணுறை
எனற இரட்டை அர்த்த வார்த்தைகள் ஒரு பெண் வாயிலிருந்து வருகின்ற காரணத்தால் அது கொச்சையான வார்த்தைகளகவே தோன்றக்கூடிய வாய்ப்புள்ளது. அதனாலேயே அதிலுள்ள முதல் அர்த்தத்தையும் ஆதங்கத்தையும் யாரும் புரிந்துகொள்ள முயற்ச்சிக்கவில்லை. கனியிருப்ப காய் கவந்தற்று வேறென்னசொல்ல!
பெண்களை இழிவுபடுத்துவதாகயிருந்தால் கவிதையின் முதற்பாதியை ஒரு பெண் வாசிப்பதாயும் மறுபாதியை ஆண் வாசிப்பதாயும் அமைத்திருக்கவேண்டியதில்லை என்பது என் கருத்து.

பெண்வாசிப்பதாய் அமைந்த வரிகளில் பெண்கள் பற்றி ஆண்களின் கணிப்புக்களும், கவனிப்புக்களும் இப்படியானவையாகத்தான் இருக்கிறது என்ற ஒரு பெண்ணின் ஆதங்கம்தான் மெல்லிய கேலியாய் அமைந்துள்ளது. பெண்களை அவ்வாறான கண்ணோட்டத்தில் பார்க்கும் ஆண்களுக்கும்,அவ்வாறான கண்ணோட்டத்தால் பாதிக்கப்ப்ட்ட பெண்களுக்கும் அந்த கேலியும்,வலியும் நிச்சயம் புரியும். அந்த கெலியையும் ஆதங்கத்தையும் தன் voice modulation மூலம் மிக அழகாய் நேர்த்தியாய் வெளிப்படுத்தியிருக்கிறார் திரிஷா. அதை உணர்ந்துகொண்டவர்கள் சமூகத்தில் ஆண்களால் பெண்களுக்கு ஏற்படும் அவலம் கருதி வெட்கப்படுவர். இப்படி வெட்கப்பட்டு தலைகுனிவதை தவிற்க்கத்தானோ என்னவோ கவிதையையே தடைசெய்துவிட்டனர். ஆண்களுக்கு ஒரு அவமானமென்றால் தாங்குமா தமிழ்னெஞ்சம்.

கடவுளை வம்பிற்க்கிழுக்கிறார், ஏன் கிருஸ்த்துவக் கடவுளையோ, இஸ்லாமியக் கடவுளையோ தன் கவிதையில் கொண்டுவரக்கூடாது என்று கேட்டால்
அடிப்படையில் கிருஸ்த்துவத்திலோ, இஸ்லாத்திலோ கடவுள்களுக்கு குடும்பமோ, அதுபோன்ற ஒரு பிணைப்போ இருப்பதாய் எங்குமே சொல்லப்படவில்லை. நம் கடவுள்களில்தான் கணவன்,மனைவி, அண்ணன் தம்பி,அண்ணன் மகன்கள், தம்பி மகன்கள்,இருதாரம் அவர்களுக்குள் EGO என ஒரு தமிழ் படத்திற்கு தேவையான அத்தனை அம்சங்களும் நிரைந்திருக்கிறது. கிருஸ்த்துவத்திலும், இஸ்லாத்திலும்கூட சில் குரல்கள் அவர்களுக்குள்ளிருந்தே அவ்வப்போது எழத்தான் செய்கிறது. தலையில் முடியில்லாத அண்ணனையும், தொப்பைபெருத்த அப்பாவையும்தான் யேய்.. சொட்ட உனக்கெதுக்கு சீப்பு என்றோ,யப்பா இந்த போனை கொஞ்சம் ஸ்டெண்டுல வெச்சுக்கவா என்று அவர் தொப்பையை தடவியபடியோ இயல்பாய் இதமாய் வம்பிற்கு இழுக்கமுடியும். இதை வம்பு என்றுகூட சொல்லமுடியாது ஆழ்ந்த அன்யோன்யம் என்றுதான் கொள்ளவேண்டும்.  இப்படியான அன்யோன்யம் தமிழ் கவிதைக்கொன்றும் புதிதல்ல.ஆண்டாள் பாசுரத்திலிருந்து அபிராமிஅந்தாதிவரை பார்கமுடியும்.இந்த அன்யோன்யத்தை பககத்துவீட்டுக்காரரிடம் காட்டிப்பாறேன் என்பது வீண் வாதம்.

