Monday, September 16, 2013

வாழ்வதற்குவேண்டி -For Survival

உள்ளே கனன்றுகொண்டிருக்கும்
தேவைத்தணலின் தாக்கத்தால்
வெந்து விகாரப்பட்டுபோன முகமும்...

பிணக்கு இதுதான் என
தீர்மானிக்கத் தெரியாமல்
எதிர்படுவோரிடமெல்லாம்
எரிந்துவிழச்செய்யும் இயலாமையும்...

பொருள்புரியா வாழ்வின்
தேடல்கள் பொருட்டு
தொலைந்துகொண்டிருக்கும்
சொந்த விருப்பு வெறுப்புகளும்...

வாழ்வதற்குவேண்டி என
வசதியான முத்திரையோடு
அரங்கேறிக்கொண்டிருக்கும்
அத்துமீறல்களும் - காரிய சுரண்டல்களும்...

அசந்தர்ப்பமாக எதிர்படும்
நட்புகளுக்கும் - உறவுகளுக்கும்
ஆயத்த புன்னகையும் ,
' அப்புறம் பார்க்கலாம்' என்ற
தலையசைப்புமாய்
கடந்துபோகவேண்டிய நிர்பந்தங்களுமாய்...

முரண்பட்டுக்கொண்டுதானிருக்கின்றன
வாழ்க்கையும் - எதார்த்தமும்
என்றாலும்...

சிரித்துக்கொண்டுதான் இருக்கிறது
பக்கத்துவீட்டு வாளியில்
பூத்திருக்கும் ரோஜா
என்வீட்டு தூளியில் ஆடும்
குழந்தையைகண்டு!

Friday, September 13, 2013

காத்திருக்கும் கேள்விகள்.

எதிர் எதிராய் அமர்ந்திருக்கிறோம்
ஏராளமான கேள்விகளோடு,

அலட்டலான பதில்களின்
அபத்தங்கள்
கேட்டவைகளையும்
கேட்கப்படவேண்டிடவைகளையும்
கிடப்பிலேயே கிடத்திவிடுகின்றன.

தவறான பதில்களாய்
நிகழ்ந்துவிட்டவைகளுக்கு
காரணமான கேள்வியை
தேடிக்கொண்டிருக்கிறோம்.

சரியான கேள்வியாய்
கருதப்பட்டவைகளுக்கு
காரணப்பின்னல்களில்
பதில்களை
மறைத்துக்கொண்டிருக்கிறோம்.

விருப்பமான பதில்கள்
மட்டுமேவேண்டி
கேள்விகள் கேட்டுக்கொண்டிருக்கும் - நாம்
விரும்பத்தகாத பதில்களுக்கான
கேள்விகளை
தவிர்த்துக்கொண்டிருக்கிறோம்.

சில பதில்களின்
சுயரூபம் நம்மையே
விழுங்கிவிடக்கூடும் என்பதால்
பல கேள்விகளை  தள்ளிநின்று
பார்த்துக்கொண்டிருப்பதிலேயே
காலம் கடத்திக்கொண்டிருக்கிறோம்.


Sunday, September 1, 2013

ஏனோ தெரியவில்லை?

இனி
எப்போதுமே
அழைக்கமுடியாது
என அறிந்தும்
அழிக்கமுடிவதில்லை
சில எண்களை - கைபேசியிலிருந்து.

இனி
எப்போதுமே
செல்லமுடியாது என அறிந்தும்
கிழிக்கமுடிவதில்லை
சில முகவரிகளை - டைரியிலிருந்து.

இனி
ஒருநாளும்
அவன் முகத்துல முழிக்ககூடாது
என முடிவெடுத்திருந்தும்
எப்போதாவது ஒருமுறை
புரட்டாமல் இருக்கமுடிவதில்லை
அவனிருக்கும் - ஆல்பத்தை.

Wednesday, August 28, 2013

வாழ்க்கைத்தரம் - ரங்கநாதன் தெருவில் கிடைக்குமா?


ரங்கநாதன் தெரு - தி நகர்
                                    எல்லார் கை (பை) யிலும் வாழ்க்கைத்தரம்!
காட்சி ஊடகம் ஒன்றின் விவாத நிகழ்ச்சியில் கலந்துகொள்ள இந்திய விண்வெளிக்கழகத்தின்  பிரதிநிதியாய் வந்திருந்த ஒரு சிறப்பு விருந்தினரிடம் 

நிகழ்ச்சி தொகுப்பாளர் : உலகிலேயே முதன் முதலாய் நிலவில் கால்வைத்ததாய் அல்டாப்புகாட்டும் ஆனானப்பட்ட அப்பாடக்கர் அமெரிக்காவே அதுக்கு பிறகு இதுவரை நிலாவுக்கு ஆள் அனுப்பக்கானும், அப்படி இருக்க எந்த அடிப்படையில் நீங்கள் இன்னும் மூன்று மாதசத்துல நிலாவுல மக்களை குடியேற்றப்போகிறோம்ன்னு சொல்றீங்க? 

விருந்தினர் : இதபாருங்க சொல்றவங்க ஆயிரம் சொல்வாங்க அதை எல்லாம் கேட்டுகிட்டிருந்தா நாம் எதையுமே செய்யமுடியாது. சுதந்திர இந்திய வரலாற்றில் நாங்கள் மட்டும்தான் இத்தனை ஆண்டுகளாக விண்வெளி ஆராய்சியை செய்துகிட்டுவருகிறோம். அதால நீங்க நம்பித்தான் ஆகனும். எப்படி ஆள் அனுப்புவாங்க அதுக்கு என்ன அடிப்படைன்னு எல்லாம் கேக்றாங்களே அவங்கள வந்து ஆராய்ச்சி பண்ண சொல்லுங்களேன் பாக்கலாம். விண்வெளி ஆராய்ச்சின்னு ஒன்னு இருக்குன்னே தெரியாத நாடுகள்கூட நாங்களும் நிலவுல இடம் வாங்கிட்டோம்னு பீத்திக்கும்போது நாம ஏன கூடாது?

நிகழ்ச்சி தொகுப்பாளர் : நிலவில் காற்று நீர் என மனிதன் வாழ்வதற்கான எத்தகைய இயற்கை ஆதாரமும், சூழ்நிலையும் இல்லை என்று கூறுகிறார்களே அபடியான நிலையில் எப்படி மனிதன் அங்கு வாழமுடியும்
என்று நினைக்கிறீர்கள்?

விருந்தினர் : நிலவுல காத்து இல்லை தண்ணி இல்லை என சொல்றதெல்லாம் சும்மா. நம் முன்னோர்கள் வான சாஸ்த்திரத்தில் உலக நாடுகளை விட மிக மிக முன்னோடிகள் அதனால்தான் அதோபாரு நிலால ஆயா வடைசுடுதுன்னு தன் குழந்தைகளுக்கு சோறு ஊட்டும்போது சொல்லிகொடுத்திருக்காங்க. காத்து இல்லாமல் ஆயா அங்க இருந்திருக்க  முடியுமா? இல்ல தண்ணி இல்லாமதான் மாவரைச்சு வடை சுட முடியுமா? 

ஒரு விண்வெளி ஆராய்ச்சியாளர் இப்படி பேசினால் எவ்வளவு அபத்தமாக இருக்குமோ  இன்றைய புதியதலைமுறை புதுப்புது அர்த்தங்கள் நிகழ்ச்சியில் அரசியல்வாதி திரு கோபண்ணா பேசியது அதைவிட அபத்தமாக இருந்தது. 

மன்மோகன் சிங்கும், பா. சிதம்பரமும் பொருளாதாரபுலிகள் என்பதாலேயே அவர்களை நம்பித்தான் ஆகவேண்டும் என்பதுபோல் பேசுகிறார். ஒன்பது ஆண்டுகளில் 8. சில்லரை சதவிகித வளர்ச்சி இதுவரை இந்தியா காணாதது  என  சொல்லிச் சொல்லி புளங்காகிதம் அடைகிறார். 

எல்லாமே புள்ளி விவரங்களாக காகிதத்தில்தானே உள்ளது மக்களின் வாழ்க்கைத்தரம் உயரவில்லையே எனக்கேட்டால் மக்களின் வாழ்க்கை தரத்தை தி.நகர் ரங்கநாதன் தெருவில் போய் பாருங்கள் என்கிறார். 

ரங்கநாதன் தெருவில் அலையும் கூட்டம் பணம் கொழுத்துபோய் ஷாப்பிங் என்ற பெயரில் தினம் தினம் எதையாவது வாங்கிக்கொண்டிருக்கும் கூட்டமல்ல மற்ற இடங்களைவிட 50 ரூபாயோ 100 ரூபாயோ விலை குறைவாக கிடைக்கக்கூடிய காரணத்தால் தேவையான பொருட்களை நினைவு வரும்போதெல்லாம் எழுதி வைத்துக்கொண்டு மாதம் ஒருமுறை மொத்தமாய் வாங்கிப்போக குவியும் கூட்டம். 

இதை வாழ்க்கை தரத்தின் குறியீடாக கருதுகிறார் என்றால், அரசு மருத்துவமனைகளில் குவியும் கூட்டத்தையும் அங்கே நிலவும் சுகாதாரமற்ற சூழலும் நாட்டில் நிலவும் சுற்றுச்சூழல் மற்றும் சுகாதார சீர்கேட்டின் குறியீடுதானே? இதை ஏற்றுக்கொள்வாரா?

ரங்கநாதன் தெரு போன்ற ஒரு சில வியாபாரத்தளங்களின் அடிப்படையில் நாட்டின் ஒட்டுமொத்த மக்களின் வாழ்க்கை தரத்தையும் கணக்குபோட்டுக்க சொல்லும் இந்த மேதமை கோபண்ணா போன்ற காங்ரஸ் காரர்களைத்தவிர வேறு யாருக்கும் கைகூடாது. 

Monday, August 26, 2013

என்ன செய்திருக்கிறோம் இதுவரை.

யாருடையதோ ஒரு கோபம்
யாரையோ காயப்படுத்தும்போது

வலியவனின் கோபத்திற்கு
நியாயம் கற்பித்திருக்கிறோம்
எளியவனின் காயத்திற்கு
விதியை நொந்திருக்கிறோம்.

யாருடையதோ ஒரு தாபம்
யாரையோ இன்புறுத்தும்போது

ஆணின் இச்சையை
இயல்பு என்றிருக்கிறோம்
பெண்ணின் தாபத்தை
இழிவுபடுத்தியிருக்கிறோம்.

யாருடையதோ ஒரு புன்னகை
யாரையோ மகிழ்விக்கும்போது

புன்னகைத்தவனை
பொய்யன் என்றிருக்கிறோம்
மகிழ்ந்தவனை
அசடன் என்றிருக்கிறோம்

யாருடையதோ ஒரு வேகம்
யாரையோ இழுத்துச்செல்லும்போது

இழுத்தவனிடம்
வேகம் விவேகமல்ல என்று
அறிவுருத்தியிருக்கிறோம்
இழுபட்டவனிடம் உன்
ரத்தத்தில் வேகமில்லை என
வெறியேற்றியிருக்கிறோம்.

