ரயில் பயணங்களில்


போனவாரம் officalல அரக்கோணம்வரை போகவேண்டியிருந்தது(கல்யாண போட்டோ வீடியோ எடுக்கத்தான்). Bike லயே போய்டலான்னுதான் நினைச்சேன் ஆனா லக்கேஜ்யெல்லாம் எடுத்துக்கிட்டு போகனும்னா train தான் கரெக்ட்ன்னு தோனிச்சு, Bikeகை ஸ்டேஷனுக்கு திருப்பினேன். மத்தியான நேரம் ஸ்டேஷன் அரைதூக்கத்தில் இருந்தது. காத்துகிட்டிருந்த 10 நிமிஷத்துல மூளை வளர்ச்சி குறைந்தவங்க 2 பேரை பார்க்கமுடிந்தது, ஒருவர் தண்டவாளத்தை கடக்க கட்டியிருக்கும் Bridge படிகளை தன் கையிலிருந்த துணியால் சுத்தம் செய்துகொண்டிருந்தார். தூசி ஆள் உயரத்திற்கு பரந்தது பயணிகள் மூக்கை பொத்தியபடி அவரைக்கடந்தனர், சிலர் சில்லரையும் தந்துசென்றனர். நான் பார்க்கும்போது பத்து படிகள் சுத்தமாய் இருந்தது. இன்னொருவர் இறும்பு பென்ச்சில் சம்மணமிட்டு அமர்ந்தபடி தனக்குத்தானே பேசியபடியும், தாடியை சொரிந்தபடியே சிரித்துக்கொண்டுமிருந்தார். நான் அவர் அருகில் உட்கார்ந்ததும் என்னைப்பார்த்தும் புன்னகைத்தார். பதில் புன்னகைக்க "நான் டில்லி போகனும்" என்றார், சரி என்றேன்.

மத்தியான நேரம் என்பதால் தாராளமாக இல்லையென்றாலும் கொஞ்சம் அடக்கமாய் உட்காருவதற்கு இடம் கிடைத்தது. என் எதிரே அமர்ந்திருந்த பெரியவர் pendrive,USB port, speaker, battary என பலவற்றை இணைத்து "ஆடலுடன் பாடலை கேட்டு" பாடலை கண்மூடி ரசித்துக்கொண்டிருந்தார்.குனிந்த தலை நிமிராமல் தன் Laptop ல் எதையோ தடவிக்கொண்டிருந்த‌ என் பக்கத்து சீட் இளைஞனுக்கும் சேர்த்தேதான் பாடிக்கொண்டிருந்தார் MGR. என‌க்கு வ‌ல‌து ப‌க்கம் சனனல்கிட்ட ஒரு மத்திம வயதுக்காரர் தன் headphoneனில் பாட்டுகேட்டுக்கொண்டிருந்தார் அது "ஆடிய ஆட்டமென்ன" சிவாஜி பாட்டாகவும் இருக்கலாம். முன்னெல்லாம் கொஞ்சம் சத்தமா பாட்டு கேட்டா என்ன டீ கடைமாதிரின்னு கேப்பாங்க அதுல ஒரு ஏளனம் தெரியும். FM radio வந்தபிறகு ஒவ்வொருத்தரும் ஒரு டீக்கடையாவே மாரிட்டாங்க.  அவருக்குப் பக்கத்தில் ஒரு த‌ம்ப‌தி அவ‌ருக்கு 49வ‌யசும் அவ‌ங்க‌ளுக்கு 45வ‌யசும் இருக்கும். பொண்ணூ க‌ல்யாண‌த்திற்கு ப‌த்திரிக்கை வைக்க‌ போய்கிட்டிருக்காங்க‌போல‌ த‌ன் வீட்டுக்கார‌ரோட‌ உற‌வுக‌ளைப்பத்தி ரோம்ப‌ காட்டமாவே பேசிகிட்டுவ‌ந்தவ‌ங்க‌, பிளாஸ்டிக் பைக‌ளில் 5 ரூபாக்கு விற்றுக்கொண்டுவ‌ந்த சாம‌ந்தியையும், க‌ன‌காம்ப‌ரத்தையும் வாங்குவதில் குழம்பிப்போய் கடைசியாய் கணவர் சொன்ன கனகாம்பரத்தையே வாங்கிக்கிட்டாங்க.

