Thursday, February 21, 2013

பட்ஜட்

பட்ஜட் கூட்டத்தொடரின் முதல் நாள் பேச்சில் பிரணாப்முகர்ஜி உணவுதானியம், பால், உரம் ஆகியவற்றின் உற்பத்தியை பலமடங்கு பெருக்கப்போவதாக தெரிவித்திருக்கிறார். உணவு தானியங்கள் உற்பத்தி ஹுன்டாய் கமபனியிலிருந்து கிடப்பதாய் நினைக்கிறார்கள் போலிருக்கிறது. விவசாயிகள் மாற்று தொழிலில் ஈடுபடவேண்டியதுதானே என்றும் விவசாயத்தையே நம்பியிருக்கவேண்டி யார் நிர்பந்தித்தார்கள் என்றும் கேட்டதுதான் இந்த அரசு. பெருகிவரும் ரியலெஸ்டேட் வியாபாரத்தை கவனிக்கையில் உணவுதானிய உற்பத்தியை உயர்த்தபோகிறோம் என்ற ஜனாதிபதியின் பேச்சு சிரிப்பைத்தான் வரவைக்கிறது.

கூடங்குள அனு உலைகள் இந்த ஆண்டு செயல்படத்தொடங்கும் என்றும் மேலும் இரண்டு உலைகள் விரைவில் தடங்கப்படும் என்றும் தெரிவித்திருக்கிறார். நெஞ்சழுத்தம்ன்னு சொல்வாங்களே அது இதுதான். கூடங்குள போராட்டக்காரர்கள் உலை கட்டிமுடிக்கும்வரை சும்மா இருந்துவிட்டு எல்லா பணிகளும் நிரைவடைந்துவிட்ட தருவாயில் போராட்டத்தை முன்னெடுப்பது நியாய‌மற்ற செயல் என்றும், இது சிலரின் தூண்டுதலால்தான் நிகழ்கிறது, வெளிநாட்டிலிருந்து பண பரிவர்த்தனை நடக்கிறது என ஏதேதோ வாய்க்கு வந்ததை உளரித்தீர்தவர்கள் மேலும் இரண்டு உலைகளை திறக்க திட்டமிட்டிருக்கிறார்களென்றால் இதை நெஞ்சழுத்தம் என்று சொல்லாமல் என்ன சொல்ல.

Tuesday, February 19, 2013

எந்த தேசத்தில் காந்தி பிறந்தார்?என்னதான் திட நெஞ்சமாக இருந்தாலும் பிரபாகரனின் மகன் சுடப்பட்டு கிடக்கும் காட்சியை கண்டு இதுவும் போர்குற்றங்களில் ஒன்று என கடந்துசெல்ல முடிந்தாலும். சுடப்படுவதற்கு முன் அந்த சிறுவனின் பார்வையும் மனநிலையையும் காட்டும் அந்த படங்களோடு சேர்த்து வரிசையாக பார்க்க நேர்ந்தபோது ஒரு நொடி கதிகலங்கிவிட்டது உண்மை. இலங்கை அரசின் போர்குற்றம் மட்டுமல்லாமல் இன்னும் எதிர்காலத்தில் செய்யத்துணியும் எல்லா குற்றங்களூக்கும் இந்திய அரசின் சபோர்ட் இருக்கும் என்பது ராஜபக்சேவுக்கு தெரியும். காரணம் இந்திய வெளியுரவுக்கொள்கையை உறுவாக்குவது இந்தியரல்ல( இத்தாலியர்). எனவே சுதந்திரத்திற்குபின் உலகமே வியக்கும்படியான வெளியுறவு கொள்கையை உருவாக்கிய நேரு அவர்களின் மகள் வேண்டுமானால் இந்தியாவின் அன்னையாக நடந்துகொண்டிருக்கலாம்( இலாமலும் இருக்கலாம்) ஆனால் சோனியா நிச்சயமாக இந்தியாவின் மருமகளாகத்தான் நடந்துகொள்கிறார்.( எந்த தொலைக்காட்சி தொடரிலாவது எந்த மருமகளாவது மாமியார் வீட்டின்மேல் அக்கறையாக இருக்கின்றாரகளா?)