யாருடையதோ ஒரு கை
யாரையோ மேலெழுப்பும்போது

கை கொடுத்தவனிடம்
உனக்கேன் இந்த வேலை
என்று திசைதிருப்பி இருக்கிறோம்
மேலெழுபவனின்
கால்பிடித்து இழுத்திருக்கிறோம்

யாருடையதோ ஒரு துன்பம்
யாரையோ அழவைக்கும்போது

அழுதவனை பேடி
என்று நகைத்திருக்கிறோம்
 துன்புற்றவனை அழுதவனுக்கு
எதிராய் தூண்டிவிட்டிருக்கிறோம்

ஆனால்

யாருடையதோ
ஒரு வலி யாருக்கோ மகிழ்வை
அளித்துக்கொண்டிருந்தபோது

யாருடையதோ
ஒரு இயலாமையை யாரோ
பெரும் லாபமாய் மாற்றிக்கொண்டிருந்தபோது

யாருடையதோ
கடும் உழைப்பை யாரோ
சுரண்டிக்கொண்டிருந்தபோது

யாருடையதோ
பெரும் நம்பிக்கையை யாரோ
தகர்த்துக்கொண்டிருந்தபோது

யாருடையதோ ஒரு இனத்தை
யாரோ அழித்துக்கொண்டிருந்தபோது

வெறுமையாய்
பார்த்துக்கொண்டிருந்ததைதவிர
வேறென்ன செய்திருக்கிறோம்
இதுவரை.
வன்முறைக்கு அப்பால்

ஆறு வயசு குழந்தை தன் தந்தை கையால் நறுக்கு நறுக்குன்னு தலையில குட்டு வாங்குவதை பார்க்க்கும்போது மனசு பதறுது. ஒரு சின்ன குழந்தைமேல ஏன் இவ்வளவு கோபம். காரணாம் ஒரு பென்சிலை தொலைத்ததாகவோ, கூப்பிட்ட குரலுக்கு வரவில்லை எனபதாகவோதான் இருக்கமுடியும். அதற்கு இத்தனை வன்மம் சரிதானா?  அப்படி பார்த்தால் போபர்ஸ் ஊழல் வழக்கு சம்பந்தமான ஆதார கோப்புக்களை விமான நிலையத்தில் பரிகொடுத்தற்காகவோ, நிலக்கரி ஊழல் வழக்கில் பிரதமருக்கும் தொடர்பு இருப்பதாக நிறுபிக்கும் ஆவணங்களை மறைந்துவிட்டதற்காகவோ சம்பந்தப்பட்டவர்களை எத்தனை முறை குட்டவேண்டும்?

பொதுவாகவே கோபம், வெறுப்பு, வன்முறை என்றாலே அது ஆண்கள்தான் என்றும் பெண்கள் சாந்த சொரூபிகள் என்றும் நினைத்துக்கொண்டிருக்கிறோம் அல்லது நிறுவப்பட்டிருக்கிறோம். ஆனால் உண்மையில் ஆறு வயது குழந்தை தலையில் குட்டு வாங்குவதை எந்தவித உணர்வையும் வெளிக்காட்டாமல் பார்த்துக்கொண்டிருக்கும் அம்மாக்கள்தான் ஆண்களைகாட்டிலும் ஆபத்தானவர்கள்.

பெரும்பாலான சமயங்களில் குழந்தைகளின் கல்வி மற்றும் எதிர்காலம் கருதிதான் குழந்தைகள்மீதான வன்முறைகள் நிகழ்கிறன. கல்வி மற்றும் எதிர்காலம் குறித்து கவலைபடும் நாம் எதன் அடிப்படையில் அவற்றை முடிவுசெய்கிறோம்? நாம் படித்த காலமும் கல்வியும் இன்றைய காலத்துடன் ஒப்பிடக்கூடியதா? ஒப்பிடக்கூடியதுதான் என்று நினைத்தாலும் அல்லது அதைக்காட்டிலும் உயர்வானதாய் நினைத்தாலும்  ஒவ்வொரு தேர்வு முடிவுகளுக்கு பின்னாலும் பள்ளிகள் மீது விதிமீறல் புகார்களும் ,மாணவர்களின் தற்கொலைகளும்  ஏன் நிகழ்கின்றன?

''Mass production takes no note of the real requirement of the consumer"  இயந்திரங்கள் மூலம் மேற்கொள்ளப்படும் மொத்தமொத்தமான உற்பத்தி பற்றிய மகாத்மாவின் கருத்து இது. அவை தேவைகருதி மேற்கொள்ளப்படாமல் லாபம் கருதி  செயலபடுவதால் அதை  எப்படியெல்லாம் நம்மேல் திணிக்கின்றன என்பது அறிந்ததே.  

இன்றைய கல்விநிறுவனங்களூம் தனி மனிதனுக்கு எத்தகைய கல்வி வேண்டும், சமுதாயத்திற்கு அது எவ்வகையில் உதவும் என்பது பற்றிய அக்கரையில்லாமல் எல்லோரையும் மருத்துவர்களாகவும், பொறியாளாராகவும் தயாராகக்கூடிய பண்டங்களாய் உருவாக்கும்  ஒருவகை Maas Production  வேலையைத்தான் செய்துகொண்டிருக்கிறது.

இத்தகைய தயாரிப்புகளே பெற்றோரின் விருப்பமாகவும் வெறியாகவும் , கனவாகவும் இருப்பதால் குழந்தைகள் மந்தையிலிருந்து விலகிவிடாமல் கவனித்துக்கொள்ளவேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார்கள். விலகிவிடுவார்களோ என்ற பயத்தின் வெளிப்பாடுதான் இந்த வன்முறை.
Thursday, August 22, 2013

ஒரு வேண்டுகோள்.

66 ஆண்டுகால சுதந்திர இந்திய வரலாற்றில் ஏழ்மை  காணாமல் போய்கொண்டிருக்கிறது. 100 ஆண்டுகளுக்குள் அது முற்றாக இல்லாமல் செய்துவிடவேண்டும் என்ற முனைப்பில்( இன்னும் 34 ஆண்டுகள்தான் பாக்கி ) 100நாள் வேலைத்திட்டம், உணவு பாதுகாப்பு திட்டம் போன்ற அரசின் பல நல்ல திட்டங்களால் வறுமைக்கோடு எச்சில் தொட்டு அழிக்கப்பட்டு வருகிறது.( மொத்தமாய் அழிக்க எச்சில் பத்தவில்லையாம் மனமிருப்பவர்கள் உதவலாம்)

இந்திய அரசு இதுவரை (விலை)கூட்டிய எதையும் குறைத்ததே இல்லை என வருத்தப்படுபவர்களுக்காகத்தான் சராசரி மனிதனுக்கு  2400 கலோரி  உணவு தேவை என WHO னால் அறிவுருத்தப்பட்டிருந்த அளவை  1400 கலோரியாக குறைத்துகாட்டி மக்கள் மனதில் பால் வார்த்திருக்கிறது. ஒரு மனிதனுக்கு 1400 கலோரி உணவு என்பது கட்டிலில் படுத்திருப்பதற்கு மட்டுமே போதுமானது என்பதும் WHO குறிப்பிட்டிருக்கிறது கவனிக்கப்படவேண்டியது. ஆக மக்களை உழைக்கக்கூட கட்டாயப்படுத்தாத அரசை ஏன்தான் ஏசுகிறார்களோ தெரியவில்லை.

கணவன் மனைவி இரு குழந்தைகள் உள்ள குடும்பத்திற்கு 2000 ரூபாய்குள் (Rs 32 X 2 நபர் = Rs 64X 30 நாட்கள் = Rs 1920 ) அத்தனை அத்தியாவசிய தேவைகளும் தீர்ந்துவிடும் அளவிற்கு பொருளாதாரத்தையும், விலைவாசியையும் கட்டுக்குள் வைத்திருக்கிறதென்றால் அது சாதாரணவிஷயமில்லை என்பது ஏன் இந்த சமூக ஆர்வளார்களுக்கும், அரசியல் விமர்சகர்களுக்கும் விளங்க மறுக்கிறது.

சமூக ஏற்ற தாழ்வு என்பது அந்தந்த மாநில அரசுகளின் கைகளில்தான் உள்ளது என அறிந்துதான் அதை போக்கும் நடவடிக்கையாய் மதுக்கடைகளைகூட மாநிலஅரசே ஏற்று நடத்த அனுமதித்திருக்கிறது.. எந்த அரசு மதுக்கடைகளிளாவது இரட்டை குவளை முறை உள்ளதா? எந்த அரசு பேருந்துகளிளாவது இரட்டை இருக்கைமுறை உண்டா? இதையே ஏன் மற்ற மாநிலங்களில் அமல்படுத்தகோரி சமூக ஆர்வலர்கள் வலியுருத்தக்கூடாது. ஏதோ சில கிராமங்களில் லேசாய் சில கைகலப்பு ஏற்பட்டிருக்கிறது அவ்வளாவே? ஊரின் குறுக்கே சுவர் எழுப்பியதுகூட கொசுக்கள் வராமல் இருக்கத்தான். அந்த சுவர் இருந்தவரை தொல்லை இல்லாமல் இருந்தது இப்ப பாருங்க எவ்வளவு பிரச்சனை. அதைபோய் ஏதோ தாழ்த்தப்பட்டவர், உயர்குடி பிரச்சனை என்று வதந்தி பரப்புகின்றனர் அவற்றை நாம் புறங்கையால் புறக்கணிக்க வேண்டும் என மிக கண்டிப்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

 வல்லரசாக வேண்டுமென்ற கனவு ஒவ்வொரு இந்தியனுக்கும் இருக்க வேண்டும். அந்த கனவை நிறைவேற்றும் தகுதி அரசியல்வாதிகளுக்குதான் உள்ளதே தவிர விமர்சகர்களுக்கும் சமூக ஆர்வலர்களுக்கும் இல்லை. எனவே நாம் நம் அரசியல்வாதிகளின் ஆட்டத்திற்கெல்லாம் தலை ஆட்டினால் இந்தியா 2050 ஆம் ஆண்டு வல்லரசு ஆகிவிடும் என்பதில் எனக்கு நம்பிக்கை உள்ளது.

மந்திரி:  மன்னா நாட்டில் பஞ்சம் தலைவிரித்தாடுகிறது,

மன்னர்: அப்படியா?

மந்திரி:   ஆம் மன்னா மழை பொய்த்தது ,ஆறுகளில் தன்ணீர் இல்லை விவசாயம் பாதிக்கப்பட்டது, விலைவாசி கட்டுப்பாட்டில் இல்லை மக்கள் ஒருவேளை சோறுகூட  கிடைக்காமல் அவதிப்படுகிறார்கள்.

மன்னர்:  மக்கள் ஏன் இவ்வளவு பிடிவாதக்காரர்களாக இருக்கிறார்கள்? சொறு கிடைக்காவிட்டால் என்ன பஞ்சம் தீரும்வரை இட்லியோ, தோசையோ சாப்பிட்டு பழகிக்கொள்ளளாமே?  

இந்த கதைக்கும் என் கட்(காட்டுத்தனமான)டுரைக்கும் சம்பந்தமிருந்தால் நான் பொருப்பல்ல. 

Tuesday, August 20, 2013

யாரும் குடிபுகாத வீடு.


யாரும் குடிபுகாத வீட்டின் அறைகள்
காத்துக்கொண்டிருக்கிறன
குடியேறப்போகும்
குடும்பத்திற்க்காகவோ
பிரம்மச்சாரிக்காகவோ.

யாரும் குடிபுகாத வீட்டின் அலமாரிகள்
காத்துக்கொண்டிருக்கின்றன
யாரும் புரட்டி பார்க்காத புத்தகங்கள்
நிறைக்கப்படவோ
பழம்பெருமைபேசும்
கோப்பைகள் அடுக்கப்படவோ,

யாரும் குடிபுகாத வீட்டின் சுவர்கள்
காத்துக்கொண்டிருக்கின்றன
அவற்றை அலங்கறிக்கப்போகும்
நினைவுகளின் நீட்சிகளுக்கான
ஆணிகள் அறையப்படுவதர்காய்,

யாரும் குடிபுகாத வீட்டின்
சன்னல் கம்பிகள்
சுத்தப்படுத்தப்பட்டுகிடக்கிறது
இளைப்பாறிச்செல்லும் பறவைகளின்
எச்சங்களால்.

