Thursday, January 31, 2013

டெ(உ)ல்டா - அரசியல்


காவிரியிலிருந்து ஒரு சொட்டு தண்ணீர்கூட திறந்துவிட முடியாது என்று கர்நாடக அரசு வழக்கறிஞர் உச்சநீதிமன்றத்தில் திட்டவட்டமாக மறுத்துவிட்டார். தமிகழகத்திற்கு தண்ணீர் திறந்துவிடக்கோரி கர்நாடகாவை நிர்பந்திக்க முடியாது என்று உச்சநீதிமன்ற நீதிபதியும் தெரிவித்திருக்கிறார், ஆனால் தீர்ப்பை வேறுதேதிக்கு தள்ளிவைக்கவேண்டியது ஏன் என்றுதான் புரியவில்லை. இது ஒரு கண்துடைப்பு நாடகம் என்பது தெள்ளத்தெளிவாக தெரிந்தபோதிலும்.  எந்த சுயநல அரசுகளாலும், அரசுக்கு துணைபோகும் மன்றங்களாலும் டெல்டா மக்களுக்கு எந்தவிதத்திலும் பயனில்லை என்பது கண்கூடு.தீர்ப்பு கர்நாடகாவிற்கு பாதகமானதாக அமைந்துவிட்டால் கர்நாடகாவில் காங்ரஸின் ஆதரவு படுத்துவிடக்கூடும் என்பதால் தீர்ப்பு எப்படியானதாக இருக்கப்போகிறது என்பது தெரிந்ததே ஆனாலும் வாடிக்கிடக்கும் பயிரை தொலைக்காட்சியில் பார்க்கும்போதே மனம் சஞ்சலப்படுகிறதே அந்த மண்ணையும்,பயிரையும் நம்பி வாழ்ந்துகொண்டிருக்கும் விவசாயிகளின் மனநிலை என்னவாக இருக்கும் என யூகிக்கமுடிகிறது. அதைப்பத்தியெல்லாம் எங்களுக்கு கவலை இல்லை, வரப்போற‌ நாடாளுமன்ற தேர்தலில் 40 இடங்களும் எங்களுக்கே கிடைக்கணும், அதற்கு விஷ்வரூபம் தடை ஒரு காரணியாய் உதவுமென்றால் அதற்குதான் முன்னுரிமை அளிப்போம், டெல்டா விவசாயி பிரச்சனை பல வருடங்களாக இருப்பதுதானே அது இப்போதும் இருந்துவிட்டுபோகட்டும் என்ற போக்குத்தான் தமிழக அரசினுடையது. பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணத்தொகை வழங்குவதில் காட்டாத அவசரத்தை, அக்கறையை விஷ்வரூபத்திற்கெதிராய் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்வதில் காட்டிக்கொண்டிருக்கிறது அரசு. அதற்கான விளக்கத்திற்கு முதல்வரே தொலைக்காட்சிக்குமுன் அவதரிக்கிறார். இதில் எந்த அரசியலும் இல்லை எனவும் உறுதியளிக்கிறார். நம்புவோமாக. வாழ்க ஜனநாயகம், வளர்க மக்கள் தொண்டு.

Monday, January 28, 2013

கட்டாமலே வெச்சுகலாம்!


1. முதலீடு என்று நினைத்துகொண்டு சென்னையிலிருந்து வெறும் 1.30 மணிநேரத்தில் நல்ல காற்றோட்டம், சுவையான தண்ணீர், மனைப்பிரிவிலிருந்து தேசிய நெடுஞ்சாலை 4 கிமி, ரயில்நிலையம் 5 கிமி, அரக்கோனத்திலிருந்து 24 மணிநேர ஷேர் ஆட்டோ வசதி என எங்கோ ஒரு பொட்டல்வெளியில் மொட்டை வெயிலில் திரிந்து திரிந்து அளப்பரப்பிக்கொண்டிருக்கும் ஏதோஒரு TV தொகுப்பாளினியின் புடவை டிசைன், ரவிக்கை கலர் என பெண்களும், இங்கே சொல்லமுடியாத எதையோ பார்த்து வழிந்துகொண்டே ஆண்களும் கண் இமைக்காமல் கவனித்து பின் உற்றார், சுற்றார் என பலபேரின் சொரிந்துவிடலுக்கு உங்கள் கையை புண்னாக்கிக்கொண்டு ( அதாங்க லோன் ) இப்போதைக்கு வீடோ வாசலோ கட்டவேமுடியாத ஒரு வனாந்திரத்துல வாங்கிப்போட்ட 1/2 கிரவுண்ட் நிலத்தில நீங்க முள்வாலியோ, மதில்சொவரோ கட்டாமலே வெச்சுக்கலாம். யாரும் ஏன்னு கேக்கமாட்டாங்க.

2.  வாழ்க்கை எப்பவுமே யாருக்குமே நிரந்தரம்ன்னு சோல்லிடமுடியாது. எந்தநேரத்திலும் எதுவும் நடக்கலாம். இமயமலையின் 32 சிகரங்களை கடந்துசென்ற ஒருவர் ( பிரிகேடியர் பல்வான் சந்து ) கார்மோதி இறந்துவிடுகிறார். மலைய புடுங்கன‌ பைல்வான் புல்தடுக்கி விழுந்தானான்னு நம்ம ஊருங்கள்ல சொல்ரதுதானே? அதேபோலதான் யாருக்கும், எப்பவும், என்னவும் நடக்கும் அதுக்கு நம தயாரா இருக்கனும். நாளைக்கே உங்களுக்கு ஒன்னுன்னா குடும்பத்தை யாரு பாதுப்பாங்க, குழந்தைகள் படிப்பு என்னாவது இன்னிக்கு நிலைமையில படிப்புத்தான் நம்மால கொடுக்கக்கூடிய ஒரே சொத்து அதுவும் இல்லாம போயிட்டா அதுங்க எதிர்காலம் என்னவாவது. இப்படி ஒவ்வொருத்தரும் ஒன்ன ஒன்ன சொல்லி நம்மல பயமுடுத்தி, எதிர்காலத்தைப்பத்தி வெட்டவெளியில, மொட்டமாடியில நட்டநடு மதியானத்துல யோசிக்கவெச்சி இதுக்கு என்னதான் வழின்னு நாம பலபேரகேட்டு அலசி ஆராஞ்சி கடைசியா ஒரு இன்சூரண்ஸ் பாலிசி போடுவோம்மு ஒருமனதா முடிவெடுத்து ஏஜன்டை கூப்பிட்டு பேசினா அய்யோ அவரு வேர பயங்கரமா கொழப்பி ஒருவழியா மாதம் 1000 ரூபாய் எப்படியாச்சும் கட்டிடனும் வேரவழியே இல்லை, இல்லன்னா கார்மோதிடும், இதயநோய் வந்துடும் நாம செத்துடுவோம் நம்ம குடும்பம் நடுத்தெருவுக்கு வந்துடும் இப்படியெல்லாம் பயந்துபோய் கட்ட ஆரம்பிச்ச பாலிசியை பல்லகடிச்சிகிட்டு ஒரு ஆறுமாசம் கட்டிட்டு அப்பறம் ஏதேதோகாரணங்களால ஒரு மாசமோ ரெண்டுமாசமோ கட்டமுடியாமபோய் அப்புறம் சீ போ என்ன பெரிய வாழ்க்கை மரத்தவெச்சவன் தண்ணிய ஊத்தப்போறான் அதுக்கு ஏன் நாம தலையால தண்ணியகுடிக்கனும்ன்னு ஒரு சுபயோக சுபதினத்தில் இனி பணம் கட்டுவதில்லைன்னு முடிவுபண்ணப்பறம் பணத்தை கட்டாமலே வெச்சுக்கலாம். மாசாமாசம் 1000 ரூவா மிச்சம்.


3.  எந்தஒரு காரியத்தையும் ஆரம்பிக்கும் முன் கடவுள் மேல்பாரத்தை போட்டு ஆரம்பி எல்லாம் நல்லபடியா நடக்கும்னு சொல்றவங்களும், எந்தகாரியமா இருந்தாலும் அதப்பத்தின எல்லா விஷயத்தையும் தெளிவா தெரிஞ்சுகிட்டு முழு ஈடுபாடோட தொடங்கினா அந்த காரியம் நிச்சியம் வெற்றிதான் இதுல கடவுளுக்கு வேலையே இல்லைன்னு சொல்றவப்க்களும் இருப்பாங்க. சாய்பா ரொம்ப சக்திவாய்ந்தவர், வாராவாரம் வியழக்கிழமை தவறாமல் எந்த வேலை இருந்தலும் சாய்பாபா கோயிலுக்கு போய்டுவேண் இப்படி சொல்றவங்களும்,சாமி என்ன வியாழக்கிழமைதான் வரனும்னு சொல்லிச்சா?நமக்கு எப்போ தோனுதோ அப்போ கும்பிட்டுக்கவேண்டிய‌துதான். எனக்கெல்லாம் கூட்டத்தை பார்த்தாலே கோவமா வருது எனச்சொல்பவர்களும் இருக்கத்தான் இருக்கிறார்கள்.