ராஜபக்சேவுக்கும், இலங்கை அரசின் நடவடிக்கைகளூக்கும் இதுவரை எந்தவிதத்திலும் எதிர்ப்பு தெரிவிக்காத இந்திய அரசு சொல்லும் காரணம் சீனா. இலங்கை அரசுடன் நாம் மேற்கொள்ளும் உறவே சீனா இலங்கையுடன் ஏற்படுத்திக்கொள்ளும் உறவை தீர்மானிக்கும் என்பதுவாதம். இது ஒருவிதத்தில் சரியானதாகவும் இருக்கலாம் ஆனால் மனிதனேய அடிப்படையில் இது ஏற்றுக்கொள்ளமுடியாதது. அந்த 12 வயது குழந்தையின் மரணம்கூட இந்திய அரசின் மனதை மாற்றவிலையென்றால் அது எந்த அளவு இறுகிப்போய் இருக்கிறது என்பதைத்தான் காட்டுகிறது. இப்படியான தேசத்தில்தான் காந்தி பிறந்தாரா? 

Friday, February 15, 2013

நாயின் சா(சோ)தனைநடைபாதை நாயின் வாழ்வில்
சாலை கடத்தலும் ஓர் சாதனைதான்.
வால்சுருட்டி முகம்தூக்கி
வலதும் இடதும் வாகாய்பார்த்து
முயற்சியின் முதல் அடியை
எடுத்துவைக்கும் நேரம்
கம்போடு சாலைகடக்கும்
குருடனை கண்ட பயத்தில்
தள்ளிபோடப்பட்டது முதல் முயற்சி.


அச்சம் நீங்கி தெளிவடைந்து
அடுத்த முயற்சிக்கு பிரயத்தனப்பட‌
சிகப்புவிளக்கு பச்சையாய் மாறி
நெரிசல்கண்டது போக்குவரத்து.

காரணமின்றி சாலைகடக்க
முயற்சித்த அதற்கு
குழந்தைக்கு சோறூட்டும்
எதிர் திசை அன்னையின் - கை
கிண்ணம் இலக்கைத்தந்தது.

ஒருவாய் சோறேனும்
பெற்றுவிடும் வெறியிலும்
தாமதிக்கும் கணங்கள்
தாய் உள்ளே சென்றுவிடக்கூடிய‌
சந்தர்பத்தை தந்துவிடக்கூடும்
என்ற பயத்திலும் படபடப்பிலும்
சாலை கடக்க‌
வேகமாய் வந்த இருசக்கர வாகனம்
ஏறி இறங்கியது
நொடிப்பொழுதில்.

நடந்தது எதுவென்று அறியுமுன்னே
இனியும் தாமதிக்காது
கடந்துவிடுதலே
சாதுரியம் என்று
உடல் வலியையும் பொருட்படுத்தாது
தட்டுத்தடுமாறி
எதிர்பக்கம் பாய்ந்தவேளை
இடமிருந்து வந்த
பேருந்து மோதி
தூக்கியெறிந்த்தது எதிர் சாரிக்கு.

உயிரின் கடைசி நொடியிலும்
அன்னையின் கை சோற்றை
மென்றுகொண்டிருந்தது
நாயின் பார்வை.


படம் Google

Thursday, February 14, 2013

என் ராஜாங்கம்


வான் தேசத்து ராஜன் நான்
வானமே என் ராஜாங்கம்
சூரியனே என் ஆட்சிபீடம்
நிலவுதான் என் அந்தப்புரம்
நட்சத்திரங்கள் என் தேசத்து
அழகுராணிகள் - தவழ்ந்துசெல்லும்
வெண்மேகம் என் பிள்ளைகள்
கார்மேகங்கள் என் படை வீரர்கள்
இடியோசை என் போர் முரசு
ஒளியே என் பலம்
மழையே என் தானம்
காற்றே என் சுவாசம்
வான தேசத்து ராஜன் நான்....
வண‌ங்கிடுங்கள் என்னை.

கடல் அளவு காதல் ஒரு அனுபவம்.

கருமேக கூட்டமில்லா
நீல வானத்திற்கும்,
ஹா..வென பேரிரைச்சலோடு
பரந்துகிடக்கும் நீ....ள கடலுக்கும்
இடைப்பட்ட வெட்டவெளிக்குள்
கொட்டிக்கிடக்கும் நட்சத்திரங்களின்
நடுவே ஒற்றையாய்
சிரித்துக்கொண்டிருக்கிறது
நிலா!

விட்டுச்செல்ல மனமில்லாமல்
அதன் வெள்ளைச் சிரிப்பில்
சிக்குண்டவனாய் நான்....

