சாயம் போன கறுப்புச்சட்டை

தமிழகத்தை பொறுத்தவரை கறுப்புச்சட்டை கலாச்சாரம் இரண்டு வகையாயும் இரண்டுமே இரண்டு துருவங்களாயும் செயல்பட்டுக்கொண்டிருக்கிறது.

பெரியார் கறுப்புச்சட்டை அணிந்து கடவுள் இல்லை, கடவுள்பக்தி என்ற பெயரில் நடைபெற்றுக்கொண்டிருப்பதெல்லாம் மூடநம்பிக்கைகளும், காட்டுமிராண்டித்தனமும்தான் என்று ஊர் ஊராய் சென்று பிரச்சாரம் செய்துகொண்டிருந்த அதே காலகட்டத்தில்தான் கேரளத்து மலை ஒன்றில் ஐயப்பன் என்றொரு கடவுள் இருக்கிறார் என்றும் அதே கறுப்புச்சட்டை அணிந்து நோம்பு என்றபெயரில் 48 நாட்கள் தன் உடலை வருத்திக்கொண்டு காடு, மலை, மேடுகளை நடந்தே சென்று அவரைக்கண்டுவரும் முறையும் தமிழகத்தில் பரவலாகிக்கொண்டிருந்தது.

கறுப்புச்சட்டை நாத்திகவாதிகள் கடவுளை பழிப்பது, கோயிலை இடிப்பது என ஒரு அதீதமென்றால்(extreme), கறுப்புச்சட்டை ஆத்திகவாதிகள் ஒருவேளை உணவு, மார்கழிமாத்தில் இருவேளைக் குளியல், தரையில் வெறும் துண்டைவிரித்து உறங்குவது என இன்னொரு அதீதம்.

பெரியாருக்குப்பின் நாத்திகவாதம் நீர்த்துப்போனது என்றுதான் கொள்ளவேண்டும் (அதன் பின்னனியில் சமூக அரசியல்,வோட்டு அரசியல்,சுயநல அரசியல் என் பல உண்டு) பெரியார் பாசறையிலிருந்து வந்த ஒருவர் "ஒன்றே குலம் ஒருவனெ தேவன்" என்ற வாதத்தின்வழியாய் ஆத்திகத்தின் பாதையில் கால்பதித்தார். எஞ்சியிருந்தவர்களில் சிலர் விழுந்தாலும் மண் ஒட்டவில்லை என்பதுபோல் திராவிடம் / பகுத்தறிவு என்னும் இரு விளம்பரப்பலகைகளை கழுத்தில் சுமந்து அலையத்தொடங்கினர்.தமிழக வரலாற்றில் திராவிடமும் பொய்த்து, பகுத்தறிவும் பல்லிளித்த தருணங்கள் பல.

