அலெக்சாண்டரின் குதிரையும், அப்பாவின் சைக்கிளும்


சைக்கிள்!
வார்த்தையாய் சொல்கையில் வசியம் குறைவுதான், என்றாலும் எனக்கும் சைக்கிளுக்குமான உறவு மாவீரன் அலக்சாண்டருக்கும் அவன் குதிரை ( பெஸிபலஸ்) ( BUCEPHALUS )க்குமான உறவைக்காட்டிலும் ஆழமானது. எட்டு வயதில் அப்போதய என் உயரத்தின் அடிப்படையில் அப்பாவின் ஆளுயர ஹெர்குலஸ் சைக்கிள் ஒரு முரட்டு குதிரையாய்த்தான் என்னை மிரட்டியது. தொட்டுப்பார்க்கவே பயமாய் இருக்கும்.

என்றாலும் அப்பாவின் விடுமுறை நாட்களில் வாசலில் வைத்து சைக்கிளை கழுவதும், வேலைக்குச்செல்லும் நாட்களில் Handlebar, Bell, Seat என ஒவ்வொன்றையும் தூசிதட்டி வாசலுக்கு எடுத்துவருவதுமாயும் சைக்கிளுடனான என் பரிச்சயம் படிப்படியாய் பக்குவப்பட்டுக்கொண்டிருந்தது. மாடு மேய்ப்பவனுக்கு பால் கறந்துபார்க்கவேண்டும் என்ற ஆசை எத்தனை இயல்பானதோ சைக்கிள் ஓட்டிப்பார்க்கவேண்டும் என்ற ஆசை எனக்குள் அத்தனை இயல்பாய் எழுந்தது.

அதிகநாளாய் அடைகாக்கப்பட்ட ஆசை அரைபெடல் வடிவாய் குஞ்சுபொரித்தது. முதல்நாள் முட்டியில் பலத்த காயம். என்னோடு சேர்ந்து அப்பாவும் அலுவலகத்திற்கு லீவு போடவேண்டியாதாகியது( சைக்கிள் வீல் பெண்டுல்ல?). மறுநாளுக்கு ம்றுநாள் ஞாயிற்றுக்கிழமை, காலில் காயம் பொக்குகண்டிருந்தாலும் ஆர்வம் அதை அலட்சியம் செய்தது. சைக்கிளோடு நான் வாசலுக்கு இறங்க, லுங்கியோடு அப்பாவும் இறங்கினார். அதன்பின் வந்த சில ஞாயிற்றுக்கிழமைகளிலும் விடுமுறை நாட்க‌ளிலுமாய் சைக்கிளோடு கொண்டாடிய உறவால் அது தன் திறனையும், சூட்சுமத்தையும் ஒவ்வொன்றாய் என்னிடம் ஒப்படைக்கத்தொடங்கி முடிவாய் அது தன்னையே என்னிடம் ஒப்படைத்து ஒரு குழ்ந்தையைப்போல் என்னுடன் ஒட்டிக்கொண்டது. இடைப்பட்ட காலங்களில் சில காயங்களும், வலிகளும் தவிர்கமுடியவிலைதான். என்றாலும் பழகிவிட்டோம் என்ற ஆனந்தம் அதை மறக்கச்செய்துவிட்டது. ( முதல் காயத்தின் தழும்புமட்டும் மறையவிலை ) .

15 வயதில் முதல் சைக்கிள். மனம் லயித்ததென்னவோ அப்பாவின் முரட்டு குதிரையின்மேல்தான். தினமும் ஏதாவது காரணம்காட்டி புதியதை அப்பாவிடம் கொடுத்துவிட்டு முரடனை ஓட்டிச்செல்வது வாடிக்கையாகிவிட்டது. என்றாலும் இது அப்பாவினுடையதுதானே என்னும் விலகல் இருந்தது. புதியதை தவிர்த்து பழையதையே உபயோகிப்பதால் அசடன் என்று  ( கைகொட்டி ) சிரித்தார்கள். அப்பா மட்டும் புரிந்துகொண்டார். இனி இதுதான் உன் சைக்கிள் என்று ஹெர்குலஸை விட்டுக்கொடுத்தார். முதல் முறையாய் முழு சுதந்திரத்துடன் சைக்கிள் ஏறினேன்.

அதன்பின் வாழ்வில் எத்தனையோ மாற்ற‌ங்கள், ஏற்றங்கள், இறக்கங்கள். அப்பாவின் மரணம், அம்மாவின் உடல்நலக்குறைவு, என் திருமணம், மனைவின் சீமந்தம், மகப்பேறு, மருத்துவமனை என ஒவ்வொன்றிலும் உற்ற துணையாய், உயிர் தோழனாய் என்னுடன் இருந்தது இந்த சைக்கிள்தான். எப்போது தொடங்கியது என் வழுக்கையும், தொப்பையும் என்பதை அறியமுடியாததுபோல் கவனித்துக்கொண்டிருக்கும்போதே என்னோடு சேர்ந்து என் சைகிளும் பழசாகிப்போனது .


"இடத்தை அடக்குது, ஒன்னு யாருக்காச்சும் கொடுத்துடுங்க இல்லை எடைக்காவது போடுங்க" என்மனைவியின் கட்டளை எனக்குத்தான் இரண்டிற்குமே மனம் வரவில்லை.
படம்: google ஆண்டவர்

Comments

 1. சைக்கிள் பற்றிய அனுபவம் அருமை.கிட்டத்தட்ட இந்த அனுபவம் எல்லோருக்கும் அஎர்பட்டிருக்கும்.அழகாகப் பதிவு செய்திருக்கிறீர்கள்.வாழ்த்துக்கள்

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும், வாசிப்பிற்கும் நன்றி. தங்கள் தளத்தை புதிய பெயருடன் எதிர்பார்த்திருக்கிறேன்.

   Delete
 2. Good one. Ironically nowadays cycles are not much seen in the roads

  ReplyDelete

Post a Comment