இக்க‌விதையில் ப‌குத்தறிவிற்குப்புர‌ம்பான‌ வார்த்தைக‌ளோ, க‌ருத்தோ ஏதுமில்லை என்வே இக்க‌விதையை நீக்க‌முடியாது என நாத்திக‌வாத‌த்திற்கும்,ப‌குத்த‌றிவுவ‌த‌த்திற்கும் புகழ்பெற்ற நம் திராவிட பாரம்பரியமும்,அப்பின்னனியுள்ள குடுபத்த‌யாரிப்பில் வெளிவ‌ந்திருக்கும்பட்ச்ச‌த்தில் அக்குடுபத்திலிருந்தோகூட எவருமே குர‌ல் கொடுக்காத‌து சற்று உருத்த‌லாய்த்தான் உள்ள‌து. இதற்குப்பின்னாலும் அரசியலா?

Tuesday, January 25, 2011

ஒட்டுகேட்ட உறையாடல்


காலை 9.45 ம‌ணி

ஹலோ என்னப்பா பன்றே

இப்பதாம்பா உம்பொண்ண(school)bus ஏத்திவிட்டுவறேன், குளிக்கமாட்டேன்னு ஒரே அடம்

ஒருநாள் குளிக்காட்டி என்ன ஆயிடப்போது மூஞ்சி கழுவி அனுப்பவேண்டியதானே?

ராத்திரி படுக்கையிலயே மூச்சா போய்டரா அப்படியேவா அனுப்பமுடியும்.

அதுவும் சரிதான், நீ டிபன் சாப்டியா?

ஆங்.. நீ கரெக்ட் டயமுக்கு ஆபீஸ் போய்சேந்தியா?

10 நிமிஷம் லேட், நல்லவேளை மேனேஜர் வரலெ.

நாளைலேந்து என‌க்கு எதுவும் help பன்ன‌வேண்டாம் நீ உன் வேலையை மட்டும் பாத்துகிட்டு கிளம்பிடு சரியா?

நீ ம‌ட்டும் எப்பிடி எல்லா வேலையையும் பாத்துப்பே உன‌க்கு குழ‌ந்தையை க‌வ‌னிச்சு அனுப்ப‌ர‌தே பெரிய‌வேலையா இருக்கும். சரி பாப்போம்.வெச்சிடவா?

ம்..

மதியம் 2.00 மணி

ஹலோ ம்.. சொல்லுப்பா 

சாப்டாச்சா?

ம்..நீ சாப்ட்டியா?

சாப்பிட்டுத்தான் போன் பன்றேன். சரி கேஸ் வந்திச்சா?

வந்தாச்சு 

காசு?

அதான் ஷெல்புல இருந்ததே

அத கொடுத்துட்டியா? அது குழந்தையோட (school)bus க்கு வெச்சிருந்தேன் சரிவிடு பாத்துக்கலாம்.குழந்தை school லேந்து வந்ததும் home work முடிக்கச்சொல்லிடு. அவ வரவரைக்கும் புக்கு படிக்கிறேன், TV பாக்கறேன் உக்காந்துடாதே கொஞ்சம் ரெஸ்ட் எடுத்துக்கோ. சரியா?

சரி

வெச்சிடவா?

ம்..

மாலை 4.15 மணி

ஹலோ..

குழந்தை வந்துட்டாளா?

ம்... பின்னாடி வீட்டுக்கு போயிருக்கா.