ஒவ்வொரு நிறுத்தத்திலும் வண்டி 3 நிஷத்துக்கும் குறைவாய்தான் நிற்கிறது அந்த குறைந்த வினாடிகளுக்குள்ள சூடான சமோசாவும், நெய் பிஸ்கட்டும், அதிரசமும் என ஒவ்வொரு நிறுத்தத்திற்கும் ஒவ்வொரு ஐட்டம் வந்துகிட்டேயிருந்தது சுவாரசியமாய் இருந்தது. பக்கத்தில் இருப்பவர்கள் எதையாவது வாங்கிக்கொண்டே இருக்க எதையாவது வாங்கும்படி நாமும் மனதளவில் உந்தப்படுகிறோம். நெய் பிஸ்கட்டின் மணம் அது சூடாகத்தான் இருக்கும் என நம்பவைக்கிறது(நான் ஏமாந்துட்டேன்). அவர்களின் வியாபார யுக்தியே அதுதானோ என்னவோ? சென்னை மார்கெட்டில் அதிகம் பார்க்கமுடியாத வெந்தியக்கீரை 3 ரூபாய்க்கு கிடைப்பது ஆச்சரியம்(திரும்பிப் போகும்போது வாங்கிட்டு போகனும் கொஞ்சம் ஞாபகப்படுத்துங்க பிளீஸ்).

ஒரு ந‌ரிக்குற‌வ‌ சிறுமி 2 அடிக்கு 3 அடி அளவில், ப‌ல‌வித‌ பொருட்கள் தொங்க‌விடப்பட்ட‌ இரும்பு ச‌ட்ட‌த்தின் ந‌டுவில் முனை ச‌ற்று வ‌ளைந்திருந்த க‌ம்பியை ப‌ய‌ணிக‌ள் கைப்பிடியில் மாட்டிவிட்டு "பெரிய‌ பின் மூனு 5 ரூபா" என‌ கூவத்தொடங்கினாள். ச‌ட்ட‌த்தில் தொங்க‌விட‌ப்ப‌ட்ட‌ பொருட்க‌ள் மிக‌நேர்த்தியாய், இரண்டு பக்கத்தில் உள்ளவர்களுக்கும் எல்லாப்பொருள்களும் தெரியும்படி அடுக்கப்பட்டிருந்தது அதனால் அவள் மற்ற எந்தபொருளின் பெயரையும் கூறி வாங்குப‌வ‌ரை குழ‌ப்ப‌வில்லை, தன்னையும் அலட்டிக்கொள்லவில்லை. வேண்டிய‌வ‌ர்க‌ள் அவ‌ர்க‌ளாக‌வே த‌ங்க‌ள் பொருட்க‌ளை கேட்டு வாங்கிக்கொண்ட‌ன‌ர். ஒரு super marke டின் marketing முறையை, display method ஐ அந்த‌ சிறுமி மிக இய‌ல்பாய் செய்துகொண்டிருந்தாள்.

ஒரு முக்கியமான விஷயம் என்னன்னா பெரும்பாலானவர்கள் cell phoneல் எதையோ தேடிக்கொண்டே இருந்தனர். அந்த கையடக்க பெட்டியை ஆள்வதில் உள்ள ஆர்வத்தில் ஏதோ உளவியல் காரணம் இருக்கும் எனத்தோன்றுகிறது

இரண்டு மணிநேர பயணம் அலுப்பில்லாமல் முடிந்தது. நான் செல்லவேண்டிய ஊர் ஸ்டேஷனிலிருந்து 3kms இருந்ததால் ஆட்டோ தேடினேன், உள்ளூர் ஆட்டோகாரர்களுக்கும், ஷேர் ஆட்டோகரர்களுக்கும் ஏற்பட்ட தகராறு காரணமாய் ஒரு ஆட்டோவும் ஓடவில்லை. "ஒழுங்கா bike லயே வந்திருக்கலாம்" என நொந்தபடியே லக்கேஜ்களை சுமந்தபடி நடக்கத்தொடங்கினேன்.


Comments