உங்க பக்கத்து வீட்டுக்காரர், உங்களுக்கு ரொம்ப உதவியா இருக்ககூடியவரும்கூடன்னு வெச்சுக்கங்களேன் அவரு தன் குடும்பத்தோட திருப்பதிக்கோ, பழனிக்கோ போய்ட்டு வந்திட்டு ஒரு சின்ன தட்டுல கொஞ்சம் விபூதி குங்குமம், கற்கண்டு, பஞ்சாமிருதம், கருப்பு கயிறு இப்படி ஏதேதோ பிரசாதம்னு கொடுக்கராங்க மேல சொன்ன இரண்டு டைப்புல நீங்க முதல் டைப்பா இருந்தா பயபக்தியோட விபூதி குங்குமத்தை நெத்தில வெச்சுகிட்டு பஞ்சாமிருதத்தை வழிச்சு நக்கீட்டு அந்த கருப்பு கயிறை கையிலயோ, இடுப்புலயோ எங்க வேண்னா கட்டிக்கலாம். இதே நீங்க ரெண்டாவது டைப் ஆளா இருந்தா மேல சொன்னதுல எல்லாத்தையும் செய்திட்டு அந்த கயிறை மட்டும் கட்டாமலே வெச்சிக்கலாம் பக்கத்துவீட்டுக்காரர் ஏன்னு கேக்கமாட்டார்.


இப்படி இன்னும் என்னவெல்லாமோ கடாமலே வெச்சுக்கலாம். ஆனா அமர் பிரகாஷ்ல பிளாட்டை வாங்கிட்டு பணத்தை கடாம வெச்சிகிட்ட‌ பிளாட்டை காலிபண்ன சொல்லிடுவாங்க. ( அதவது கழுத்தை பிடிச்சி வெளிய தள்ளிடுவாங்க )Thursday, January 24, 2013

புறக்கணிப்பு


புறக்கணிக்கப்படுதலின்
வலியறியாதவரை
புறக்கணித்துக்கொண்டே
பயணிக்கிறோம்
எவரையாவது.

எதிரெதிராய்
அமர்ந்திருப்பவர்களில்
ஒருவர்
புறக்கணிக்கப்படுகிறார்
மற்றவரால்
ஏதோ ஒரு வகையில்.


நியாயமான வாதிகளுக்கு
சேரவேண்டிய‌
நீதியை புறக்கணிக்கின்றன‌
பிரதிவாதியின்
வாய்தாக்கள்.

நேர்மையான எல்லா
கோரிக்கைகளும்
புறக்கணிக்கப்படுகின்றன‌
அரசியல் தரகர்களின்
தலையீடுகளால்.

சாதியின் நீள்கரங்கள்
புறக்கணிக்கின்றன‌
காதலின் சுகந்தத்தை.

பாதிக்கப்பட்டவரின்
வலியும் வேதனையையும்
புறக்கணிக்கின்றன‌
ஊடகங்கள்
திரும்பத்திரும்ப காண்பிக்கப்பட்டு.

புற‌க்கணிக்கப்படநேரும்
ஒவ்வொருமுறையும்
மனதிற்குள் எட்டிப்பார்கும்
அம்மணக்கோலத்தை
புறக்கணிக்கமுடிவதில்லை.

Tuesday, January 22, 2013

ராகுல் காந்தி - காங்ரஸ் பூந்திகளால் பிடிக்கப்பட்ட லட்டு.

அண்ட பகிரண்டமெல்லாம் தேடியலைந்தாலும் கிடைக்கமாடார் இப்படியொரு துணைத்தலைவர் காங்ரஸுக்கு 150 ஆண்டு வலிமையும் வரலாறும் கொண்ட கட்சியில் நேரு குடும்பத்து விளக்குகள் மட்டுமே அதிகாரக்கட்டிலில் குத்தவைக்கப்படுகின்றன. அவ்வகையில் ராகுலும் தற்போது துணைத்தைவராக நியமிக்கப்பட்டிருக்கிறார். தேர்ந்தெடுக்கப்படுவதற்கும் நியமிக்கப்படுவதற்கும் வித்தியாசம் உண்டுதானே? 

காங்ரஸில் தொண்டர்கள் குறைவு தலைவர்கள் அதிகம் என ஒரு பகடி நிலவுவது தெரிந்தவிஷயமே. ஆனால் தலமைக்கான தேர்வின்போதுமட்டும் அவர்கள் தொண்டராய்க்கூட இல்லாமல் அதையும்தாண்டி ஆட்டுமந்தைகளாய் மாறிவிடுவது அவலம். சரி ஒரு கட்சி தன் தலைமையை தேர்ந்தெடுப்பதில் நமக்கென்ன பிரச்சனை. அங்கேதான் பிரச்சனையே தெரிந்தோ தெரியாமலோ பெரும்பாலும் இந்தியாவை ஆண்டுகொண்டிருப்பது,ஆட்டிவைத்துக்கொண்டிருப்பது காங்ரஸ் கட்சிமட்டுமே அதற்கு மத்தியில் வலுவான எதிர்கட்சி இல்லாததும், இருக்கும் கட்சியும் மதஅடிப்படைவாதகட்சி என பெயரெடுத்ததுமே முக்கியகாரணங்கள். இந்நிலையில் நாம் கண்டுவந்த கனவுகளுக்கும் அனுபவித்துவரும் துர்கனவுகளுக்கும் காங்ரஸின் ஆட்சியும் கொள்கையுமே காரணமாக இருக்கிறது. இதுவரையான எந்த கொள்கையுமே சராசரி இந்தியனுக்கு சாதகமானதாகவோ,பயனளிக்கக்கூடியதாகவோ இல்லைஎன்பது நிதர்சனம். காங்ரஸ் ஆட்சி பன்னாட்டு நிறுவனங்களுக்கும், உள்நாட்டு பெரும் முதலாளிகளுக்கும் மட்டுமேயான ஆட்சியாய்த்தான் இருந்திருக்கிறது. இந்நிலையில் எந்த ஒரு திடமான செயல்பாடுகளிலும் பங்கெடுக்காத, நாட்டின் எந்த ஒரு பிரச்சனைக்கும் எதிராய் குரல்கொடுக்காத வெறும் நேரு குடும்பம் என்ற ஒற்றை சாளரத்தின் வழிமட்டுமே முகம்காட்டிவந்த ராகுல் நேரடியாய் துணைத்தலைவர் பதவியில் அமர்த்தப்பட்டிருப்பது "கண்ணா லட்டுதின்ன ஆசையா" நாயகன் (ஹீ..  ஹீ...  3 வது நாயகன்)பவர்ஸ்டார் போலத்தான் தெரிகிறார். இனிவரும் காலங்களில் அவர் என்ன செய்யப்போகிறார் என்பதைகொண்டே அவரின் எதிகாலம் தெரியவரும். நம் தலையெழுத்தும்தான்.FDI யால் பாதிப்பு - நமக்கென்ன?


சில்லரை வர்த்தகத்தில் அன்னிய நேரடி முதலீட்டால் நேரடியாய் பாதிக்கப்படப்போகும் சிறு வணிகர்களை பாதுகாக்க அரசு மேற்கொண்டுள்ள‌ நடவடிக்கை என்ன?  மூன்று நாட்களுக்குள் விளக்கம் வேண்டும். - மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட் கேள்வி.

நடவடிக்கையோ திட்டமோ இருந்தாத்தான் எதிர்ப்பு வந்தபோதே சொல்லி தொலைச்சிருப்பாங்களே. வ‌ழக்கம்போல மழுப்பலான பதில்களை இனிதான் ரெடிபண்னனும். அதுக்குத்தான் மூன்றுநாள் அவகாசம் கொடுக்கப்பட்டிருக்கிறது. சில வருஷங்களுக்கு முன்னாடி இதே நீதிமன்றம் இந்திய உணவு கழகத்தால் பாதுகாக்கமுடியாமல் வீணாகிக்கொண்டிருந்த‌ பல ல‌ட்சம்ரூபாய் மதிப்பிலான தாணியங்களை பாதுகாக்க வேண்டியஏற்பாடுகளை செய்யுங்கள் அல்லது ஏழைகளுக்கு பிரித்து கொடுத்துவிடுங்கள் என்று ஒரு யோசனையை பரிந்துரைத்தபோது,  " அரசின் கொள்கை முடிவுகளிலெல்லாம் நீதிமன்றம் தலையிடக்கூடாதுன்னு " புலம்பிய‌ அரசுதானே இது. அதேபோல இதுக்கும் எதையாவது சொல்லிட்டு(புலம்பிட்டு) போறாங்க விடுங்க. சிறு வியாபாரி என்ன ஆன உங்களுக்கென்ன, அது ரெண்டு வியாபாரிங்களுக்கு நடுவுல எப்பவுமே இருப்பதுதானேன்னுகூடா நிதியமைச்சர் சொல்லக்கூடும், யார்கண்டா?