மத்யானம் fullலா சாப்டாளா

கொஞ்சம் பாக்கிவெச்சுட்டா பரவால்ல, இப்ப வந்ததும் Boost கலந்து கொடுத்தேன்
குடிச்சுட்டு விளையாட போயிருக்கா. நீ என்ன பண்ணிகிட்டிருக்கே

இதோ கிளம்பிட்டேன்.

என்ன‌ இவ்வளவு சீக்கிரம்

ஆமா மூனுநாளா குழந்தை நான் வரத்துக்குள்ள தூங்கிடுது. காலைல அவசர அவசரமா
கிளம்பரப்போ அவள கொஞ்சக்கூட முடியல அதான் 1 மணி நேரம் பர்மிஷன் போட்டு கிளம்பிட்டேன். ராத்திரிக்கு நீ எதுவும் செய்யவேண்டாம் நான் வந்துபாத்துகிறேன்.
வெச்சிடவா.

இரு இரு குழந்தை வந்துட்டா அவகூட பேசு. 

ஹலோ ஜனனி என்னமா பண்றே

ஹலோ அம்மா நீ எங்க இருக்க‌

அம்மா ஆபீஸ்ல இருக்கேண்டி செல்லம், இன்னிக்கு அம்மா சீக்கிரமா வந்துடுவேணாம்,
வந்து உனக்கு ரொம்பபிடிச்ச பூரியும் கேசரியும் செஞ்சுத் தருவேணாம் சரியா?
அதுவரைக்கும் அப்பாவை தொந்தரவு பண்ணாம சமத்தா இருக்கனும் சரியா? சரி சொல்லு

ச‌ரி ம்மா.. 

பாய்..

பாய்..

Friday, January 21, 2011

ஆறாம்அறிவு


அதன் பெயர் ஆறாம் அறிவு, என் அறைக்கு அடிக்கடி வந்துபோகும். ஆறாம் அறிவுடன் என் அறிமுகம் 3 வருடத்திற்கு முன் நிகழ்ந்தது. மழைபேய்து ஓய்ந்த ஒரு மதியவேளை அறைவாசலில் நிழலாடியது, எட்டிப்பார்க்க அடர்கறுப்பு நிறத்தில் அது நின்று கொண்டிருந்தது. அது தன் வீடாய் பாவித்துக்கொண்டிருக்கும் அந்த வீட்டுக்காரர் குடும்பத்தோடு ஊருக்குப் போயிருந்ததால் அதன் பார்வையில் பசியும்,உடலில் சோர்வும் உணரமுடிந்தது. முந்தையநாள் சோற்றை நீர் வடித்து பாத்திரத்தோடு எடுத்துவைக்க ஒரேமூச்சில் தின்றுமுடித்து வாலாட்டிச் சென்றது. அது எங்கள் ஏரியாதான் தாமதமாக வரநேரும் இரவுகளில் மற்றவைகள் குரைத்தபடி துரத்திவந்தாலும் இதுமட்டும் இருந்த இடம்விட்டு நகராது குரைக்கவும்செய்யாது.அதற்கு தெரிந்திருந்ததுபோலும் நானும் இந்த ஏரியாதான் என்று.

பின் ஒரு சமயம் அது குட்டிபோட்டிருந்தது, அப்போதெல்லாம் அந்தவழியாய் வருவோர் போவோர் எவரேனும் குட்டிகள் இருக்கும் திசையைத் திரும்பிபார்த்தால்கூட கத்தி கூச்சல்போட்டு துரத்திவிட்டுக்கொண்டிருந்தது. ஆரம்பத்தில் நானும் பயத்தில் அந்தப்பக்கம் திரும்பாமல்தான் போய்வந்துகொண்டிருந்தேன் ஆனாலும் குட்டிகளை பார்க்கதுடிக்கும் ஆர்வத்தில் அது இல்லாத நேரத்தில் குட்டிகளிலேயே அழகாய் ப்ரெளன் நிறத்தில் இருந்த‌ ஒன்றை கையில் எடுத்து கொஞ்சிக் கொண்டேயிருக்கையில் எங்கிருந்து வந்ததோதெரியவில்லை என்னை உரசியபடி நின்றுகொண்டிருந்தது, பயத்தில் ஒருகணம் உடல் அதிர்ந்து அடங்கியது.ஆனால் அது மிக சாந்தமாய் வாலாட்டியபடியே என்னையும் குட்டிகளையும் சுற்றி சுற்றிவந்தது.நான் பயத்திலும் இயல்பாய் இருப்பதாய் காண்பித்துக்கொண்டு குட்டியை இறக்கிவிட்டு வந்தேன்.

