அகாலத்தில் கேட்கநேர்ந்த
அழுகை சத்தத்தின்
அர்த்தத்தை
தேடியலைந்த ஓர் இரவில்
என் காலடி ஓசையில்
திடுக்கிட்ட ஒற்றைப்பறவை
சபித்துக்கொண்டே பறந்தது
அடுத்த கிளைக்கு.
காலையில் நிகழ்ந்த
களவியில்
காலில் பட்ட கல்லடியை
நாவால் தடவியபடி
இளைப்பாறிக்கொண்டிருந்தது
நாய் ஒன்று.
படிக்கவேண்டிய பாடங்களை
புரட்டிக்கொண்டிருந்தான்
மாணவன்
பார்க்கக்கூடாத படங்களை
பார்த்துக்கொண்டிருந்தான்
கிழவன்.
வெட்டவெளியை
பார்த்தபடி யாரையோ
திட்டிக்கொண்டிருந்தான்
ஒரு 'குடி'மகன்.
வாயில் திணிக்கப்படும்
வற்றிப்போன முளைக்காம்பை
துப்பியபடி கதறிக்கொண்டிருந்தது
குழந்தை.
அகாலத்தில் கேட்கநேர்ந்த
அழுகை சத்தத்தின்
அர்த்தத்தை
அறிந்த நேரம்
அதிர்ந்துபோனேன்.
Comments
Post a Comment