காவிரியிலிருந்து ஒரு சொட்டு தண்ணீர்கூட திறந்துவிட முடியாது என்று கர்நாடக அரசு வழக்கறிஞர் உச்சநீதிமன்றத்தில் திட்டவட்டமாக மறுத்துவிட்டார். தமிகழகத்திற்கு தண்ணீர் திறந்துவிடக்கோரி கர்நாடகாவை நிர்பந்திக்க முடியாது என்று உச்சநீதிமன்ற நீதிபதியும் தெரிவித்திருக்கிறார், ஆனால் தீர்ப்பை வேறுதேதிக்கு தள்ளிவைக்கவேண்டியது ஏன் என்றுதான் புரியவில்லை. இது ஒரு கண்துடைப்பு நாடகம் என்பது தெள்ளத்தெளிவாக தெரிந்தபோதிலும். எந்த சுயநல அரசுகளாலும், அரசுக்கு துணைபோகும் மன்றங்களாலும் டெல்டா மக்களுக்கு எந்தவிதத்திலும் பயனில்லை என்பது கண்கூடு.தீர்ப்பு கர்நாடகாவிற்கு பாதகமானதாக அமைந்துவிட்டால் கர்நாடகாவில் காங்ரஸின் ஆதரவு படுத்துவிடக்கூடும் என்பதால் தீர்ப்பு எப்படியானதாக இருக்கப்போகிறது என்பது தெரிந்ததே ஆனாலும் வாடிக்கிடக்கும் பயிரை தொலைக்காட்சியில் பார்க்கும்போதே மனம் சஞ்சலப்படுகிறதே அந்த மண்ணையும்,பயிரையும் நம்பி வாழ்ந்துகொண்டிருக்கும் விவசாயிகளின் மனநிலை என்னவாக இருக்கும் என யூகிக்கமுடிகிறது. அதைப்பத்தியெல்லாம் எங்களுக்கு கவலை இல்லை, வரப்போற நாடாளுமன்ற தேர்தலில் 40 இடங்களும் எங்களுக்கே கிடைக்கணும், அதற்கு விஷ்வரூபம் தடை ஒரு காரணியாய் உதவுமென்றால் அதற்குதான் முன்னுரிமை அளிப்போம், டெல்டா விவசாயி பிரச்சனை பல வருடங்களாக இருப்பதுதானே அது இப்போதும் இருந்துவிட்டுபோகட்டும் என்ற போக்குத்தான் தமிழக அரசினுடையது. பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணத்தொகை வழங்குவதில் காட்டாத அவசரத்தை, அக்கறையை விஷ்வரூபத்திற்கெதிராய் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்வதில் காட்டிக்கொண்டிருக்கிறது அரசு. அதற்கான விளக்கத்திற்கு முதல்வரே தொலைக்காட்சிக்குமுன் அவதரிக்கிறார். இதில் எந்த அரசியலும் இல்லை எனவும் உறுதியளிக்கிறார். நம்புவோமாக. வாழ்க ஜனநாயகம், வளர்க மக்கள் தொண்டு.
Comments
Post a Comment