Sunday, February 27, 2011

ஒ(இ)ருவிபத்து

அது குறுக்கே பாய்ந்தகணம்
வசமிழந்தது என் வாகனம்,

மோதிய மறுகணம்
வெவ்வேறு கோணங்களில்
சிதறிய செல்போனும்,
சில்லரையும்
தரை தொட்டது
ஒரே கணம்.

தோளுக்குள் கை நுழைத்து
தூக்கியவர்மேல்
டாஸ்மார்க் வாசம்,

"பாத்துவரக்கூடாது?"
வண்டிதூக்க வந்தவர்.

"இவரு கரிட்டாத்தான் வந்தாப்பல‌
மாடுதான் குறுக்க பூந்திச்சி"
எதிர் குரல்.

"இதுங்க ரோதனை தாங்கலை"
தூரத்தில் யாரோ.

நாலு தையல்,
இரண்டு ஊசி,
காலில் கட்டு,
கையில் பிரிஸ்கிரிப்ஷன்
எல்லாம் முடிந்து
வெளியேவந்தால்...

காலுக்குள் வால் நுழைத்து
தாங்கித் தாங்கி கடந்தது
நாய் ஒன்று எனைப்போலவே.

"ஏத்திட்டு போய்கினே இருக்கானுங்க
பாவிங்க‌"
அனுதாபப்பட்டாள் கிழவி.

நான் மோதிய மாடு என்னவானதோ.

Friday, February 25, 2011

நாங்கள்


நீள அகலங்களால் நிர்ணயிக்கப்பட்ட
கண்ணாடி கடலுக்குள்
நீந்த அனுமத்திருக்கிறோம்
மீன்களை,

சன்னல் வழி நுழைந்து
கதவுவழி வெளியேறும்
சிட்டுக்குருவிக்கு
நெல்லும் தண்ணீரும்
வைத்திருக்கிறோம்,

மீன்குழம்பு உண்கையில்
முள்ளோடு கொஞ்சம்
சோறும்தந்துதிருக்கிறோம்
பூனைக்கு,

தெருவில் அலைந்துகொண்டிருந்த
நாய் குட்டிகளில் அழகாய் இருந்த
ஆண்குட்டியை வளர்த்திருக்கிறோம்
மரத்தடியில் கோணிபோட்டு,

பிர்ட்ஜிற்குள் தேங்கிக்கிடக்கும்
பழையதில் பழை..யதை
கழுநீரோடு கலந்து
கொடுத்திருக்கிறோம்
வாசலில் வந்துநிற்கும்
பசுவிற்கு,

அம்மாவாசை தவறாமல்
அன்னம் வைத்திருக்கிறோம்
காக்கைக்கு,

இப்படியும்,
இன்னும் சிலவாயும்
எங்கள் ஜீவகாருண்யம்.

Thursday, February 24, 2011

ஒரு கவிதையை...


அழைப்புமணியை அழுத்திய விதமும்
அவிழ்த்தெறிந்த காலணிகள்
வீழ்ந்துகிடக்கும் கோலமும்
அறிவித்துவிட்டன
உன் கோபத்தை.

வீசியெறிந்த கைப்பைவழியே
சிதறிக்கிடக்கும் சில்லரையோடு
கிழிந்துகிடக்கும் மாத்திரை பட்டையும்
தெரிவித்துவிட்டன
உன் சோர்வை.

தவிற்கமுடியாத
சில நாட்கள் இப்படியும்
எஞ்சியதில் பாதியை
எரிச்சலோடும் கழித்ததுபோக‌

ஓய்வாய்,அமைதியாய்
இருக்க இயலும்
என்றாவது ஒருநாள்
முயற்சித்துப்பாரேன்
ஒரு கவிதையை
எழுதவோ, வாசிக்கவோ.

Thursday, February 17, 2011

இருளின் நீட்சி


நேற்று...

எரியும் மெழுகின்
அலையும் ஒளியில்
ஆடிய நிழல்கள்
பேசிக்கொண்டன‌
ஒளியின் புகழை.

சுடரின் அடியில்
நிலவும் நிழலில்
விட்டில்க‌ளின் பிணங்கள்,

தூண்டியதற்கு தண்டணையாய்
தன்னையே கரைத்துக்கொண்டது
மெழுகு.

இன்று...

கரைந்த மெழுகின்
கண்ணீர்த்துளிகள்
உறைந்துகிடக்கிறது
தரையெங்கும்,

அணைந்த மெழுகின்
கரிந்த திரியில்
படிந்துகிடக்கிறது
நேற்றின் இருள்.