யாரும் குடிபுகாத வீட்டின்
தோட்டத்தில்
யாரும் பறித்துவிடக்கூடிய
சாத்தியமில்லா மகிழ்வில்
பூத்து நிற்கின்றன மலர்கள்
இயல்பைவிட மணமாய்..

யாரும் குடிபுகாத வீட்டில்
எதுவுமே களவுபோகும்
சாத்தியமில்லை - என்றாலும்
கதவுகள்மட்டும் பூட்டியேகிடக்கின்றன
எப்போதும்,

யாரும் குடிபுகாத வீடு
காத்துக்கொண்டிருக்கிறது
பல கனவுகளை உருவாக்கவும்
சிலவற்றை அழிக்கவும்.
Monday, August 19, 2013

குற்றங்களை கூட்டும் தண்டணைகள்!

 "உங்கள் மதங்களும், சட்டங்களும் உங்களை அடிமைகளாக வைத்திருக்கவே விரும்புகின்றன"  - ஓஷோ 

"உலகம் முழுவது ஜனநாயகத்தை குத்தகைக்கு எடுத்து விநியோகிக்கும் உரிமம் பெற்ற அமெரிக்காவின் நெருங்கிய பங்காளி சவுதி அரேபியாவின் பத்திரிக்கையாளர் RaifBadawi க்கு 600 சவுக்கடிகள் தண்டனை. அவர் ஒரு சுவற்றில் முகம் புதைத்து நிற்க வேண்டுமாம், தலை முதல் கால் வரை 150 சவுக்கடிகள் குடுப்பார்களாம், அதன் பின் அவரை மருத்துவமணையில் அனுமதிப்பார்களாம், இப்படியாக 600 இது தவிற இரண்டு ஆண்டுகள் சிறை வேறு."

மேற்கண்ட தகவலை எழுத்தாளர்ஆய்வாளர்,களபணியாளர் .முத்து கிருஷ்ணன் நேற்று தனது முகநூலில் பகிர்ந்திருந்தார்

மனித உரிமை மீரல்களுக்கு எதிரானவர்களாய் தங்களை பிரகடணப்படுத்திக்கொள்ளும் அமெரிக்கா தன் அறிவிக்கப்படாத பங்காளியானன சவுதி அரேபியா (இஸ்ரேலையும் சேர்த்துக்கொள்ளளாம்) எந்த அளவிற்கு மனித உரிமைகளை மீறுகின்றன என சுட்டிக்காட்டவே அவர் இதை பகிர்ந்திருப்பார் என்பது புரிந்துகொள்ள முடிகிறது. 

அரபு நாடுகளில் குற்றம் குறைவுதான் என்பது ஏற்றுக்கொள்ளக்கூடியதுதான்காரணம் கடுமையான தண்டனைகள்நடு ரோட்டில் கட்டிவைத்து தலையை சீவுவதுகல்லால் அடித்து கொல்வது என பல நம்பமுடியாத தண்டனைகள் பற்றி கேள்விபட்டிருப்போம்அத்தகைய தண்டனைகள் சரியாதேவையாஎன்பதுபற்றி பல விவாதங்கள் இருக்கத்தான் செய்கிறது. மேலும் அரபு நாடுகளில் மண்ணின் மைந்தர்களின் சதவிகிதம் மிகவும் குறைவு. வெளி நாடுகளிலிருந்து வியாபரத்திற்காய் வேலைக்காய் அங்கே சென்றிருப்பவர்கள்தான் அதிகம். அத்தகைய ஒரு சூழலில் இத்தகைய தண்டணைகள் பெருப்பாலும் வெளி ஆட்களையே அதிகம் பாதிக்கிறது. சமீபத்திலும் ஒரு இலங்கை தமிழ் பெண் பாதிக்கப்பட்டது நினைவிருக்கலாம்.

தண்டணை என்பது செய்த குற்றத்திற்காக கொடுக்கப்படுவதுமட்டுமல்ல இனியாரும் அத்தகைய குற்றத்தை செய்யக்கூடாது என்பதற்காகவும்தான்அதேசமயம் தவறு செய்தவன் திருந்துவதற்கான ஒரு வாய்பாகதான் தண்டணை இருக்க வேண்டும் என்பதுதான் இந்திய மனப்பான்மை. ஆனால் தண்டணை திருந்துவதற்கான வாய்ப்பாய் இருப்பது புதிய தவறுகளை தைரியமாய் செய்யவைக்கிறது என்பதை மறந்துவிடக்கூடாது.

கை புண்ணுக்கு கண்ணாடி எதுக்குன்னு கேப்பாங்க. இங்கே சட்டங்கள் தன் கை புண்ணுக்கு மட்டுமில்லை எதிராளியின் கை புண்ணுக்கும் சாட்சியாய் கண்ணாடி கேட்கிறது. கண்ணாடி சரியில்லை என்று சொல்லி உள்ளங்கை புண்ணையும் புண்ணே அல்ல அது வேறும் புடைப்புத்தான் என்று தீர்ப்பளிக்கிறது. கோடிகளில் ஊழல், சின்ன பெண்ணை கற்பழித்தது, மலைவாழ் பெண்களை பலாத்தாரம் செய்தது என சமூகத்தில் பலத்த தாக்கத்தை ஏற்படுத்திய இதுவரையிலான  எந்த வழக்கிலாவது நியாயமான தீர்ப்பு கிடைத்திருக்கிறதா? குற்றம் சுமத்தப்பட்டவர்கள் தண்டிக்கப்பட்டிருக்கிறார்களா? இத்தகைய மோசமான அனுபவங்களையும், முன்னுதாரணங்க்களையும் வைத்துக்கொண்டு ஒரு சாதாரண இந்தியன் எதனடிப்படையில் தண்டணைகள் குற்றவாளிகள் திருந்துவதற்கான வாய்ப்பாய் இருக்கவேண்டும் என வழிமொழிய முடியும்? 110 கோடி மக்களும் ஆளுக்கு ஒருமுறை ஒரு தவறை செய்துவிட்டு திருந்துவதற்கான வாய்ப்பளிக்கும் தண்டணையை பெற்றுக்கொள்ள துணிந்தால் என்னவாகும்.

ஆயிரம் குற்றவாளிகள் தப்பிக்கலாம் ஒரு நிரபராதியும் தண்டிக்கப்படக்கூடாது என்று சட்டம் சொல்கிறது. இது எந்தவகை சட்டம் என்று தெரியவில்லை. குற்றவாளிகள் ஏன் தப்பிக்க வேண்டும்? குற்றவாளிகள் எப்படிதப்பிக்கலாம்? அப்படி தப்பிக்கலாம் என்றால் அதற்கு வாய்ப்பளிக்கும் சட்டங்கள் எதற்கு?  சட்டமும், தண்டணையும் தப்பிக்க தெரியாத சாமானியனுக்குத்தானா? 

Sunday, August 18, 2013

தகரக்கூடுமோ தார்மீகம்?

இப்பவெல்லாம் ஒரு பூ விக்கறவரு என்னை உதாசீனப்படுத்தினாலும் ஏனோ தெரியல பன்னாட்டு நிறுவனங்களின் நியாபகம் வந்து கூடவே பயமும் பத்திக்குது. அரண்டவனுக்கு இருண்டதெல்லாம் பேயின்னு சொல்வாங்க அதுமாதிரியாகூட இருக்கலாம். 

போன வியாழக்கிழமை சாயங்காலம் ஆடி வெள்ளிக்கிழமைக்காக சாமிக்கு பூ வாங்க போன இடத்துலதான் இந்த பயம் தொடங்கிச்சி. ஒருமுழம் 30 ரூ அதுக்கு கொறச்சி எந்த பூவுமே இல்லை. நாலுபேர்கிட்ட 25 ரூக்கு கேட்டுபாத்ததேன் யாரும் தராப்போல தெரியல, சரி நமக்கு தெரிந்தவர் மார்கெட்ல பூ விக்கறார் அவர்கிட்ட போனேன். நான் போன நேரம் அவர் கிட்டதட்ட வியாபாரத்தை முடிச்சிட்டார் போல ஒரு முழமோ ஒன்றை முழமோதான் தட்டுல இருந்தது. ஆனாபாருங்க அவரும் அதே 30 ரூபாதான் சொன்னார். அவர்கிட்டயும் 25ரூவாக்கி கேட்டுபாத்தேன் முடியவே முடியாதுன்னு சொல்லிட்டார். கடைசி அஸ்திரமா "என்னப்பா தெரிஞ்சவர்ன்னுதானே அவ்வளவு தூரத்திலிருந்து வரேன்  அதுவுமில்லாம உங்கிட்ட கடைசியா இவ்வளவுதானே இருக்கு கொடுத்துட்டு போயேன் என்றேன்" "சர்தான் போசார் இங்க தெரிஞ்சவன் தெரியாதவன் எதும் கிடையாது, நீ வாங்காட்டி இன்னொருத்தன் வாங்கிட்டுபோகப்போறான்  இன்னிக்கி டிமாண்டு அப்படி தெர்தா" ன்னு சொல்லிட்டு அவன்பாட்டுக்கு பணத்தை எண்ணஆரம்பிச்சுட்டான். 

ஒரு பொருளுக்கு சந்தையில் தேவை அதிகமா இருக்கும்போது எந்த வியாபாரியுமே அதை தவறவிட விரும்பமாட்டான். பூவின் டிமாண்ட் என்பது ஒவ்வொரு விசேஷ தினத்திலும் தானாய் ஏற்படுவது. இந்த டிமாண்டை எந்த ஒரு தனி பூ வியாபாரியும் செயற்கையாய் ஏற்படுத்திவிடமுடியாது. அதற்கு மிகப்பெரும் முதலீடு தேவைப்படும்.சில்லரை வர்த்தகத்தில் முதலீடு செய்யவரும் பெரும் பன்னாட்டு நிறுவனங்கள் தங்கள் பண பலத்தாலும் அதிகாரத்திலிருக்கும் அவர்களின் அடிவருடிகளாலும் இத்தகைய டிமாண்டை மிகச்சுலபமாய் ஏற்படுத்திவிட வாய்ப்பு இருக்கிறது. ஒரு முழம் பூ இல்லை என்றால் எந்த அம்மனோ, ஆண்டாளோ அழப்போவதில்லை. ஆனால் இதே டிமாண்டை அத்தியாவசியத்தேவையான அரிசி, பருப்பில் கையாண்டால் பசியில் பிள்ளைகள் அழும். வசதியுள்ளவன் வாங்குவான், வாங்கமுடியாதவன் வன்முறையில் இறங்குவான். சட்டம் ஒழுங்கு பாதிக்கப்படும். ஏற்கனவே தமிழகத்தில் மது ஆறாய் ஓடிக்கொண்டிருக்கிறது.  இனி ரத்த ஆறும் ஓடக்கூடும். (எனக்கேகூட ஒரு கட்டத்தில் ஒருமுழம் பூ 30ரூபாவா மவனே என்னங்கடா அநியாயமா இருக்குன்னு ஒரு கோபம் வரத்தான் செய்தது). இது கொஞ்சம் அதிகப்படியான கற்பனையாக தெரியலாம் என்னமோ எனக்கு இப்படியெல்லாமும் நடக்க வாய்ப்பிருப்பதாய் பயம் தோன்றுகிறது. 

