Thursday, May 24, 2012

அறம் செய்ய விரும்பு


"தருமம் தலைகாக்கும்"னு சொன்னா

"அப்போ ஹெல்மெட் போடமலேயே  போலாமா"ங்கறான் ஒருத்தன்.

'எவன்கிட்ட மாட்ட‌றயோ அவனுக்கு 50 ரூ தர்மம் பண்ணிட்டா(பிச்சை) தாராளமா போலாங்கறான்' இன்னொருத்தன்.

வீடுகளில் உபயோகப்படுத்தப்படாமல் இருக்கும் பழைய துணிமணிகளை இப்படித்தான் அனாதை இல்லங்களுக்கு தள்ளிவிடுவதும், சுபநிகழ்ச்சிகளில் அளவுக்கு அதிகமாய்போகும் சாப்பாட்டை சிறுவர் இல்லங்களுக்கு கொடுத்துவிடுவதும், அய்யா தருமம்பன்னுங்க சாமின்னு கேக்கறவங்க முகத்தைக்கூட பார்க்காமல் அல்லது பார்க்கபிடிக்காமல் 1 ரூபாயோ 2 ரூபாயோ போட்ட்டுட்டு போவதுமே தருமம்ன்னு நம்பிகிட்டிருக்கோம். உண்மையில் தருமம் பிறர்கேட்டு கொடுப்பது அல்ல. காலம் அறிந்து சமயமறிந்து நாமாகவே தரக்கூடியது. தரக்கூடியதுங்கறதுகூட ஏதோ ஒருவித உயர்நிலையை காட்டுகிறது எனவே அந்த வார்தைகூட வேண்டாம் செய்யக்கூடியது (உதவி)  என்று சொல்வதுதான் சரியானதாக இருக்கும். அப்படி செய்யற உதவியை மனநிறைவோட‌ செய்யனும். எந்த விஷயத்திலும் மனநிறைவு வரனும்னா அதை நாம் விரும்பி செய்யனும், இதைதான் அறம் செய்ய விரும்பு சொன்னாங்க ஒளவையார்.


அறம் செய்ய விரும்புன்னு சொன்ன அதே தமிழ் கூறும் நல்லுலகம்தான் (அதே ஒள‌வையார் தான்னு சொல்லி இருப்பேன் ஆனா அவ்வையார்ங்கறது ஒருத்தர் இலலை வெவ்வேறு காலகட்டத்தில் வாழ்ந்த புலவர்கள்னு சொல்றாங்க‌ நமக்கெதுக்கு வம்பு)ஏற்பது இகழ்ச்சின்னும் சொல்லியிருக்கு. ஏற்பது இகழ்ச்சிங்கற வரி பிறர்கிட்ட தானமோ உதவியோ கேட்கும் நிலையில் இருப்பவர்களிடம் அப்படியெல்லாம் கேட்கக்கூடாது அது ஒரு மானக்கேடான விஷயம் அதனால யாரும் கையேந்தி நிக்ககூடாதுனு சொல்ற‌ அட்வைஸ்போல தெரிந்தாலும் உன்மையில் ஒள‌வை இந்த வரிகளை கையேந்தி நிற்பவர்களிடம் சொல்லியிருக்கமாட்டார் என்றுதான் எனக்கு தோனுது. ஏன்னா பிச்சை எடுப்பவனிடம் பிச்சை எடுப்பது அசிங்கம் அவமானம்ன்னு சொல்வதால் எந்த புண்ணியமும் இருக்கப்போவதில்லை.(நானும் பிச்சைங்கற லெவல்லயே பேசுவதாக‌ நினைக்கவேண்டாம் ஒரு புரிதலுக்காகவேண்டிதான்). ஆக ஒளவையார் தேசாந்திரியாக சுற்றிக்கொண்டிருக்கையில் பார்க்க நேர்ந்த வறுமையை மக்களின் மீளமுடியாத்துயரை கண்டு மக்களின் இந்நிலைக்கு மக்கள்மேல் அக்கறையில்லாத அரசனும் சுயநலமிக்க செல்வந்தர்களும்தான் காரணம் என அறிந்து தான் சந்திக்கும் அரசர்களிடமும், செல்வந்தர்களிடமும் 'ஏம்பா உன் ஆட்சியில இத்தினிபேரு இத்தினி அவஸ்த்தைப்படராங்க இது உனுக்கு அசிங்கமா இல்லையா? அவங்க இந்த நிலமையில இருப்பதற்கு உன் ஆட்சிதானே காரணம் இது உனக்கு அவமானமா இல்லையா? அதால தருமம் பண்ண பழகிக்கோ அவங்க ஏற்பது உனக்கு இகழ்ச்சின்னு செவுட்டுல அறையராமாதிரி சொல்லியிருக்காங்கன்னு எனக்கு தோனுது. உங்களுக்கு எப்படி?