ஏற்றியதற்கு
தண்டணையாய்
தலைகுனிந்துகிடக்கிறது
தீக்குச்சி.

Monday, February 14, 2011

இறகு


எங்கோ பறந்து
எப்போதோ உதிர்ந்த
பறவையின் இறகொன்றை
கொண்டுசேர்த்தது காற்று
என் கையில்,

பறவையின் அழகிற்கு
பட்டயம் கூறியது
இறகின் வண்ணம்,

எறிந்துவிட மனமின்றி
எடுத்துவந்தேன் வீடுவரை.

"அப்பா.. அப்பா..
நம்மவீட்டு புறா
காணாம போச்சுபா"
கால்களை கட்டிக்கொண்டு
அழுதாள் 6 வயது மகள்,

தொலைந்துபோன
பறவையின் மிச்சமாய்
எடுத்துநீட்டினேன்
இறகை.

Sunday, February 13, 2011

எதுவுமாகவும்அதற்குள் எதையாவது வைக்கலாம்,
அதை எதிலாவ‌து வைக்கலாம்,
சோப்பு போட்டு குளிப்பாட்டலாம்,
நூல்கட்டி தொங்க‌விடலாம்,
க‌ல‌ர் அடிக்க‌லாம்,
car ஓட்டலாம்,
தரையில் நிற்கவைத்து TV பார்க்க‌லாம்,
த‌ண்ணீர் வாளிக்குள்
க‌ப்ப‌ல் விடலாம்,
யாராவது கேட்டால்
த‌ர‌ ம‌றுக்க‌லாம்,
த‌ங்கைக்கு மட்டும் கொடுக்க‌லாம்,
எங்காவ‌து தொலைத்துவிட்டு அழ‌லாம்,
இன்னும் என்ன‌வெல்லாமோ செய்ய‌லாம்
நாம் வேண்டாமென வீசியெறிந்த எதையும்
குழந்தைகள்.

Saturday, February 12, 2011

போதி


அது அறிந்திருக்கவில்லை
தான்தான் அது என்று,
நாங்களும் அறிந்திருக்கவில்லை
அதுதான் அது என்று,
அவனும் அறிந்திருக்கமாட்டான்
தான்தான் அவன் ஆவோமென்று
மன்னனாய் அமர்ந்தவன்
மகானாய் எழுந்த நாள்வரை
ஈரத்துணிகளை உலர்த்தவும்,
காய்ந்த சுள்ளிகளை
அள்ளிச்செல்லவும் மட்டுமே
வந்துபோன சிலரைத்தவிர‌
தனிமையில்தான்
அலைந்துகொண்டிருந்தது
அதன் நிழல்.

Thursday, February 10, 2011

ஒரு காட்சி கதை சொல்கிறது


500 எபிசோடுகள் இழுக்கக் கூடிய சீரியலின் கதையை 1 காட்சியில் சொல்ல முயற்சித்திருக்கிறேன்.


அருண் நீ பண்றது தப்புன்னோ ரைட்டுன்னோ நான் சொல்லமாட்டேன். ஏற்கனவே ஒருத்தனை காதலிச்சு அவன் மூலமா கர்பமான என்னை நீ லவ் பண்றேன்னு சொல்றது சரியா தப்பா எனக்குத் தெரியலை. ஆனா நடைமுறைக்கு ஒத்துவருமாங்கற‌துதான் முக்கியம். நீ பலமுறை சொல்லியிருக்க "எங்கவீட்டப் பொருத்தவரை  மனுஷங்களோட மனசுதான் முக்கியம் அவங்க வரலாறு கிடையாது"ன்னு, ஆனா வரலாறு தன் குடும்பத்தையோ, குடும்பத்தோட IMAGEஐ யோ பாதிக்கும்போதுதான் மனசுக்கு எந்த அளவுக்கு முக்கியத்துவம் கொடுப்பாங்க‌ன்றது தெரியும். நீ என்னை லவ் பண்றது உங்க வீட்டுல தெரிஞ்சா உங்க அக்கா பசங்க‌ வேணும்னா "ஆண்டி ஆண்டி"ன்னு பழையபடியே அன்பா இருக்கலாம் ஆனா "அம்மா.. பிரியா"ன்னு அன்பா கூப்பிடற உங்க அம்மா "ஏண்டி புள்ளத்தாச்சியா இருக்கியே பாவம்னு வீட்டுல பாதுகாப்பு கொடுத்தா ஏம்புள்ளயவே வளைச்சுப்போடப்பாக்க‌றயா? இந்த சாமர்த்தியத்தை உன்னை கலைச்சுட்டு போனானே அவன்கிட்ட காட்டவேண்டியதுதானெ?"னு வாய்க்குவந்தபடி திட்டத்தொடங்கிடுவாங்க.

