நடைபாதை நாயின் வாழ்வில்
சாலை கடத்தலும் ஓர் சாதனைதான்.
வால்சுருட்டி முகம்தூக்கி
வலதும் இடதும் வாகாய்பார்த்து
முயற்சியின் முதல் அடியை
எடுத்துவைக்கும் நேரம்
கம்போடு சாலைகடக்கும்
குருடனை கண்ட பயத்தில்
தள்ளிபோடப்பட்டது முதல் முயற்சி.
அச்சம் நீங்கி தெளிவடைந்து
அடுத்த முயற்சிக்கு பிரயத்தனப்பட
சிகப்புவிளக்கு பச்சையாய் மாறி
நெரிசல்கண்டது போக்குவரத்து.
காரணமின்றி சாலைகடக்க
முயற்சித்த அதற்கு
குழந்தைக்கு சோறூட்டும்
எதிர் திசை அன்னையின் - கை
கிண்ணம் இலக்கைத்தந்தது.
ஒருவாய் சோறேனும்
பெற்றுவிடும் வெறியிலும்
தாமதிக்கும் கணங்கள்
தாய் உள்ளே சென்றுவிடக்கூடிய
சந்தர்பத்தை தந்துவிடக்கூடும்
என்ற பயத்திலும் படபடப்பிலும்
சாலை கடக்க
வேகமாய் வந்த இருசக்கர வாகனம்
ஏறி இறங்கியது
நொடிப்பொழுதில்.
நடந்தது எதுவென்று அறியுமுன்னே
இனியும் தாமதிக்காது
கடந்துவிடுதலே
சாதுரியம் என்று
உடல் வலியையும் பொருட்படுத்தாது
தட்டுத்தடுமாறி
எதிர்பக்கம் பாய்ந்தவேளை
இடமிருந்து வந்த
பேருந்து மோதி
தூக்கியெறிந்த்தது எதிர் சாரிக்கு.
உயிரின் கடைசி நொடியிலும்
அன்னையின் கை சோற்றை
மென்றுகொண்டிருந்தது
நாயின் பார்வை.
படம் Google
சோக கவிதை! அருமையான விவரிப்பு! நன்றி!
ReplyDeleteபாவம் நாயை பிழைக்க வைத்திருக்கலாம் .நாய் எதற்கு ஓடுகிறது என்று யாருக்கும் தெரியாது . அது போல தான் நாமும் ஓடிகொண்டிருக்கிறோம்
ReplyDelete