யுகம் யுகமாய்
வந்துபோகும் நிலவிதிலே
முழுதாய் கண்வைக்கவே ஆளில்லை,
கால்வைத்தவன் புகழ்பேச
வாய் கிழியும்.

கண்ணெதிரே கொட்டிக்கிடக்கும்
கொள்ளை அழகையும்
கேமராவில் காட்டினால்
கைதட்டும் - மற்றபடி
எங்கும் குப்பைகொட்டும்.

நிலவை பருகும் மயக்கத்தில்
மறைந்துவிட்டன சில‌
மணித்துளி
வெறிச்சோடத்தொடங்கியது
மணல் வெளி.

ஆளில்லா கடற்கறையை
மொத்தமாய் குத்தகைபிடித்தவனாய்
ஓடித்திரிந்தேன், பாடிப்பற‌ந்தேன்
மணல்வீடு கட்டி
அதில்
மனம்போல் வாழ்ந்தேன்.

நேரம் ஆக ஆக
கட்டிப்பிடித்திருந்த சில‌
காதல் ஜோடிகளும்
எட்டி நடைபோட்டன
சாலையை நோக்கி.

இப்படி ஒரு சொர்க்கம்
இங்கிருக்க
பேரிரைச்சல்களாலும்,
அர்தமில்லா விரைவுகளாலும்,
சுயநல சூழ்ச்சிகளாலும்
சோர்வடையச்செய்யும் பக்கத்து
நரகத்தின்பால்
எதைத்தேடி விரைகின்றனர்
என்ற கேள்விக்கு
விடைதேடி நேரத்தை
வீணடிக்கவிரும்பாததால்
பார்வையை விலக்கிக்கொண்டேன்
கடல்நோக்கி.

கடற்கறை மணலில்
காலடிச்சுவடுகள்
ஒவ்வொன்றும் ஒவ்வொரு
நினைவுகள்.
எவர்தடம் எதுவென்று
எவர் சொல்லமுடியும் - எவர்
சுவடும் எவர் பதிவும்
எடுத்தெரியவும், மறுதலிக்கவும்
எவரால் முடியும்.

காலப்பெருவெளியில்
காற்றாடியாய் சுழன்றாலும்
கடைசி என்னவோ
மண்ணில்தான்.
ஏற்கமுடியாதவருகே
வாழ்க்கை போராட்டம் - அல்லாதவர்க்கு
பூந்தோட்டம்.

இவ்வாறெல்லாம் எண்ணியபடி
மணல் மடியில் தலைவைத்து
அலையோசை தாலாட்டில்
சற்றே கண்ணயர்ந்தேன்.
இரண்டு கடமையுணர்வு லட்டிகள்
தட்டியெழுப்பி அழைத்துச்சென்றனர்
சந்தேகத்தினடிப்படையில்.


Wednesday, February 13, 2013

பார்லிமென்ட் தாக்குதல் வழக்கின் முக்கிய குற்றவாளிக்கு தூக்குதருமத்தின் வாழ்வுதனை
சூது கவ்வும் - தருமம்
மறுபடி வெல்லும் - வெல்கையில்
உலகம் உயிரோடு இருக்காது.
எஞ்சியுள்ள சிலர்மட்டுமே
தருமம் வென்றதாய்
தம்பட்டம் அடிப்பர்.
யாருக்கு தெரியும் வென்றது
சூதாயும் இருக்கலாம்.