ஆனால் கறுப்புச்சட்டை ஆத்திகம் வெறும் கறுப்புச்சட்டை, கழுத்தில் மாலை என்பதோடு நிறுத்திவிடாமல் ஒவ்வொரு ஆண்டும் புதிய பக்தர்களை அதிகரித்துக்கொண்டு தன் வேர்களின் ஆழத்தை அதிகப்படுத்திக்கொள்வதோடு மட்டுமல்லாமல் தனக்கு சாதக‌மான பக்கங்களிலெல்லாம் கிளைபரப்பி தன் இருப்பை விரிவுபடுத்திக்கொள்கிறது. உதாரணமாக இதுவரயிலான ஐயப்பன் பாடல்கள் மென்மையாயும், இனிமையாயும், கேட்கும் மனங்களுக்கு இதமாயும் இருக்கும்.ஆனால் இந்த ஆண்டு கேட்கநேர்ந்த பாடல்களில் இன்றைய இளைய சமூகத்தின் மனவோட்டத்திற்கு இசைவாய் (அ) பிரதிபலிப்பாய் ஐய்யப்பன் ஒரு ஆக்ரோஷக்கடவுள் எனவும், பாவம்செய்வோரை அழித்தொழிக்கவே அவதரித்தவராயும், வண்புலி ஏறிவந்து வண்மையாய் தண்டிப்பார் என்பது போன்றும் (கிட்டத்தட்ட சுரா விஜய் ரேஞ்சுக்கு) பாட்டு எழுதி கூடவே ஐய்யனாரையும் இணைத்து இடையில் நரிக்குற‌வர்கள் தாங்களும் ஐய்யப்பனை காணவிரும்புவதாய்  தெரிவிக்கவைத்து அந்த வார்த்தைகளுக்கு வெறியேற்றுவதுபோல் வேகமான இசை அமைத்து மொத்தத்தில் சபரிமலைக்கு அதிக பக்தர்களை வரவழைக்க முயற்சிக்கும் கேரளத்து வியாபாரிகளோடு உள்ளூர் வியாபாரிகளும் சேர்ந்து  எத்தரப்பு மக்களையும் இழக்க விரும்பாததை இப்பாடல்கள் எடுத்துக்காட்டின. இவ்வகையான ஹைப்புக்களால் உந்தப்பட்டு மாலை அணிந்துகொள்ளும் இளைஞர்கள் இயல்பாகவே சற்று முரட்டுத்தனமாய்தான் இருக்கிறார்கள். 2002 அலலது 2003ல் நடந்த மிகக்கோரமான விபத்தில் தன் நிதானத்தாலும், சமயோஜிதத்தாலும் தன்னுடன் வந்த 2 பக்தர்களை பாதுகாப்பாய் கொண்டுசேர்த்த என் நண்பர் பக்தர்களின் பதட்டமும், பொறுமையிமையும்தான் அன்றைய விபத்தில் சேதம் அதிகரிக்கக்காரணம் என்று தெரிவித்தார். இந்த வருடம் 102 பேரை பலிவாங்கிய விபத்தில்கூட பக்தர்களுக்கிடையே நடந்த தள்ளுமுள்ளினால்தான் உயிர்ச்சேதம் அதிகரித்திருக்கிறது.

பகுத்தறிவை தன் வசதிக்கேற்பவும் வாதத்திற்காகவும் வளைக்க நினைக்கையில் அது நீர்த்துப்போகிறது. பக்தியை தான் செய்த தவறுகளுக்கான பரிகாரங்களாகவோ, குற்றவுணர்விலிருந்து விடுபடும் வழியாகவோ நினைத்து மேற்கொள்ளப்படும்போது அது அமைதியையோ,மனநிறைவையோ, பக்குவத்தையோ என்றுமே தந்துவிடாது.

Comments

  1. மிக மிக அற்புதமான பதிவு. என் அளவில் சமூக தளங்களில் பகிரந்து கொள்கின்றேன்.

    ஆன்மீகம் குறித்து யோசித்து அறிந்து, அழுத்தப்பட்ட உணர்வுகளில் பல நிலைகளில் மாறி இன்று விலகி நின்று வேடிக்கைப் பார்க்கும் பக்குவநிலைக்கு வந்த போதிலும் இன்னமும் புரிபடாத பல விசயங்கள் இருக்கத்தான் செய்கின்றேன்.

    குறிப்பாக மக்களின் மனோநிலை. தெளிவாக எழுதி இருக்கீங்க.

    ReplyDelete
  2. அன்பின் அகலிகன் - இரு வகையான - ஒன்றுக்கொன்று எதிரான சித்தானந்தங்களை உடைய - மனிதர்களைக் கொண்ட அமைப்புகள் பற்றி ஆராய்ந்து ஆழ்ந்த சிந்தனையில் எழுதப்பட்ட பதிவு. இருவரின் சிந்தனைகளிலும் மாற்றங்கள் வரும் என எதிர்பார்க்க இயலாது - முதல் பதிவே இரு வேறு துருவங்களை ஆராய்ந்து எழுதப் பட்டிருக்கிறது. நன்று - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

    ReplyDelete

Post a Comment