எங்கெங்கு கானினும் ....




நம் வீட்டு வாசலுக்கு வரும்வரை எதுவுமே நம்மை பாதிப்பதில்லைஎவன் எக்கேடு கெட்டால் எனக்கென்ன என்ற மனப்போகில்தான் உலவிக்கொண்டிருக்கிறோம்கடந்த இரண்டாண்டுகளுக்கும் மேலாக போராடிக்கொண்டிருக்கும் கூடங்குளம் போராளிகள் விஷயத்தில் நம் பார்வை நாட்டின் வளர்ச்சிதிட்டங்களுக்கு எதிரானவர்கள் என்பதாகவோ அல்லது தமிழகத்தின் மின்வெட்டுக்கு காரணமானவர்கள் என்பதாகவோதான் பதிந்திருக்கிறது. பொருப்புமிக்க மந்திரிமார்களும் பல அபத்தமான அறிக்கைகளை அவதூறுகளை கட்டவிழ்த்துவிடுகிறார்கள். கடந்த பல ஆண்டுகளாய் நமக்கு வாய்த்த அரசுகள் தெரிந்தே விவசாயத்தை குழிதோண்டி புதைத்திருக்கிறார்கள்விடுதலை பெற்ற முதல் சில ஐந்தாண்டு மற்றும் பத்தாண்டு திட்டங்களில் விவசாயத்திற்கு அளிக்கப்பட்ட முக்கியத்துவம் தொடர்ந்துவந்த ஆண்டுகளில் தொடரவில்லை. தொழில்புரட்சியும் பசுமைபுரட்சியும் மேற்கொண்ட போட்டியில் பசுமைபுரட்சி அதிக மகசூலுக்கான வெறியில் ஒட்டுரகத்தையும் (பச்சைவாழைபழம் காணாமல் போயாச்சு) செயற்கை உரத்தையும் ஆதரித்து நம்தேசத்து மண்ணை நாசமாக்கியது என்றால் தொழில்புரட்சி லாபவெறியை தலைக்கேற்றி முதலாளிகளின் மனங்களை நாசமாக்கியது.(உழைக்கும் மக்களின் உரிமைக்காக யாரும் குரல் கொடுத்துவிடக்கூடாது என்பதற்காக தொழிற்சங்கங்கள் அமைக்கதடை).இதுவெல்லாம் போதாமல் மேற்கத்திய நாடுகளின் ஒ(ச)ப்பற்ற பொருளாதார கொள்கையை அப்படியே அடியொற்றி மேற்கொள்ளப்பட்ட உலகமயமாக்கல் என்ற வேதாளமும் அதன் கன்னிமை தந்த மயக்கமும் இருபது ஆண்டுகளுக்குபின் நம்மை குடைய தொடங்கியதும் எல்லா சாலைகளும் ரோமை நோக்கி என்பதுபோல் இன்று நாட்டின் எல்லா சீர்கேடுகளுக்கும் காரணமாய் உயரும் கைகள் மொத்தமும்  உலகமயமாக்களை  நோக்கியே நீள்கிறது. தமிழகத்தின் இன்றைய சீர்கேடாய் கருதப்படும் பெறுகிவரும் குடிப்பழக்கமும் அதன் ஒரு பக்கம்தான் என நிறுவமுயற்சிக்கிறார்கள். அதில் உண்மை இல்லாமல் இல்லை ஆனாலும் முற்றும் உண்மையல்ல எனபது மட்டுமல்லாமல் இந்தவாதம் குடிக்கு எதிரான விழிப்புணர்ச்சியை மழுங்கடிக்க செய்துவிடக்கூடும் என்பது என் கருத்து.