பின் சிறிது நாட்க‌ளில் அது ந‌ட‌க்க‌ப்ப‌ழ‌கிய த‌ன் குட்டிகளோடு ஏரியாவை வ‌லம் வ‌ர‌த்தொட‌ங்கிய‌து. அப்போதெல்லாம் அத‌ன் நடையில் ஒருவித பெருமிதத்தையும் கர்வத்தையும் உண‌ர‌முடிந்த‌து.சில‌ ச‌ம‌ய‌ம் குட்டிக‌ளை விட்டு தொலைவாய் சென்று அவ‌ற்றின் ந‌ட‌வ‌டிக்கைக‌ளை க‌வ‌னித்துக்கொண்டிருக்கும்.

குட்டிக‌ள் வ‌ள‌ர‌த்தொட‌ங்கிய‌வுட‌ன் அவைகளுடன் ஒவ்வொரு வீடாய் சென்றுவரத்தொடங்கி பின் ஒவ்வொரு குட்டிக்கும் ஒவ்வொரு வீட்டில் பரிச்சயத்தை ஏற்படுத்த, அந்தகுட்டியை ஒருவீட்டின் வாசலில் விட்டுவிட்டு எங்காவது மறைந்திருந்து கவனித்துக்கொண்டிருக்கும் குட்டியின் குரல் கேட்டு வீட்டிற்குள்ளிருந்து யாராவது வந்து குட்டியை அரவணைத்துக்கொண்டபின்தான் அந்த இடம்விட்டு அகலும். இப்படியாய் என்முறைக்கு வரும்போது அது அழைத்துவந்தகுட்டி நான் முதன் முதலில் பயந்தபடியே கொஞ்சிக்கொண்டிருந்த ப்ரெளன் நிறக்குட்டி.

கொஞ்ச நாட்களில் ஆறாம்அறிவை அந்த ஏரியாவிலேயே பார்க்க முடியவில்லை. பார்கமுடிந்ததெல்லாம் அதன் குட்டிகளைத்தான். அவையும் வளரத்தொடங்கிவிட்டன.

நீண்ட இடைவெளிக்குப்பின் மழைபேய்து ஓய்ந்த ஒரு மதியவேளை நண்பனின் விலாசம் தேடிக்கொண்டிருந்த தெருவிலிருந்து என்னை போய்விடச் சொல்லி எச்சரிக்கும் விதமாய் உருமியபடி இரண்டு ஜீவன்கள் பின்தொடர பயத்தில் நானும் பின்வாங்க‌ எதிபாரதவிதமாய் எங்கிருந்தோ குரைத்தபடியே பாய்ந்துவந்து அந்த இரண்டையும் துரத்திச்சென்றது அடர்கறுப்பு நிறத்தில் இருந்த அது.