Sunday, May 20, 2012

அம்பெத்கார் ...டூன்

சர்ச்சைக்குரிய நேரு, அம்பெத்கார் கார்டூனை நீக்கக்கோரி எழுந்த பெருத்த அமளிக்குப்பின் அக்கார்டூன்களை பாடதிட்டத்திலிருந்து நீக்க மத்திய அரசு ஒப்புக்கொண்டுள்ளது மகிழ்ச்சியே. பாராளுமன்றத்தில் அனைத்துக்கட்சி MP க்களும் ஒட்டுமொத்தமாய் குரல் கொடுத்திருப்பதைபார்து யாரும் பூரித்துபோய்விடத்தேவையில்லை, திருமாவளவன் போன்ற தலித்மக்களின் தலைவர்கள் இந்த சர்ச்சையை எழுப்பியதற்கும் மற்ற MP க்கள் அதற்கு ஆதரவாய் குரல்கொடுத்ததற்கும் உள்ள வித்தியாசம், மற்றகட்சிக்கு இது தலித்மக்களின் வாக்கு வங்கியை பங்குபோட்டுக்கொள்ள உதவும் இன்னொரு விஷயம். ஆனால் தலித்மக்களைப் பொருத்தவரை கடந்த நூற்றாண்டுகால அனுபவங்களும் அவமதிப்புக்களும் இன்றும் இவ்வாறான நவீனமுறைகளில் அறங்கேரிக்கொண்டுதான் இருகின்றது அதன் ஒரு பரிமாண‌மாய்தான் தாங்கள் கடவுளாக கருதும் பாபா சாகிலை மாணவர்கள்  மத்தியில் அகவுரவப்படுத்துவதற்காகவே இந்த கார்டூன் சேர்க்கப்பட்டிருக்குமோ என எண்ணவைப்பது இயல்புதான் என்பதை நாம் ஒப்புக்கொள்த்தான் வேண்டும். சம்பந்தபட்ட கார்டூனில் நேரு காண்ஸ்டிடூஷனை விரட்டினாரா அம்பெத்காரை விரட்டினாரா என்பது அன்றைய அரசியல் தெரிதவர்களுக்குத்தான் விளங்கியிருக்கும், இன்று இதை ஒரு பொதுவான புரிதலுடன் பார்போமேயானால் அம்பெத்கார் நத்தையை விரட்டுகிறார் நேரு அம்பெத்காரை விரட்டுகிறார்  என்றுதான் புரிந்துகொள்ளப்ப்டும்.

1995ல் வெளியாகிய முத்து திரைப்படம் அன்றைய அரசியல் சூழ்நிலையில் மக்களால் புரிந்துகொள்ள‌ப்பட்ட விதத்திற்கும் இன்றைய தலைமுறை அதை புரிந்துகொள்வதற்கும் நிறைய வித்தியாசம் உள்ளது.இதை புரிந்துகொண்டால்தான் இந்த கார்டூனை நீக்கக்கோருபவர்களின் மனநிலையும் புரியும்.

Tuesday, May 15, 2012

நானும் பா(ர)திகாணி நிலம் வேண்டும்
குறைந்தது
கால் கிரவுண்டாவது வேண்டும்.
கார்ணர் பீஸாய் வேண்டும்,
அப்ரூவரோடு, பட்டா, சிட்டா
அடங்கலும் வேண்டும் -
அக்கம் பக்கம் சுற்றிலும்
ஆள்நடமாட்டம் வேண்டும்.
ஆபீஸிற்கு பக்கத்திலே வேண்டும்,
என் பட்ஜெட்டிற்குள்ளேயும் வேண்டும்.
மண் வளம் வேண்டும்,
மரங்கள் அடர்ந்த சாலையும் வேண்டும்,
இணக்கமான உறவுடன்
எதிர் வீடு வேண்டும்,
நடைபயிலும் தூரத்தில்
நல்ல பள்ளியும் வேண்டும்.
எக்காலத்திலும் தடைபடாத‌
குடிநீர் வேண்டும்.
கண்சிமிட்டாமல் எரியும்
தெரு விளக்கு வேண்டும்.
இறவில் உலவும் கூர்க்கா வேண்டும்,
பின் இர‌வில் வரநேர்ந்தால்
குறைக்காத தெருநாயும் வேண்டும்.