அதான் சில்லரைவர்த்தகத்தில் அன்னிய முதலீட்டை விருப்பப்படாத மாநிலங்கள் அனுமதிக்க தேவையில்லை என்று சொல்லிட்டாங்களே அம்மாவுந்தான் அதை அனுமதிக்கலையே அபுறமென்னன்னு நீங்க கேட்பது புரியுது சில்லரை வர்த்கம்ன்னு சொன்னது ஒரு புரிதலுக்காக, மற்றபடி அன்னிய பன்னாட்டு நிறுவனங்களின் முதலீடுகள் எங்கெல்லாம் பரவுகிறதோ அங்கெல்லாம் லாபத்திற்கான  முறைகள் மட்டுமே கடைபிடிக்கப்படுமே தவிர,  தார்மீகங்கள்  த க ர் க் க ப் ப டு ம் என்பதில் சந்தகம் இல்லை.

100 வது டெலிவரி.

பிளாக் எழுத தொடங்கி கிட்டத்தட்ட 3 வருஷம் ஆகிறது. இதுவரை 99 பதிவுகள் எழுதியாச்சு இது 100வது.

என் முதல் பதிவை  சாயம் போன கறுப்புச்சட்டை இதுவரை 9 பேர் வாசித்திருக்கிறார்கள் இதிலிருந்தே தேரியும் என் பிளாக் எழுதும் லட்சணம். 

மட்டைன்னு ஒன்னை கையில் எடுத்து ஆட ஆரம்பிச்சபிறகு சதம் அடிப்பது ஒரு மகிழ்ச்சிதானே.( அது எந்த கிரவுண்டா இருந்தாயென்ன, எந்த பிளேயர்ஸ்கூட இருந்தாத்தான் என்ன) 

இங்கே எழுத ஆரம்பித்ததில் மிகப்பெரிய மகிழ்ச்சியான விஷயம் திருப்பூர் ஜோதிஜியின் நட்பும் அன்பும். என் எழுத்துக்கள் மேல்  அவருக்கு பெரிய ஈர்ப்பு இல்லை என்றாலும் (அவரை ஈர்ப்பதுமாதிரியாய் எழுதமுடியாது) தனிப்பட்ட முறையில் என் நலம்விரும்பி என்பதில் ஐயமில்லை. 

என்னையும் ஒரு 24 பேர் பின்தொடர்கிறார்கள் அந்த நல்ல உள்ளங்களுக்கு நன்றி. ( இன்னுமா என்னை நம்புறீங்க?)

மற்றபடி இநத 99 பதிவுகளுக்கும் காரணம் நண்பன் சுரேஷ் துரைராஜன்  இவன்தான் உனக்கு தோன்றுவதையெல்லாம் எழுது நாளாக நாளாக எழுத்து கைகூடும் அப்படி கைகூடாவிட்டாலும் பரவாயில்லை என்று என்னை உந்திக்கொண்டிருப்பவன். 

மற்றபடி இனியாவது படிக்கிறாமாதிரி எழுத கற்றுக்கொள்ளவேண்டுமென்று பிரார்த்தனை செய்துகொள்ளுங்கள். 

நன்றி.


Friday, August 16, 2013

ஆடி தள்ளுபடி - ஆள் தேடி கொள்ளையடி.

ஆடி கொள்ளையர்களிடம் அகப்பட்ட அடிமைகள்.

ஆடி தள்ளுபடி என்பது கடந்த 10-12 ஆண்டுகளாகத்தான் அதகளப்படுகிறது. குறிப்பாக உலகமயமாக்கப்பட்ட, தாராளமயமாக்கப்பட்ட பொருளாதார கொள்கைக்குப்பின்தான் என்றால் சரியாக இருக்கும். ( ஆமா எல்லாத்துக்கும் தாராளமயமாக்கலை கை காமிச்சிட்டா பெரிய அறிவாளின்னு நினைப்பா?). ஆடித்தள்ளுபடியில் 50% 60% 70% என தள்ளி தள்ளி 0% வட்டி என்பதுபோல் 100% தள்ளுபடியும் வரப்போகும் காலம் தொலைவில் இல்லை என்றே தோன்றுகிறது. என்ன பேக்கிங் சார்ஜ், சர்வீஸ் சார்ஜ் என தலைக்கு 1000 ரூ தனியாக வசூலிக்கக்கூடும். இப்பவே ரிலையன்ஸ் போன்ற தனிப்பெரும் கடைகளில் பிளாஸ்டிக் பைக்கு தனியாக பணம் கேட்கின்றனர். 

மற்ற எல்லா துறைகளைவிட ஜவுளித்துறைதான் ஆடித்தள்ளுபடியில் நடுத்தரவர்க்க குடும்பங்களை ஆட்டிப்படைக்கிறது அல்லது ஆதிக்கம் செலுலுத்துகிறது  என தோன்றுகிறது. பொதுவாய் அடித்தட்டு மக்களை இந்த ஆடி அண்டுவதில்லை. காரணம் அவர்கள் எதையும், தன் அத்தியாவசிய தெவைக்களுக்குக்கூட யோசித்தே செலவு செய்கிறார்கள். அவர்களின் வருமானம் அதைத்தான் அனுமதிக்கிறது. அவர்கள் ஆண்டுக்கு ஒருமுறைதான் துணி எடுக்கிறார்கள் அது தீபாவளி அல்லது பொங்கல். நடுவுல எடுக்கிறாங்கன்ன அவங்க உடுத்தியிருக்கும் துணி இனி உடுத்தவே முடியாதுங்கற சூழ்நிலையாத்தான் இருக்கும். அப்பவும் அன்னிக்கு அவன் கையில் உள்ள தொகையில் வாங்கக்கூடியதை மட்டுமே அவன் தேர்ந்தெடுக்கிறான். அவனுக்கு louis philippe, wrangler, Lee இது எதுவும் தெரியாது தேவையுமில்லை. அவனின் தேவைஎதுவோ அதன் சந்தை அவன் அறிவான். அவன் வாழும் வாழ்க்கை சூழலும் பணிச்சூழலும் அவனிடம் அதைத்தான் எதிர்பார்க்கிறது. இது ஜாதிசார்ந்த ஒரு சமூக கட்டமைப்பினால் உருவாகி இருந்தாலும், பொருளாதாரமும் ஒரு காரணமே.

அடுத்து உயர்தட்டு மக்கள். அவர்களுக்கு ஆடிபற்றியோ அமாவாசைபற்றியோ எந்த கவலையும் இல்லை, அக்கறையும் இல்லை. நினைத்த நேரத்தில் நினைத்த பொருளை வாங்கக்கூடிய ( அது 6000 மோ 60,000 மோ ) பொருளாதாரத்திலும், மனநிலையிலும் வாழக்கூடியவர்கள். KFC யும், Pizza Cornar ம் அவன் டீ சாப்பிடும் இடங்கள். அங்கே அவன் தள்ளுபடிகளை எதிர்பார்த்து போவதில்லை. ( 75ரூ பிரண்ஸ் பேக் என்றும், வெறும் 44 ரூ மட்டுமே என்றும் விளம்பரத்தை பார்த்தபின்தான் அவற்றில் நடுத்தரமக்கள் நடமாட்டம் அதிகரித்திருக்கிறது )

நடுத்தரவர்க்கம் அல்லது ரெண்டுங்கெட்டான். இவன் வாழும் முறையிலும் மனோபாவத்திலும் ஒரு ரெண்டுங்கெட்டானாகவே இருக்கிறான். இருப்பது போதும் என்று இருந்துவிடுவதும் இல்லை, பறக்கத்தான்செய்வேன் என உறுதிகொள்வதும் இல்லை. கையேந்திபவனுக்கும் சரவணபவனுக்கும் இடைபட்ட டீ கடையில் உக்கார்துகொண்டு le meridien  ஐயும் park sheraton னையும் தின்றுகொண்டிருப்பவன். தான் உயர்தட்டு மக்களுக்கு எந்தவிதத்திலும் சளைத்தவனல்ல என நிருபிக்க நடை உடை பாவனைகளில் அவனைப்போலவே நடந்துகொள்பவன். அதற்காக தன்னால் இயன்றதையும் இயலாததையும் செய்யத்துணிபவன். மேல்தட்டு மகக்களைபோல் இருக்கவேண்டும் என்பதற்காய் அவர்களைப்போலவே சிறந்த பிராண்டட் சர்ட்டுக்களையும், பேண்ட்டுக்களையும் வாங்குவார்கள், பிசாவையும் பர்கரையும் தொண்டை அடைக்க அடைக்க தின்று தொலைப்பார்கள். பக்கத்து நாடார் கடைகளில் வாங்கிக்கொண்டிருந்த மளீகை பொருட்களை சூப்பர்மார்கெட்டுகளில் வாங்குவார்கள். வங்கிகணக்கை ICICI, HDFC என பன்னாட்டு வங்கிகளில்தான் தொடங்குவார்கள். இவை எல்லாம் அவர்களுக்கு தங்களின் கவுரவத்தோடு தோடர்புடையதானவைகளாக உள்ளன. இவர்களின் வரட்டுத்தனத்தை பயன்படுத்தி மேல்தட்டு மக்களால் நிராகரிக்கப்பட்ட அல்லது அவர்கள் ரசனையிலிருந்து விலகிவிட்ட வடிவமைப்புக்களை ஆடியில் தள்ளுபடி விலையில் இவர்கள் தலையில் கட்டுகிறார்கள்.

இப்படியாக ஆடிக்களிக்கும் ஆடி நேற்றோடு ஓய்ந்தது.
Thursday, August 15, 2013

CELL லுமிடம் எல்லாம் நீ!

இப்போதெல்லாம் இதயத்தின் வெகு அருகே
இப்போதும் நீ.

செல்லமாய் சினுங்குவாய்,
மெல்லமாய் அதிர்வாய்,

அள்ளி எடுத்து கொஞ்சும்வரை
நிறுத்துவதில்லை - உன் கூப்பாட்டை
எடுத்தபின்
சொல்லிக் கொள்ளும் நேரத்தில்
நிறுத்தமுடிவதில்லை - எம் வாய்பாட்டை.

வேளைதவறிய அகாலங்களில்
அழைப்பாய் அபத்தமாய்.
ஏகாந்தம் கொள்ளும் இரவுகளில்
 பல் இளிப்பாய் இங்கீதமில்லாமல்

கோவில் பிரகாரங்களிலும்,
குழந்தைகளோடு ஆடும்
பொழுதுகளிலும் - தாங்கமுடிவதில்லை
உன் தொல்லை.
எரிச்சல்வரும் அப்போதெல்லாம்
என்னசெய்ய எடுத்து எரிந்துவிடவும்
முடிவதில்லை உன்னை.

நாளொரு வசதியும்,
வகைக்கொரு சலுகையுமாய்
வலம்வந்துகொண்டிருக்கும் நீ
வாங்க வழியில்லாதவரையும்
வளைத்துக்கொண்டிருக்கிறாய்
உன் வனப்பைக்காட்டி.

வருமானம் வழிமொழியாவிடினும்
சில வசதிகளுக்காகவேனும்
வேண்டியிருக்கிறது உன் இருப்பு.

விரட்டியடிக்க முடியாத
விருந்தாளியைப்போல்
விரும்பியோ விரும்பாமலோ
நான் Cellலுமிடமெல்லாம்
(9382716633)- நீ!

Monday, August 12, 2013

அடுத்த நிதியமைச்சர் யார்?