குடியை ஒரு தனிமனித பிரச்சனையாக பார்க்காமல் அது ஆரோக்கியம் சார்ந்த பிரச்சனையாகவும், சமூகம் சார்ந்த பிரச்சனையாகவும் பார்க்கப்பட்டதால்தான் இருபது வருடங்களுக்கு முந்தைய அரசுகள் "குடி குடியை கெடுக்கும் குடிப்பழக்கம் உடல் நலத்தை கெடுக்கும்” என்று சாத்தியப்படும் எல்லா ஊடகங்கள் வாயிலாகவும் தன் மக்களுக்கு வலியுருத்தியது. ஆனால் 24,000 கோடிகளுக்கு வருமானத்தை ஈட்டித்தரும் ஒரு மாபெரும் தொழிலாக வளர்ந்திருக்கும் இன்றைய சூழ்நிலையில் "குடி குடியை கெடுக்கும் குடிப்பழக்கம் உடல் நலத்தை கெடுக்கும்” என்ற வாக்கியத்திற்கு என்ன மரியாதையை எதிர்பார்க்கமுடியும். அல்லது இந்த பிரச்சாரம் என்ன விளைவை ஏற்படுத்திவிடமுடியும்.இன்று தமிழகமெங்கும் மதுவிலக்கு கோரிக்கைக்கான குரல்கள் அதிகரித்துள்ளன. ஆச்சரியப்படும் வகையில் பல அரசியல் கட்சிகளும் இந்த போராட்டத்தில் களம் இறங்கியுள்ளது மகிழ்ச்சியையும் நம்பிக்கையையும் அளிக்கிறது. என்றாலும் ஆட்சிக்கு வரகூடிய வாய்ப்பை பெற்றுள்ள பிரதான கட்சிகளான தி.மு.க வும், அ.தி.மு.க வும் வாயே திறக்கவில்லை என்பது கவனிக்கப்படவேண்டிய விஷயம். (அரசு டாஸ்மாக் கடைகளுக்கு சரக்கு சப்ளை செய்யும் இரண்டு நிறுவனங்களில் ஒன்று அய்யாவினுடையது, மற்றொன்று அம்மாவினுடையது எப்படி வாய்திறக்கமுடியும்). மதுக்கடைகளை அரசே நடத்துவதற்கும் மதுவிலக்கை ஆதரிக்காததற்கும் காரணங்களாய் கூறப்படுபவைகளில் முக்கியயமானது கள்ளச்சாராயம். மதுக்கடைகள் இல்லாவிட்டால் மக்கள் கள்ளச்சாராயம் குடித்தே செத்துப்போவார்கள் என்பது மதுவிலக்கை எதிர்ப்பவர்களின் வாதமாக இருக்கிறது. கூடவே இங்கே மது ஒழிக்கப்பட்டால் குடிக்கு பழக்கமானவர்கள் பக்கத்து மாநிலங்ககுக்கு சென்று குடிப்பார்கள் அந்த வருமானம் அண்டைமாநிலங்களுக்கு போய்விடும் என்றவாதமும் முன்வைக்கபடுகிறது.   நீங்க நடிக்க வரலைன்ன என்ன செஞ்சிருப்பீங்க என்ற கேள்விக்கு பெருபாலான நடிகைகள் டாக்டர் ஆகியிப்பேன் என்பார்கள். டாக்டர் ஆகக்கூடிய வாய்ப்பிருப்பவர்கள் நிச்சயமாக டாக்டராகத்தான் ஆகியிருப்பார்கள் நடிக்க வந்திருக்கமாட்டார்கள். (நடிகர் ஜெமினிகணேசன் குடும்பத்தில் ஒருவர் ஒருபடமோ இரு படமோ நடித்துவிட்டு மீண்டும் படிக்கசென்றுவிட்டார் என்று கேள்வி) அதேநேரம் நடிகையாகாவிட்டால் டாக்டர் ஆவது அதிகபட்சம் 5 -10 சதவிதமாகத்தான் இருக்கும் காரணம் அதில் உள்ள சிரமங்கள் அத்தகையது. அதே போலதான் குடிக்கு பழக்கமானவர்களிடம் கடைகளை மூடிட்டா என்ன செய்வீங்க என்றால் பாண்டிச்சேரிக்கு போனேன்னு சொல்வாங்க ஆனா தினமும் பாண்டிச்சேரிக்கு போய்வரமுடியுமா? அப்படியே போய்வந்தாலும் அது எத்தனை சதவிகித சாத்தியம்கொண்டது. மதுக்கடைகள் மூடப்பட்ட கொஞ்சகாலம் இது நடக்கலாம் தொடர்ந்து நடப்பதற்கு வாய்ப்பில்லை. அடுத்து கள்ளச்சாராயம். இன்று டாஸ்மாக்கை உருவாக்கியவர்களின் அதேகட்சிதான் கள்ளச்சாராய சாம்ராஜியங்களையும் வளர்த்தெடுத்தது