ஊழல் நீக்கும் SURF EXCEL


அரியானா முன்னாள் முதல்வர் ஓம் பிரகாஷ் சவுதாலா, மற்றும் அவரது மகன் உட்பட ஊழலில் சம்பந்தப்பட்ட பலருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை. இவர் முதல்வரா இருந்தபோது 3200 ஆசிரியர்களை நியமிச்சிருக்கார், சும்மாயில்லை தலா நாலு லட்சம்வரை ல‌ஞ்சம் வாங்கிட்டு. எல்லாமே போலி ஆவணங்கள். வலிமையான சமூகத்தை உருவாக்கவேண்டிய பொறுபில் இருக்கும் ஆசிரியர் பணியையே வெறும் பணத்துக்காக போலிகளுக்கு விற்றுவிடத்துணியும் அளவிற்கு தேசத்தின் அரசியல் தலைமைகள் கேடுகெட்டு இருக்கின்றன என்பது மானக்கேடு. அதைவிட மானக்கேடானது இதன் விசாரணைக்கும் தீர்பிற்கும் 13 ஆண்டுகள் எடுத்துக்கொண்டது. இந்த பதிமூன்றாண்டுகளில் கள்ள வழியில் நுழைந்த ஆசிரியர்களிடம் பாடம் படித்தவர்களின் நிலை என்ன? அவர்களின் கல்வித்தரம் என்னவாக இருக்கும். கல்விக்கும், சுகாதாரத்திற்கும் என அடிப்படை தேவைகளுக்கு அரசையே நம்பியிருக்கும் மக்களுக்கு இதுதான் கதியா? அந்த 3200 ஆசிரியர்கள் பணிநீக்கம் செய்யப்படுவார்களாய் இருக்கலாம். ஆனால் மீண்டும் அவ்விடங்களை நிறுப்புவதில் ஊழல் நுழையாது என்பதற்கு ஒரு உத்திரவாதமும் இல்லை. ஊழல் கரைகளை மொத்தமாய் நீக்கும் SURF EXCEL எங்காவது கிடைக்குமா?

Sunday, January 20, 2013

பில்டிங் ஸ்ட்ராங்கு பேஸ்மெண்டு வீக்கு!


என்னிக்காவது மனைவி அவங்க அம்மா வீட்டுக்கு போயிருக்கும்போது சாப்பாடு ஓட்டல்தான், ஆனா அந்த ஒருநாள் வெளிய சாப்பிட எவ்வளவோ யோசிக்கவேண்டும். ஏன்னா ஒர் சாதாரணா சைவ உணவகத்தில் காலை ரெண்டு இட்லி ஒரு வடை ஒரு காப்பி விலை 50 ரூபாய். மதியம் ஒரு சாதா மீல்ஸ் 55 முதல் 65 வரை அதுபோலவே இரவுக்கும் கணக்கு பாத்தால் குறைந்தபட்சம் 150 ரூபாய் செலவழிக்கவேண்டியுள்ளது. இதே உயர்தர சைவ உணவகம்னா கேட்கவே தெவையில்லை 250 ரூ எகிரிடும். இந்த நிலையில் 1 இட்லி 1 ரூ, சாம்பார் சாதம் 5 ரூ, தயிசாதம் 3 ரூ என்று அரசு அறிவித்திருப்பது காதினில் தேன் பாய்ந்தாற்போல் இருக்குது 

சென்னையில் 1000 அரசு உணவகங்கள் தொடங்கப்படவுள்ளதாய் அறிவித்திருக்கிறது அரசு. இது ஏழைகளுக்கும், கூலித்தொழிலாலர்களுக்கும் மிகவும் பயனுள்ளதாக இருக்கப்போகிறது என்று எல்லா பட்சிகளும் பறந்துபறந்து கூவுகின்றன. அதேநேரம் பாராளூமன்ற தேர்தலே இதற்கு கார‌ணம் என சில அரசியல் பருந்துகள் ஆரோகணிக்கின்றன. 

 கோயில்களில் அன்னதானம் போல் இதுவும் நல்ல திட்டம்தான் ஆனால் காலப்போக்கில் இதுவும் கவனிப்பாரற்ற சவளைக்குழந்தை ஆகிவிடாமல் பார்த்துக்கொள்வது மிகவும் அவசியம். ஏற்கனவே அரசு ஏற்றுநடத்தும் சாராயக்கடைகளின் சுத்தம், மற்றும் சுகாதாரம் பற்றிய விவரங்கள் தமிழக குடிமகன்கள் அறிந்ததுதே. இத்திட்டமும் அதுபோல் மாறிவிடாமல் இருக்கவேண்டும் என்பதே அனைவரின் ஆசை. பில்டிங் ஸ்ட்ராங்கு பேஸ்மெண்டு வீக்கு என்பதுபோல் நல்லதிட்டம் சரியான கவனிப்பும் செயல்திட்டமும் இல்லாமல் நாறிவிடாமல் பார்த்துக்கொள்ளவேண்டியது அரசின் கடமை.

இத்திட்டத்திற்கான அரிசியை தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் சலுகை விலையில் தரவேண்டும் என உத்தரவிட்டுள்ளார் முதல்வர். முதல்கட்டமாக வார்டுக்கு ஒன்று என முடிவுசெய்யப்பட்டுள்ளது. ஆகையினால் ஒரு யோசனை: 
இது ஏழைகளுக்கான திட்டமாக இருந்தாலும் அந்தந்த வார்டு கவுன்சிலர்களும், மெம்பர்களும், அவர்களின் குடும்பமும் வாரத்தில் 2 நாட்கள் இந்த ஓட்டல்களில்தான் சாப்பிடவேண்டும் என்று சட்டம் போடப்படவேண்டும். அப்போதுதான் சுத்தமும் சுகாதாரமும் சுவையும் ஓரளவிற்காவது கடைபிடிக்கப்படும்.

எது எப்படியோ இத்தனை ஆண்டுகளாய் தொடரும் மதிய உணவு திட்டத்தால் தமிழகத்தில் கல்வி அறிவு பெற்றோர் சதவிகிதம் அதிகரித்துள்ளதை மறுக்க முடியாது. அதுபோல் இத்திட்டமும் மிக நீண்டகாலத்திற்குத்தொடர்ந்தால் குறைந்தபட்சம் பட்டினிச்சாவின் சதவிகிதமாவது குறையும். பசித்தவனுக்கு சோறு எல்லா பாவங்களுக்கும் மருந்து. ஒரே கல்லுல ரெண்டு மாங்கா.

Thursday, January 17, 2013

மானம் போகுது


இந்தியாவுலதான் ஒரு அரசு அதிகாரி கடத்தப்பட்டாலோ, பக்கத்து நாட்டு பயங்கரவாதி பகிரங்கமா பார்லிமெண்டுக்குள்ள பூந்து அட்டூழியம் பன்னாலும் ஒரு பொது எடத்துல பலபேர கொன்னுபோட்டாலும்,எல்லையில் ராணுவவீரன் கழுத்தறுத்து கொல்லப்பட்டாலும், எல்லாதுக்குமே பேச்சுவார்த்தைதான். ஒரு ஏப்பை சோப்பைகூட பஸ்ல யாராவது தெரியாம காலைமிதிச்சுட்டாலே ஏய் அறிவுகெட்டவனேன்னு திட்டிபுட்ரான். ஆன பாக்கிஸ்த்தான் எத்தனைவாட்டி காரிதுப்பினாலும் வழிச்சுபோட்டுட்டு இது கண்டிக்கத்தக்கது மேலும் இது தொடர்ந்தால் இந்தியா பார்த்துக்கொண்டிராதுன்னு ஒரு அறிக்கை அவ்வளவுதான். இந்தமாதிரி ஏதாவது சம்பவத்தை தொடர்ந்து கொஞ்சநாள்ல கராச்சிக்கு பஸ் உட்ரேன், இஸ்லாமாபாத்துக்கு பிளைட் உட்ரேன்னு மறுபடியும் அவன் பினாடியே போறது. இது ஆட்சியாளர்களுக்கும், அரசியல்வாதிகளுக்கும் வேண்னா அசிங்கமா இல்லாம இருக்கலாம் மக்களுக்குத்தான் மானம் போகுது.