டலர் மதிப்பு நாளுக்கு நாள் உயர்ந்துகொண்டே செல்கிறது, இதற்கு காரணங்களாய் அமெரிக்க பொருளாதாரம் உயருகிறது, அல்லது அமெரிக்காவின் பொருளாதாரத்தை உயர்த்த அவர்கள் இந்தியாவில் செய்துள்ள முதலீடுகளை திரும்பபெறுகிறார்கள், நம் நாட்ட்டின் இறக்குமதி அதிகரிப்பு, அதை குறைக்க உற்பத்தியை பெறுக்கவேண்டும் என ஆயிரம் விஷயங்கள் சொல்லி விளக்கினாலும், விவாதித்தாலும் காமன்மேனுக்கு அவையெல்லாம் புரிந்துக்கொள்ளக்கூடியாதாய் இல்லை. அவனின் எதார்த்தமான கேள்வி,

அமெரிக்க பொருளாதாரத்திற்கும் நமக்கும் என்ன சம்பந்தம்? 

நாம் இருப்பது இந்தியாதானே? 

அவன் ஏன் இங்க முதலீடு செய்யனும்? 

அதை ஏன் திரும்ப எடுத்துட்டு போகனும்? 

இவன் இஷ்டபட்டா முதலீடு போடுவானாம் திடீர்னு அவனுக்கு தேவைபட்டா எடுத்துட்டு போயிடுவானாம் என்னய்யா அநியாயமா இருக்கு? 

இவன் என்ன வியாபாரம் பண்றானா சூது ஆடுறானா? 

மூனு சீட்டு ஆட்டத்துலகூட சம்பாதிச்சவன் பாதி ஆட்டத்துல எழுந்து போயிட முடியாது தெரியுமில்ல?  

இது அதவிட கொடுமையாயில்ல இருக்கு?

இந்த கேள்விகளுக்கு  என்ன பதில் சொல்வது என திணரவேண்டியிருக்கிறது. இந்த கேள்வியிலிருந்து எப்படி எஸ்கேப் ஆவது என யோசிச்சி “ சரிப்பா டாலர் மதிப்பு கூடுனா உனக்கென்ன குறஞ்சா உனக்கென்ன நீபாட்டு உன் வேலையை பாக்கவேண்டியதுதானே?” ன்னு அவனை ஒரு எதிர் கேள்வி கேட்டது தப்பா போச்சு.

பெட்ரோல் விலை கூடிடும், 
பஸ்கட்டணம் உயரும், 
காய்கறிகள் வாங்கமுடியாத விலையாயிடும், 
பால் விலையேரும், 
டீ விலையேரும்னு ஒரு பெரிய லிஸ்டே படிக்கறாங்க.

இதுக்கு என்னதான் வழின்னு நிதியமைச்சரை கேட்டா உற்பத்தியை பெருக்கனுங்கறாரு. 

இதையும் ஒரு காமன்மேன்கிட்ட சொல்லிபாத்தேன் 

“ உற்பத்தியை அதிகப்படுத்துவதுன்னா என்ன  நான் ஒரு நாளைக்கு 300 இட்லி சுட்டு விக்கிறேன் நாளையிலிருந்து 350 இட்லி சுடனுமான்னு" கேககறாரு ஒரு இட்லி கடைக்காரர்.

"பாசனத்துக்கு தண்ணியில்லாம தவிச்சப்ப காவிரில தண்ணி தரமாட்டேண்ண்னு தகராறு பண்ணினான் கர்னாடகாகாரன் அவங்கிட்டபோய் உற்பத்தியை பெருக்கனும் ஒழுங்கா தண்ணிவுடுடாண்ணு சொல்ல வேண்டியதுதானே இந்த நிதியமைச்சர்ன்னு" கேட்கிறார் ஒரு விவசாயி. 

உண்மையில் உற்பத்தியை அதிகரிப்பதுன்னா என்னான்னு நிதியமைச்சரையே கேட்டாக்கூட என்ன சொல்லிடபோறாரு அன்னிய முதலீடு உள்ள வரனும் அதைத்தவிர வேறவழியில்லைனபோறாரு. மறுபடியும் அவன் முலீடுபண்ணுவான் திரும்பப்பெருவான் நாம தலையில துண்டபோட்டுக்கனும் இதசொல்லத்தான் நிதியமைச்சர்ன்னா யார்வேண்ணா நிதியமைச்சரா இருக்கலாம் போல.

சரிப்பா நீதான் ஏதாச்சும் சொல்லேன்றிங்களா? 

தோற்றுப்போய் பல்லிலித்துக்கொண்டிருக்கும் தாரளமயமாக்கலையும், உலமயமாக்கலையும் இன்னும் தலையில் வைத்துகொண்டாடிக்கொண்டிருக்கும் தலைசிறந்த பொருளாதார புலிகள் மன்மோகன்சிங்கையும், சிதம்பரத்தையும்விடவா நான் ஏதும் சொல்லிடமுடியும்.


உங்களுக்கு ஏதாவது தெரிஞ்சா பின்னூட்டத்தில் தெரியபடுத்துங்க தெரிஞ்சுகறேன்.

Saturday, August 10, 2013

' தென்றல் ' சுடும்

எல்லா பெண்களைப்போலவே என் பொண்டாட்டியும் புருஷன் சொன்னாமட்டும் கேட்டுக்கவே மாட்டா? அதான் இன்னிக்கு சரியான படம் கத்துகொடுக்கனும்னு முடிவுபண்ணிட்டேன். எனக்கு வந்த ஆத்திரத்திற்கு TV யை தூக்கிபோட்டு உடைக்கலாம்போல இருந்தது. ஆனா நஷ்டம் எனக்குத்தானேன்னு ஒரு நிமிஷம் யோசிச்சேன் TV யை OFF பண்ணிட்டு அதே கோவத்தோட  பொண்டாட்டியபார்த்து “நான் ஏற்கனவே சொன்னேல்ல அவனை நம்பாதேன்னு, நீதான் இல்ல அவன் நல்லவன் இவ்வளவு பணம் காசு இருந்தும் என்வளவு சிப்பிளா இருக்கான்பாருங்க, அவன் பேச்சும் நடவடிக்கையும் எவ்வளவு பண்பா இருக்கு பாருங்கன்னு என்னை கன்வின்ஸ் பண்ணின, அவங்கிட்ட பணம் இருக்குன்னுதானே அந்தபொண்ண ஒருவார்த்தைகூட கேக்காம அவனுக்கு கட்டிவெக்கறாங்கன்னு நான் கேட்டப்ப செச்..சே அதெல்லாம் இல்லைங்க அவன் ரொம்ப நல்லவன்னு சொன்ன, இப்ப எங்கிட்டவந்து அவன் எப்படி பேசறான் பாருங்கன்னா, நான் என்ன செய்யமுடியும்? நான் எடுத்துச்சொல்லும்போதெல்லாம் ஏதாவது சொல்லி என்னை சமாளிச்சுட்டு இப்ப குத்துதே கொடையுதேன்ன ? நல்லா கேட்டுக்க இதுதான் கடைசி இனிமே இதெல்லாம் ஒரு விஷயமா எங்கிட்ட சொல்லிகிட்டு வரக்கூடாது என்ன புரியுதா" என கத்திவிட்டு முகம் கழுவ சென்றுவிட்டேன். என் கோபத்தின் நியாயம் புரிந்ததினால் குற்றவுணர்வில் தலை குனிந்து நின்றிருந்தாள். அவள் கண்கள் லேசாய் கலங்கி இருந்தது. அவள் எப்பவுமே இப்படித்தான் யாரையும் எதையும் வெகு சுலபத்தில் நம்பிவிடக்கூடியவள் பின் அது அப்படியாயிடிச்சு, அவன் இப்படி பண்ணிட்டான்ன்னு ஒரே புலம்பல். அதான் TVயில் ஓடிகிட்டிருந்த தென்றல் சீரியலை OFF பண்ணீட்டேன் இனி எதபாத்து பொலம்பறான்னு பாப்போம்.

Tuesday, May 7, 2013

தாய்க்குலமே ஜாக்கிறதை!


சென்னையின் மிகப்பரபலமான குழந்தைகள் நல மருத்துவமனை வாசலில் மார்கழிமாத பெருமாள் கோயில்போல் பலவிதமான காலணிகள் குவிந்துகிடந்தன. மருத்துவமணைக்குள் காலணிகள் போட்டுகிட்டுபோனா சுகாதாரக்கேடுவரும் என்பதால் இந்த ஏற்பாடாம். சீ.எம் ரேஞ்சுக்கு யாராச்சும் வந்தாமட்டும் செறுப்பு போட்டுகிட்டு போகலாம் மற்றபடி No. நாம என்ன சீ.எம்மா? எவனாவது மாத்தி போட்டுகிட்டு போய்டப் போறாங்கன்ற பயம் இல்லை ஆனா  ஷூவை கழட்டிட்டா  சாக்ஸ் நாத்தம் அடிக்குமோன்னுதான் பயம் என்னசெய்ய வேரவழியில்லையே. வரவேற்பறை 6 மாதத்திலிருந்து 6 வயது வரையினான குழந்தைகளாளும் இருபது வயதிலிருந்து அறுபது வரையிலான பெற்றோர்களாலும் நிரைந்திருந்தது. அறையின் சுவர்முழுதும் குழந்தைகளுக்கான மருந்துகளையும் மற்ற போருள்களையும் தயாரிக்கும் நிறுவனங்களின் விளம்பரப் பிரதிநிதிகளாய் குழந்தைகளின் அழகழகான படங்கள் தொங்கிக்கொண்டிருந்தன. குறிப்பாய் எங்க கம்பனி பேபி பௌடர் விளப்பர குழந்தைதான் எல்லார் மனதையும் கொள்ளையிடுவதாய் இருந்தது. எப்படித்தான் இந்த குழந்தைகள்மட்டும் இவ்வளவு அழகா இருக்குதுங்களோ என சிலர் அகத்தில் ஏங்குவது முகத்தில் அப்பட்டமாய் வெளிப்பட்டது.

வந்திருக்கும் ஒவ்வொருவரும் ஒவ்வொரு பிரச்சனையோடு வந்திருந்தாலும் ஒவ்வொருத்தரும் தங்கள் குழத்தைக்கு எது கொடுக்கலாம், கொடுக்கக்கூடாதுன்னு டாக்டர்கிட்ட கேட்பதைவிட பக்கத்துல இருபவர்களிடம்தான் அதிகம் கேட்டுக்கொண்டிருந்தனர். அவுங்க என்ன கொடுக்கிறாங்களோ அதையேதான் தன் குழந்தைக்கும் குடுக்கனுமோ இல்லைன்னா நம்ம குழந்தை வளர்ச்சியில் பின்தங்கிடுமோன்னு பயப்படுறாங்க. முன்னெல்லாம் குழந்தை வளர்ப்பு இவ்வளவு கெடுபிடி நிறைந்ததாய் இருக்கவில்லைன்னு நினைக்கிறேன் நாலுபுள்ளய பெத்துக்குவாங்க, தங்களுக்கு நல்லதுன்னு தெரிஞ்சத செய்வாங்க – முடிஞ்சத கொடுப்பாங்க. அந்த நாலும் நாலுவிதமான நல்லது கெட்டதுகளை தெரிஞ்சிகிட்டு நாலுவிதமா வளரும். ஆனா இப்போதய பெற்றோர்கள் ஒன்னோ ரெண்டோ பெத்துக்கிறாங்க அந்த ரெண்டையுமேகூட சூப்பர் குழந்தைகளாத்தான் வளர்க்க விரும்புகிறார்கள். ஒவ்வொருத்தரும் தங்கள் குழந்தைகளை எல்லாத்திலுமே தி பெஸ்ட்டுதான் தன் குழந்தைகளுக்கு கிடைக்கவேண்டும் அல்லது கொடுக்கவேண்டும்ன்னு நினைப்பதால் எல்லா குழந்தைகளுமே ஒரே மாதிரி வளக்கப்படுகிறது. கிட்டத்தட்ட பிராய்லர் கோழிகளை போலத்தான். இன்றைய நிறுவனமயமாக்கப்பட்ட சூழலும் அதைத்தான் விரும்புகிறது. ஒவ்வொரு நிறுவனமும் தங்கள் தயாரிப்புக்கள்தான் No1 என மக்கள் மனதில் ஏற்றுவதற்கு பிரம்ம பிரயத்தனம் செய்கின்றன. அதற்காக அவர்கள் செய்யும் செலவுகள் பயனீட்டாளர்கள் தலையில் விலையாய் வந்து விடிகிறது. இதற்கிடையில் தொழில் போட்டியும் லாப வெறியும் எந்த எல்லைக்கும் போகவைக்கிறது.

