வாழ்வதற்குவேண்டி -For Survival

உள்ளே கனன்றுகொண்டிருக்கும்
தேவைத்தணலின் தாக்கத்தால்
வெந்து விகாரப்பட்டுபோன முகமும்...

பிணக்கு இதுதான் என
தீர்மானிக்கத் தெரியாமல்
எதிர்படுவோரிடமெல்லாம்
எரிந்துவிழச்செய்யும் இயலாமையும்...

பொருள்புரியா வாழ்வின்
தேடல்கள் பொருட்டு
தொலைந்துகொண்டிருக்கும்
சொந்த விருப்பு வெறுப்புகளும்...

வாழ்வதற்குவேண்டி என
வசதியான முத்திரையோடு
அரங்கேறிக்கொண்டிருக்கும்
அத்துமீறல்களும் - காரிய சுரண்டல்களும்...

அசந்தர்ப்பமாக எதிர்படும்
நட்புகளுக்கும் - உறவுகளுக்கும்
ஆயத்த புன்னகையும் ,
' அப்புறம் பார்க்கலாம்' என்ற
தலையசைப்புமாய்
கடந்துபோகவேண்டிய நிர்பந்தங்களுமாய்...

முரண்பட்டுக்கொண்டுதானிருக்கின்றன
வாழ்க்கையும் - எதார்த்தமும்
என்றாலும்...

சிரித்துக்கொண்டுதான் இருக்கிறது
பக்கத்துவீட்டு வாளியில்
பூத்திருக்கும் ரோஜா
என்வீட்டு தூளியில் ஆடும்
குழந்தையைகண்டு!





Comments

  1. அவைகள் மிகச் சரியாக
    தம்மையும் வாழ்வையும்
    புரிந்து கொண்டிருக்க
    நாம் தான் புரியாது தவிக்கிறோமோ ?
    மனம கவர்ந்த கவிதை
    தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
  2. அன்பின் அகலிகன் - வாழ்வதற்கு வேண்டி - கவிதை அருமை - சிந்தனை நன்று - எவ்வளவு துயரங்கள் இருப்பினும் - தூளியில் ஆடும் மழலை மகிழ்ச்சியைத் தருகிறது அல்லவா ? - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

    ReplyDelete
  3. நல்ல கவித்துவம்.....

    ReplyDelete
  4. ஆகா அருமையான கவிதை...வாழ்த்துக்கள்

    ReplyDelete

Post a Comment