Wednesday, January 16, 2013

இந்தியா - பாக்கிஸ்தான்

பேச்சுவார்த்தைக்கான கதவுகள் திறந்தேயிருகின்றன - ஹீனா ரப்பானி கர் 
(பாகிஸ்தான் வெளியுறவுத் துறை அமைச்சர்)


கடந்தமுறை நறுக்கப்பட்ட‌
நாசியின் நரம்புகளை
தடவிக்கொண்டே,
இந்தமுறையும்
தொடங்குகின்றோம்
நம் கருத்துப் பரிமாற்றங்களை
பொய்யின் பரிவாரங்களோடு.

தொழுதகையுள்
ஒடுங்கும் படையோடு
பறைசாற்றிக்கொண்டிருக்கிறோம்
சமாதானத்தின் 
கட்டுமானங்களை.

உணர்ச்சித்ததும்பும்
வார்த்தை ஏய்ப்புக்களால்
மேய்த்துக்கொண்டிருக்கிறோம்
அமைதி வேண்டிநிற்கும்
வெள்ளாடுகளை.

வெள்ளை புறாக்களை
கறிசமைக்க உறித்துவிட்டு
இறகுகளை ஏந்திவருகிறோம்
சமாதான உடண்படிக்கைக்கு.


படம்: google

முகவரி

என் மரத்துபோன உணர்வுகள்
உனைக்கண்டதும்
மலர்ந்து நிற்பதால்
புன்னகையோடு கை நீட்டுகிறேன்,
புற‌க்கணிக்கும் உரிமையும்
உனக்களிக்கிறேன்.

அபத்தங்ககளை
ஜீரணித்த களைப்பில்
இளைப்பார வேண்டியிருக்கிறது
ஒரு மடி - அது
உன்னுடையதாயின்
மகிழ்ச்சி,
இல்லையாயினும்
வருத்தமில்லை

ஆனாலும்
என்பாதையில்
முன்னும், பின்னும்
எப்போதும் இருப்பாய் - நீ
வேண்டியோ, வேண்டாமலோ
என் டைரியில் உன் முகவரி.

Tuesday, January 15, 2013

வால்மர்ட் ஸ்..ஸப்பா கண்ணகட்டுதே!


சிலரை வர்த்தகத்தில் அன்னியமுதலீடு


அனுமதிக்க முடியாதுன்னு அம்மாவும், கொள்கையளவில் எதிர்த்தாலும் கூட்டணிக்காக ஏற்றுக்கொள்கிறேன்னு தாத்தாவும் மாறிமாறி நாடகமாடிகிட்டிருந்தாலும் வரவேண்டியவன் என்னவோ வரத்தான்போறான். இல்ல இல்ல வந்துட்டான். மான்தோலு போத்திகிட்டு சிங்கம் வந்திடிச்சாம் ன்னு ஒரு பாட்டு வரும்மில்ல அதுபோல வேற‌பேர்ல அவன் பூந்துட்டான். பெஸ்ட்டு பிரைஸ் இதுதான் பேரு. வால்மார்ட் ங்ற‌ பேரைவிட இது சொல்றதுக்கு ஈஸியா இருக்கில்ல. அதுவுமில்லாம அம்மா சொன்னா சொன்னதுதான் வால்மார்ட்டை உள்ள விட்டாங்களா பாத்தியான்னு சொல்லிக்கவும் வசதியா இருக்கும்.

2008 லேர்தே உள்ள வரத்துக்கான முயற்சில பல கோடி ரூபாய் அன்பளிப்பு வழங்கப்படிருக்குன்னு சொல்லிக்கராங்க. அப்போ நாங்க ஆட்சியில இல்லை அதனால் எங்களுக்கு கிடைக்கவேண்டியது கிடைக்கல இப்போ ஆட்சி எங்களது. கொடுக்கவேண்டியதை கொடுங்கன்னு கேட்டு வாங்கினவன் காட்டமாட்டானா தன் விசுவாசத்தை.  வால்மார்ட் பேர்ல வந்தாத்தானே அனுமதி இல்லை பெஸ்ட்டு பிரைஸ் என்கிற பேர்ல உள்ளவா யாருகேப்பாங்க. இடத்தை கொடுத்தா மடத்தை பிடிச்சானாங்கற கதையா சில்லரை வர்த்தகமா வரவேண்டியவன் இந்த பேர்ல மொத்தவியாபாரமும் செயப்போற‌தா தெரியுது. சில்லரை வர்த்தகத்தில் அன்னிய முதலீட்டால் பெருமளவு பாதிக்கப்படப்போவது சிறு வியாபாரிகள்தான்னு ஊரே சேர்ந்து கும்மி அடிச்சுகிட்டிருக்கோம் ஆனா அந்த வியாபாரிகளையே டார்கட் பண்ணி அடிக்கிறான். எந்தவித முன்பணமும் செலுத்தாமல் தங்கள் கடைப்பெயரை பதிவு செய்துகொள்பவர்களுக்கு வெளி மார்கெட்டைவிட 30% வரை விலை குறைப்பு மற்றும் 15 நாள் கடன் வசதி அளிக்கப்படும்ன்னு ஆசைகாட்றான். இந்த ஆசை வார்த்தைகளால் ஈக்கப்படும் வியாபாரி இது தேவை என்றும் தேவை இல்லை என்றும் தங்களுக்குள்ளாகவே பிரிந்து நிற்கப்போகிறான். இதன் விளைவாய் ..............   ஸ்..ஸப்பா இபடி யோசிகிட்டேபோனா கண்ணகட்டுதே நீங்களே யோசிச்சுகங்க பிளீஸ்.

ரயில் பயணம்


எதிர் இருக்கை காதலர்கள்
எடுத்துக்கொண்டன‌ர்
என் இயல்பை!

படிக்க எடுத்த புத்தகத்தை
புரட்டிக்கொண்டிருந்தேன்
வெறுமையாய்.

காதல்மொழி கேட்கும் ஆவலில்
காதுகளை கழற்றி அவர்கள்
வாயருகே வைத்துவிட்டு
கண்களை மேயவிட்டேன்
சன்னலுக்கு வெளியே!

நேற்று பார்த்த சினிமாவைப்பற்றியும்,
எரிந்துவிழுந்த அதிகாரியைப்பற்றியும்,
அறுந்துபோன செருப்பைப்பற்றியும்,
தொலந்துபோன செல்போன்னைப்பற்றியும்
அளவளாவிக்கொண்டு
இயல்பாய்த்தான் இருந்தனர்
என் இற‌ங்குமிடம் நெருங்கும்வரை.

இயல்பு தவறிய நான்
இறங்கிவிட்டேன்
கழற்றிவைத்த காதுகளை
எடுக்கமறந்து.


Monday, January 14, 2013

எக்ஸ்பிரஸ் வழியும் எனது பயமும்நோய்டா- ஆக்ரா இடையேயான 6 வழி அதிவிரைவு சாலை திட்டதை முன்னிட்டு சுமார் 300த்தி சொச்சம் கிராமங்களிலிருந்து கையாடிய விவசாய நில‌ங்களுக்கான அர்சு நிர்ணயித்த விலை அடிமாட்டுத்தனமாய் இருப்பதால் அதை எதிர்த்து விவசாயிகள் கடந்த சில வருடங்களாகவே போரடிவருகின்றனர். இதன் உச்சமாக கடந்த சில நாட்களாக விவசாயிகளின் வேகம் நேரடியாக களத்தில் இற‌ங்கும் அளவிற்கு வந்துள்ளது.

சில நாட்களுக்குமுன் இப்போராட்டத்தை தூண்டியதாக தலை மறைவாக உள்ள விவசாயிகள் சங்கத்தலைவர்மேல் குற்றம்சாட்டப்பட்டு அவர் தலைக்கு 
ரூபாய் 50,000 விலையும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கொள்கையளவில் மக்கள் நலன் அரசு என சொல்லிக்கொள்ளும் அரசு ஒரு நியாயமான போராட்டத்திற்கு தெரிவிக்கும் எதிர்வினை இதுவா?. அநியாயத்திற்கு எதிராய் அணிதிரண்ட விவசாயிகளை மக்கள் நலத்திட்டம் எனும் பெயரில் அடக்கியொடுக்கும் அரசு நாளை இதே மக்கள் நலன் என்னும் பெயரில் அரசுக்கு எதிராய் யாரேனும் அணிதிரண்டால்! நினைக்கவே பயமாய் இருக்கிறது.