அவ்வளவு ஏன் குழந்தைகள் அழகுசாதன தயாரிப்புகள்ல எங்க நிறுவனம்தான் No1. ஒரு குழந்தை பொறந்தா அம்மா அப்பாவுக்கு அப்பறம் அதிகமா சந்தோஷப்படுவது எங்க நிறுவனம்தான்னு கிண்டலே பண்ணுவாங்கனா பாத்துக்கங்களேன். ஆனா எங்க நிறுவனத்தயாரிப்புக்களில் குழந்தைகள் பவுடர் தயாரிக்க நச்சுத்தன்மை வாய்ந்த எதிலின் ஆக்சைடு பயன்படுத்தித்தான் ஸ்டெரிலைஸ் செய்வார்கள் இதனால் குழந்தைகளின் சருமத்திற்கு பாதிப்பு ஏற்படக்கூடிய வாய்ப்பு உள்ளது. இது தெரிந்தும் எங்க நிறுவனம் அதை தொடர்ந்து செய்துகிட்டேதான் இருந்திருக்கு. அதைத்தான்  டாக்டர்களும் சிபாரிசு செய்கிறார்கள் அல்லது செய்வதாய் விளம்பரப்படுத்துகிறார்கள். மக்களும் அதை நம்பி வாங்கறாங்க.  இதுபோலதான் மோசமான பல தயாரிப்புகளும் No1 என்ற அதீத விளம்பரத்தால் அத்துமீறிக்கொண்டிருக்கின்றன முடிந்தவரை இயற்கை சாதனங்களையே பயன்படுத்துவது பாதுகாப்பு. இதையெல்லாம் நான் இங்க இருக்கும் யாரிடமும் சொல்லமுடியாது மனசுல நினைச்சுக்கலாம் அவ்வளவுதான். சரி டாக்டர் என்னை கூப்பிட்டுட்டார் எங்க தாயரிப்புக்களை மேலும் அதிகமாக பரிந்துரைக்கச்சொல்லி கேட்கவேண்டும். அதற்கு அவருக்கு தனியான கவனிப்பும் உண்டு. அப்ப நான் கிளபறேங்க முடிஞ்சா வேறு சந்தர்பத்தில் சந்திக்கலாம்.

செய்தி: பிரபல ஜான்சன் அன்ட் ஜான்சன் நிறுவனத்தின் முலுந்த் தொழிற்சாலையில் அழகுசாதன பொருட்களை தயார் செய்யும் உரிமத்தை உணவு மற்றும் மருந்து நிர்வாகம் சஸ்பெண்ட் செய்து வைத்துள்ளது. குழந்தைகளுக்கு பயன்படுத்தப்படும் பவுடரை நச்சுத்தன்மை வாய்ந்த எதிலீன் ஆக்சடை கொண்டு ஸ்டெரிலைஸ் செய்யப்படுவதால் பவுடரில் நச்சுத்தன்மை கொண்ட பொருட்கள் இருந்துள்ளன.

புலம்பல்: அப்போ இவ்வளவு நாளா தயாரிச்சத என்ன செய்யபோறங்க இவ்வளவு நாளா உபயோகப்படுத்தினவங்க இனியும் உபயோகப்படுத்தப்போறவங்க  நிலை என்னனனு யாரு யோசிக்கிறாங்க. No1 என்று சொல்லிக்கொள்ளும் மற்றும் டாக்டர்களாளேயே பரிந்துறைக்கப்படும் நிறுவனங்க்களின் சாதனங்களே இந்த லட்சணம் என்றால் யார் யாரோ சொல்றங்கன்னு எதைஎதையோ வாங்கி உபயோகிப்பவர்களின் நிலை ? 

Tuesday, March 26, 2013

சொல்லத்துணியும் நாள்

"நடந்தவைகளைச்சொல்வேன்,
நடக்க இருப்பவைகளைச்சொல்வேன்
கேள் என்னிடம் எதுவாகினும்" என்றான்.

"எங்கே சொல்பார்ப்போம்"
என்று நீட்டினேன் வலக்கையை.

உள்ளங்கையை உற்றுபார்த்தவன்
"சுக்கிரன் உச்சம்" என்றான்
"வஞ்சனை துளியுமில்லை" என்றான்,

எனக்குள் உதறல்
உலகுக்கு தெரியாமல் அடைகாக்கும்
உள்மன அழுக்குகளை
அடுக்கிவிடப்போகிறானோ என்று.

தொடர்ந்தவன் சொன்னான்
"நீ கடந்துவந்த பாதை கடினமானது" என்று

ஒப்புக்கொண்டேன்

"மனதில் ஒருத்தியை இருத்தியிருகிறாய்
இல்லையா? ஆமாவா?" என்றான்

பால்ய காதலியின் நினைவில்
"ஆம்" என்றேன்.

"உழைக்கத்தயங்காதவன் நீ என்றான்"

அரைமனதாய் "ஆம்" என்றேன்

"பாசமும் கருணையும் 
இரு கண் உனக்கென்றான்"

பட்டென இழுத்துக்கொண்டேன் கையை
இதுவரை அப்படி 
இருந்ததில்லை என்ற உறுத்தலோடு

மேலும் இல்லை என மறுக்கமுடியாத
புத்திசாலிதனங்கள்  நிறைந்தவைகளாய்
தொடர்ந்தன கேள்விகள்.

என் தேவையும் அதுதான் என்பதால்
நிறைவாய் எடுத்து நீட்டினேன்
இறுதியாய் வைத்திருந்த 10 ரூபாயை.

இனி
பதில்களில் சொன்ன
பொய்கள் பொசுக்கிக்கொண்டிருக்கும்
நிஜமான பதில்களை 
சொல்லத்துணியும் நாள்வரை.

Monday, March 11, 2013

நசுக்கப்பட்ட ஆயுதம்

இலங்கையில் நிகழ்ந்த இனபடுகொலைகளுக்கும், மனித உரிமை மிரல்களூக்கும், போர்குற்றங்களூக்கும் என எல்லா காயங்களுக்குமான களிம்பு அமெரிக்க தீர்மானம்மட்டுமே என்பதுபோல் பாவலாகாட்டும்  தமிழக அரசியல் நிகழ்வுகள் சகிக்கக்கூடியதாய் இல்லை. மத்திய அரசின் வெளியுறவு கொள்கையும் புதுமனைவி செய்துவைத்த நூடில்ஸ்போல் பாதி வெந்தும் மீதி நொந்தும் என புரியாத புதிராக இருக்கும் நிலையில் இனி எந்த அரசியல் கட்சிகளின் வாய்ஜாலங்களும் இலங்கையில் எஞ்சியுள்ள தமிழர்களுக்கு உதவப்போவதில்லை என தீர்மானித்த லயோலா கல்லூரி மானவர்கள் போற்றத்தக்கவர்கள். சமீப காலங்களாக தமிழகத்தில் எந்த ஒரு பிரச்சனையிலும் மக்களிடம் அரசியலற்ற எதிர்ப்புத்தன்மையற்ற நிலை காணப்பட்டுவந்த நிலையில் மாணவர்களின் உண்ணாவிரதம் தமிழக மக்களிடம் குறிப்பாக இளைஞர்களிடம் ஒரு எழுச்சியை உருவாக்கத்தொடங்கியது. மாணவர்களின் இந்த போராட்டம் எந்த அரசியல் கட்சிக்கும் ஆதரவாகவும் எந்த கட்சியின் ஆதரவாலும் மேற்கொள்ளப்படவில்லை என தெளிவாக அறிவித்திருந்ததே ஒட்டுமொத்த மக்களின் உணர்வுகளும்கூட இந்த மாணவர்களின் உண்ணாவிரதத்தால் ஒருமுகப்படவைத்தது என கூறலாம்.  டில்லி மாணவி பலாத்கார நிகழ்வில் மாணவர்கள் வீதிக்கு வந்து தங்கள் எதிர்ப்பைக்காட்டினர். அது நாட்டின் அத்தனை மீடியாக்களிலும் ஒளிபரப்பப்பட்டு பாலியல் கொடுமைகளுக்கு எதிராய் ஒரு முக்கியத்துவத்தை ஏற்படுத்தியது. ஆனால் இந்த மாணவர்கள் தங்கள் எதிர்ப்பை உண்ணாவிரதம் என்னும் அறவழியில் வெளிப்படுத்தியதால் இது தமிழகத்திற்குள் மட்டுமே பேசப்பட்டு அது ஓருமுகப்படுவதற்கு முன்பாகவே முனைமுறிக்கப்பட்டடுவிட்டது. உண்ணாவிரதமிருந்த மாணவர்களை நள்ளிரவில் கைது செய்தது மூலம் அறவழிப்போராட்டங்கள் அவைக்குதவாது என தெளிவாக்கி இருக்கிறது அரசு.

தமிழகத்தில் மாணவர் சக்தி எத்தகையது என்பது இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் இந்தியா கண்டதுதான். ( அதனால் ஒரு தலைமுறையே இந்தி தெரியாமல் தவிக்கிறது என்பது வேறு ) அத்தகைய சக்கிவாய்ந்த ஆயுதம் இலங்கை பிரச்சனையை கையில் எடுத்தாலோ, அதற்கு மக்கள் ஆதரவு கூடினாலோ இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை இந்தியா ஆதரிக்கவேண்டிய கட்டாயம் ஏற்பட்டுவிடகூடும் அபாயம் இருப்பதால்தான் இந்த மானவர்கள் போராட்டத்திலிருந்து அப்புறப்படுத்தப்பட்டிருக்கிறார்கள். இந்த போராட்டம் மட்டுமல்ல அரசு மற்றும் அரசியல் வாதிகள் தங்கள் நலனுக்கு எதிராய் எழும் எந்த போராட்டத்தையுமே அப்புறப்படுத்திவிடுவார்கள்.