Sunday, February 10, 2013

"கால்" Taxi

ஒரு லிட்டர் பெட்ரோல் எழுவத்தி சில்லரை ரூவா. டீசலும் மாசாமாசம் ஐம்பது பைசா ஐம்பதுபைசாவாக உயர்ந்து பெட்ரோலுக்கு இணையாய் வந்து நிற்கப்போகிறது. இந்நிலையில் மத்திய அரசு மாநில அரசுக்கு வழங்கும் டீசலுக்கான‌ மானியத்தை குறைத்ததோ ரத்து செய்ததோ தெரியாது அரசு பேருந்துகளும் தனியார் பங்குகளுக்கு படையெடுக்க தொடங்கியது ஊர‌றிந்த கதை. உலக அளவில் பெட்ரோலுக்கு மாற்றாய் எதைக்கொண்டு நிரப்பலாம் என ரூம்போட்டு யோசிச்சிகிட்டிருக்க நம்மாளுக பெட்ரோலியத்துறையை தனியாருக்கு தாரைவார்துட்டு ஹாயா காலாட்டிகிட்டு இருக்காங்க. ஹுன்டாய், ஃபோர்ட், நிசான் என பன்னாட்டு கார் கம்பனிகளுக்கு கதவைத்திறந்துவிட்டதால மாருதிஉத்யோக் நிறுவன தயாரிப்புகளுக்கு தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் குறைந்த வட்டிவிகிதத்தில் கடன்களை வாரிவாரி வழங்குகிறது (முன் பணம் எதுவும் தேவையில்லை). நாலுபேரு 10 K/m ல உள்ள‌ ஒரு இடத்துக்கு போக‌ அரசு பேருந்தில் குறைந்தபட்ச தொகையாய் 60 ரூபாய் தேவைப்படுகிறது அதே இடத்துக்கு காரில் போனா 70 ரூபாய் பெட்ரோல் போதுமானது. இந்த கணக்கு மிடில்கிளாஸ்க்கு யோசிக்ககூடியதாய் இருந்தாலும் அப்பர்மிடில்கிளாஸ் யோசிக்காமல் ஒரு கார் வாங்கிவிடமுடிகிறது(சுலபத்தவனையில்தான்). வாய்ப்பு கிடைக்கும் எல்லாருமே அவங்க அவங்க தேவைக்கும் வசதிக்கும் ஏத்தாப்போல ஏதாவது ஒரு வண்டிய வாங்கிட்டேதான் இருக்காங்க. கூடவே குளோபல் வாமிங்பத்தி பேசவும் கூச்சபடுவதுகிடையாது.

பத்து பதினைந்து வருஷத்துக்கு முன்னாடியெல்லாம் 4 கிமி 5 கிமி நடந்தே போய்டுவாங்க அதுக்கும் ரோம்ப முன்னாடி 8கிமி 10கிமி கூட நடந்துபோய்விடுவதுவுண்டு. இன்னிகி பக்கத்து தெருவுக்குகூட பைக் தேவைப்படுது. பஸ்வசதியோ சாலைவசதியோ சரியா இல்லாத ஏரியாக்களில்கூட மக்கள் நடக்கவேண்டிய அவசியமில்லாமல் ஷேர் ஆட்டோ சாம்ராஜ்யம் நடந்துகொண்டிருக்கிறது. யாரும் எங்கும் நடந்துபோகவே விருப்பப்படுவதில்லை. அப்படியே சிலபேரு நடந்துவந்தாலோ, முயற்சிபண்ணாலோ என்ன "நட" ராஜா சர்வீசான்னோ இல்லனா "கால்" டேக்ஸியான்னும் கேலிபண்ண ஆரம்பிச்சிடுவாங்க. ஆனா உண்மையிலேயே நாம காலுக்கு கொஞ்சம் வேலைகொடுக்கத்தான் வேண்டும். இல்லைன்னா பிற்காலத்துல ஏற்படும் பல தொல்லைகளுக்கும் பரிகாரமாய் டாக்டர் வாக்கிங்போகச்சொல்லி மிரட்டுவார். அதனால எதுக்கெடுத்தாலும் பைக்கையும் கால்டாக்ஸிய கூப்பிடாம சில இடத்துகாவது "கால்" டேக்ஸில போக பழகிக்குங்க உடம்புக்கும் நல்லது, பர்ஸுக்கும் நல்லது.


Friday, February 8, 2013

சஸ்பென்ஸ்! யாராவது சொல்லுங்களேன்


சஸ்பென்ஸ் 1 :

கண்னத்துலயே ஓங்கி ஒரு அறைவிட்டான் ஆனாலும் அந்த பொம்பள நிலைகுலயாம நின்னுட்டு அவனை என்னமோ திட்டிகிட்டிருந்தா. அவனுக்கு ஆத்திரம் இன்னும் அதிகமாகி மறுபடியும் அடிக்கறான் இந்தமுறை அவ சுதாரிச்சுகிட்டா அடி அவமேல படல சுழட்டின வேகத்துல அவந்தான் தடுமாறி விழப்பாத்தான். அவனுடைய தடுமாற்றம் பாக்க சிரிப்பா இருந்தது. வேடிக்கை பாத்துகிட்டிருந்தவங்க சில பேரு சிரிக்கவும் செஞ்சாங்க. திடீர்ன்னு ஒரு தண்ணிலாரி என் சன்னலுக்கு குறுக்க வந்து நின்னுட்டதால அதுக்கப்பறம் என்ன நடந்த்துன்னு தெரியல. நமக்கு அதுவாமுக்கியம்,
இன்னிக்குவிட்டுட்டா 2 நாணைக்கு லாரி வ‌ராது அதுதான் முக்கியம்.அவசர அவசரமாய் ஓடி 2 குடம் தண்ணி புடிச்சிவெச்சிட்டு ஒருவழியா மத்தவேலைகளையும் முடிச்சு அதே சன்னல்ல வந்து உக்காந்து பாத்தா தெருவே வெறிச்சோடிகிடக்கு.அதுக்து அப்புறம் என்ன நடந்திருக்கும்? அந்த பொம்பள என்ன ஆனா?