ஆண்களோடு பெண்களும்

  
ஓவியம் M.F.Hussin 
உதவி : Google

தெய்வமாயும், சக்தியாயும், ஆற்றலாயும் போற்றப்படும் பெண்கள், வெறும் காட்சிப்பொம்மையாகவும், அழகு பதுமையாகவும் மட்டுமேவாகவும் பார்க்கப்படுகிறார்க‌ள். இந்த மனோநிலை எல்லா தேசங்களுக்கும் பொருந்துவதாய் உள்ளது. ஆணும் பெண்ணும் சமம் என்பதைகாட்ட அர்தனாரியாய் அவதரித்துக்காட்டினாலும், தூய்மையான உள்ளம் மட்டுமே இறைவனின் ஆலயம் எனக்காட்ட கன்னியின் வயிற்றில் அவதரித்துக்காட்டினாலும் கடவுளை ஏற்றுக்கொண்டவர்களும் அதன் தத்துவத்தை போற்றுபவர்களுமேகூட இக்கருத்தில் விலகியே இருக்கின்றனர். நாகரீகம் வளர்ந்திராத கற்காலத்திலுமேகூட ஆண் பெண் ஆதிக்கம் பேணப்படவிலை. வேட்டைச்சமூகமாய் வாழ்தவர்களுக்குக்கூட தாம் ஒருவரின்றி ஒருவர் வாழ்துவிடமுடியாது என்பதும், இதில் யார் பெரியவர் என்பதில் அர்தமில்லை என்பதும் தெரிந்தே இருந்திருக்கிறது.

ஆனால் நாகரீகவளர்ச்சியின் உச்சத்தில் வாழ்வதாய் மாரடித்துக்கொள்ளும் இன்றைய சமூகம் பேணூவதெல்லாம் பெண்ணடிமைத்தனமும், வன்கொடுமைகளையுமே. இன்றைக்கு பெண்விடுதலை, மாதர் சங்கங்கள் என்பனபற்றி ஆரம்பித்தாலே" அட போங்க சார்.. அதெல்லாம் அந்தக்காலம் இப்பெல்லாம் அந்தவார்த்தைக்கேகூட அவசியமே இல்லை "என்று வாய்கிழிய பேசுபவர்களுமே தங்கள் வீட்டுப் பெண்களை சுதந்திரமாய் இருக்கவிடுவதில்லை. ஒரு பிரபல TV நிகழ்ச்சியில் உங்கள் மனைவி வீட்டில் மேற்கொள்ளும் காரியங்களுக்கு எவ்வளவு சம்பளம் கொடுப்பீர்கள் என்ற்தற்கு 3000 என்கிறார். ஆக அவர்பார்வையில் மனைவி ஒரு ஊழியர் அவ்வளவே. நான் சம்பாசிட்டுவந்து கொடுகறேன் நீ அதுக்கான வேலையை செய்யறே அவ்வளவுதான். ஒரு முதலாளியின் மனநிலை. அந்த நிகழ்ச்சியை பார்க்கையில் மன்ம் மிகவும் வேதனைப்பட்டது.

ஆண்களோடு பெண்களும்
சரிநிகர் சமான‌மாய்
வாழ்வமிந்த நாட்டிலே - பாரதி.

 கனவுகளோடு எழுதிவைத்தாய், கனவாகவே நீடிக்கிறது.


ஆப்பிரகாம்லிங்கனும் நண்பனின் தாடியும்!

அமெரிக்க ஜ‌னாதிபதிகளிலேயே தெளிவுமிக்கவராகவும், துணிவுமிக்கவராகவும் ( பில் கிளின்டன் மோனிகா லெவின்ஸ்கியை மோப்பம் பிடித்த‌ அளவிற்கு துணிவு இல்லையென்றாலும் ) அறியப்படுவர். அவர் ஆட்சியில்தான் அமெரிக்க கறுப்பின மக்களை அடிமைத்தளைகளிலிருந்து விடுவித்தார். மேலும் அவரே ஒரு கறுப்பின சமூகத்தை சேர்ந்தவர்தான் என்பதால் ஆட்சிக்காலத்திலேயே எதிர் கட்சித்தலைவர்களாலும் தன் கட்சியைச்சேர்தவர்களாலுமேகூடகேலியும் கிண்டலும் செய்யப்பட்டார்.  ஆனால் அவர் அதையெல்லாம் பொருட்படுத்தாமல் தன் ஆட்சிக்காலத்தில் சிறப்பாகவே செயல்பட்டார்.

விஷயம் அவர் சிறப்பா செயல்பட்டாறா அல்லது சிரிப்பா செயல்பட்டாறாங்கர பட்டிமன்றம் இல்லை. அவரோட தாடிக்கும் என் நண்பனுக்கும் என்ன சம்பந்தம்?  

பல வருஷங்களுக்கு முன்னாடி....

அப்படியே ஒரு சங்குசக்கரம்விட்டுட்டு Flash Back  போயிடுங்க.

அப்போ நாங்க காலேஜ் படிச்சுகிட்டிருந்தோம். பொதுவா எல்லாருக்கும் விதவிதமா பேன்ட்டு ஸர்ட்டு போடர்துதானே பிடிக்கும் ஆனா என் நண்பனுக்கு விதவிதமா தாடி வளர்க பிடிக்கும் ஆட்டுத்தாடி, குறுந்தாடி, அசோகர்தாடி இப்படி பலதாடி. அதுல ஒன்னுதான் ஆப்பிரகாம் லிங்கன் தாடி. இந்த தாடி அவன் மூஞ்சிக்கி சுத்தமா எடுக்கலன்னு ப்ரெண்ஸ் எல்லாம் கிண்டல்பண்ணாங்க ஆப்பிரகாம்லிங்கனைப்போலவே அவனும் அதையெல்லாம் பொருட்படுதாமல் வீம்புக்காச்சும் வெச்சிகிட்டு சுத்திக்கிட்டிருந்தான்.

இந்த சமயத்துலதான் பாக்கிஸ்தான் அதிபரா இருந்த பெனாசீர் பூட்டோவுக்கு எதிராய் இந்தியாவில் பல எதிர்ப்புக்கள் எழுந்துகொண்டிருந்தன. சென்னையில் பிரபல‌ கட்சியின் MLA  ஒருவர் தலைமையில் அனைத்து கல்லூரிகளிலிருந்தும் பெரும் மாணவர் படையுடன் அண்ணா மேம்பாலம் அருகில் கூடி பெனாசீருக்கு எதிர்ப்பு தெரிவித்துவிட்டு வருவதாய் திட்டம் வகுக்கப்பட்டிருந்தது. அந்த கட்சியின் மாணவர் காங்கரஸ் உறுப்பினரான ஒரு மாண‌வர் கல்லூரியில் தனக்கு இருக்கும் செல்வாக்கை காட்ட பெனாசீர் பூட்டோவுக்கு எதிராய் கோஷம் எழுப்ப கல்லூரிவாசலில் நின்று ஆள்சேர்த்துக்கொண்டிருந்தார் தனிப்பட்ட முறையில் எங்களுக்கும் பெனாசீருக்கும் எந்த விரோதமும், காழ்ப்பும் இல்லைன்னாலும் நண்பர்களுக்காக அந்த வண்டியில தொத்தவேண்டியாதாப்போச்சி.  திட்டமிட்டபடியே பயணம் முழுவதும் பெனாசீருக்கு எதிரான கோஷங்கள் காதைக்கிழித்தன. மேம்பாலம் அடைந்ததும் மேலும் பல கல்லூரி மாணவர்களை கண்ட மகிழ்ச்சியில் கூட்டம் ஆர்பாட்டமாக கலைகட்டியது.  திட்டமிட்டபடி அந்த முயற்ச்சி முழூ வெற்றியடைந்ததில் MLA வுக்கு ரொம்ப சந்தோசம். அவருக்கும் கட்சிக்கு தன் பலத்தைக்காட்ட இது ஒருசந்தர்ப்பம்தானே. கல்லூரிவாரியாக ஆள்சேர்த்து கூட்டிவந்தவர்களை நல்லவிதமாய் கவனித்து அனுப்பினார் ( கவனிக்கப்பட்டுன்னா தலைக்கு இவ்வளவுன்னு பணப்பட்டுவாடான்னு அர்த்தம்.)

சரிப்பா இதுல உன் நண்பனின் தாடிக்கென்ன வேலைன்னு கேக்குறீங்களா? ஆப்ரகாம் லிங்கன் தாடியில பாக்க அவன் முஸ்லீம் மாதிரி இருந்ததால (   எங்களுக்கு தெரியும் அவன் முஸ்லீம் இலிலைன்னு ஆனா மத்தவங்களுக்கு தெரியாதே )ஒரு முஸ்லீமே முஸ்லீமுக்கு எதிராய் கோஷம் போட்ரானேன்னு அங்க வந்தவங்களுக்கெல்லாம் ஒரே ஆச்சரியம். அதுல இன்னொரு ஆச்சரியம் என்னனா MLA கையால தனியாவேற கவனிக்கப்பட்டான்.

இத்தான் சங்கதி வர்ர்ர்ட்ட்டா... 