Wednesday, January 19, 2011

நக(ரும்)ரின் அடையாளம்


பட்டாம் பூச்சிகள் காணவிலை,
பச்சைக்கிளிகள்(ஜோசிய)கூட்டிற்குள் பாதியும்
குறவர்களின் வயிற்றுப்பாட்டிற்கு மீதியுமாய்
மிச்சமேதுமில்லை இங்கே,
பூம்பூம் மாட்டை எவருக்கும் நினைவில்லை,
பாம்பாட்டியும் முறித்துக்கோண்டான்
பாம்புடனான உறவை,
குடுகுடுப்பைக்காரனுக்கு நல்லகாலம் பிறப்பது
ஊருக்கு வெளியே,
சிட்டுக்குருவிக‌ள்
கொஞ்சிய‌ இட‌ங்க‌ளை
சிற்ற‌லைவ‌ரிசையும்,ப‌ண்ப‌லைவரிசையும்
அடைத்துக்கொண்ட‌ன‌,
க‌ட்டெறும்புக‌ளையும்,
க‌ர‌ப்பான் பூச்சிக‌ளையும்
HIT அடித்து விர‌ட்டிவிட்டோம்,
ச‌ர்க‌ரை மிட்டாயும், ச‌ர்கர ராட்டின‌மும்
இட‌ம் பெய‌ர்ந்துவிட்ட‌ன‌ பொருட்காட்சிக்கு,
ஒவ்வொரு அடையாள‌த்தையும்
அழுத்த‌மாய் துடைத்தெரிந்துவிட்டு
அவ‌ச‌ர‌மாய் நிர‌ப்பிக்கொண்டிருக்கிறோம்
ந‌க‌ரை
பாலிதின் குப்பைக‌ளாலும்,
பாலைவ‌ன‌ புன்ன‌கையாலும்.
பிர‌ஷ‌ர் குர‌க்கும் மாத்திரையும்,
ப‌ண‌ம் சேர்க்கும் யாத்திரையும்,
கைய‌ட‌க்க‌ க‌ம்பியூட்ட‌ரும்,
க‌ட‌ன் அட்டை க‌னவு என‌
அர‌ங்கேறிக் கொண்டிருக்கிற‌து
புதிய‌ அடையாள‌ங்க‌ள்.

சாயம் போன கறுப்புச்சட்டை

தமிழகத்தை பொறுத்தவரை கறுப்புச்சட்டை கலாச்சாரம் இரண்டு வகையாயும் இரண்டுமே இரண்டு துருவங்களாயும் செயல்பட்டுக்கொண்டிருக்கிறது.

பெரியார் கறுப்புச்சட்டை அணிந்து கடவுள் இல்லை, கடவுள்பக்தி என்ற பெயரில் நடைபெற்றுக்கொண்டிருப்பதெல்லாம் மூடநம்பிக்கைகளும், காட்டுமிராண்டித்தனமும்தான் என்று ஊர் ஊராய் சென்று பிரச்சாரம் செய்துகொண்டிருந்த அதே காலகட்டத்தில்தான் கேரளத்து மலை ஒன்றில் ஐயப்பன் என்றொரு கடவுள் இருக்கிறார் என்றும் அதே கறுப்புச்சட்டை அணிந்து நோம்பு என்றபெயரில் 48 நாட்கள் தன் உடலை வருத்திக்கொண்டு காடு, மலை, மேடுகளை நடந்தே சென்று அவரைக்கண்டுவரும் முறையும் தமிழகத்தில் பரவலாகிக்கொண்டிருந்தது.

கறுப்புச்சட்டை நாத்திகவாதிகள் கடவுளை பழிப்பது, கோயிலை இடிப்பது என ஒரு அதீதமென்றால்(extreme), கறுப்புச்சட்டை ஆத்திகவாதிகள் ஒருவேளை உணவு, மார்கழிமாத்தில் இருவேளைக் குளியல், தரையில் வெறும் துண்டைவிரித்து உறங்குவது என இன்னொரு அதீதம்.

பெரியாருக்குப்பின் நாத்திகவாதம் நீர்த்துப்போனது என்றுதான் கொள்ளவேண்டும் (அதன் பின்னனியில் சமூக அரசியல்,வோட்டு அரசியல்,சுயநல அரசியல் என் பல உண்டு) பெரியார் பாசறையிலிருந்து வந்த ஒருவர் "ஒன்றே குலம் ஒருவனெ தேவன்" என்ற வாதத்தின்வழியாய் ஆத்திகத்தின் பாதையில் கால்பதித்தார். எஞ்சியிருந்தவர்களில் சிலர் விழுந்தாலும் மண் ஒட்டவில்லை என்பதுபோல் திராவிடம் / பகுத்தறிவு என்னும் இரு விளம்பரப்பலகைகளை கழுத்தில் சுமந்து அலையத்தொடங்கினர்.தமிழக வரலாற்றில் திராவிடமும் பொய்த்து, பகுத்தறிவும் பல்லிளித்த தருணங்கள் பல.