சஸ்பென்ஸ் 2 :

அவன் வயது 22. தன் 10 ஆம் வயதில் முதல்முறையாய் நண்பர்களோடு கெட்டவார்த்தை பேசத்தொடங்கியவன் படிப்படியாய் கெட்ட பழக்கங்களையும், காரியங்களையும் செய்யத்தொடங்கி ஊர்மக்களின் பார்வையில் பொறுக்கியாகவும் ரவுடியாகவும் அறிப்படும்போது அவன் வயது 18. எப்போதுமே அடாதவர்களின் சவகாசம் தேவைப்படும் அரசியல் அல்லக்கைகள் அவன் சண்டித்தனத்தை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக்கொண்டது அது அவனுக்கு மேலும் பல வழிகளியும் நம்பிக்கைகளையும் அளித்து அவனை முழுநேர அடியாளாக்கியது. அது அவன் பிறந்து வளர்ந்த ஏரியா என்பதால் எல்லோருக்கு அவனைத்தெரியும், அவனுக்கும் எல்லாரையும் தெரியும். அவன் எல்லாருடனும் சகஜமாக பேசக்கூடியவந்தான் ஆனால் அது பெரும்பாலும் எதிராளியை மட்டம்தட்டுவதாயும், எரிச்சில் ஊட்டுவதாயுமே இருக்கும், ஆனாலும் இவனின் ரவுடித்தால் எலாருமே சிரித்து மழுப்பி நழுவிவிடுவார்கள். இந்நிலையில் திடீரென ஒருநாள் யாரும் எதிர்பார்க்காத விதத்தில் நெற்றியில் பட்டை, கறுப்பு வேட்டி,  சட்டை என அமக்களாமான கெட்டப்பில் சபரிமலைக்கு மாலை போட்டுக்கொண்டு பயபக்தியோடு திரியத்தொடங்கினான். அவன் பேச்சு நடவடிக்கை எல்லாமே மாறியிருந்தது. மிகவும் சாதுவாகவும் நல்லவனாகவும் மாறிவிட்டான். சினிமாவில் வருவதுபோல் ஊரே அவனைப்பற்றிதான் பேசிக்கொண்டது. "அவனுக்கு பொண்ணுபாக்றாங்கப்பா அதான் பையன் கொஞ்சம் ஒழுங்கா இருக்க ட்ரைப்பண்றான்" எனவும் "பேஸிக்கா அவன் நல்லவந்தான் சில அரசியல் சுயநலவாதிகள்தான் அவனை இப்படி ரவுடியாக்கிட்டாங்க" எனவும், "பேருதாம்ப்பா ரவுடி ஆனா அவன் இந்த ஊருல யார்கிட்டையும் தகராறு பண்ணதேகிடையாது, என்ன கொஞ்சம் ஓவரா பேசுவான் அவ்வளவுதான்" எனவும் பேசிக்கொண்டார்கள். இந்த ஒரு மாதத்தில் அவன் கிட்டத்தட்ட ஏரியா ஹீரோவாகவே மாறிவிட்டான். ஜனவரி 16 மலைக்குப்போய்விட்டு வந்தவன் அன்று இரவே தற்கொலை செய்துகொண்டான். மாலை 4 மணிக்குள் உடல் தகனமும் செய்யப்பட்டுவிட்டது. இது தற்கொலையில்லை இதில் ஏதோ மர்மம் இருக்கிறது என்று பேசிக்கொள்கிறார்கள்.