OK எங்கம்மா அப்படிப்பட்டவங்க இல்லைன்னு நீ சொல்லலாம் அது உண்மையாவும் இருக்கலாம் but அவங்க உள்மனசுல நம்ம புள்ள வாழ்க்கை இப்படி ஆய்டிச்சேங்கற வேதனை கண்டிப்பா இருக்கும். உங்க மாமா பொண்னு மேலோட்டமா உன்னை திட்டிகிட்டும், கிண்டல் பண்ணிகிட்டும் இருந்தாலும் அவ உள்மனசுல உன்னை நினைச்சு உருகிட்டு இருக்கலாமில்லையா? சீ..சீ அவ சின்னபொண்னுன்னு நீ சொல்லலாம், ஆனா அவ சின்ன பொண்ணில்லை அருண் உங்க family ஆல்பத்தை பாக்கும்போதெல்லாம் அவ உன் போட்டோவைத்தான் உத்து உத்து பாக்கறா. அது உனக்கு எப்படி வேணும்னாலும் இருக்கலாம் ஆனா என்னைப்பொருத்தவரைக்கும் அவ உன்னை love பண்றான்னுதான் தோணுது. இது அதீத கற்பனையாக்கூட இருக்கலாம் but அது நிஜ‌மா இருந்தால் இதுவரை அன்பா "பிரியாக்கா.. பிரியாக்கா"ன்னு கூப்பிட்டவ அடியே ப்ரியா எனக்கே வேட்டுவெச்சிட்டியான்னு என் முடியைபுடிச்சு உலுக்கலாம். எல்லாத்துக்கும்மேல‌ உங்க அப்பா, "உன்னை எம் பொண்ணுமாதிரி நினைச்சேனே நீயே இப்படிப் பண்ணிட்டியே"னு கேக்கமாட்டார் அதைவிட sharp ஆ ஒரு பார்வை பார்ப்பாரே அந்த பார்வையிலேயே ஆயிரம் கேள்வி இருக்கும் அதுக்கு நான் என்ன பதில் சொல்வேன் சொல்லு அருண். 

அப்போ உனக்கு என்மேல கொஞ்சமும் இஷ்டமில்லையா?ன்னு நீ கேக்கநினைப்பது புரியுது. இஷ்டபடுவதற்கும், இஷ்டபடாததற்கும் வேண்டிய தகுதி என்கிட்ட இல்லை அருண். eligibility பத்தி பேச இது என்ன vacancy யா? வாழ்க்கை அதானே சொல்லப்போற வேண்டாம் விட்டுடு. நீ என்னை காதலிப்பதாலோ, கல்யாணம் பண்ணிக்கற்தாலையோ எனக்கு ஒரு புருஷன்  கிடக்கலாம், என் குழந்தைக்கு ஒரு அப்பாக்கூட கிடைகலாம் but அப்படி ஏதாவது நடந்துட்டா என்மேல பாசமா இருக்கும் இந்த குழந்தைகள், என்னை அக்கரையா கவனிச்சுக்கற உங்க அம்மா, அப்பா, தன் பொண்ணுமாதிரியே என்னையும் பாத்துக்கற உங்க மாமா மாமி இவங்க அத்தனை பேரோட அன்பையும், ஆதரவையும் இழக்கவேண்டியிருக்கும் அருண் . 

உன்னோட வாழும் சந்தோசமான வாழ்க்கையைவிட இந்த குடும்பத்தோட அன்பும், அரவணைப்பும் எனக்கு போதும் என்னை மன்னிச்சிடு அருண் பிளீஸ்.

உங்கள் கருத்துக்களை பகிரவும்.

   

Wednesday, February 9, 2011

சன்னலுக்கு வெளியேவெயில் தாழ்ந்த கிணற்றடியில்
சிதறிக்கிடக்கும் பறுக்கைகளை
கொரித்துப்போகும் அனில்கள்.

குழந்தையின் விருப்பத்திற்காய்
வாங்கிய தொட்டிக்குள்
விருப்பமேயில்லாமல்
அலைந்துகொண்டிருக்கும்
மீன்கள்.

மறைக்கமறந்த எதையும்
திருடக்காத்திருக்கும்
பூனைகள்.

வாசல்தாண்டி
வந்ததே இல்லாத‌
விசுவாசம்மிக்க நாய்கள்.