ஆனால் கறுப்புச்சட்டை ஆத்திகம் வெறும் கறுப்புச்சட்டை, கழுத்தில் மாலை என்பதோடு நிறுத்திவிடாமல் ஒவ்வொரு ஆண்டும் புதிய பக்தர்களை அதிகரித்துக்கொண்டு தன் வேர்களின் ஆழத்தை அதிகப்படுத்திக்கொள்வதோடு மட்டுமல்லாமல் தனக்கு சாதக‌மான பக்கங்களிலெல்லாம் கிளைபரப்பி தன் இருப்பை விரிவுபடுத்திக்கொள்கிறது. உதாரணமாக இதுவரயிலான ஐயப்பன் பாடல்கள் மென்மையாயும், இனிமையாயும், கேட்கும் மனங்களுக்கு இதமாயும் இருக்கும்.ஆனால் இந்த ஆண்டு கேட்கநேர்ந்த பாடல்களில் இன்றைய இளைய சமூகத்தின் மனவோட்டத்திற்கு இசைவாய் (அ) பிரதிபலிப்பாய் ஐய்யப்பன் ஒரு ஆக்ரோஷக்கடவுள் எனவும், பாவம்செய்வோரை அழித்தொழிக்கவே அவதரித்தவராயும், வண்புலி ஏறிவந்து வண்மையாய் தண்டிப்பார் என்பது போன்றும் (கிட்டத்தட்ட சுரா விஜய் ரேஞ்சுக்கு) பாட்டு எழுதி கூடவே ஐய்யனாரையும் இணைத்து இடையில் நரிக்குற‌வர்கள் தாங்களும் ஐய்யப்பனை காணவிரும்புவதாய்  தெரிவிக்கவைத்து அந்த வார்த்தைகளுக்கு வெறியேற்றுவதுபோல் வேகமான இசை அமைத்து மொத்தத்தில் சபரிமலைக்கு அதிக பக்தர்களை வரவழைக்க முயற்சிக்கும் கேரளத்து வியாபாரிகளோடு உள்ளூர் வியாபாரிகளும் சேர்ந்து  எத்தரப்பு மக்களையும் இழக்க விரும்பாததை இப்பாடல்கள் எடுத்துக்காட்டின. இவ்வகையான ஹைப்புக்களால் உந்தப்பட்டு மாலை அணிந்துகொள்ளும் இளைஞர்கள் இயல்பாகவே சற்று முரட்டுத்தனமாய்தான் இருக்கிறார்கள். 2002 அலலது 2003ல் நடந்த மிகக்கோரமான விபத்தில் தன் நிதானத்தாலும், சமயோஜிதத்தாலும் தன்னுடன் வந்த 2 பக்தர்களை பாதுகாப்பாய் கொண்டுசேர்த்த என் நண்பர் பக்தர்களின் பதட்டமும், பொறுமையிமையும்தான் அன்றைய விபத்தில் சேதம் அதிகரிக்கக்காரணம் என்று தெரிவித்தார். இந்த வருடம் 102 பேரை பலிவாங்கிய விபத்தில்கூட பக்தர்களுக்கிடையே நடந்த தள்ளுமுள்ளினால்தான் உயிர்ச்சேதம் அதிகரித்திருக்கிறது.

பகுத்தறிவை தன் வசதிக்கேற்பவும் வாதத்திற்காகவும் வளைக்க நினைக்கையில் அது நீர்த்துப்போகிறது. பக்தியை தான் செய்த தவறுகளுக்கான பரிகாரங்களாகவோ, குற்றவுணர்விலிருந்து விடுபடும் வழியாகவோ நினைத்து மேற்கொள்ளப்படும்போது அது அமைதியையோ,மனநிறைவையோ, பக்குவத்தையோ என்றுமே தந்துவிடாது.

நீங்கள் இதையும் விரும்பக்கூடும்