இவையாவும் கிடைகாதவரை
நானும் பா(ர)தியே!


Monday, May 14, 2012

கல்யாண மாலையும் கம்மினாட்டி( community ) மீட்டிங்கும்

தமிழகத்தில் ஜாதி வெறிக்கு பலியான அப்பாவிகளின் ஆத்மாக்கள் அல்லது ஆவிகள் என்றாவது ஒருநாள் ஜாதி முற்றிலுமாய் ஒழிந்து தன் சந்ததியினராவது ஜாதித்தறாரால் கொல்லப்படாமல் நிம்மதியாய் வாழ்வார்கள் என்ற கனவோடு!!! உலவிக்கொண்டிருக்க‌ இல்லை இல்லை அது ஒரு பகல்கனவுதான் என சம்மட்டியால் ஓங்கியடித்து சத்தியம் செய்வதைப்போல் ஜாதி வாரியான கணக்கெடுப்பை மேற்கொண்டுள்ளது அரசு.

ஜாதி ஒழியவேண்டும் ஜாதி ஒழியவேண்டும் என்று வாய்கிழிய பேசினாலும் ஒவ்வொரு ஜாதி மக்களும் அதன் தலைவர்களும் ஜாதியை அழிந்துவிடாமல் பாதுகாத்துக்கொண்டிருக்கிண்றனர். உயர்ஜாதிகளாய் கருதப்படும் ஜாதி மக்கள் தாங்கள்தான் உயர்ந்தவர்கள் என காட்டிக்கொள்வதற்காக அரசின் ஜாதி வாரி கணக்கெடுப்பில் அவர்கள் ஜாதிக்குள்ளேயே உலவும் உட்பிரிவுகளை தங்களோடு இணைக்கக்கூடாது அல்லது இணைக்கவேண்டும் என பல க்ருத்தாக்கங்களை உருவாக்கிவருகிறனர். தாழ்த்தப்பட்டவர்களாக அறியப்படும் ஜாதிகள் தங்களுக்குள் நிலவும் உட்பிரிவுகளை தனித்தனி அடையாளங்களோடு ஒப்பிட்டு அவற்றை தனி கரிசன‌த்தோடு அனுகவேண்டும் என்று கோரிகை வைக்கின்றனர்.    உள்ளபடியே ஜாதி வேண்டுமா?  வேண்டாமா? எனும் விவாதங்கள் ஏற‌த்தாழ எல்லா தனியார் தொலைக்காட்சிகளிலும் காணக்கிடைக்கின்றன.ஜாதிகளற்ற சமூகம் வளரவேண்டி ஒருபுரம் கலப்புத்திருமண‌த்தை ஆதரித்தும், அதிகரிக்கச் செய்யவேண்டியும் அத்தம்பதியினருக்கு அரசு ஊக்கத்தொகையும் அளித்துவரும் அதேவேளையில் சமீபகாலங்களில் ஜாதிவாரியான திருமண தகவல் மையங்களின் எண்ணிக்கையும் அதிகரித்துக்கொண்டே வருகின்றன‌.

கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக திருமண தகவல் மையமாக செயல்ப்ட்டுக்கொண்டிருக்கும் கல்யாணமாலை ஜாதிவளர்ப்பு மையங்களின் தலையிடமாய் உருவெடுத்துள்ளது என்றால் மறுப்பதற்கில்லை. வருகிற 16-05-2012 அன்றும் குறிப்பிட்ட சில ஜாதிகளின் வரண்களுக்கான ஒருங்கமைவை நடத்தவுள்ளது. இதன்மூலம் ஜாதி வளருமோ? ஒழியுமோ? தெரியாது ஆனால் ஒருங்கிணைப்பாள‌ர்களின் கல்லா நிறையும் என்பதில் சந்தேகமில்லை.

ஜாதி ஒரு பணம்காய்க்கும் விருட்சம். அதை வேரொடு அழிக்க யாருக்குத்தான் மனம்வரும்?

Friday, May 11, 2012

இளிச்சவாய் இனா வானா க்களுக்கு.

நீங்கள் ஏன் N mart ல உறுப்பினரா சேரக்கூடாது?  இப்படித்தான் தொடங்கினார் அவர்

N mart னா என்ன?  கேள்வி கேட்காமல் இருந்திருக்கலாம் விதி யாரை விட்டது? 