சஸ்பென்ஸ் 3 :

5 வருஷத்துக்கு முன்னால் 15 வயசிருக்கும் அவனுக்கு கலையானமுகம் எப்பவும் சிரிச்சுகிட்டே இருப்பான். அபாரமா புட்பால் ஆடுவான். சிலநேரங்களில் கேரம்போர்டும் ஆடுவதுண்டு. ஆரம்பத்துல காக்கி பேண்ட், வெள்ளை சட்டையில் பார்த்திருக்கேன். அப்புறமான ஆண்டுகளில் எப்பவும் ஒரு லுங்கிதான் அவன் வேலைவெட்டி எதுக்குமே போனதில்லை. எப்பவுமே அந்த ஏரியா வாட்டர் டேங்கிட்டதான் இருப்பான். சுத்தி எப்பவுமே நாலுபேரு இருப்பாங்க. அவங்க இருக்கற இடம் புகைமூட்டமா இருக்கும். கஞ்சா புகைப்பதாய் கேள்விப்பட்டிருக்கிறேன். ராத்திரி நேரங்கள்ல ஃபுல்ல குடிச்சிட்டு யாரையெல்லாமோ திட்டிகிட்டிருப்பான். ஒரு கட்டத்துல அவன் மூஞ்சியவே பாக்கமுடியாதபடி விகாரமா மாறிடிச்சு. குடிக்க காசு இல்லைன்னா முகம்தெரியாத யாரையாவது மடக்கி வம்பிழுத்து காசு வாங்கிவிடுவான். சமீபத்தில் ரொம்ப மெலிஞ்சுபோயிருந்தான். திடீர்ன்னு ஒருநாள் செத்துபோய்ட்டான். அவன் தானா சாகவில்லை அவன் தொல்லை தாங்காமல் சொந்தகாரங்களே சாகடிச்சுட்டாங்கன்னு பேசிக்கறாங்க.

ஒண்ணுமே புரியல‌ நீங்கதான் யாராவது சொல்லுங்களேன்.

B-கேர்ஃபுல்

பிள்ளைகளை சேர்க்கும் பள்ளியில் தொடங்கி பிற்கால‌த்தில் அவர்கள் தேர்ந்தெடுக்கவேண்டிய துறை வரை அனைத்தையும் தன் குழந்தைகளின் விருப்பமோ அனுமதியோ இல்லாமலேயே முடிவெடுத்துவிடுகிறார்கள் பெற்றோர்கள். இது மாணவர்களுக்கு ஒருவித அழுத்தத்தை கொடுக்கிறது. அந்த அழுத்தம் படிப்பில் கவச்சிதறலாகவும், பெற்றோரிடம் அலட்சியமாக நடந்துகொள்வதுமாக வெளிப்படுகிறது. இந்த குற்றவுணர்ச்சியே நம் காலத்தில் ஆடம்பரம்மாக கருதப்பட்ட செல்போன், லேப்டாப், பேக்கட்மணி, ஷாப்பிங் என பல விஷயங்கள் அவர்கள் கேட்டும், கேட்காமலும்  பெற்றோர்களால் வாங்கி கொடுக்கப்படுகிறது.முன்னெல்லாம் நீ பாஸ்பண்ணா வாச் வாங்கித்தருவேன், சைக்கிள் வாங்கித்தருவேன்னு சொல்வாங்க ஆன இப்போ இதுஎதுவுமே ஒரு பெரிய விஷயமே கிடையாது. 3 வயசுல சைக்கிள் 8 வயசுல கம்பியூட்டர் 15 வயசுல பைக். இது எலாத்துக்குமே அடைப்படை நம் வாழ்க்கையை நாம் நடத்தவில்லை அது நம்மை சுற்றி உள்ளவர்களால் நடத்தப்படுகிறது இல்லை.. இல்லை விரட்டப்படுகிறது.

பக்கதுவீட்டு பையன் அந்த ஸ்கூல்ல படிக்கிறான், எதிர் பிளாட் பொண்ணு இந்த கிளாஸ் போறா, கூட வேளை பாக்கறவர் கார்வாங்கிட்டார் என எதையுமே நாம் நமக்கான தேவைக்காய் விருப்பத்துக்காய் செய்வதில்லை. தொடக்கத்தில் வளர்ச்சியை நோக்கிய பயணம், ஆரோக்கியமான எதிர்காலத்திற்கான ஓட்டம் என சொல்லிக்கொண்டாலும் போகப்போக இது கள் குடித்த குரங்காய் தறிகெட்டு போய்கொண்டிருக்கிறது. எறியும்வீட்டில் பிடுங்கினவரை லாபம் என காத்திருக்கும் கழுகளின் கவர்ச்சிகர விளம்பரங்களை காட்டிக்காட்டியே மேலும் வெறியூட்டும் விதமாய் அதன் நாக்கில் ஊறுகாய் தடவுகின்றன ஊடகங்கள்.