முருங்கைப் பட்டையில்
அடை அடையாய்
முட்டையிட்டு குஞ்சுபொறிக்கும்
கம்பளிப் பூச்சிகள்.

எல்லாம் விற்று வெளியேறி
இரண்டாம் தளத்தில் குடியேறி
ஓய்ந்த ஓர் பொழுதில்
சன்னல் வழி பார்க்கையில் 
இல்லை அவை.

Sunday, February 6, 2011

போய்வா


பொருள் தேடும் நெடும்பாதையில்
உடன் பயணிக்கும் நீ
மயிரிழை முன்செல்வதாலேயே
என்னை முந்திவிட்டதாய்
மார்தட்டிக்கொள்கிறாய்.

இடைவெளியின் அள‌வு
இர‌ண்ட‌ங்குல‌ம் பெருகிய‌தும்
உன்னை பின்தொட‌ர்வ‌தாய்
புகார் செய்கிறாய்.

வெற்றிக்க‌னி ஒன்றை
எட்டிப்பறித்த‌தும்
முன்னேறிவிட்ட‌தாய்
முக‌ம் பூரிக்கிறாய்.

வேக‌வேக‌மாய் வேட்டையாடி
வீழ்ந்த‌வைகளை
சுமந்துசெல்கையில் ‍‍‍- வெறுமைக‌ளால்
நிரைந்துகிட‌க்க‌ப்போகிற‌து உன்பாதை.

க‌ட்டிச்சென்றவைகளை
க‌டைவிரித்துக்காட்ட‌வும்,
காதுகொடுத்து கேட்க‌வும்
நாதியிலா ஓர் பொழுதை வேண்டித்தான்
உன் இப்போதைய‌ புகாரும்,பூரிப்புமெனில்
ஆட்சேப‌னை ஏதுமில்லை
போய்வா.

Thursday, February 3, 2011

கிழ‌க்கை நோக்கி


நீயும் மறந்துவிட்டாய்
நானும் மறந்துவிட்டேன்
உன் அண்ணனோ என் தம்பியோ
16 மைல் தொலைவில்
செத்துக்கொண்டிருப்பதை.

உன் போக்கையும் என் போக்கையும்
எவனோ செலுத்திக்கொண்டிருக்க‌
நம் சொந்தம் அங்கே 
வெந்துகொண்டிருந்திருக்கிறது.

செர்லாக் மாவும்,
ஜெம்ஸ் மிட்டாயும்
நம் குழந்தைகளின் 
அழுகையை நிறுத்திக்கொண்டிருக்க,
ஜெலட்டிண் குச்சியும்
கிர்னெட் குண்டும்
அங்கே நம் கூட்டத்தை 
மாய்த்துக்கொண்டிருந்திருக்கிறது.

இவை எதையும் அறியவில்லை
நண்பனே நாம்!
அறியக்கூடிய அத்தனை
வழிகளையும் அடைத்துவிட்டு
உள்ளாடை விளம்பரத்தையும்
உட‌லுற‌வு சாத‌ன‌த்தையும்
காட்டிக்காட்டியே
உன்னையும் என்னையும் 
செவ்வ‌க‌ சிலிக்கானுக்குள்
சிறைவைத்துவிட்ட‌ன‌ர்.

ஆளுய‌ர‌ போட்டோக்க‌ளும்
அத‌ற்கேற்ற‌ புக‌ழுரைக‌ளுமாய்
நிறைந்திருந்த‌து ப‌த்திரிக்கைக‌ள்.
விழித்தெழுந்த‌ ஒருசில‌ ப‌த்திரிக்கைக‌ளும்
பெருமளவு விற்காத‌ கார‌ண‌த்தால்
உற‌ங்கியே கிட‌ந்தோம் ந‌ண்ப‌னே!

NDTV யும், TIMES NOW வும்
ஐஸ்வ‌ரியா, அபிஷேக் ஊடலையும்
அமித்தாப்பின் க‌ட‌னையும் காட்டி
ந‌ம் க‌ண்க‌ளை க‌ட்டிவிட்ட‌ன‌ நண்ப‌னே!

வீருகொண்டு விழித்தெழுந்த‌ வேளையில்
அஸ்த‌ம‌ன‌மாகியிருந்த‌து கிழ‌க்கில் சூரிய‌ன்.

மீண்டெழும் அந்நாளைநோக்கி
செலுத்த‌த்தொட‌ங்குவோம் ந‌ம் ச‌ந்த‌தியின‌ரை.

http://ta.indli.com/agaliganநீங்கள் இதையும் விரும்பக்கூடும்