சொல்லத்துணியும் நாள்

"நடந்தவைகளைச்சொல்வேன்,
நடக்க இருப்பவைகளைச்சொல்வேன்
கேள் என்னிடம் எதுவாகினும்" என்றான்.

"எங்கே சொல்பார்ப்போம்"
என்று நீட்டினேன் வலக்கையை.

உள்ளங்கையை உற்றுபார்த்தவன்
"சுக்கிரன் உச்சம்" என்றான்
"வஞ்சனை துளியுமில்லை" என்றான்,

எனக்குள் உதறல்
உலகுக்கு தெரியாமல் அடைகாக்கும்
உள்மன அழுக்குகளை
அடுக்கிவிடப்போகிறானோ என்று.

தொடர்ந்தவன் சொன்னான்
"நீ கடந்துவந்த பாதை கடினமானது" என்று

ஒப்புக்கொண்டேன்

"மனதில் ஒருத்தியை இருத்தியிருகிறாய்
இல்லையா? ஆமாவா?" என்றான்

பால்ய காதலியின் நினைவில்
"ஆம்" என்றேன்.

"உழைக்கத்தயங்காதவன் நீ என்றான்"

அரைமனதாய் "ஆம்" என்றேன்

"பாசமும் கருணையும் 
இரு கண் உனக்கென்றான்"

பட்டென இழுத்துக்கொண்டேன் கையை
இதுவரை அப்படி 
இருந்ததில்லை என்ற உறுத்தலோடு

மேலும் இல்லை என மறுக்கமுடியாத
புத்திசாலிதனங்கள்  நிறைந்தவைகளாய்
தொடர்ந்தன கேள்விகள்.

என் தேவையும் அதுதான் என்பதால்
நிறைவாய் எடுத்து நீட்டினேன்
இறுதியாய் வைத்திருந்த 10 ரூபாயை.

இனி
பதில்களில் சொன்ன
பொய்கள் பொசுக்கிக்கொண்டிருக்கும்
நிஜமான பதில்களை 
சொல்லத்துணியும் நாள்வரை.

Comments

  1. இப்படி எல்லாம் நினைக்கவே ஒரு தைரியம் வேண்டும்...

    வாழ்த்துக்கள்...

    ReplyDelete

Post a Comment