Saturday, January 12, 2013

ஜல்லிக்கட்டு - சில்லி டாக்கு

கடந்த சில வருஷமா பொங்கல் பண்டிகை வருகிறதோ இல்லையோ,  ஜல்லிக்கட்டு வேண்டுமா? வேண்டாமா? நடக்கலாமா? கூடாதா? இது தமிழர்களின் கலாச்சாரமா? மிருகங்கள்மேல் காட்டும் வன்முறையா? ( ஸ்..ப்பா எத்தனை கேள்வி. ) என ஜல்லியடிக்கர்தே வேளையாப்போச்சு.  ஜல்லிகட்டு நடத்துவதற்கும் நடத்தக்கூடாததற்கும் பல காரணங்கள் இருக்கு உண்மைதான். ஜல்லிக்கட்டை ஆதரிப்பவர்கள் அதை தங்களளோட‌ கலாச்சாரத்தோடும், வீரத்தோடும், விளையாட்டோடும் சம்மந்தப்படுத்திப் பார்க்கிறாங்க. எதிர்ப்பவர்கள் அதை வன்முறையோடும் மிருகங்கள்மேல் காட்டும் காட்டுமிராண்டித்தனத்தோடும் சம்மந்தப்படுத்தி வாதாடுறாங்க.

கால்நடைகளை துன்புறுத்தக்கூடாதுங்றதுல யாருக்கும் மாற்றுகருத்து கிடையாது. ஆனால் இதை தமிழர்கள் வீரத்தோடும் கலாச்சாரத்தோடும் சம்மந்தப்படுத்தும்போது அவர்களின் வாதத்தில் வலுசேர்கிறது. ஜல்லிக்கட்டில் காளையை அடக்குறவனுக்குத்தான் என் பெண்ன கொடுப்பேன்னு சொன்னவங்களெல்லாம் தமிழ்ச்சமூகத்தில் இருந்திருக்காங்க அதை மறுக்கமுடியாது. 

மழை நாட்களில் சாலையில் தேங்கி நிற்கும் தண்ணீர் குட்டைகளை காலில் சேறு படாமல் லாவகமாய் தாண்டிச்செல்வதும், தாண்டிச்செல்ல முயற்சிப்பதும் பெரிய சாகசம்தான். அப்படி சில நேரங்களில் தாண்டிபோய்ட்டால் ஏற்படக்கூடிய மகிழ்ச்சியும், பெருமிதமும் வார்த்தைகளில் சொல்லிவிடமுடியாது. ஜல்லிக்கட்டு கூடாது என கோஷம் எழுப்பும் மேட்டுக்குடிக்கு மகிழ்ச்சி, சந்தோஷம், திருப்தி என எல்லாமே பணம் சார்ந்தும், தன் வாழ்க்கைநிலையும் அதன் உயர்வும் மட்டுமே சார்ந்த விஷயங்கள்தான். இவர்கள் குட்டையை எதுக்கு தாண்டணும் அதானால யாருக்காச்சும் லாபமிருக்கா, ஒருவேளை கையை காலை உடைஞ்சிட்டான்னு யோசிச்சிகிட்டே ஓரமா போய்டுவாங்க இல்லைனா சேத்தை மிதிச்சிட்டே போய்டுவாங்க. ஆனா ஆனால் மகிழ்ச்சியை உணர்வுகளோடு தொடர்புபடுத்தி பார்ப்பவர்கள் கீழ விழுத்துட்டாலும் சிரிச்சுகிட்டே போய்டுவாங்க‌. இதுக்கே இபடின்னா திமிரிகிட்டுவர காளையை அதன் செதிலை பிடிச்சுகிட்டு அதோட‌வேகத்துலயே ஓடி சில நேரத்துல இடறி அது கால்லயே விழுந்து அடிபட்டு யப்பா.. என்ன திரில்லிங். காளையை அடக்கறானோ இல்லையோ அடுத்த ஜல்லிக்கட்டுவரைக்கும் அந்த சம்பவம் பேசப்படும். அவன் ஊருல அவந்தான் நாயகன். அவன் காயங்கள் போற்றப்படும்.  இதுதாய்யா எங்க மகிழ்ச்சி. சச்சின் 100 அடிச்சா வீட்டுக்குள்ளேயே துள்ளி குதிக்கிறீங்களே அதுல உங்க பங்கு என்ன? நாங்க அப்படியில்ல நேரடியாய் களத்துல நிற்போம், கூட நாலுபேரும் நிப்பாங்க அதுதான் வீரம், அதுதான் விளையாட்டு...

இந்தவருடமும் நீதிமன்றத்தின் 72 நிபந்தனைகளோடு ஜல்லிக்கட்டு நடத்தப்படும் என தெரிகிறது, மகிழ்ச்சி.

Friday, January 11, 2013

புது(ஊ)மைப்பெண்


புனிதங்களை
போற்றிக்காக்கும் பொருட்டு
புரையோடிப்போன பழமைகளை
மூடிமறைத்தும்
முழுதாய் ஏற்றும்
சிலநேரங்களில் சுகமாயும்
பல நேரங்களில் சுமையாயும்
சுமக்கத்தான் செய்கிறேன் - கணவனை
கட்டிலில்.

கோபங்கள், வக்கிரங்கள்
அலட்டல்கள், ஆளுமைகள்
அனைத்தும் அவன்புற‌மிருக்க‌
என்னுடைய‌தான ஒருபக்கத்தை
ஏற்கவே ஆளிள்லா
பாழ்வெளி விசாரணையில்
தீர்ப்பு மட்டும் எப்போதும்
எனக்கெதிராய்.

பொங்கி எழுந்து
புதுவேகம்கொண்டால்
புனிதங்களை காக்கும்
பொருப்பாளி ஆக்கப்பட்டு
கூண்டுக்குள் அடைக்கப்படுகிறேன்.

Thursday, January 10, 2013

நாளைய‌ சூப்பர் ஸ்டார் ! யார்?


சூப்பர் ஸ்டார் யாருன்னுகேடா சின்ன குழந்தையும் சொல்லும், கரெக்ட்டுதான் யார் இலைன்னா. இன்னிக்கும் சின்னகுழந்தகளை சினிமா நடிகர்கள்தான் அதிகம் கவர்ந்திருக்கிறார்கள். அப்போ அவரை தெரிந்திருந்தது இப்போது இளைய தளபதி யாரென்றும், தல யாரென்றும்கூட குழந்தைகளுக்கு தெரிந்துதான் இருக்கிறது.  காலுக்கு ஒன்றாய் ஜீப்பை கட்டி இழுப்பதும் இரண்டு கைகளாலும் கையொப்பமிடுவதும் என பலசாகசங்களை செய்துகாட்டக்கூடியவர்கள்தான் நம் கதாநாயகர்கள், அந்த சாகசங்களால் கவரப்படுகின்றனர் குழந்தைகள். ஆனால் அதெல்லாம் திரையில்மட்டுமே என்பதை குழந்தகளுக்கு யார் சொல்வது? சொல்லவேண்டிய கடமையுள்ள ஊடகங்களும், அதை அப்படியே சுவிகரித்துக்கொள்ளும் சமூகமும் மேலும் மேலும் ஊக்கப்படுத்தவே உதவுகின்றன. 

உண்மையில் சூப்பர் ஸ்டார் என்பவர்கள், தன் திறமையையும் அதனால் சமுதாயத்தில் தனக்கு கிடைத்த மதிப்பையும், அங்கிகாரத்தையும் நல்ல வாய்ப்பாக நினைத்து அதை சரியான முறையிலும், ஆக்கப்பூர்வமான வழிகளிலும் பயன்படுத்தி ஒரு ஆரோக்கியமான சமூகத்திற்கு வழிகாட்டியாய் (வழிகாட்டியாய் இல்லாவிட்டாலும் தன்னளவிலேனும் வாழ்ந்துகாட்டவேண்டும் ) இருக்கவேண்டும்.

1893 செப்டம்பர்மாதம் அமெரிக்காவில் உள்ள சிகாகோவில் நடந்த உலக ஆன்மீக மாநாட்டில் இந்து மதத்தின் பிரதிநிதியாகக் கலந்து கொண்டு விவேகானந்தர் ஆற்றிய உரை உலகப்புகழ் பெற்றது. ஆனால் அந்தவாய்ப்பு அவருக்கு நேரடியாய் வாய்த்ததல்ல. இராமநாதபுரம் மன்னர் பாஸ்கர சேதுபதிக்குதான் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. ஆனால் மன்னர் பாஸ்கர சேதுபதி விவேகானந்தரிடம் உள்ள அறிவாற்றலின்மீதும், ஆன்மீகச் சிந்தனையின்மீதும், அகன்ற பார்வையின்மீதும் , ஞானத்தின்மீதும் வைத்திருந்த மதிப்பும் நம்பிக்கையும்தான் அந்த வாய்ப்பை விவேகானந்தருக்கு அளிக்கவைத்தது.