இப்படி வெறியூட்டப்பட்ட சந்தையில் ஒவ்வொருவரும் தன் பங்கு லாபத்தை எப்படியாவது பெற்றுவிடவேண்டும் என குறியாய் அலைகிறார்கள். அதில் இது ஒரு மாதிரி ( சேம்பிள் )Monday, February 4, 2013

Dr.போலிகள்திருடனாய் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது.

இந்த வரிகள் கேட்பதற்கு வேண்டுமானால் சுவாரஸ்யமாக இருக்கலாம் ஆனால் நடைமுறையில் சாத்தியமே இல்லை என்பதுதான் நிஜம். தவறு செய்பவர்கள் எவருமே தானாய் திருந்திவிடுவதில்லை. பொதுவாக கதைகளிலும் திரைப்படங்களிலும் வில்லன்களாக வரும் கதாபாத்திரம் திருந்துவதாய் காட்டினாலும் அதற்குள் இரண்டு கொலை ஒரு கற்பழிப்பு ஆள்கடத்தல் என பல அசம்பாவிதங்கள் நடந்துவிடுவதுண்டு இத்தனைக்கும்பின் அவர் திருந்திதான் என்ன சாதித்துவிடப்போகிறார். 

தமிழகத்தில் 50,000 போலி மருத்துவர்கள் தங்களின் பொன்னான சேவையால் நாட்டின் மக்கள்தொகையை கணீசமாக குறைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர் என்பதை அகில இந்திய மருத்துவ சங்க, தேசிய தலைவர் டாக்டர் விஜயகுமார் (""தமிழகத்தில், 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலி டாக்டர்கள், மருத்துவ சிகிச்சை மேற்கொள்வதால், உயிரிழப்புகள், நோய் தாக்கம் கட்டுப்படுத்த முடியாத நிலை உள்ளது,'' என, அகில இந்திய மருத்துவ சங்க, தேசிய தலைவர் டாக்டர் விஜயகுமார் தெரிவித்தார்.- தினமலர் 04-02-13) ஒத்துக்கொண்டுள்ளார். இப்படியான பகிரங்க அறிக்கைகள் அரசின் சுகாதாரத்துறையின் கேவலமான செயல்பாடுகளைத்தான் காட்டுகிறது. தான் இதுவரை பார்த்துவந்த மருத்துவர் உண்மையில் தகுதியானவரா அல்லது போலியா என்பதில் தொடங்கி இனிமேலாவது போலிகலிடம் சிக்காமல் எப்படி மீள்வது என்பதுவரை பொதுமக்களுக்குத்தான் எத்தனை மனப்போராடம். 

கடவுளைப்போல் கருதப்படும் மருத்துவர்களின் நம்பகத்தன்மைக்கு வெளிப்படையான ஆதாரங்களை தெரிவிக்கவேண்டும் என ஏதேனும் வரைமுறை இருக்கிறதா? அப்படியே இருந்தாலும் எங்குமே/எவருமே கடைபிடிப்ப‌தில்லையே ஏன்? கிராமப்புறங்களிலும், சிறிய டவுன்களிலும்தான் இந்த போலிடாக்டர்களின் ஆதிக்கம் அதிகம் எனக்கொள்ளலாம். மக்களின் அறியாமையும் அரசு ஆரம்ப சுகாதார மையங்களில் மருத்துவர்கள் பெருப்பாலும் இருப்பதே இல்லை என்ப‌தும்தான் போலிகளுக்கு ஏதுவானதாக இருக்கிறது. நகர் புற‌ங்களில் போலிகள் குறைவுதான் என்றாலும் தனியார் மருத்துவமனைகளில் இரவு மற்றும் மதிய வேளைகளில் டூட்டி டாக்டர்கள் சந்தேகத்துக்குரியவர்களே.