அது ஒன்னுமில்லைங்க நீங்க மேல போட்டுக்கர சட்டைலேர்ந்து தரை பெறுக்கும் தொடப்பம் வரைக்கும் 500 வகையான பொருட்களும் ஒரே இடத்தில் கிடச்சா எவ்வளவு நல்லா இருக்கும்?  இருக்கும்தானே?

ஆமா.. ஆமா..

அதுவும் மாசா மாசம் 250/- ரூ பொருட்கள் இலவசமாவும் கொடுத்து கூடவே 1500/- ரூ மதிப்பிலான பொருட்களுக்கு கடனும் கொடுத்தா நல்லதுதானே? இன்னிக்கு இருக்கிற் நெலமையில அண்னன் தம்பி கூட 5 பைசா தற‌தில்லை 1500/- ரூ கடன் 45 நாள்குள்ள திருப்பி கொடுத்துட்டு மறுபடியும் 1500/- ரூ கடன் வாங்கிக்கலாம்.

ஓ அப்படிங்களா? 

இன்னும் இருக்கு கேளுங்க 48 மாசத்துல 72000/- ரூ மதிப்பில் பொருட்கள் வாங்கிட்டீங்கன்னா 11 000/- ரூ திருப்பித்தந்துடுவாங்க.

ம்..ம்ம்..

நீங்க செய்யவேண்டியதெல்லாம் ஒன்னே ஒன்னுதான் 5500/- ரூ கட்டி உறுப்பினரா சேந்துட்டீங்கன்னா உங்களுக்கு அதே 5500/- ரூ மதிப்பில் கோட் சூட் கொடுத்துடுவாங்க, கூடவே CD யும் Kit Package ம் கிடைக்கும்.

என்னது 5500/- ரூவாயா? அடிக்கிர வெய்யில்ல நீ கொடுக்கர கோட்டையும் சூட்டையும் போட்டுகிட்டு நான் என்ன அனில் அம்பானியோட மீட்டிங் பேசப்போறேனா இல்லன்னா உதயநீதி ஸ்டாலின் போல மோத்வானியோட பாலைவனத்துல டேன்ஸ்தான் ஆடப்போரேனா?  போங்கடா கொய்யாளுங்களா. அதவிடு நான் மளிகை சாமான் வாங்கபோறேன் அவன் கொடுக்கப்போறான் நடுவுல எதுக்கு 5500/- ரூ அதுக்கு பதிலா 2 கிராம் தங்கம் வாங்கி வெச்சா 4 வருஷத்துல அதுவாவே 15000/- ரூ வந்துடப்போவுது எங்கயும் விக்கமுடியாத கோட்டை எந்தலையில கட்டப்பாக்கறயா? ஒழுங்கு மரியாதையா எழுந்து ஓடிடு மவன.  இப்படியெல்லாம் சொல்லத்துடித்தது மனது. ஆனா அவர் என்ன செய்வார் பாவம் சீக்கரமா பணக்காரனா ஆயிடனும்ம்னு எல்லாரும் ஆசைப்படுவதுபோலத்தானே அவரும் நினைக்கிறார்.

ஆனா இவரை இப்படியே விட்டா நாளையும் தொந்தரவு செய்வார் அதனால நல்ல திட்டம்தான் சார் இதில Helthcare products இருக்கா சார்? நான் ஒரு பிட்டை போட்டேன்.

Helthcare product டா? இது அவர் விதி.

ஆமாம் சார் இன்னிக்கி மக்கள் மத்தியில உடல்நலம் பத்தி நல்ல விழிப்புணர்வு வந்திருக்கு அதுக்குத்தான் AMWAY நிறுவனம் தரமான உடல்நலம் சார்ந்த பொருட்களை அவங்களே தயாரிச்சு குறைஞ்ச விலையில கொடுக்கராங்க. நீங்கசொன்ன அதே கான்ஸ்செப்ட்தான் நாம பொருட்களை உபயோகிச்சுட்டு மத்தவங்களுக்கு எடுத்துச்சொல்லி அவங்களையும் வாங்கவைக்கனும் அவ்வளவுதான். இதுக்கு நீங்க செய்யவேண்டியதெல்லாம் ஒன்னேவொன்னுதான் 45 நாள்ள 50 யூனிட் business பண்ணீங்கன்னா உங்களுக்கு some amount  செக் வரும். ஒரு யூனிட்டுங்கரது 70/-ரூ அதாவது 3500/-. ரூவாக்கு நீங்க வாங்கர பொருளும் உங்க business வேல்யூம்ல கணக்குவந்துடும். வேரு ஒரு நண்பர் Amway பற்றி சொன்னதை இவரிடம் ஒப்பித்தேன் அவர் முகம் லேசாய் இருண்டது. கொஞ்சநேரத்திலேயே நான் வறேன் சார்னு கிளம்பிட்டார்.  இனி இந்தப்பக்கம் வர்மாட்டார்ன்னு நினைக்கிறேன். பாப்பம்.  