விவேகானந்தர் அந்த வாய்ப்பை மிகச்சரியாக பயன்படுத்தினார் ( பயன்படுத்திக்கொண்டார் என்று சொல்லக்கூடாது ) அந்த மாநாட்டில் அவர்  "இந்திய மண்ணில் ஒன்றன் பின் ஒன்றாக எத்தனையோ கிளைமதங்கள் உண்டாயின.வேத நெறியின் அடித்தளத்தையே அவை உலுக்கிவிடும் போலத் தோன்றியது. ஆனால், பயங்கரமான நில நடுக்கம் ஏற்பட்டால், எப்படிக் கடலானது சிறிது நேரம் பின்னோக்கிச் சென்று, பின்னர் ஆயிரம் மடங்கு சீற்றத்துடன் பெருகி வந்து அனைத்தையும் வளைத்துக் கொள்கிறதோ, அது போல, எல்லா கிளை மதங்களும் ஆரம்ப ஆரவாரம் ஓய்ந்ததும் மிகப்பெரியதான தாய்மதத்தால் கவர்ந்து இழுக்கப்பட்டு, அதனுள் இரண்டறக் கலந்து விட்டன." என இந்துமதத்தின் பலம் பற்றி எடுத்துச்சொன்னவிதம் அனைவரையும் கவர்ந்தது. அதேசமயம் அவர் இந்துத்துவதின் கொடியை உயர்த்திப்பிடிக்கவும் இல்லை.

மதங்களுக்குள்ளான பேதங்களுக்கு காரணமாய் அவர் சொன்ன கிணற்றுத்தவளை கதை நாம் அறிந்ததுதான். அக்கதையையி முடிவில் "நான் இந்து என்னும் சிறிய கிணற்றிற்குள் இருந்து கொண்டு என் சிறு கிணறு தான் முழுவுலகம் என்று நினைக்கிறேன். கிறிஸ்தவன் தனது மதமாகிய சிறு கிணற்றிற்குள் அமர்ந்து கொண்டு, தன் கிணறுதான் முழுவுலகம் என்று நினைக்கிறான் அவ்வாறே முகம்மதியனும் தன் சிறு கிணற்றில் உட்கார்ந்து கொண்டு, அது தான் முழுவுலகம் என்று நினைக்கிறான்" தன் மதத்தைமட்டுமே உயர்த்திப்பிடிப்பவன் இந்துவாகவோ வேறு யாராகவோ இருந்தாலும் அவன்கிணற்றுத்தவளையே என உறுதியோடும் நடுநிலையோடும் எடுத்துச்சொன்னார்.

இந்த உறுதியும் துணிவும் எந்த நாய‌கர்களிடமாவது காண‌முடிகிறதா?  எத்தனையோ ஆண்டுகளாய் எவ்வளவோ பிரச்சனைகளை சமாளித்துக்கொண்டு தான் வாங்கும் எல்லா பொருளுக்கும் நேரடியாகவும் மறைமுகமாகவும் அரசுக்கு வரி செலுத்திக்கொண்டிருக்கும் ஏழை பாட்டாளி மக்களுக்கு ஆதரவாய் ஏதேனும் ஒரு வரியை அரசு குறைக்கவேண்டும் என்று இதுவரை எந்த நாய‌கராவது குரல் கொடுத்திருக்கிறாரா? குறந்தபட்சம் தன் படங்களை பார்கவருபவர்களுக்காவது கேளிக்கை வரியை விலக்கக்கோரியிருப்பார்களா? தன் வருமானத்தில் கைவைத்தவுடன் பொங்கி எழுந்துவிடுகிறார்களே?  இவர்கள்தான் இன்றைய மற்றும் நாளைய‌ சூப்பர் ஸ்டார்கள்.  


12B பஸ்டாப் ஆழ்வார்பேட்டை


இங்கேதான் முதல் முதலாய்
பரிமாரிக்கொண்டோம்
பார்வைகளை,
பின்னொரு நாளில்
புன்னகையையும்,
அடுத்தடுத்து
பூக்களையும்,
பொத்திவைத்திருந்த‌
காதலையும்.

வந்துவிடக்கூடாதென்ற‌
வேண்டுதலோடே
காத்திருப்போம் - வரவேண்டிய
பேருந்திற்காய்.

இடைப்பட்ட நேரத்தில்
கதைகள் பேசுவோம்,
கலைகள் ஆய்வோம்,

காலம்வென்ற
காப்பியங்களின்
காதல் வியப்போம்,

பேசித்தீர்த்த
பொழுதுகளின் நினைவாய்
கவிதை கிறுக்குவோம்,

கடும் வெயிலோ
காற்ற‌ழுத்த தாழ்வுநிலையால்
பெரும் மழையோ
உன் வருகைக்காய்
என் காத்திருப்பும்,
என் காத்திருப்புக்காய்
உன் வருகையும்
தவறியதேயில்லை.

இன்றும் மழைதான்....

கணவனோடு வருவதாய்
கடிதம் எழுதியிருந்தபடியால்
காத்திருக்கிறேன் மனைவியோடு.


Wednesday, January 9, 2013

அலெக்சாண்டரின் குதிரையும், அப்பாவின் சைக்கிளும்


சைக்கிள்!
வார்த்தையாய் சொல்கையில் வசியம் குறைவுதான், என்றாலும் எனக்கும் சைக்கிளுக்குமான உறவு மாவீரன் அலக்சாண்டருக்கும் அவன் குதிரை ( பெஸிபலஸ்) ( BUCEPHALUS )க்குமான உறவைக்காட்டிலும் ஆழமானது. எட்டு வயதில் அப்போதய என் உயரத்தின் அடிப்படையில் அப்பாவின் ஆளுயர ஹெர்குலஸ் சைக்கிள் ஒரு முரட்டு குதிரையாய்த்தான் என்னை மிரட்டியது. தொட்டுப்பார்க்கவே பயமாய் இருக்கும்.

என்றாலும் அப்பாவின் விடுமுறை நாட்களில் வாசலில் வைத்து சைக்கிளை கழுவதும், வேலைக்குச்செல்லும் நாட்களில் Handlebar, Bell, Seat என ஒவ்வொன்றையும் தூசிதட்டி வாசலுக்கு எடுத்துவருவதுமாயும் சைக்கிளுடனான என் பரிச்சயம் படிப்படியாய் பக்குவப்பட்டுக்கொண்டிருந்தது. மாடு மேய்ப்பவனுக்கு பால் கறந்துபார்க்கவேண்டும் என்ற ஆசை எத்தனை இயல்பானதோ சைக்கிள் ஓட்டிப்பார்க்கவேண்டும் என்ற ஆசை எனக்குள் அத்தனை இயல்பாய் எழுந்தது.

அதிகநாளாய் அடைகாக்கப்பட்ட ஆசை அரைபெடல் வடிவாய் குஞ்சுபொரித்தது. முதல்நாள் முட்டியில் பலத்த காயம். என்னோடு சேர்ந்து அப்பாவும் அலுவலகத்திற்கு லீவு போடவேண்டியாதாகியது( சைக்கிள் வீல் பெண்டுல்ல?). மறுநாளுக்கு ம்றுநாள் ஞாயிற்றுக்கிழமை, காலில் காயம் பொக்குகண்டிருந்தாலும் ஆர்வம் அதை அலட்சியம் செய்தது. சைக்கிளோடு நான் வாசலுக்கு இறங்க, லுங்கியோடு அப்பாவும் இறங்கினார். அதன்பின் வந்த சில ஞாயிற்றுக்கிழமைகளிலும் விடுமுறை நாட்க‌ளிலுமாய் சைக்கிளோடு கொண்டாடிய உறவால் அது தன் திறனையும், சூட்சுமத்தையும் ஒவ்வொன்றாய் என்னிடம் ஒப்படைக்கத்தொடங்கி முடிவாய் அது தன்னையே என்னிடம் ஒப்படைத்து ஒரு குழ்ந்தையைப்போல் என்னுடன் ஒட்டிக்கொண்டது. இடைப்பட்ட காலங்களில் சில காயங்களும், வலிகளும் தவிர்கமுடியவிலைதான். என்றாலும் பழகிவிட்டோம் என்ற ஆனந்தம் அதை மறக்கச்செய்துவிட்டது. ( முதல் காயத்தின் தழும்புமட்டும் மறையவிலை ) .

15 வயதில் முதல் சைக்கிள். மனம் லயித்ததென்னவோ அப்பாவின் முரட்டு குதிரையின்மேல்தான். தினமும் ஏதாவது காரணம்காட்டி புதியதை அப்பாவிடம் கொடுத்துவிட்டு முரடனை ஓட்டிச்செல்வது வாடிக்கையாகிவிட்டது. என்றாலும் இது அப்பாவினுடையதுதானே என்னும் விலகல் இருந்தது. புதியதை தவிர்த்து பழையதையே உபயோகிப்பதால் அசடன் என்று  ( கைகொட்டி ) சிரித்தார்கள். அப்பா மட்டும் புரிந்துகொண்டார். இனி இதுதான் உன் சைக்கிள் என்று ஹெர்குலஸை விட்டுக்கொடுத்தார். முதல் முறையாய் முழு சுதந்திரத்துடன் சைக்கிள் ஏறினேன்.