Sunday, March 3, 2013

எங்கெங்கு கானினும் ....
நம் வீட்டு வாசலுக்கு வரும்வரை எதுவுமே நம்மை பாதிப்பதில்லைஎவன் எக்கேடு கெட்டால் எனக்கென்ன என்ற மனப்போகில்தான் உலவிக்கொண்டிருக்கிறோம்கடந்த இரண்டாண்டுகளுக்கும் மேலாக போராடிக்கொண்டிருக்கும் கூடங்குளம் போராளிகள் விஷயத்தில் நம் பார்வை நாட்டின் வளர்ச்சிதிட்டங்களுக்கு எதிரானவர்கள் என்பதாகவோ அல்லது தமிழகத்தின் மின்வெட்டுக்கு காரணமானவர்கள் என்பதாகவோதான் பதிந்திருக்கிறது. பொருப்புமிக்க மந்திரிமார்களும் பல அபத்தமான அறிக்கைகளை அவதூறுகளை கட்டவிழ்த்துவிடுகிறார்கள். கடந்த பல ஆண்டுகளாய் நமக்கு வாய்த்த அரசுகள் தெரிந்தே விவசாயத்தை குழிதோண்டி புதைத்திருக்கிறார்கள்விடுதலை பெற்ற முதல் சில ஐந்தாண்டு மற்றும் பத்தாண்டு திட்டங்களில் விவசாயத்திற்கு அளிக்கப்பட்ட முக்கியத்துவம் தொடர்ந்துவந்த ஆண்டுகளில் தொடரவில்லை. தொழில்புரட்சியும் பசுமைபுரட்சியும் மேற்கொண்ட போட்டியில் பசுமைபுரட்சி அதிக மகசூலுக்கான வெறியில் ஒட்டுரகத்தையும் (பச்சைவாழைபழம் காணாமல் போயாச்சு) செயற்கை உரத்தையும் ஆதரித்து நம்தேசத்து மண்ணை நாசமாக்கியது என்றால் தொழில்புரட்சி லாபவெறியை தலைக்கேற்றி முதலாளிகளின் மனங்களை நாசமாக்கியது.(உழைக்கும் மக்களின் உரிமைக்காக யாரும் குரல் கொடுத்துவிடக்கூடாது என்பதற்காக தொழிற்சங்கங்கள் அமைக்கதடை).இதுவெல்லாம் போதாமல் மேற்கத்திய நாடுகளின் ஒ(ச)ப்பற்ற பொருளாதார கொள்கையை அப்படியே அடியொற்றி மேற்கொள்ளப்பட்ட உலகமயமாக்கல் என்ற வேதாளமும் அதன் கன்னிமை தந்த மயக்கமும் இருபது ஆண்டுகளுக்குபின் நம்மை குடைய தொடங்கியதும் எல்லா சாலைகளும் ரோமை நோக்கி என்பதுபோல் இன்று நாட்டின் எல்லா சீர்கேடுகளுக்கும் காரணமாய் உயரும் கைகள் மொத்தமும்  உலகமயமாக்களை  நோக்கியே நீள்கிறது. தமிழகத்தின் இன்றைய சீர்கேடாய் கருதப்படும் பெறுகிவரும் குடிப்பழக்கமும் அதன் ஒரு பக்கம்தான் என நிறுவமுயற்சிக்கிறார்கள். அதில் உண்மை இல்லாமல் இல்லை ஆனாலும் முற்றும் உண்மையல்ல எனபது மட்டுமல்லாமல் இந்தவாதம் குடிக்கு எதிரான விழிப்புணர்ச்சியை மழுங்கடிக்க செய்துவிடக்கூடும் என்பது என் கருத்து.

குடியை ஒரு தனிமனித பிரச்சனையாக பார்க்காமல் அது ஆரோக்கியம் சார்ந்த பிரச்சனையாகவும், சமூகம் சார்ந்த பிரச்சனையாகவும் பார்க்கப்பட்டதால்தான் இருபது வருடங்களுக்கு முந்தைய அரசுகள் "குடி குடியை கெடுக்கும் குடிப்பழக்கம் உடல் நலத்தை கெடுக்கும்” என்று சாத்தியப்படும் எல்லா ஊடகங்கள் வாயிலாகவும் தன் மக்களுக்கு வலியுருத்தியது. ஆனால் 24,000 கோடிகளுக்கு வருமானத்தை ஈட்டித்தரும் ஒரு மாபெரும் தொழிலாக வளர்ந்திருக்கும் இன்றைய சூழ்நிலையில் "குடி குடியை கெடுக்கும் குடிப்பழக்கம் உடல் நலத்தை கெடுக்கும்” என்ற வாக்கியத்திற்கு என்ன மரியாதையை எதிர்பார்க்கமுடியும். அல்லது இந்த பிரச்சாரம் என்ன விளைவை ஏற்படுத்திவிடமுடியும்.இன்று தமிழகமெங்கும் மதுவிலக்கு கோரிக்கைக்கான குரல்கள் அதிகரித்துள்ளன. ஆச்சரியப்படும் வகையில் பல அரசியல் கட்சிகளும் இந்த போராட்டத்தில் களம் இறங்கியுள்ளது மகிழ்ச்சியையும் நம்பிக்கையையும் அளிக்கிறது. என்றாலும் ஆட்சிக்கு வரகூடிய வாய்ப்பை பெற்றுள்ள பிரதான கட்சிகளான தி.மு.க வும், அ.தி.மு.க வும் வாயே திறக்கவில்லை என்பது கவனிக்கப்படவேண்டிய விஷயம். (அரசு டாஸ்மாக் கடைகளுக்கு சரக்கு சப்ளை செய்யும் இரண்டு நிறுவனங்களில் ஒன்று அய்யாவினுடையது, மற்றொன்று அம்மாவினுடையது எப்படி வாய்திறக்கமுடியும்). மதுக்கடைகளை அரசே நடத்துவதற்கும் மதுவிலக்கை ஆதரிக்காததற்கும் காரணங்களாய் கூறப்படுபவைகளில் முக்கியயமானது கள்ளச்சாராயம். மதுக்கடைகள் இல்லாவிட்டால் மக்கள் கள்ளச்சாராயம் குடித்தே செத்துப்போவார்கள் என்பது மதுவிலக்கை எதிர்ப்பவர்களின் வாதமாக இருக்கிறது. கூடவே இங்கே மது ஒழிக்கப்பட்டால் குடிக்கு பழக்கமானவர்கள் பக்கத்து மாநிலங்ககுக்கு சென்று குடிப்பார்கள் அந்த வருமானம் அண்டைமாநிலங்களுக்கு போய்விடும் என்றவாதமும் முன்வைக்கபடுகிறது.   நீங்க நடிக்க வரலைன்ன என்ன செஞ்சிருப்பீங்க என்ற கேள்விக்கு பெருபாலான நடிகைகள் டாக்டர் ஆகியிப்பேன் என்பார்கள். டாக்டர் ஆகக்கூடிய வாய்ப்பிருப்பவர்கள் நிச்சயமாக டாக்டராகத்தான் ஆகியிருப்பார்கள் நடிக்க வந்திருக்கமாட்டார்கள். (நடிகர் ஜெமினிகணேசன் குடும்பத்தில் ஒருவர் ஒருபடமோ இரு படமோ நடித்துவிட்டு மீண்டும் படிக்கசென்றுவிட்டார் என்று கேள்வி) அதேநேரம் நடிகையாகாவிட்டால் டாக்டர் ஆவது அதிகபட்சம் 5 -10 சதவிதமாகத்தான் இருக்கும் காரணம் அதில் உள்ள சிரமங்கள் அத்தகையது. அதே போலதான் குடிக்கு பழக்கமானவர்களிடம் கடைகளை மூடிட்டா என்ன செய்வீங்க என்றால் பாண்டிச்சேரிக்கு போனேன்னு சொல்வாங்க ஆனா தினமும் பாண்டிச்சேரிக்கு போய்வரமுடியுமா? அப்படியே போய்வந்தாலும் அது எத்தனை சதவிகித சாத்தியம்கொண்டது. மதுக்கடைகள் மூடப்பட்ட கொஞ்சகாலம் இது நடக்கலாம் தொடர்ந்து நடப்பதற்கு வாய்ப்பில்லை. அடுத்து கள்ளச்சாராயம். இன்று டாஸ்மாக்கை உருவாக்கியவர்களின் அதேகட்சிதான் கள்ளச்சாராய சாம்ராஜியங்களையும் வளர்த்தெடுத்தது என்பது அரசியல் அறிந்தவர்கள் அறிவார்கள். கள்ளச்சாராய முதலாளிகள் அரசின் கடைக்கண் பார்வையும் காவல்துறையின் கருணையும் இல்லாமல் வளார்ந்துவிடமுடியாது. இன்று களச்சாராய அபாயத்தைப்பற்றி பேசும் ஆளூம் கட்சியோ ஆண்டகட்சியோ அதை தங்களால் கட்டுப்படுத்தமுடியாது என்பதை ஒப்புக்கொள்கிறார்களா?. ஆம் எனில் இந்த அரசு எதற்காக செயல்படுகிறது யாருக்காக செயல்படுகிறது. கள்ளச்சாராயத்தால் ஏற்படும் பாதிப்புகளும் சாவுகளும் தவிர்க்கப்படவேண்டியவைதான். ஆனால் அதற்கு மாற்றாகத்தான் டாஸ்மாக் என்பது கேலிக்கூத்து. உடலுக்கு தீங்கு இல்லாத ஒரு பாணம் கள் அதற்குதடை அறிவித்துவிட்டு டாஸ்மாக்கை திறந்துவைத்திருப்பது அரசுக்கு வருமானம் வரவேண்டித்தான் என்பதோடு மட்டுமல்லாமல் தன் நிறுவனத்திற்கும் தங்களுக்குமான லாபத்திற்காகத்தான் என்பது சொல்லித்தெரியவேண்டியதில்லை.அரசு அதிரடியாய் அறிவித்த இலவசங்களுக்கான வருமானத்தை டாஸ்மாக்க்குகள்தான் ஈட்டித்தருகின்றன என்பது உண்மையாகவே இருக்கலாம். ஆனால் சராசரியாய் ஒருநபர் ஐந்தாண்டுகளில் குடிப்பதற்காய் செலவழிக்கும் தொகை 1,25,000 ரூபாய் என்றும் அரசு அறிவித்திருக்கும் இலவசங்களின் மொத்தம் 50,000 ரூபாய்கூட இருக்காது என்று புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. அப்படியானல் மக்களிடமிருந்து பிடுங்கப்பட்ட 75,000 ரூபாய் மக்களிடமே இருந்தால் 75,000/5 வருடங்கள் = ஆண்டுக்கு 15,000 ரூபாய், மாதம் 1,250 ரூபாய்மக்களிடமே இருந்திருக்கும் அது மக்களின் வாழ்க்கை தரத்தை சற்றேனும் உயரச்செய்யும் என்பது உண்மைதானே?உயிர்மை பதிப்பக ஆசிரியர் மனுஷ்யபுத்திரன் பூரண மதுவிலக்கு உடனடி சாத்தியமில்லை என்றாலும் படிப்படியாய் குறைத்துக்கொள்ள முடியும் என்றும் சுலபமாய் கிடைக்கக்கூடியதாய் இல்லாமல் பார்த்துக்கொண்டாலே இதன் தாக்கம் குறையும் என்றும் தெரிவித்திருக்கிறார். மேலும் அம்மை போலியோ போன்ற நோய்களுக்கு மேற்கொள்ளும் தடுப்பு நடவடிக்கை முகாம்களைப்போல் குடியால் பாதிக்கப்பட்டோருக்கான மறுவாழ்வு மையங்களை ஏற்படுத்தவேண்டிய கடமையும் கட்டாயமும் அரசுக்கு உள்ளது என்கிறார். 


வருமானத்திற்காக, கள்ளச்சாராயத்தை அனுமதிக்காமல் இருப்பதற்காக என மதுவிக்கு சாத்தியமில்லை என்பதற்கு ஆயிரம் காரணங்களை முன்வைத்தாலும் வருமானத்தை பெருக்க பலவழிகள் இருப்பதாய்தான் வல்லுனர்கள் கருதுகிறார்கள். மேலும் அதற்கான வழிகளையும் அரசுக்கு முன்மொழிந்திருக்கிறார்கள். இதையெல்லாம் கருத்தில் கொண்டு செயல்பட்டால் அங்கிங்கேனாதபடி எங்கும் நிறைந்திருக்கும் மதுவிற்கு பூரண விலக்கு சாத்தியமே.  