என்பது அரசியல் அறிந்தவர்கள் அறிவார்கள். கள்ளச்சாராய முதலாளிகள் அரசின் கடைக்கண் பார்வையும் காவல்துறையின் கருணையும் இல்லாமல் வளார்ந்துவிடமுடியாது. இன்று களச்சாராய அபாயத்தைப்பற்றி பேசும் ஆளூம் கட்சியோ ஆண்டகட்சியோ அதை தங்களால் கட்டுப்படுத்தமுடியாது என்பதை ஒப்புக்கொள்கிறார்களா?. ஆம் எனில் இந்த அரசு எதற்காக செயல்படுகிறது யாருக்காக செயல்படுகிறது. கள்ளச்சாராயத்தால் ஏற்படும் பாதிப்புகளும் சாவுகளும் தவிர்க்கப்படவேண்டியவைதான். ஆனால் அதற்கு மாற்றாகத்தான் டாஸ்மாக் என்பது கேலிக்கூத்து. உடலுக்கு தீங்கு இல்லாத ஒரு பாணம் கள் அதற்குதடை அறிவித்துவிட்டு டாஸ்மாக்கை திறந்துவைத்திருப்பது அரசுக்கு வருமானம் வரவேண்டித்தான் என்பதோடு மட்டுமல்லாமல் தன் நிறுவனத்திற்கும் தங்களுக்குமான லாபத்திற்காகத்தான் என்பது சொல்லித்தெரியவேண்டியதில்லை.அரசு அதிரடியாய் அறிவித்த இலவசங்களுக்கான வருமானத்தை டாஸ்மாக்க்குகள்தான் ஈட்டித்தருகின்றன என்பது உண்மையாகவே இருக்கலாம். ஆனால் சராசரியாய் ஒருநபர் ஐந்தாண்டுகளில் குடிப்பதற்காய் செலவழிக்கும் தொகை 1,25,000 ரூபாய் என்றும் அரசு அறிவித்திருக்கும் இலவசங்களின் மொத்தம் 50,000 ரூபாய்கூட இருக்காது என்று புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. அப்படியானல் மக்களிடமிருந்து பிடுங்கப்பட்ட 75,000 ரூபாய் மக்களிடமே இருந்தால் 75,000/5 வருடங்கள் = ஆண்டுக்கு 15,000 ரூபாய், மாதம் 1,250 ரூபாய்மக்களிடமே இருந்திருக்கும் அது மக்களின் வாழ்க்கை தரத்தை சற்றேனும் உயரச்செய்யும் என்பது உண்மைதானே?உயிர்மை பதிப்பக ஆசிரியர் மனுஷ்யபுத்திரன் பூரண மதுவிலக்கு உடனடி சாத்தியமில்லை என்றாலும் படிப்படியாய் குறைத்துக்கொள்ள முடியும் என்றும் சுலபமாய் கிடைக்கக்கூடியதாய் இல்லாமல் பார்த்துக்கொண்டாலே இதன் தாக்கம் குறையும் என்றும் தெரிவித்திருக்கிறார். மேலும் அம்மை போலியோ போன்ற நோய்களுக்கு மேற்கொள்ளும் தடுப்பு நடவடிக்கை முகாம்களைப்போல் குடியால் பாதிக்கப்பட்டோருக்கான மறுவாழ்வு மையங்களை ஏற்படுத்தவேண்டிய கடமையும் கட்டாயமும் அரசுக்கு உள்ளது என்கிறார். 


வருமானத்திற்காக, கள்ளச்சாராயத்தை அனுமதிக்காமல் இருப்பதற்காக என மதுவிக்கு சாத்தியமில்லை என்பதற்கு ஆயிரம் காரணங்களை முன்வைத்தாலும் வருமானத்தை பெருக்க பலவழிகள் இருப்பதாய்தான் வல்லுனர்கள் கருதுகிறார்கள். மேலும் அதற்கான வழிகளையும் அரசுக்கு முன்மொழிந்திருக்கிறார்கள். இதையெல்லாம் கருத்தில் கொண்டு செயல்பட்டால் அங்கிங்கேனாதபடி எங்கும் நிறைந்திருக்கும் மதுவிற்கு பூரண விலக்கு சாத்தியமே.  

Comments

  1. உண்மைதான் அடித்தது மக்கள் இன்னமும் அதே நிலையில் இருப்பதற்கு இந்தக் குடிதான் காரணம். மதுவிலக்கு அமல் படுத்தினால் தற்காலிகமாக வருமானம் குறையலாம். ஆனால் வேறு வழிகளில் வருமானம் ஈட்ட அப்போதுதான் வழி பிறக்கும்.

    ReplyDelete

Post a Comment