அதன்பின் வாழ்வில் எத்தனையோ மாற்ற‌ங்கள், ஏற்றங்கள், இறக்கங்கள். அப்பாவின் மரணம், அம்மாவின் உடல்நலக்குறைவு, என் திருமணம், மனைவின் சீமந்தம், மகப்பேறு, மருத்துவமனை என ஒவ்வொன்றிலும் உற்ற துணையாய், உயிர் தோழனாய் என்னுடன் இருந்தது இந்த சைக்கிள்தான். எப்போது தொடங்கியது என் வழுக்கையும், தொப்பையும் என்பதை அறியமுடியாததுபோல் கவனித்துக்கொண்டிருக்கும்போதே என்னோடு சேர்ந்து என் சைகிளும் பழசாகிப்போனது .


"இடத்தை அடக்குது, ஒன்னு யாருக்காச்சும் கொடுத்துடுங்க இல்லை எடைக்காவது போடுங்க" என்மனைவியின் கட்டளை எனக்குத்தான் இரண்டிற்குமே மனம் வரவில்லை.
படம்: google ஆண்டவர்

Tuesday, January 8, 2013

கதவு...


நீதியின்பால்
நம்பிக்கைகளை
பழுதாக்கிக்கொண்டிருப்பது
நீதிமன்ற கதவு...

நம்பிக்கைகளுக்கெதிராய்
சாத்தான்களால் ஓதப்படும்
வேதம் -
காவல்நிலைய கதவு...

நிகழக்கூடாதவைகள் எதுவும்
நிகழ்த்துவிடக்கூடிய
சாத்தியங்களை கொண்டிருக்கிறது
மூடிய கதவு....

விடுதலையின் வெளிப்பாடாய்
விரிந்துகிடக்கிறது -
திற‌ந்திருக்கும் கதவு...


நிராகரிப்பை வழிமொழியும்
விசுவாசி -
முகத்தில் அரைந்து
சாத்தப்படும் கதவு...


ரகசியத்தின் வீடு
மனம்
வீட்டின் ரகசியம்
கதவு...

ஒவ்வொரு கதவும்
அடைகாக்கின்றது
பல புழுக்கங்களை
ஒவ்வொரு வீடும்
அடைகாக்கின்றது
பல கதவுகளை...

வீடும் கதவும்
விலக்கியே வைத்திருக்கிறது
நம்மை நம்மிடமிருந்தே!

தகர்த்தெறியும்
பிரயத்தனத்தில்
தகர்ந்துகொண்டிருக்கிறது
பிரய‌த்தன‌ங்களின்
கதவு...
படம் google
Monday, January 7, 2013

கண்ணாடி.
1.
முட்டி மோதி ,
முழுதாய் நின்று
எட்டிப்பார்கையில்
முகமில்லை
கண்ணாடியில் - தெரிவது
இழப்பின் சோர்வில்,
வலியின் வெறுப்பில்,
காழ்ப்பின் துரோகத்தில்
தீட்டப்பட்ட வண்ணங்களின்
குறுட்டு ஓவியம்.


2.
பார்க்கும்போது
முகம்காட்டும்
கண்ணாடிகள்
பார்க்காதபோதுகளிலும்
பிரதிபலித்துக்கொண்டுதான்
இருக்கின்றன
நாம் பார்க்காத
ஏதோஒன்றை.

3.
முகம்காட்டும்
கண்ணாடிகள் -  நம்
முகம்மட்டும்
காட்டுவதில்லை - தன்
முகத்தையும்
பார்த்துக்கொள்கிறது.

4.
சிரிப்பை
அழுகையை
சோர்வை
வெறுப்பை என‌
எதிர்படுவோரிடமெல்லாம்
ஏதோ ஒன்றை காட்டிவிடுகிறது
கண்ணாடி,
அவரவர் எண்ணம்போல்...


மெட்டி ஒலி காற்றோடு...


இளையராஜா இசையமைத்து பாடிய பாடல்களில் "மெட்டி ஒலி காற்றோடு என் நெஞ்சை தாலாட்ட...." என்ற‌ பாட‌ல் கேட்கின்ற ஒவ்வொருவரையும் தாலாட்டும் என்றே சொல்லலாம். இந்த பாடலை முதல் முறையாய் ஆடியோவில் கேட்டு மயங்கிய போது வயது விடலையில் இருந்தது. நம்புவீர்களோ இல்லையோ கிட்டத்தட்ட நான் கற்பனையில் அலைந்த எல்லா இடங்களையும் அந்தபாடலில் காண‌முடிந்தது. என் கற்பனை என்னை ஏமாற்றியது அந்தபாடலில் குரலைத்தவிர வேருஎங்குமே ஆண்வாடையே இல்லை என்பதில்தான்.  ஏனென்றால் பாடலின் ஒவ்வொருவரியும் காதலன் காதலியைப்பற்றி புகழ்ந்தும் வர்ணித்தும் பாடுவதாய் எண்ணி நானும் என் அந்தவயது காதலியை நினைத்து கற்பனையில் அவளோடு பாடித்திரிந்திருந்தேன். ஆனால் பாடல் காட்சியில் 3 பெண்களின் உறவையும், நட்பையும் அவர்களின் அன்யோன்யத்தையும் மிக அழகாய் காட்சிப்படுத்தி அசத்தியிருந்தார்கள்.

THINK OUT OF THE BOX  என்பார்களே அதற்கு இப்பாடல் ஒரு உதரணம். பொதுவாய் சிட்டுக்குருவி, பாண்டியாட்டம், மாங்காய் திருட்டு இப்படியான பெண்களுக்குள்ளான உறவைச்சொல்ல உபயோகப்படுத்தும் வார்தகளில் சலித்துபோன‌ இயக்குனர் ஒரு காதல் பாடலை 3 பெண்களுக்கிடையிலான உறவிற்கு பயன்படுத்தியிருப்பதாலேயே இது அசாதாரணமான பாடலாக அமைந்திருக்கிறது.

இப்படியான மேலும் சில பாடல்கள் தொடரும்....


Sunday, January 6, 2013

தவி(ர்)க்கிறேன்நம் பிரிவை அறியாதவர்கள்
விசாரிகிறார்கள் - உன்னைப்பற்றியும்,
தகவல் ஏதும் தெரியாதென்பதால்
தவிர்த்துவருகிறேன்
அவர்கள் சந்திப்பை.

என்னை பற்றி விசாரிப்பவர்களிடம்
என்ன சொல்லி
சமாளிக்கிறாய் - நீ.


Saturday, January 5, 2013

நிர்பந்தத்தின் முகம்.
சார் நாங்க ரிலைன்ஸ்லேந்து பேசறோம்..........

sir we r calling from HDFC ...........

ஃப்ரன்ட் லைன் டெலி மார்கட்டிங்லேந்து கால்பண்ரோம் சார்.........

என
அலைபேசியில்
கேட்க நேரும்
எல்லா குரல்களுக்குப்பின்னும்
ஒளிந்திருப்பது
ஒரே முகம்தான்---
நிர்பந்தத்தின்
கோரமுகம்.Thursday, January 3, 2013

பறவையின் தாகம்ஆயிரம் மைல்
கடந்துவந்த பறவை
தேடியலைந்தது
சென்றமுறை இளைப்பாறிய‌
நீர்நிலையை,

புதிதாய் முளைத்த‌
கட்டிடங்களுக்கடியில்
புதைந்துகிடக்கிறது
பறவையின் தாகம்.

Tuesday, January 1, 2013

ஓ(க)வி(தை)யம்


சுவரெல்லாம் சித்திரம்
ஒவ்வொன்றும் விசித்திரம்!

கட்ட‌மும், வட்டமும்
மட்டுமேயென்றாலும்
தொடக்கமும் முடிவும்
அவரவர் விருப்பம்!

பூத்தொட்டிக்குள் முளைத்த‌
பூனை,
மீன்தொட்டிக்குள் நீந்தும்
காகம்
என அபத்தம் பலவும்
அழகாய்!

தவறாய் தோன்றும் எதுவும்
தலைகீழாய் பார்க்கையில்
நேர்த்தியாய்!
வேரும் கிளையும்
ஒரேபோல்!

இடையிடையே
எட்டிப்பார்க்கும் நட்சத்திரம்
கண்சிமிட்டும் பகலிலும்.!


Apple லும், Ball லும்
கோணங்கள் மாறியிருந்தாலும்
அழகும், சுவையும்
அப்படியே!

"அ" வும் "ஆ" வும் முன்னதைக்காட்டிலும் 
வடிவம் மாறியுள்ளது நேர்த்தியாய்
வகுப்பும்தான் 
UKG to I std.நீங்கள் இதையும் விரும்பக்கூடும்