சன்னதி வாசலில்எல்லாமாகவும் இருக்கிறாய்,
எல்லாமும் தருகிறாய்
எனில் எதுவேண்ட உன்னிடம்.

கேட்டவைகளெல்லாம் கிடப்பில் கிடக்க
கேட்காதவைகளால் நிரைந்துகிடக்கிறது
வாழ்க்கை!

நிரம்பி வழியும் அனுபவச்சேர்க்கையால்
காயம்பட்டு துடிக்கிறது
பிறர் எல்லைக்குள்
நுழையத்துடிக்கும் நாவு,

மூக்கறுபட்ட கையறுநிலையில்தான்
வந்து நிற்கிறேன்
ஒவ்வொருமுறையும்,

வேண்டுதற்கொண்றுமில்லை
என் வினை எனை சுட்டதால்
வெறுமையாய் பார்த்துக்கொண்டிருக்கிறேன்
உன்னையும்
உலகையும்.

Comments

 1. அமேசிங் எக்ஸ்சலன்ட்,
  உண்மையில் மிக அருமையான கவிதை வெகு நாட்களுக்கு பிறகு வாசிப்பதை உணருகிறேன்.
  நன்றி அகலிகன்

  ReplyDelete
 2. மிக அருமையான கவிதை

  ReplyDelete
 3. வேண்டாமலே நமக்கு எந்த நேரத்தில் எது அவசியம் என்று அன்னையைப்போல் காலம் நமக்கு தருபவைகளைக்குறித்தும்.....

  அது வேண்டும் இது வேண்டும் என்று என்னவோ ஏற்கனவே கொடுத்து வைத்ததை போல் உரிமையுடன் இறைவனிடம் வேண்டுவோருக்கு கொடுக்கப்பட்ட அருமையான பதில் கவிதைப்போல் அழகு...

  எல்லாமாகவும் திருப்திகரமான வாழ்க்கை எப்போது அமைகிறது... போதும் என்ற மனம் இருக்கும்போது துளி கூட நமக்கு போதுமானதாக அதையும் தாண்டி பெருகிய வெள்ளமாக நம்மிடம் இருக்கிறது என்று சொன்ன அற்புதமான வரிகள்....


  எல்லாம் நம்மிடமே இருக்கும்போது எதை வேண்டி நாம் இறைவனிடம் யாசிக்கவேண்டும் என்று யோசிக்கவைத்த வரிகள்....

  உழைத்தால் கிடைக்கும் நன்மை வைத்து சௌக்கியமாக வாழலாம்....
  ஏற்கனவே எதுவும் கொடுத்து வைக்காதபோது எதற்காம அது வேண்டும் இது வேண்டும் என்று இறைவனிடம் கேட்கவேண்டும் என்று கேட்கும்போது அட ஆமாம்ல என்று சிந்திக்கவைக்கிறது கவிதை வரிகள்....

  ஏற்கனவே கேட்டதெல்லாம் நிறைந்து பெருகி உபயோகமற்று கிடக்கும்போது...அதை பயன்படுத்திக்கொள்ள தவறிவிட்டு கேட்காதவைகளின் ஏக்கங்களே வாழ்க்கையில் நிறுத்திவைத்து அதில் தவிக்கிறோம் என்று கேள்வி கேட்டது மிக அற்புதம்...

  நமக்கு ஏற்பட்ட அனுபவங்கள் நல்லவையாக இருந்தால் சந்தோஷிப்பதும்... தீயவையாக இருந்தால் அவர்களை துவம்சம் செய்ய நேரம் பார்த்துக்கொண்டு காத்திருப்பதும் வலியின் உச்சக்கட்ட வேதனை.... திரும்ப அதே வலியை கொடுக்கும்வரை ஓயாது அதைப்பற்றி மட்டுமே சிந்தித்துக்கொண்டிருக்கும் மனம்.... எதிரில் எதிர்ப்பார்க்காத நேரத்தில் அந்த சந்தர்ப்பம் கிடைத்துவிட்டால் பொரிந்து தள்ளிவிட தன் மனதில் இருக்கும் வலியை இடம்மாற்றி திருப்பிவிட காத்திருப்பில் நாவு.... அருமையான சிந்தனைப்பா..

  நிராயுதபாணியாக ஒவ்வொரு முறை இழந்த நிலையில் வந்து நின்ற போதும் எதையுமே கேட்க இயலாது.... தான் செய்த வினைகளே தன்னை குற்றவாளியாக்கி தன் மனசாட்சியே தன்னை கேள்விக்கணையாக்கி சுட்டுக்கொண்டு.... என்ன செய்வது? வெறுமையின் விளிம்பில்.... என்ன கேட்பது?..... உலகை திருத்த நாம் இறைவனில்லையே... அவரவர் தானாய் திருந்தினால் தான் உலகம் உன்னத நிலைக்கு உயரும்... அன்பே பிரதானமாகிவிட்டால் அற்புத பூங்காவாகிவிடும்....

  மல்லிகைப்பூ தீண்டல் கவிதை வரிகள் ரசிக்கவும், சிந்திக்கவும், இனி நாமும் நம்மைக்கொஞ்சம் மாற்றித்தான் கொள்வோமே... நல்லதைப்பேசி நல்லதையே பகிர்வோமே என்ற எண்ணத்தை முழுமையாய் படரவைத்த அற்புத வரிகளின் பகிர்வுக்கு அன்பு நன்றிகள் அகலிகன்....

  ReplyDelete
  Replies
  1. அப்பப்பா எத்தனை ஆழ்ந்த வாசிப்பு! வரிக்குவரி தாங்கள் உணர்ந்ததை உணரவைத்துவிட்டீர்கள்."பிறர் எல்லைக்குள் நுழையத்துடிக்கும் நாக்கு" நான் எழுதிய கோணத்தைவிட வித்தியாசமாய் இருந்தது சிறப்பு.தங்கள் வரவுக்கும் ஆழ்ந்த வாசிப்பிர்கும் நன்றி.

   Delete

Post a Comment