Wednesday, May 9, 2012

Eve Teasing

 06-05-12 நீயா நானாவில் பெண்கள் கிண்டலடிக்கப்படுவதற்கும் உடல்ரீதியான சீண்டல்களுக்கு ஆளாகப்படுவதற்கும் அவர்களின் நவநாகரீக ஆடையும் ஒரு காரணமா?  என்ற விவாதத்தில் கவிஞர் குட்டி ரேவதியை பார்க்கமுடிந்தது.

இந்த கேள்விக்கு ஆண்கள் அத்தனை பேரும் ஆமாம்னுதான் சொன்னாங்க. ஒரு டாக்டர் உட்பட. அவர் சொன்னவிதம் அவர் எடுத்துவைத்த உதாரணங்கள் மற்றும் புள்ளிவிவரங்கள் அவர் வாதத்திற்கு துணைநின்றாலும் அதை குட்டி ரேவதி மிகத்தீவிரமாக மறுத்தடோடல்லாமல் இவ்வாறான கணக்கெடுப்புக்கள் மக்கள் மனதில் ஒரு பொது புத்தியை ஏற்படுத்தவேண்டி அரசு மற்றும் நிறுவனங்களாள் மேற்கொள்ளப்படும் சூழ்ச்சி என்பதையும் சுட்டிக்காட்டியது, புள்ளிவிவரங்களுக்குப பின்னால் பல பெரும்புள்ளிகள் இயங்குவதை புரிந்துகொள்ள முடிந்தது.

பெண்கள் பாலிய‌ல் சீண்டலுக்கும் வன்முறைக்கும் ஆளாகக்கூடிய காரணத்திற்கு நிகழ்ச்சியில் ஒருவர் மட்டும் நவநாகரீக உடையணியும் பெண்களை பார்க்கநேரும் "நபர் சாதக‌மான மனநிலையில் இல்லையென்றால் அது sexual harassment க்கு இட்டுச்செல்லும்" என்று அனைவரும் ஏற்றுக்கொள்ள்க்கூடிய ஆனால் எவருமே சுட்டிக்காட்டாத விஷயத்தை சொன்னார். அதை அரங்கத்திலிருந்தவர்களேகூட கண்டுகொள்ளவில்லை. இந்த வரிகளுக்குப்பின்னால் சமூகத்தில் பொறுப்புமிக்க இடத்தில் சில பொறுக்கிகளும் மனநோயாளிகளும் இருந்துகொண்டு பெண்களைப்பற்றிய கொச்சையான மதிப்பீடுகளை ஏற்படுத்தும் விதமாய் படம் எடுப்பதும் பாடல் வரிகளை எழுதுவதும், அறிக்கைவிடுவதையும் செய்யவிட்டுவிட்டு அதை ஊடகங்கள் மற்றும் இளைஞர்கள் ஆதர்ஷ்யமாய் கருதும் நாயகனின், தலைவனின் மூலம் பரவச்செய்து அதனால் பெரும் ஆதாயமும் அடைந்தபின் அவர்களைத்தொடரும் அப்பாவி தொண்டனய் ரசிகனய்மட்டும் குறை சொல்லிக்கொண்டிருப்பது எந்தவகையில் நியாயமாகும் என கேட்கநினைத்திருப்பார் என்று தோன்றுகிறது.

மொத்தத்தில் குட்டிரேவதி சொன்னதைப்போல் இந்தவிவாதத்தை அடுத்த கட்டத்திற்கு அல்லது ஆழத்திற்கு இட்டுச்செல்லக்கூடிய கணம் "சாதக‌மான மனநிலையில் இல்லையென்றால் அது sexual harassment க்கு இட்டுச்செல்லும்" என்ற வரிகளில் இருந்த்தாய் நான் உண‌ர்கிறேன். 
   

நீங்கள் இதையும் விரும்பக்கூடும்