கிழ‌க்கை நோக்கி


நீயும் மறந்துவிட்டாய்
நானும் மறந்துவிட்டேன்
உன் அண்ணனோ என் தம்பியோ
16 மைல் தொலைவில்
செத்துக்கொண்டிருப்பதை.

உன் போக்கையும் என் போக்கையும்
எவனோ செலுத்திக்கொண்டிருக்க‌
நம் சொந்தம் அங்கே 
வெந்துகொண்டிருந்திருக்கிறது.

செர்லாக் மாவும்,
ஜெம்ஸ் மிட்டாயும்
நம் குழந்தைகளின் 
அழுகையை நிறுத்திக்கொண்டிருக்க,
ஜெலட்டிண் குச்சியும்
கிர்னெட் குண்டும்
அங்கே நம் கூட்டத்தை 
மாய்த்துக்கொண்டிருந்திருக்கிறது.

இவை எதையும் அறியவில்லை
நண்பனே நாம்!
அறியக்கூடிய அத்தனை
வழிகளையும் அடைத்துவிட்டு
உள்ளாடை விளம்பரத்தையும்
உட‌லுற‌வு சாத‌ன‌த்தையும்
காட்டிக்காட்டியே
உன்னையும் என்னையும் 
செவ்வ‌க‌ சிலிக்கானுக்குள்
சிறைவைத்துவிட்ட‌ன‌ர்.

ஆளுய‌ர‌ போட்டோக்க‌ளும்
அத‌ற்கேற்ற‌ புக‌ழுரைக‌ளுமாய்
நிறைந்திருந்த‌து ப‌த்திரிக்கைக‌ள்.
விழித்தெழுந்த‌ ஒருசில‌ ப‌த்திரிக்கைக‌ளும்
பெருமளவு விற்காத‌ கார‌ண‌த்தால்
உற‌ங்கியே கிட‌ந்தோம் ந‌ண்ப‌னே!

NDTV யும், TIMES NOW வும்
ஐஸ்வ‌ரியா, அபிஷேக் ஊடலையும்
அமித்தாப்பின் க‌ட‌னையும் காட்டி
ந‌ம் க‌ண்க‌ளை க‌ட்டிவிட்ட‌ன‌ நண்ப‌னே!

வீருகொண்டு விழித்தெழுந்த‌ வேளையில்
அஸ்த‌ம‌ன‌மாகியிருந்த‌து கிழ‌க்கில் சூரிய‌ன்.

மீண்டெழும் அந்நாளைநோக்கி
செலுத்த‌த்தொட‌ங்குவோம் ந‌ம் ச‌ந்த‌தியின‌ரை.

http://ta.indli.com/agaligan



Comments

  1. This comment has been removed by the author.

    ReplyDelete
  2. பொட்டில் அடித்தாற்போல் இருக்கு
    நல்ல பதிவு
    நம் சந்ததியினரையாவது என
    இன்னும் அழுத்தம் கொடுத்திருக்கலாமோ?
    வாழ்த்துக்களுடன்...

    ReplyDelete

Post a Comment