தையலர்கள், மெக்கானிக்குகள் என மக்களின் சேவைதொடர்பான வேலைகளை செய்துபிழைக்கும் சிறுதொழிலாளிகள் தாங்கல் அந்த தொழிலுக்கு தகுதியானவர்கள்தான் என்பதை தெரிவிக்கும் வண்ணம் அரசு வழங்கும் சான்றிதழை மக்கள்பார்வையில் படும்படி வைத்திருக்கவேண்டும் என்ப‌துபோல் மருத்துவர்களும் தங்கள் சான்றிதழை தங்கள் பணியிடங்களில் கட்டாயம் வைத்திருக்கவேண்டும், குறைந்தபட்சம் பிரிஸ்கிரிப்ஷன் எனும் மருந்து எழுதிக்கொடுக்கும் சீட்டில் மருத்துவ கழகத்தால் அங்கிகரிக்கப்பட்ட அவரின் பதிவு எண்னாவது இருக்கவேண்டும் என சட்டம் இயற்றவேண்டும். 

இந்த போலிகள் தானாய் திருந்துவதற்குள் பல உயிர்கள் பறிக்கப்பட்டிருக்கும். இவ்வாறான தவறுகள் தடுக்கப்படவேண்டுமானால் கடுமையான சட்டங்கள் மட்டுமே உதவும். கடுமையான சட்டங்கள் தவறு செய்யநினைப்பவர்கள் மனதில் பயத்தை விளைவிக்கும் எனபதுதான் உண்மை. அரபு நாடுகளில் தண்டனை சட்டம் அங்கே பெருமளவு தவறுகளை தடுத்திருக்கிறது என்பதை யாரும் மறுத்துவிடமுடியாது. கூடவே அந்த சட்டங்கள் பற்றிய தெளிவை மக்களிடம் கொண்டுசேர்க்கவேண்டும் என்பதும் கவனிக்கப்படவேண்டுய ஒன்று.கருணாநிதி - கருணை நதி


மத்திய அரசின் உணவு பாதுகாப்பு சட்டத்தின் விதிமுறைப்படி லைசென்ஸ் பெறுவதற்கு கடைசி நாள் இன்று. இந்த விவரம் அறிந்ததும் தானைத்தலைவர் முத்தமிழ் வித்தகர் அரசியல் சாணக்கியர்... இன்னும் பல "ர்" களுக்கு தகுதியானவர் மத்திய அரசின் இந்த சட்டத்தில் திமுக விற்கு மனதளவில் சம்மதமில்லை என்றும் இச்சட்டத்தினால் சுண்டல் விற்பவர்முதல் சிறுவியாபாரிகள்வரை பாதிக்கப்படுவார்கள் எனவே மத்திய அரசு இச்சட்டத்தை மறுபரிசீலனை செய்யவேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார். சிலரைவர்தகத்தில் அன்னிய முதலீட்டால் பாதிக்கப்படப்போகும் சிறுவணிகர்களின் நலனை கூட்டணீ தர்மம் என்ற அடைமொழியோடு அடகு வைத்தவர் உணவு பாதுகாப்பு சட்டத்தால் சிறுவியாபார ஆடுகள் நனையப்போவதற்காய் (ஓனாய்) கண்ணீர்வடித்திருக்கிறார். ஒருபுரம் மக்கள் நலன் கருதாமல் நடந்துகொள்ளும் காங்ரஸ் கடுப்பை கிளப்புகிறதென்றால், மக்களை முழுமுட்டாள்கள் என நினைத்துக்கொண்டு நாளொரு பேச்சும் பொழுதொரு அறிக்கையுமாய் இவர்வேற வெறுப்பேத்துறார்.

Sunday, February 3, 2013

மழையில் நனையும் குடை!


அழுக்கு வீதிகள்,
ஆபாசம் காட்டும் சுவரொட்டிகள்,
அரசியல்பேசும் ஒலிபெருக்கிகள்,
ஆன்மீகம்பரப்பும் ஆலயமணிகள்,
நிறைந்துவழியும் குப்பைத்தொட்டிகள்,
விரைந்துசெல்லும் வாகன நெரிசல்கள்,
புகைக்கும் பேருந்து,
பொய்பேசும் ஜோசியக்கிளி,
காத்திருக்கும் பயணிகள்,
கையேந்தும் பிச்சைக்காரர்,
முடிவில்லா அவலங்கள்
எனக்குள் கவிதையாய்!
கொட்டும் மழையில்
குடைபிடித்தபடி நான்,
குடைக்குள் மழையாய் - நீ.
மழையில் நனையும் குடையாய் நான்.


நீங்கள் இதையும் விரும்பக்கூடும்