Thursday, February 21, 2013

பட்ஜட்

பட்ஜட் கூட்டத்தொடரின் முதல் நாள் பேச்சில் பிரணாப்முகர்ஜி உணவுதானியம், பால், உரம் ஆகியவற்றின் உற்பத்தியை பலமடங்கு பெருக்கப்போவதாக தெரிவித்திருக்கிறார். உணவு தானியங்கள் உற்பத்தி ஹுன்டாய் கமபனியிலிருந்து கிடப்பதாய் நினைக்கிறார்கள் போலிருக்கிறது. விவசாயிகள் மாற்று தொழிலில் ஈடுபடவேண்டியதுதானே என்றும் விவசாயத்தையே நம்பியிருக்கவேண்டி யார் நிர்பந்தித்தார்கள் என்றும் கேட்டதுதான் இந்த அரசு. பெருகிவரும் ரியலெஸ்டேட் வியாபாரத்தை கவனிக்கையில் உணவுதானிய உற்பத்தியை உயர்த்தபோகிறோம் என்ற ஜனாதிபதியின் பேச்சு சிரிப்பைத்தான் வரவைக்கிறது.

கூடங்குள அனு உலைகள் இந்த ஆண்டு செயல்படத்தொடங்கும் என்றும் மேலும் இரண்டு உலைகள் விரைவில் தடங்கப்படும் என்றும் தெரிவித்திருக்கிறார். நெஞ்சழுத்தம்ன்னு சொல்வாங்களே அது இதுதான். கூடங்குள போராட்டக்காரர்கள் உலை கட்டிமுடிக்கும்வரை சும்மா இருந்துவிட்டு எல்லா பணிகளும் நிரைவடைந்துவிட்ட தருவாயில் போராட்டத்தை முன்னெடுப்பது நியாய‌மற்ற செயல் என்றும், இது சிலரின் தூண்டுதலால்தான் நிகழ்கிறது, வெளிநாட்டிலிருந்து பண பரிவர்த்தனை நடக்கிறது என ஏதேதோ வாய்க்கு வந்ததை உளரித்தீர்தவர்கள் மேலும் இரண்டு உலைகளை திறக்க திட்டமிட்டிருக்கிறார்களென்றால் இதை நெஞ்சழுத்தம் என்று சொல்லாமல் என்ன சொல்ல.

Tuesday, February 19, 2013

எந்த தேசத்தில் காந்தி பிறந்தார்?என்னதான் திட நெஞ்சமாக இருந்தாலும் பிரபாகரனின் மகன் சுடப்பட்டு கிடக்கும் காட்சியை கண்டு இதுவும் போர்குற்றங்களில் ஒன்று என கடந்துசெல்ல முடிந்தாலும். சுடப்படுவதற்கு முன் அந்த சிறுவனின் பார்வையும் மனநிலையையும் காட்டும் அந்த படங்களோடு சேர்த்து வரிசையாக பார்க்க நேர்ந்தபோது ஒரு நொடி கதிகலங்கிவிட்டது உண்மை. இலங்கை அரசின் போர்குற்றம் மட்டுமல்லாமல் இன்னும் எதிர்காலத்தில் செய்யத்துணியும் எல்லா குற்றங்களூக்கும் இந்திய அரசின் சபோர்ட் இருக்கும் என்பது ராஜபக்சேவுக்கு தெரியும். காரணம் இந்திய வெளியுரவுக்கொள்கையை உறுவாக்குவது இந்தியரல்ல( இத்தாலியர்). எனவே சுதந்திரத்திற்குபின் உலகமே வியக்கும்படியான வெளியுறவு கொள்கையை உருவாக்கிய நேரு அவர்களின் மகள் வேண்டுமானால் இந்தியாவின் அன்னையாக நடந்துகொண்டிருக்கலாம்( இலாமலும் இருக்கலாம்) ஆனால் சோனியா நிச்சயமாக இந்தியாவின் மருமகளாகத்தான் நடந்துகொள்கிறார்.( எந்த தொலைக்காட்சி தொடரிலாவது எந்த மருமகளாவது மாமியார் வீட்டின்மேல் அக்கறையாக இருக்கின்றாரகளா?)

ராஜபக்சேவுக்கும், இலங்கை அரசின் நடவடிக்கைகளூக்கும் இதுவரை எந்தவிதத்திலும் எதிர்ப்பு தெரிவிக்காத இந்திய அரசு சொல்லும் காரணம் சீனா. இலங்கை அரசுடன் நாம் மேற்கொள்ளும் உறவே சீனா இலங்கையுடன் ஏற்படுத்திக்கொள்ளும் உறவை தீர்மானிக்கும் என்பதுவாதம். இது ஒருவிதத்தில் சரியானதாகவும் இருக்கலாம் ஆனால் மனிதனேய அடிப்படையில் இது ஏற்றுக்கொள்ளமுடியாதது. அந்த 12 வயது குழந்தையின் மரணம்கூட இந்திய அரசின் மனதை மாற்றவிலையென்றால் அது எந்த அளவு இறுகிப்போய் இருக்கிறது என்பதைத்தான் காட்டுகிறது. இப்படியான தேசத்தில்தான் காந்தி பிறந்தாரா? 

Friday, February 15, 2013

நாயின் சா(சோ)தனைநடைபாதை நாயின் வாழ்வில்
சாலை கடத்தலும் ஓர் சாதனைதான்.
வால்சுருட்டி முகம்தூக்கி
வலதும் இடதும் வாகாய்பார்த்து
முயற்சியின் முதல் அடியை
எடுத்துவைக்கும் நேரம்
கம்போடு சாலைகடக்கும்
குருடனை கண்ட பயத்தில்
தள்ளிபோடப்பட்டது முதல் முயற்சி.


அச்சம் நீங்கி தெளிவடைந்து
அடுத்த முயற்சிக்கு பிரயத்தனப்பட‌
சிகப்புவிளக்கு பச்சையாய் மாறி
நெரிசல்கண்டது போக்குவரத்து.

காரணமின்றி சாலைகடக்க
முயற்சித்த அதற்கு
குழந்தைக்கு சோறூட்டும்
எதிர் திசை அன்னையின் - கை
கிண்ணம் இலக்கைத்தந்தது.

ஒருவாய் சோறேனும்
பெற்றுவிடும் வெறியிலும்
தாமதிக்கும் கணங்கள்
தாய் உள்ளே சென்றுவிடக்கூடிய‌
சந்தர்பத்தை தந்துவிடக்கூடும்
என்ற பயத்திலும் படபடப்பிலும்
சாலை கடக்க‌
வேகமாய் வந்த இருசக்கர வாகனம்
ஏறி இறங்கியது
நொடிப்பொழுதில்.

நடந்தது எதுவென்று அறியுமுன்னே
இனியும் தாமதிக்காது
கடந்துவிடுதலே
சாதுரியம் என்று
உடல் வலியையும் பொருட்படுத்தாது
தட்டுத்தடுமாறி
எதிர்பக்கம் பாய்ந்தவேளை
இடமிருந்து வந்த
பேருந்து மோதி
தூக்கியெறிந்த்தது எதிர் சாரிக்கு.

உயிரின் கடைசி நொடியிலும்
அன்னையின் கை சோற்றை
மென்றுகொண்டிருந்தது
நாயின் பார்வை.


படம் Google

Thursday, February 14, 2013

என் ராஜாங்கம்


வான் தேசத்து ராஜன் நான்
வானமே என் ராஜாங்கம்
சூரியனே என் ஆட்சிபீடம்
நிலவுதான் என் அந்தப்புரம்
நட்சத்திரங்கள் என் தேசத்து
அழகுராணிகள் - தவழ்ந்துசெல்லும்
வெண்மேகம் என் பிள்ளைகள்
கார்மேகங்கள் என் படை வீரர்கள்
இடியோசை என் போர் முரசு
ஒளியே என் பலம்
மழையே என் தானம்
காற்றே என் சுவாசம்
வான தேசத்து ராஜன் நான்....
வண‌ங்கிடுங்கள் என்னை.

கடல் அளவு காதல் ஒரு அனுபவம்.

கருமேக கூட்டமில்லா
நீல வானத்திற்கும்,
ஹா..வென பேரிரைச்சலோடு
பரந்துகிடக்கும் நீ....ள கடலுக்கும்
இடைப்பட்ட வெட்டவெளிக்குள்
கொட்டிக்கிடக்கும் நட்சத்திரங்களின்
நடுவே ஒற்றையாய்
சிரித்துக்கொண்டிருக்கிறது
நிலா!

விட்டுச்செல்ல மனமில்லாமல்
அதன் வெள்ளைச் சிரிப்பில்
சிக்குண்டவனாய் நான்....

யுகம் யுகமாய்
வந்துபோகும் நிலவிதிலே
முழுதாய் கண்வைக்கவே ஆளில்லை,
கால்வைத்தவன் புகழ்பேச
வாய் கிழியும்.

கண்ணெதிரே கொட்டிக்கிடக்கும்
கொள்ளை அழகையும்
கேமராவில் காட்டினால்
கைதட்டும் - மற்றபடி
எங்கும் குப்பைகொட்டும்.

நிலவை பருகும் மயக்கத்தில்
மறைந்துவிட்டன சில‌
மணித்துளி
வெறிச்சோடத்தொடங்கியது
மணல் வெளி.

ஆளில்லா கடற்கறையை
மொத்தமாய் குத்தகைபிடித்தவனாய்
ஓடித்திரிந்தேன், பாடிப்பற‌ந்தேன்
மணல்வீடு கட்டி
அதில்
மனம்போல் வாழ்ந்தேன்.

நேரம் ஆக ஆக
கட்டிப்பிடித்திருந்த சில‌
காதல் ஜோடிகளும்
எட்டி நடைபோட்டன
சாலையை நோக்கி.

இப்படி ஒரு சொர்க்கம்
இங்கிருக்க
பேரிரைச்சல்களாலும்,
அர்தமில்லா விரைவுகளாலும்,
சுயநல சூழ்ச்சிகளாலும்
சோர்வடையச்செய்யும் பக்கத்து
நரகத்தின்பால்
எதைத்தேடி விரைகின்றனர்
என்ற கேள்விக்கு
விடைதேடி நேரத்தை
வீணடிக்கவிரும்பாததால்
பார்வையை விலக்கிக்கொண்டேன்
கடல்நோக்கி.

கடற்கறை மணலில்
காலடிச்சுவடுகள்
ஒவ்வொன்றும் ஒவ்வொரு
நினைவுகள்.
எவர்தடம் எதுவென்று
எவர் சொல்லமுடியும் - எவர்
சுவடும் எவர் பதிவும்
எடுத்தெரியவும், மறுதலிக்கவும்
எவரால் முடியும்.

காலப்பெருவெளியில்
காற்றாடியாய் சுழன்றாலும்
கடைசி என்னவோ
மண்ணில்தான்.
ஏற்கமுடியாதவருகே
வாழ்க்கை போராட்டம் - அல்லாதவர்க்கு
பூந்தோட்டம்.

இவ்வாறெல்லாம் எண்ணியபடி
மணல் மடியில் தலைவைத்து
அலையோசை தாலாட்டில்
சற்றே கண்ணயர்ந்தேன்.
இரண்டு கடமையுணர்வு லட்டிகள்
தட்டியெழுப்பி அழைத்துச்சென்றனர்
சந்தேகத்தினடிப்படையில்.


Wednesday, February 13, 2013

பார்லிமென்ட் தாக்குதல் வழக்கின் முக்கிய குற்றவாளிக்கு தூக்குதருமத்தின் வாழ்வுதனை
சூது கவ்வும் - தருமம்
மறுபடி வெல்லும் - வெல்கையில்
உலகம் உயிரோடு இருக்காது.
எஞ்சியுள்ள சிலர்மட்டுமே
தருமம் வென்றதாய்
தம்பட்டம் அடிப்பர்.
யாருக்கு தெரியும் வென்றது
சூதாயும் இருக்கலாம்.

நீங்கள் இதையும் விரும்பக்கூடும்